நாட்டின் முதல் உள்நாட்டு விமானம்தாங்கி போர்க் கப்பல் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று இந்திய கடற்படை அறிவித்துள்ளது.

இந்நிலையில் தான் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 படகுகளில் 2500 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கடந்த சனிக்கிழமை இரவு தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 மீனவர்களையும் ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், விசைப்படகையும் விடுவிக்கக் கோரி திங்கட்கிழமை (29-08-2022) மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளார்கள்.

இந்த போராட்டம் மீனவர்களை விடுவிக்க செய்யலாம். ஆனால் நிரந்தரமான தீர்வைத் தரப் போவதில்லை.

இதேபோல் கடந்த 22 ஆம் தேதி நாகை மாவட்டம் அக்கரைபேட்டையை சார்ந்த மீனவர்களையும் முல்லைத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கைது செய்யப்படும் மீனவர்கள் சாதாரண தொழிலாளர்கள். வயிற்றுபாட்டுக்கு மீன்பிடிக்க செல்பவர்கள் தான் கைதாகிறார்கள். இவர்கள் கடலுக்கு சென்று பெரும் அளவு மீன் பிடித்து வந்தால் தான்  வருமானம். மீன் குறைவாக கிடைத்தால் அவர்கள் செய்த செலவுக்கு கூட பணம் மிஞ்சாது; இது தான் மீனவர்களின் நிலைமை. இப்படி பட்ட மீனவர்களை தான் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மீனவர்களின் மீது பொதுவாகவே ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மீனவர்கள் இரட்டைமடி வலைகளை பயன்படுத்துகிறார்கள். இது தடை செய்யப்பட்டது. எப்படி பயன்படுத்தலாம்? என கேட்கிறார்கள். இது உண்மையாக இருக்கலாம் ஆனால், இந்த வலையை மீனவர்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

கடலில் மீன்வளம் குறைந்தது தான் முக்கியமான காரணம். ஏன் மீன்வளம் குறைந்தது? கடல்வளம் கார்ப்பரேட்டுகளுக்கு சென்று விட்டதால் தான். முன்னரெல்லாம் குறைவான நாட்டிகல் மைல் தூரம் சென்றாலே நல்ல மீன்கள் கிடைத்து வந்தன. ஆனால் இன்று அப்படி இல்லை. தொலைதூரம் சென்றால் கூட மீன் கிடைப்பது அரிதாகிவிட்டது.

கார்ப்பரேட்டுகளின் மீன்பிடி கப்பல்கள் மீன்களை மொத்தமாக வாரி சுருட்டும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன, அதை பார்த்தால் புரியும் நமக்கு! இவர்களோடு போட்டி போட்டுத்தான் நமது மீனவர்கள் பிழைக்க வேண்டும். மொத்த மீன்களையும் வாரி சுருட்டும் அளவுக்கு பெரிய அளவிலான வலைகளை பயன்படுத்துகிறார்கள் பன்னாட்டு கம்பெனிகள். அதற்கேற்ப மீன்பிடி படகுகளையும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பிடித்தது போக மிச்சம் மீதி இருப்பதை தான் நாம் பிடித்துக் கொள்ள வேண்டும். இது போன்ற சூழலால் தான் மீனவர்கள் அதிக தூரம் சென்று மீன்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினை நமது மீனவர்களுக்கு மட்டுமில்லை. இலங்கை மீனவர்களுக்கும் தான். இலங்கையில் சீன நிறுவனங்கள் விலை உயர்ந்த கடல் அட்டைகளை வளர்க்கின்றன. இதனால் கடல்கரை பகுதிகளில் கிடைக்கக் கூடிய இறால் போன்ற மீன்களை பிடிக்க முடியாமல் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதையும் படியுங்கள்: இலங்கை வடக்கில் வாழும் வறிய மீனவர்கள் கடல் அட்டைப் பண்ணைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பற்றி பேசுகின்றனர்.

தமிழக மீனவர்கள் இரட்டைமடி வலைகளை ரிஸ்க் எடுத்து பயன்படுத்துகிறர்கள். இது அரசுக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் தான் இருக்கிறது. ஏனென்றால் இழுவைமடி வலைகள் உற்பத்தி செய்யப்படுவதும் தடுக்கப்படுவதில்லை. விற்பனை செய்வதும் தடுக்கப்படுவதில்லை.

தொலைதூரம் சென்று மீன்பிடிக்க வேண்டியதின் அவசியத்தை ஏற்படுத்தியது ஏகாதிபத்தியங்கள் தான். இதில் முதன்மை குற்றவாளியும் ஏகாதிபத்தியங்களே. இவர்களின் கட்டுப்பாடற்ற கடல் கொள்ளையே மீனவர்களின் இந்த நிலைமைக்கு காரணம் என்பதை முதலில் மீனவர்கள் உணர வேண்டும்.

போர் கப்பல் விக்ராந்த்

இன்னொரு புறம் இந்திய கடற்படை. இந்தியாவின் பட்ஜெட்டில் பெரும் பகுதி பாதுகாப்புக்கே ஒதுக்கப்படுகிறது. ஆனால் அது யாருடைய பாதுகாப்புக்கு? என்பது தான் கேள்விக்குறி.! இந்திய கடற்படை ரோந்து கப்பல்கள் கரையோரங்களில் நிறுத்தி வைப்பதற்காகவா உருவாக்கப்பட்டது? தினம் தினம் இலங்கை ராணுவத்தால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், அதை தடுக்க துப்பில்லை இந்திய கடற்படைக்கு. சில முறை சுட்டும் கொல்லப்பட்டுள்ளார்கள் நமது மீனவர்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்க்கவும், கரையோரங்களில் நிறுத்தி வைக்கவுமா மக்களின் வரிப்பணத்தில் பல ஆயிரம் கோடி செலவு செய்து போர்கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன.? அல்லது கடல் பகுதி வழியாக ஊடுருவ நினைக்கும் எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் விமானத்தை சுமந்து செல்லும் போர்கப்பல் விக்கிராந்த் என பெருமை பேசவா? உள்நாட்டு மீனவ மக்களை காப்பாற்ற வக்கில்லாத போது வீண் பெருமை ஏன்?

மீனவர்களே ! நமக்கு இருக்கும் ஒரே தீர்வு, கடல்வளங்கள் மொத்தத்தையும் இரு நாட்டு மீனவர்களும் பயன்படுத்தும் வகையில் ஏகாதிபத்திய நிறுவனங்கள் மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்! அதனை செய்ய இப்போது ஆட்சியில் இருக்கும் கார்ப்பரேட் நல காவி பாசிச அரசாங்கம் விரும்பாது. மக்கள் நலனில் இருந்து சிந்திக்கும் புதிய அரசமைப்பே தீர்வு தரும்! அதற்காக அனைத்துத் தரப்பட்ட மக்களையும் ஒன்றிணைத்து போராடுவோம்!.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here