ந்தி சாய்ந்த
ஆற்றுப் பாலத்தின் கீழ்
நதி சலனமின்றி பயணித்திருந்தது

கரையோர மாடுகள் சிறு மழையைப் பொருட்படுத்தாது அசமந்தமாய் அமர்ந்திருந்தன

திசைகள் பறக்கும் வாகனங்களால்
தூரம் தெரியும் பாலங்கள்
காதலரின் உதட்டு புன்னகைபோல் அழகிட்டன

மக்களின் இருள் நிறைந்த வாழ்வை
விளக்குகளால் திரையிட்டு மறைத்தபடி நகரம் வசீகரித்தது

சிறுவர்களின் விளையாட்டுக்களில்
நாட்டை விற்ற தலைவர்கள்
வசை சொற்களாகவும்
கேலி கிண்டல் ஏச்சுக்களாகவும் பெயர் பெற்றுவிட்டார்கள்

மக்களின் ஒட்டுமொத்த செல்வங்களும்
சில கேடிகளின் கோடிகளாயின

மக்களோ தெருக்கோடியில் பிச்சையர் ஆகினர்

இதையும் படியுங்கள் : யாதும் போரே யாவரும் தீர்ப்பீர் – புதியவன்

கண்ணுக்கு தெரியாமல் களவு போனது தேசம்

இணையதள விளையாட்டுகளில் தேசத்தின் மன்னர்கள் திறன் மிகு வீரர்களாய் சண்டையிட்டபோதும்

சினிமா நாயகர்களின் பாதங்களை கொஞ்சி மகிழ்ந்தபோதும்

நாட்டிற்காக பந்தாடியவர்களை கொண்டாடி ஆர்ப்பரித்தபோதும்

மது போதை உச்சம் ஏற உளறித்தீர்த்தபோதும்

பல மணிநேரம் அலங்கார பிம்பங்களாக கண்ணாடியில் மூழ்கி திளைத்தபோதும்

மதவிழா கூட்டங்களில் பக்தி பெருக
கண்கள் மூடி
தெய்வம் தொழுதபோதும்

சாதி மத வெறியர்களின்
வதை படுகொலை காட்சிகளை
காண ஒண்ணாத் துயரங்களை
கடந்து சென்றபோதும்

கண்ணுக்கு தெரியாமல் களவு போனது தேசம்

எஜமானன் ஊதும் மகுடிபடி
நாட்டு தலைவன் படமெடுத்து ஆடுகிறான்

அடித்த வெயிலுக்கு தாங்காத சிறுமழை
வெக்கையை கிளப்பிற்று

அடித்த கொள்ளையில் மிஞ்சாத எம் நாடு
வெறுப்பை கிளப்பிற்று

அடி வயிற்றிலிருந்து எழுந்த கெட்ட வார்த்தையை
அதான் நீ என்று
நாட்டுத் தலைவனை வசை பாடினேன்

அதானி அதானி என்று
நாடெங்கும் எதிரொலித்தது

புதியவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here