“தமிழ் இந்து” என பேசுபவர்கள் சனாதன தர்மத்தை ஏற்பவர்களே!


சங்கிகளிடமிருந்தும் தம்பிகளிடமிருந்து வரலாற்றை மீட்போம் என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி நடத்திய இணையவழி கூட்டத்தில் பேராசிரியர். கருணானந்தம் ஆற்றிய உரையை எழுத்து வடிவில் தருகிறோம். தேசியம் குறித்தும், திராவிடம் குறித்தும் பேசிய சில அம்சங்களில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. இருப்பினும் இந்த உரையின் சாரம் “தமிழ் இந்து, ஆரிய இந்து, தமிழர் X திராவிடம்” எனப் பேசி பார்ப்பனீயத்துக்கு பல்லக்கு தூக்குபவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் என்பதால் இந்த உரையை எமது தளத்தில் தொடர் கட்டுரையாக கொண்டு வருகிறோம்.

தமிழர் X திராவிடர், ஆரிய இந்து – தமிழ் இந்து ஆகிய அவற்றின் வரலாற்று பின்னணி:

இவற்றை இரண்டு பகுதிகளாக பார்க்கவேண்டும். ஒன்று தமிழ், திராவிடம், இந்து ஆகிய இந்த சொற்களை பற்றியும் அதன் கருத்துகளை பற்றிய ஒரு வரலாற்று பின்னணி நமக்கு தேவை. அதை புரிந்து கொண்டால் இன்றைய அரசியல் விவாதத்திற்கு நாம் தெளிவு பெறுவதற்கு வசதியாக இருக்கும். தமிழ் என்பது ஒரு மொழியை சுட்டி காட்டுகிறது. தமிழர் என்பது அந்த மொழி பேசும் மக்களை சுட்டிக்காட்டுகிறது. தமிழகம் என்பது அந்த மக்கள் வாழுகின்ற பகுதியை சுட்டி காட்டுகிறது. இந்த மண்ணின் அடிப்படையில் தான், நமது நிலத்தின் அடிப்படையில் தான் இந்த கூறுகளை பற்றி விவாதிக்க விரும்புகிறோம். வரலாற்றுப் பதிவுகளை பார்த்தோம் என்றால் தமிழ் என்பது மிகவும் தொன்மையானது. ஏறக்குறைய கி.மு 1000த்தில் இருந்து தமிழ் என்பது பற்றியும், தமிழ் பேசும் மக்களை பற்றியும் தகவல்கள் வருகின்றன.

பேராசிரியர். கருணானந்தம்

சங்க இலக்கியங்கள் என்கிற தொன்மை தமிழ் இலக்கியங்களில் தமிழ் கூறும் நல்லுலகம் பேசப்படுகிறது. அந்த தமிழ் கூறும் நல்லுலகம் தமிழர்கள் வாழ்ந்த பகுதி ஒரே ஆட்சி பகுதியாக இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தொன்மை தமிழகத்தில் தமிழர்கள் பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் பிரிந்து கிடந்தார்கள், பிளவுண்டு கிடந்தார்கள். தமிழ் என்ற உணர்வு அவர்களை ஒரு தேசியமாக மாற்றி விடவில்லை. பாண்டியர்கள் சோழர்கள் மீதும், சோழர்கள் சேரர்கள் மீதும், ஒரு தரப்பார் மற்ற அனைத்து தரப்பு மக்கள் மீதும் இடைவிடாத போர்களை நடத்திக் கொண்டு வந்த தொன்மை தமிழ் கால வரலாற்றை நாம் அறிவோம். சங்க இலக்கியங்களில் ஒற்றை தமிழ் தேசம் என்பது கிடையாது. ஆனால் தமிழ் மொழி பேசுகின்ற பகுதி என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். அது தமிழ் தேசியம் கிடையாது.

தேசியம் என்பது எப்போது வருமென்றால் மக்களை சார்ந்து அரசியல் வருகின்ற போது தேசியம் வரும். மன்னர்களை சார்ந்து அரசியல் வருகின்ற போது தேசியம் வராது. பெரும் பிரிவினர் ஆளப்படுகின்றவர்களாகவும், சிறு பிரிவினர் ஆளுகின்றவர்களாகவும் இருக்கின்ற போது ஒரு தேசியம் வருவதற்கான வாய்ப்பே இல்லை. ஆளுகின்றவனும், ஆளப்படுபவனும் ஒரே அடையாளத்தின் கீழ், ஒரே நலன்களின் கீழ் ஒரே நோக்கங்களின் கீழ் வருகின்ற போது அது தேசியமாகிறது. ஆக தமிழ் என்ற மொழி மிக தொன்மையானது, பழமையானது. அது இலக்கிய செறிவுமிக்க மொழியாக இருந்து வருகிறது; செம்மொழியாக இருக்கிறது. ஆகவே அதை பற்றி, அதன் தொன்மையை பற்றி நமக்கு சிறிது கூட ஐயம் இல்லை. ஆனால் அந்த தமிழ் ஒரு தமிழ் அரசாக மாறுவது எப்பொழுது? என்ற கேள்வி வருகிறது. சங்க காலத்தில் இருந்த மூவேந்தர்களும், ஏனைய சிற்றரசர்களும் தனித்தனி அரசர்களாக இருந்தனர். ஒரே அரசாக இணையவில்லை என்பது தெரியும். பிறகு பேரரசர் காலங்களில் வருகின்ற போது பாண்டிய பேரரசு, பல்லவ பேரரசு, சோழ பேரரசு என்பதான பேரரசுகளை பார்க்கின்றோம். அந்த பேரரசு காலத்தில் பேரரசு என்பது தமிழ் தேசிய அடிப்படையில் செயல்பட்டதா? என்பதையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இந்த ஆய்வு என்பது உணர்வுகளின் மீது அல்ல. உண்மைகளின் மீது நடத்தப்பட வேண்டிய ஆய்வு. பாண்டிய பேரரசு இருக்கின்ற காலத்தில் சோழர்களை அவர்கள் எதிரிகளாக பார்த்தனர். சோழர்களும் தமிழர்கள் தான். அன்று சேரர்களும் தமிழர்கள் தான். ஒருவரையொருவர் கடும் பகைவர்களாக பார்த்தார்கள், ஒருவர் தலையை மற்றொருவர் கொய்வதற்கான வாய்ப்புகளை தேடி அலைந்த காலமாக நாம் பார்க்கின்றோம். வீரபாண்டியன் தலை கொய்த சோழர்களை பார்க்கின்றோம். பாண்டியன் தலைகொய்த சோழன் என்று சொல்லப்படுகின்ற அந்த சோழ பெருமிதங்களை பார்க்கிறோம். ஒரு பேரரசு உருவாக்கப்பட்டாலும் கூட அந்த வேங்கடத்திற்கு அப்பாலும் தமிழ் பேரரசுகள் என்று சொல்லப்படுகின்ற பல்லவர்களும், பாண்டியர்களும், சோழர்கள் ஆண்டாலும் கூட அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையை வளர்த்து கொண்டவர்களாக, ஒற்றை தேசியம் பேசுபவர்களாக இருக்கவில்லை. இன்னும் சொல்ல போனால், அந்தந்த பகுதி மக்களது விசுவாசங்கள் என்பது அப்போது சோதனைக்குள்ளாயிற்று. பாண்டிய வம்சத்தின் மீதுள்ள விசுவாசத்திற்காக சோழர்களையும், சேரர்களையும் கொல்வதையும், சோழ விசுவாசத்திற்காக பாண்டியர்களையும், சேரர்களையும் கொல்வதையும், கொலை செய்வதையும், சதி செய்வதையும் அங்கீகரித்த ஒரு நாடாக நமது நாடு இருந்திருக்கிறது. ஆகவே அங்கு தமிழ் தேசியம் என்பது அப்பொழுதும் வரவில்லை. பேரரசுகள் வந்திருக்கின்றன; அது ஒரு உச்சகட்ட அதிகாரத்தில் ஒரு வம்சம் ஆளுகின்ற ஒன்றாக இருந்தது. சோழ பேரரசு படையிலும் கூட தமிழர்கள் மட்டுமே இருக்கவில்லை. அங்கே தெலுங்கர்களும், கன்னடர்களும் மற்றவர்களும் இருந்தார்கள். எந்த பேரரசும் ஒற்றை பகுதி ஒரு தேசிய இனத்தை சேர்ந்த படை வீரர்களை கொண்டு வெற்றி காண்பது கிடையாது. பின்னர் மராத்தியத்தை ஆண்ட சிவாஜியின் படையிலும் கூட இஸ்லாமியர்கள் இருந்தார்கள். ஆகவே பேரரசு காலக்கட்டத்தில் பார்க்கின்ற பொழுது சோழ பேரரசு இருந்ததே தவிர, தமிழ் பேரரசு என்பது இருக்கவில்லை. பாண்டிய பேரரசு இருந்ததே தவிர, தமிழ் பேரரசு என்பது இல்லை. பல்லவர்கள் ஆண்டார்களே தவிர, அது தமிழர்கள் தமிழ் தேசியத்திற்கு ஆண்டார்கள் என்பதாக சொல்லிவிட முடியாது. தமிழ் என்பது மொழியாகவும், ஒரு பகுதி நிலத்தின் வரலாற்றின் அறிகுறியாகவும், பண்பாட்டின் அடையாளமாகவும் நாம் பார்க்கிறோம்.

***********************

பிறகு திராவிடம் என்ற சொல், திராவிடர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் உண்டா? பக்தி இலக்கியத்தில் உண்டா? காப்பியங்களில் உண்டா? என்பதாக கேள்வி கேட்டு திராவிடம் என்பது இல்லாத ஒரு புனைவு எனும் பொய் பரப்புரை ஒரு சிலரால் நடத்தப்படுகிறது. பிறகு அதற்கான காரணத்தை விளக்குவோம். திராவிடம் என்ற சொல் புதிய சொல் அல்ல, திராவிடம் என்ற சொல் மிக தொன்மையான ஒரு அடையாளச் சொல். வட மொழி இலக்கியங்களில் குறிப்பாக பிராகிருதத்தில் தென் பகுதி திராமிலம், திரமிலம் என்றே குறிப்பிடப்படுகிறது. அதாவது திராவிடம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு வந்த சமஸ்கிருத இலக்கியங்களிலும் திராவிடம் என்றால் தெற்கு பகுதி, பார்ப்பனியத்திற்கு உட்படாத, ஆரியம் அல்லாத பகுதி என்று குறிப்பிடுவதற்கு திராவிடம் என்ற சொல் பயன்பட்டது. ஆகவே திராவிடம் என்ற குறியீடு புதியது அல்ல; கல்வெட்டுகளிலும் உண்டு. கி.மு169 ஆண்டு அதிகும்பா கல்வெட்டு, இன்றைய ஒடிஸாவில், அன்றைய கலிங்கத்தில் இருந்தது. காரவேலன் என்ற சேர வம்சத்தின் மன்னன் அந்த ஓடிஸா என்னும் கலிங்கத்தை ஆண்ட பொழுது அவனது வீர சிறப்புகளை, போர் வெற்றிகளை குறிக்கின்ற ஒரு கல்வெட்டினை அதிகும்பாவில் பொதித்தான். அந்த பொதிக்கப்பட்ட கல்வெட்டு என்பது பிராகிருதத்தில் இருந்ததும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த பிராகிருதத்தில் திராமின சங்காதன் சொன்ற சொல் அகப்படுகிறது. திராமின சங்காதன் என்ற சொல்லுக்கு திராவிட சங்கம், திராவிட கூட்டமைப்பு என்று பொருள். இந்த திராவிட கூட்டமைப்பு என்பது தமிழ் பகுதியை மட்டுமே சுட்டுவதாக நம்மை ஏற்க சொல்கிறார்கள். ஏறக்குறைய கி.மு169 யில் கன்னடத்தின் துவக்கம், தெலுங்கின் துவக்கம் வந்து விட்டது. தெற்கு பகுதியில் ஆரியத்தின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்ட எந்த ஒரு மக்களையும் அவர்கள் திராமிட, திராவிட என்ற அடையாளத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். அதில் தமிழ் பகுதி என்பதும் ஒன்று. தமிழ் பகுதியை மறுக்கின்ற சொல் அல்ல திராவிடம். தமிழையும் உட்கொண்டு வருகிற ஒரு சொல். ஆரியம் அல்லாத அல்லது ஆரிய செல்வாக்கிற்கு அப்பாற்பட்ட ஆரியத்திற்கு இணங்க மறுக்கின்ற அந்த பகுதி, அந்த மக்களை திராவிட, திராமில என்று அழைத்தார்கள் என்பது மிகவும் முக்கியமானது. ஆரியத்தோடு முரண்பட்டது மட்டுமல்ல. அவர்களடைய வைதீகத்திற்கும் முரண்பட்டது, இணங்க மறுத்த பிரிவை அவர்கள் திராவிடர் என்று சொன்னார்கள். ஆகவே அவர்கள் தெற்கு திசை திராவிடம் என்றும் அந்த தெற்கு திசையை எம திக்கு என்றும் அழைத்தார்கள். “எம திக்கு” என்றால் அழிவை தருகின்ற பகுதி என்று பொருள். பிராமணியத்திற்கும், ஆரியத்திற்கும் அழிவை தருகின்ற பகுதியாக தெற்கு பகுதியை பார்த்தார்கள். 2,600 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடம் என்ற சுட்டு இங்கே இருக்கிறது, அது பிராகிருத இலக்கியத்திலும் இருந்திருக்கிறது, கல்வெட்டுகளிலும் இருந்திருக்கிறது என்பது உறுதி. திராவிடம் இல்லாத ஒன்று அல்ல. ஆனால் திராவிடம் என்றால் ஆரியம் அல்லாதது என்ற பொருள் மிக முக்கியமானது. திராவிடம் என்றால் பார்ப்பனியத்தை ஏற்காதது என்ற பொருள் மிக முக்கியமானது.

திராவிடம் என்ற சொல் இல்லாத சொல் சங்கத்தில் இல்லாத சொல் என்றெல்லாம் சிலர் ஆய்வு செய்து நமக்கு விளக்கம் தருகிறார்கள். ஏற்கனவே எடுத்த முடிவுகளுக்கான திரிபுகளை அவர்கள் தந்துகொண்டு இருக்கிறார்கள். ஆகவே தான் சுட்டிக்காட்டுகிறேன் சங்கம் என்ற சொல் இலக்கியங்களில் இல்லை. எந்த சங்க இலக்கியங்களில் சங்கம் என்ற சொல் இருக்கிறது? அங்கே குறிப்பிடபடுகின்ற சொல் கூடல், மன்றம் ஆகிய வெவ்வேறு பொருள்களில் வருகின்றன. கூடல் என்றால் கூடுகின்ற இடம்; கூடல்மாநகர் என மதுரைக்கு பெயர் உண்டு. முக்கூடல் என்றால் மூன்று நதிகள் கூடுகின்ற பகுதி. மன்றம் என்றால் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து விவாதம் நடத்தும் பகுதி என்ற பொருள். ஆக அது ஒரு இலக்கிய அமைப்பாக இருக்கவேண்டும் என்ற எந்த வரையறையும் எங்கும் கிடையாது. சங்கம் என்ற அமைப்பை பற்றியோ, சங்கம் என்ற அமைப்பில் புலவர்கள் வந்தது பற்றியோ, மன்னர்கள் அதில் தலைமை தாங்கியதை பற்றியோ, அவர்கள் புரவளர்ப்பு பற்றியோ, எந்த ஒரு தகவலும் சங்க இலக்கியம் என்று சொல்லப்படுகின்ற இலக்கியத்தில் கிடையாது. சங்க இலக்கியத்தில் இல்லை என்பதற்காக சங்கம் என்று குறிப்பிடுகிற அடையாளத்தின் கீழ் வருகின்ற ஒரு தொன்மை தமிழ் பண்பாட்டு காலம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. சிலவற்றை ஆங்கிலத்தில் Implied என்று சொல்கிறோம் அல்லவா. அதாவது உள்ளீடாக இருக்கிறது. ஆகவே சங்கம் இல்லாவிட்டாலும் கூட சங்கப் பாடல்கள் சுட்டிக்காட்டுகின்ற அரசியல் சூழல், பண்பாட்டு சூழல், சமூக சூழல், அதன் தத்துவ சூழல் இங்கே இருந்திருக்கிறது. அது தான் நாம் கருத்தில் கொள்ளவேண்டியதே தவிர சங்கம் என்று புனையப்பட்ட மூன்று சங்கங்கள்- அங்கே சிவனார் வந்தார், முருகனார் வந்தார் என்பதெல்லாம் எட்டாம் நூற்றாண்டுக்கு பிறகு புனையப்பட்டது.

***********************

ஆரியம் என்றால், இந்து என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் இந்து – ஆரியர் இந்து என்பதாக ஒரு புதிய விளக்கத்தை தந்திருக்கிறார்கள். இப்படி விளக்கம் தருகிறவர்கள் தூய பரிசுத்தமான தமிழ் தேசியவாதிகள். தமிழ் இந்து – ஆரிய இந்து என்று இரண்டு பிரிவாக பிரித்து, “நாங்கள் தமிழ் இந்து” என்று சொல்லுகிறவர்களும், மாலியம், சிவனியம் என்று பேசுகின்றவர்களும், தாய் மதத்திற்கு திரும்புங்கள் என்று பேசுகின்றவர்களும் இந்து என்ற சொல்லை இப்போது பயன்படுத்துகிறார்கள். தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று சொல்லிய ஒரு தமிழ் தேசிய பேர்வழி தமிழ் இந்து தேசியம் பேசுகின்ற சூழல் இப்போது வந்திருக்கிறது. தமிழ் இந்து, ஆரிய இந்து என்பவற்றை நன்றாக விளங்கி கொள்ள வேண்டும் என்றால், இந்து என்பதன் பொருளை அதன் கருத்தியலை விளங்கி கொள்ள வேண்டும். இந்து என்றால் இப்பொழுது இவர்கள் சைவம், வைணவம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்து என்ற சொல்தான் இருப்பதிலேயே மிகத் தாமதமாக பயன்பாட்டுக்கு வந்த சொல். இந்து என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் இல்லை; தமிழ் கல்வெட்டுகளில் இல்லை; சமஸ்கிருத கல்வெட்டுகளில் இல்லை; பிராகிருத கல்வெட்டுகளில் இல்லை. ஆகவே எப்பொழுது இந்து என்று குறிப்பிடத் தொடங்கினார்கள் என்பது பற்றிய தெளிவு நமக்கு வேண்டும். அதோடு அவர்கள் தாய் மதம் என்றும் குறிப்பிடுகிறார்கள். தமிழர்கள் தாய் மதம் என்ன என்பதை பற்றிய ஒரு ஆய்வும் தேவைப்படுகிறது. இந்து என்றால் மதம் என்று சொல்கிறார்கள். தமிழர்களுக்கு தாய்மதம் – இந்து என்பதாக குறிப்பிடுகிறார்கள். ஆனால் இந்து மதத்தின் ஆணிவேராக கருதப்படுக்கிற பார்ப்பனர்கள் இதை எவ்வாறு பார்க்கிறார்கள்? அவர்கள் தர்மம் என்று எதை பார்க்கிறார்கள்? அவர்கள் இந்து சனாதன தர்மம் என்று சொல்லுகிறார்கள். வழிபாட்டு முறை என்பது மட்டும் அல்ல, அது முதன்மையல்ல. ஒரு சமூக கட்டமைப்பு தான் இந்து என்று குறிப்பிடப்படுகின்றனர். நீதிமன்ற தீர்ப்புகள் இந்து என்றால் அது ஒரு மதம் அல்ல; அது ஒரு (WAY OF LIFE) வாழ்வியல் முறை என்று விளக்கம் அளித்திருக்கிறது. அதை போன்றே காஞ்சி மடத்தின் முன்னாள் மடாதிபதி சந்திரசேகர் சரஸ்வதி அவர்கள் இதை தெளிவுபட கூறி இருக்கிறார். இந்து என்றால் சனாதன தர்மம். இந்து என்ற பெயர் நம்முடையது கிடையாது; அது பிறரால் நமக்கு தரப்பட்டது. நாம் இந்து என்ற அடைமொழியில் பெற விரும்புவது சனாதன தர்மம். தமிழ் இந்து என்று இவர்கள் குறிப்பிட்டால் சனாதன தர்மத்தை ஏற்பவர்களாக எடுத்துகொள்ளப்படுவார்கள். சனாதனம் என்றால் படிநிலை சமூகத்தை ஏற்றுகொண்டவர்களாக அர்த்தம். மேல் சாதி, கீழ் சாதி என்பதையும், மேல் வர்ணம் கீழ்வர்ணம் என்பதையும் ஏற்றுக்கொள்வதாகவும், அதன் அடிப்படையில் சமூக சலுகைகள், அரசியல் முதன்மைகள் வருவதையும் அதன் கருத்தியலையும் ஏற்றுகொண்டவர்கள் மட்டுமே இந்து என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள முடியும். இங்கு நடக்கும் போராட்டமே தமிழ் மக்கள் சமத்துவ அடிப்படையில் ஒரே சமூகமாக மாறவேண்டும் என்பதே. அத்தகைய சமத்துவம் நிறைந்த தமிழ் சமூகம் மட்டும்தான் தமிழ் தேசியமாக இருக்க முடியும். அவ்வாறு தமிழ் மக்கள் இணைய முடியாமல் அவர்களை சிதைப்பது திராவிடமா? பார்ப்பனியமா? என்ற கேள்வியை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களை சாதிகளாக சூத்திரர்களாக, சத்திரியர்களாக, பஞ்சமர்களாக பிரித்து வைத்தது எது? எந்த திராவிடம் இதை செய்தது? ஆகவே நாம் இந்து என்ற சொல்லை பயன்படுத்துகிறவர்கள் நமக்கு ஒரு தெளிவை தர வேண்டும். இந்து என்ற சொல்லுக்கு தெளிவுபடுத்தப்பட்ட விவரங்கள் இருக்கின்றன. நீதி மன்ற விளக்கங்கள் இருக்கின்றன. இந்த பார்ப்பனீய அதர்மம் என்று சொல்லப்படுகின்ற சனாதன தர்மத்தின் விளக்கம் சொல்லுபவர்கள் மிக தெளிவாக சொல்லிவிட்டனர். சனாதன தர்மம் என்றால் சாதி தர்மம், வர்ண தர்மம் என்பதாக பிறப்பின் அடிப்படையில் மனிதர்களின் நிலை, தரம், வாய்ப்பு, சுதந்தரம் தீர்மானிக்கப்படுகிறது என்று பொருள். அப்படி இல்லாத தமிழ் இந்து இருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். எந்த இலக்கியத்திலும் இல்லாத இந்துவை இன்று தீவிர தமிழ் தேசியம் பேசுகின்றவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால் அது ஒன்றை சுட்டி காட்டுகிறது. தமிழ் மக்களை மதத்தின் பெயரால் அவர்கள் பிரித்துக்காட்ட விரும்புகிறார்கள். தமிழ் மக்களை சாதியின் அடிப்படையில் படிநிலை சமூகமாக தொடர்வதையே அவர்கள் விரும்புகிறார்கள், ஆதரிக்கிறார்கள் என்று பொருள்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here