புஜதொமு – பத்திரிக்கை செய்தி | NDLF

மோடியின் எட்டு ஆண்டு கால ஆட்சியில், தலித்துக்கள், இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, தொழிலாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பத்திரிக்கை செய்தி !


மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து !
விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த நிரந்தரத்தீர்வை நோக்கி முன்னேறுவோம் !

இந்த வெற்றிக்கு போராடிய அனைத்து உழைக்கும் மக்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக போராட்ட வெற்றி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்வதாக இன்று (19.11.2021) காலை மோடி அறிவித்திருக்கிறார். இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுக்கள் வழி செய்யும் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த ஓராண்டு காலம் உறைபனிக் குளிரும், மழை – வெயிலும் எனப் பாராமல் போராடி, 700-க்கும் மேற்பட்டோரின் உயிர்த்தியாகத்திற்குப் பிறகும், அசராமல் நின்ற விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். மக்கள் சக்தியே வரலாற்றைப் படைக்கும் மாபெரும் சக்தி என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளனர். மக்கள் போராட்டமே பாசிசத்தை மண்டியிடச் செய்யும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது இந்தப் போராட்டம்.

வேளாண் சட்டத்தை ரத்து செய்த மோடி, கடைசி வரை இந்த சட்டங்களின் நன்மையைப் பற்றி விவசாயிகளுக்குப் புரிய வைக்க முடியவில்லை என காரணம் கூறியுள்ளதோடு, வேளாண் சட்டங்களை ஆராய, மாநிலப் பிரதிநிதிகள் விவசாய சங்கங்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதிலிருந்து மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்பதை உணர்ந்தோ, அதற்காக மனம் திருந்தியோ அவர் ரத்து செய்யவில்லை என்பதை அவர் வாயாலேயே தெளிவுபடுத்தி விட்டார்.

இதிலிருந்து மீண்டும் வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படும் என்பதை சூசகமாக இல்லாமல் நேரடியாகவே அறிவித்து விட்டார். இந்த சட்டங்களை இப்போது ரத்து செய்வதற்கு, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற உபி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே முக்கிய காரணம் என்பது, உள்ளங்கை நெல்லிக்கனி, சமீபமாக நடத்தப்பட்ட இடைத்தேர்தல் மற்றும் மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களிலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களிலும் தொடர்ந்து மண்ணைக் கவ்வியதால் ஆர்எஸ்எஸ் – பாஜக விற்கு ஏற்பட்ட ஞானோதயமே இந்த வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்பு.

வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்கள் ரத்து பற்றி, முறையான நடவடிக்கை எடுக்கப்படும். அதனால், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு, தங்களது வீடுகளுக்குத் திரும்புமாறு மோடி வேண்டுகோள் வைத்துள்ளார். எங்களது கோரிக்கைகள் வேளாண் சட்டத்தை ரத்து செய்வது மட்டுமல்ல, அனைத்து விவசாயப் பொருட்களுக்கும், குறைந்தபட்ச ஆதார விலையை உத்திரவாதப்படுத்த சட்டம் இயற்றுவது, மின்சார சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது உள்ளிட்டவை ஆகும். அது பற்றியும். நாடாளுமன்றத்தில் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகே எங்களது போராட்டத்தைப் பற்றி முடிவெடுக்க முடியும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவித்துள்ளது.

எனவே, ஓராண்டு காலம் போராடும் விவசாயிகளை ஏறெடுத்தும் பார்க்காத மோடியின் ஒரே ஒரு ரத்து அறிவிப்பை மட்டும் நம்பி போராட்டத்தைக் கைவிடத் தயாராக இல்லை. எனினும், மோடியின் அறிவிப்பை விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளனர்.

மோடியின் எட்டு ஆண்டு கால ஆட்சியில், தலித்துக்கள், இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, தொழிலாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண் சட்டத் திருத்தம் மட்டுமின்றி, தொழிலாளர் சட்டத் திருத்தம், மீன்பிடி சட்டத் திருத்தம், மின்சார சட்டத் திருத்தம். சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு மசோதா, புதிய கல்விக் கொள்கை, குடியுரிமைச் சட்டத் திருத்தம் எனப் பல்வேறு சட்டங்களையும் கார்ப்பரேட்டுக்களின் நலனுக்காக தொடர்ச்சியாக திருத்தி வருகிறது.

இந்தச் சட்டத்திருத்தங்கள் மட்டுமின்றி. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. நடவடிக்கைகளால் சிறுதொழில்கள் அழிந்தன. இப்போது தேசிய பணமாக்கல் திட்டத்தின் பெயரால் பொதுத்துறை நிறுவனங்களை ஓட்டுமொத்தமாக தனியாருக்கு கொடுக்கிறது; மோடி அரசு, இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்க்கும் மாணவர்கள், அறிவுஜீவிகள் என அனைவரையும் ஊபா, என்.ஐ.ஏ. மூலம் சிறையிலிட்டுக், கொல்வது என தனது பாசிச நடவடிக்கைகள் மூலம் மிரட்டுகிறது ஆர்.எஸ்.எஸ்.- சங்பரிவார் கும்பல்.

மறுபுறம்,சிபிஐ, அமலாக்கத்துறை என அரசின் நீதி நிர்வாகம் முழுவதையும் தனது அடியாட்களை நியமிக்க அவசர சட்டம் இயற்றியுள்ளது. நாட்டின் நீதித்துறைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, உரிமைகளையும், ஜனநாயகத்தையும் காக்க மக்கள் தான் விதியில் இறங்க வேண்டும் என நீதிபதிகளே சொல்லும் நிலையில் தான் நாடு உள்ளது. இந்த நிலையில் விவசாயிகளின் போராட்ட வெற்றி. ‘போராட்டம் தீர்வல்ல” என்பவர்களின் மனநிலையை உடைத்தெறிந்துள்ளது. இது கொண்டாட வேண்டிய வெற்றி மட்டுமல்ல, ஒரு ஜல்லிக்கட்டைப் போல, ஒரு ஸ்டெர்லைட்டைப் போல, ஒரு வருடமாய்ப் போராடிய இந்த டெல்லிக்கட்டையும் உழைக்கும் மக்கள் முன்னுதாரணமாக வரித்துக் கொள்ள வேண்டிய போராட்டம்|

எனவே, மூன்று வேளாண் சட்டத் திருத்தம் மட்டுமல்ல. மக்கள் மீது தொடர்ந்து திணிக்கப்பட்டு வரும் கார்ப்பரேட் நலன் சார்ந்த அனைத்து சட்டங்களையும் ரத்து செய்யும் வகையில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். கார்ப்பரேட் காவி’ பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகளுடன். தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் ஒருங்கிணைப்பை உருவாக்குவோம். அத்தகைய பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியே பாசிசத்தை நிரந்தரமாக வீழ்த்தும்.

விவசாயிகளின் விளை பொருளுக்கு ஆதாரவிலை கிடைக்க சட்டம் இயற்றப் போராடுவோம்!

மின்சார திருத்தச்சட்டம், மீன் வள மசோதா, தேசியக் கல்விக்கொள்கை ஆகியவற்றை திரும்ப பெற போராடுவோம்!

44 சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற போராடுவோம்!

இப்படிக்கு,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – புதுச்சேரி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here