இந்துமதமும்! இந்துத்துவாவும் ஒன்றல்ல!


ந்திய தத்துவ மரபு இந்து மரபு கிடையாது என்பதுதான் எமது நிலைப்பாடு!
பிரிட்டன் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு ஆறு மாதங்களாக பிரிவு பட்டு கிடந்த வேத மதம் பிரிட்டிஷ்காரர்களின் தயவினால் ஒரே மதமாக இந்து மதமாக மாற்றப்பட்டது.
இந்த ஆறு மதங்களை ஏற்காத சாருவாகனம், மீமாம்சம், ஆசீவகம், பூர்வ மீமாம்சம் போன்ற பல்வேறு வழிபாட்டு முறைகளையும் ஒரே குடுவையில் அடைத்து ‘இந்து’என்று பெயரிட்டது பிரிட்டனின் சதித் தனமாகவே பார்க்கவேண்டும்.
ஆனால் இந்துக்களின் தலைவன் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொள்ள ‘லோககுரு’ சங்கராச்சாரி பிரிட்டிஷ்காரன் வந்ததால் தான் இந்து மதம் ஒன்றாக இணைக்கப்பட்டது என்பதை தனது தெய்வத்தின் குரல் நூலில் எழுதியுள்ளார்.
நாத்திகர்களையும் இந்து என்று பார்க்கும் பார்ப்பன இந்து மதத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தவும், முறியடிக்கவும் மேற்கண்ட கட்டுரை உதவும் என்ற நோக்கத்தில் பேராசிரியர் ரொமிலா தாப்பர் நேர்காணலின் தமிழாக்கத்தை 2 பாகங்களாக வெளியிடுகிறோம்.

000

ரொமீலா தாபர்
பேட்டி கண்டோர்: ஜிப்சன் ஜான் – ஜிதேஷ், பி.எம்.
நன்றி: ஃப்ரண்ட்லைன்

இன்றைய அறிவுலகில் பெரிதும் போற்றப்படும் வரலாற்று அறிஞராகத் திகழும் பேராசிரியர் ரொமீலா தாபர் பண்டைக்கால இந்தியாவிலிருந்து தொடங்கி இன்றைய காலம் வரை சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இயங்கியல் நோக்கில் உரிய ஆதாரங்களோடு தொடர்ந்து நிறுவி வருபவர். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றி 1991இல் ஓய்வு பெற்ற அவர், தற்போது அப்பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியராக இருந்து வருகிறார்.

‘கருத்து வேறுபாடுகளின் குரல்கள் – ஒரு கட்டுரை’ என்ற அவரது நூலினை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடங்கும் இந்தப் பேட்டி, இந்திய வரலாற்றில் கருத்து வேறுபாடாக எழுந்த குரல்கள், இந்து மதமும் மதரீதியான கருத்து வேறுபாடுகளும், வரலாற்றில் இந்து மதம், மதச்சார்பின்மைக்கும் மதரீதியான சகிப்புத் தன்மைக்கும் இடையே உள்ள வேறுபாடு, ஆரிய குடியேற்றம் பற்றி எழுந்துள்ள விவாதங்கள் ஆகிய விஷயங்களை ஆழமாக விவாதிக்கிறது.

ஆசிரியர் குழு
மார்க்சிஸ்ட் இதழ்.

000

‘கருத்து வேறுபாடுகளின் குரல்கள்- ஒரு கட்டுரை’ என்ற நூலை எழுதும்போது உங்கள் நோக்கம் என்னவாக இருந்தது? ஒருவேளை இன்றைய இந்தியாவில் அரசியல் மற்றும் அறிவுத்துறையில் நிலவி வரும் நிலைமைகளுக்கு உங்களின் எதிர்வினைதான் இது என்று எடுத்துக் கொள்ளலாமா?

தற்போதைய நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருந்தபோதிலும், இந்தக் கருத்து வேறுபாடு என்பதொன்றும் புதியதொரு ஆய்வுப் பொருளல்ல. உண்மையில் கருத்து வேறுபாடுகளே எழாத காலம் என்ற ஒன்று இருந்ததேயில்லை. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டியதென்னவெனில், நாம் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளும் சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் கருத்து வேறுபாடு என்பது பயனுள்ளதாக இருந்துள்ளதா? என்பதே ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதெனில், இந்தக் கருத்துவேறுபாடுகள் அக்காலத்திய மதத்திலும், சமூகத்தின் விதிமுறைகளிலும் ஒரு சில புதிய உருவாக்கங்களுக்கு வித்திட்டுள்ளனவா? என்பதை ஆய்வு செய்வதே ஆகும்.

கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக முற்கால இந்திய வரலாற்றில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகளின் வடிவங்கள் குறித்து நான் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். வேத அடிப்படையிலான பிராமணியம் என்பது ஒரு நிறுவன மதமாக மாறிக் கொண்டிருந்த ஒரு சமூகப் பின்னணியில் துறவு குறித்த பவுத்த மதக் கருத்துக்களை மதிப்பீடு செய்யும் ஓர் ஆய்விலிருந்து இது தொடங்கியது.

வேத அடிப்படையிலான மதம் என்பது அடிப்படையில் ஓர் உயர்சாதி மதமே ஆகும். இதை மறுதலித்த பவுத்தர்கள், சமணர்கள், ஆசிவகர்கள், சார்வாகர்கள் ஆகியோரும் பெரும்பாலும் உயர்சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். எனினும் சமூகத்தின் மற்ற பிரிவினரையும் அணுகும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு மதம் குறித்து பரப்புரை நிகழ்த்துவதில்தான் அவர்கள் தீவிர கவனம் செலுத்தி வந்தனர்.

கிறித்துவுக்கு முந்தைய ஆயிரமாண்டு காலத்தின் நடுப்பகுதியில் (அதாவது சுமார் கி.மு. 500 காலப்பகுதியில்) நிலவிய சமூகத்தின் சமூகச் செய்தியை என்னால் உணர முடிந்தது. அதாவது துறவு என்பது அன்றைக்கு நிலவிய சமூகத்திற்கு ஓர் எதிர்க்கலாச்சாரமாகவே இருந்தது. சன்னியாசத்திற்கும் துறவிற்கும் இடையிலான வேறுபாட்டை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. முதல் வகையானது சமூகத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட, தனிமைப்பட்டுக் கொண்ட ஒன்றாக இருந்தது எனில், இரண்டாவது வகையில் ஓரளவிற்கு சமூகத்தோடு தொடர்புகள் நீடித்து வந்தன. அதுவும் கூட சமூக நெறிமுறையை பரப்புவதன் மூலம் அனைவரிடையேயும் பக்தி உணர்வை அதிகரிப்பது என்பதே அதன் நோக்கமாக இருந்தது.

மிகச் சமீபத்தில் நவீன வரலாற்றிற்குள் சென்று சுதந்திரத்திற்கான தேசிய இயக்கத்திலும், முந்தைய காலத்திலும் நிலவிய கருத்து வேறுபாடுகளின் முக்கிய வடிவங்களுக்கு இடையே தொடர்புகள் ஏதும் உள்ளதா என்று காண முயற்சித்தேன். ஓர் அறப்போருக்கான காந்தியின் அறைகூவலுக்கு இந்திய மக்களிடமிருந்து மிகுந்த உற்சாகமிக்க வரவேற்பு ஏன் உருவானது என்பதைப் புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட அந்த நூலில் ஓர் உதாரணத்தை நான் எடுத்துக் காட்டியிருக்கிறேன். மக்களின் இந்த வரவேற்பு அந்த தருணத்திற்கான தேவையாக மட்டும் இருந்ததா? அல்லது கருத்து வேறுபாட்டின் முந்தைய வரலாற்று வடிவங்களின் தொடர்ச்சியினை அங்கீகரிப்பதாக அது இருக்கிறதா? என்பதே நான் எழுப்பியிருந்த கேள்வி.

அனைத்து வரலாற்று மற்றும் கலாச்சார பரிணாம வளர்ச்சியிலும் கருத்து வேறுபாடு என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் என்ற எனது வாதத்திற்கு ஒரு பின்னணியை வழங்கும் இந்த முந்தைய வரலாற்று வடிவங்களில் சிலவற்றை நான் இந்நூலில் விவாதித்திருக்கிறேன். எந்த வகையிலும் முன்னேறுவது என்பது அவசியம்.

தன்னைச் சுற்றி என்ன இருக்கிறது? என்று ஒருவர் கேள்வி எழுப்பவில்லை என்றால், கருத்துக்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் மேலோங்கிய வளர்ச்சி என்பது இருக்க முடியாது.

இந்த நூல் எனது சில கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகளை மிகவும் ஒருங்கிணைந்த முறையில் ஒன்றாகக் கொண்டுவருகிறது. வரலாற்றில் தொடர்ச்சியாக அல்லது பிறழ்வாக இருக்கும் எதிர்ப்பின் வடிவங்களை ஒன்றாக இணைக்கும் ஒரு முயற்சி இது. உதாரணமாக, துறவு பற்றிய கருத்துக்களில், கருத்து வேறுபாடுகளின் வடிவங்களில் நான் ஆர்வமாக உள்ளேன். எனவே சமூகத்தில் உள்ள கருத்து வேறுபாடு மற்றும் மதத்தில் உள்ள கருத்து வேறுபாடுகளில் இது எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதற்கான தொடர்பை நான் எடுத்துக்கொண்டேன். மதத்தில் உள்ள கருத்து வேறுபாட்டின் சில அம்சங்களில் நான் கவனம் செலுத்தியுள்ளேன். ஏனென்றால் இவை கருத்து வேறுபாட்டின் மிக முக்கியமான வெளிப்பாடாக இருப்பதால் அல்ல; மாறாக, கருத்து வேறுபாடு மற்ற மதங்களை விட பல மத இயக்கங்களில் அதிகம் காணப்படுவதால், அதை எளிதாகக் கவனிக்க முடியும். நிச்சயமாக, மதம் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு இடையே ஒரு நெருக்கமான தொடர்பு உள்ளது. சாதி என்பது சமூக அந்தஸ்தின் அடையாளமாக இருக்கும் இந்தியாவில் இது மிகவும் தெளிவாகத் தென்படுகிறது. மேலும் குறிப்பிட்ட சில சடங்குகள் மதப் பிரிவின் சமூக அடையாளங்களை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றன.

நமது சமகாலத்தில் விரிவான கேள்வியைப் பார்க்கும்போது, 2019 ஆம் ஆண்டின் இறுதியில் மற்றும் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அத்தகைய கேள்வியை வைத்திருந்த CAA எதிர்ப்பு [குடியுரிமை (திருத்த) சட்டம்] இயக்கம் பற்றி நான் யோசித்தேன். ஒரு சில நபர்களை சந்தித்து அது பற்றிப் பேசினேன். எனது மதிப்பீட்டில் காந்திஜிக்கு பிந்தைய நமது காலங்களில் கருத்து வேறுபாட்டின் இயக்கமாக இது இருந்தது. ஆனால் சத்தியாக்கிரகம் போன்ற ஒருமித்த நோக்கங்களை அது எடுத்துக் கொண்டது. இது ஒரு எதிர்ப்பு இயக்கம் எனினும் முற்றிலும் வன்முறையற்றது. இது அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட சட்டத்தை எதிர்க்கும் அளவுக்கு ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்டிருந்தது. இந்த விஷயத்தில் ஒரு உரையாடலைக் கோரியது. மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி நேர்மறையான மக்களின் ஆதரவும் அதற்கு இருந்தது.

காந்தியின் உப்பு சத்தியாக்கிரகம் ஒரு சட்டத்தை மீறுவதாக இருந்தது. ஆனால் CAA (குடியுரிமை திருத்தச் சட்டம்) விற்கு எதிரான எதிர்ப்பு இயக்கம் அதைச் செய்யவில்லை. அது இந்த சட்டத்தின் மீதான ஒரு விவாதத்தை கோருகிறது. இந்த சத்தியாக்கிரகத்திற்கு பொதுமக்கள் அளித்த ஆதரவையும், அதற்கு ஏன் இதுபோன்ற நேர்மறையான ஆதரவு இருந்தது என்பதையும் கண்டுபிடிப்பதற்கு நான் முயற்சித்தபோதுதான் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தில் ஒரு இணையை நான் கண்டேன். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் இதேபோன்ற பெரிய இயக்கம் பின்பற்றப்பட்டது. இந்த இயக்கத்தை வன்முறையாக மாற்றுவதற்கு பக்கவாட்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதும் நம் கவனத்திற்குரிய ஒரு விஷயமாகும்.

இவை அனைத்தின் விளைவு என்னவென்றால்: அகிம்சை முறையில் நம் எதிர்ப்பை வெளிப்படுத்துவது ஜனநாயகத்துடன் ஒத்துப்போகும்; அல்லது ஒருவேளை அதன் ஒரு முக்கிய அங்கமாகவும் இருக்கலாம் என்று நாம் வாதிட்டால், அதை அங்கீகரிக்கவும், புரிந்து கொள்ளவும் மதிப்பீடு செய்யவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கருத்து வேறுபாடும் சமூக மாற்றமும்

ஒவ்வொரு சமூகத்திலும் கருத்து வேறுபாடுகள் எப்போதும் இருக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் இந்த குரல்களை அந்தஸ்து, அதிகாரத்தில் இருப்பவர்களால் பொறுத்துக்கொள்ள இயலாது என்பதையும் நாங்கள் அறிவோம். இந்திய சூழலிலும் அதன் வரலாற்றிலும் இதைப் பற்றி நீங்கள் பேச முடியுமா?

கருத்து வேறுபாடுகள் கண்ணுக்குத் தென்படுவதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் சமூகத்தில் வரலாற்றுரீதியான மாற்றங்கள் எதுவும் இருந்திருக்காது. இந்திய சமூகமானது பல்வேறு மாற்றங்களைக் கடந்து வந்திருக்கிறது என்பதையும் நாம் அறிவோம். இந்த வரலாற்றுரீதியான மாற்றம் அப்போது நிலவுகின்ற அமைப்புகள், நடைமுறைகளை கேள்விக்கு உள்ளாக்குவதோடு, சமூகத்தை மேலும் முன்னேற்றுவதற்கான புதிய வழிமுறைகளையும் தேடுகிறது. எவரொருவரும், எந்த வழியில் இதை விளக்கினாலும் இதுவே உண்மை.

சமூகத்தை பல்வேறு வழிகளில் கட்டுப்படுத்த முற்படும் குறிப்பிட்ட குழுக்களின் லட்சியங்களுடன் இது பிணைக்கப்பட்டதாக இருக்கக் கூடும்; அல்லது அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம். எந்தவொரு காரணத்திற்காகவும், தேவையான மாற்று வழிகள் தேடப்படும்போதும் தற்போதுள்ள அறிவு கேள்விக்கு ஆளாக்கப்படும்போது மட்டுமே அறிவு முன்னேற முடியும். இவ்வகையில்தான் தத்துவம் ஆனது கருத்து வேறுபாட்டிலிருந்து வலுப்பெறுகிறது.

ஆகவே, உலகெங்கிலும் உள்ள பல்வேறு தத்துவ பிரிவுகளின் முக்கியத்துவம் என்பது – பரந்த அளவிலோ அல்லது ஒருவேளை தளர்ந்த வகையிலோ கூட இருக்கலாம் – இயங்கியல் சிந்தனை என்று அழைக்கப்படுகிறது. ஒரு வாதத்தைத் தொடங்க, எதிரியின் கருத்துக்களை முடிந்தவரை மிகச் சரியாக எடுத்துக் கூற வேண்டும். அதன் பிறகே அவை மாற்றுக் கருத்தால் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்று இந்திய தத்துவத்தின் பல பிரிவுகளும் எடுத்துக் கூறுகின்றன. அதன்பிறகே முன்னோக்கிய ஒரு வழி காணப்படுகிறது; அல்லது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட விஷயம் ஒதுக்கி வைக்கப்படுகிறது.

கருத்து வேறுபாட்டில் உள்ளீட்டாக இருப்பது அந்தக் கருத்து வேறுபாட்டினை வெளிப்படுத்துவதற்கான வழிமுறை ஆகும். முதல் கேள்விக்கான பதிலில் இதை நான் விவரித்திருந்தேன். ஒருவர் கடந்த கால முறைகளில் இருந்து எதையும் எடுத்து அவற்றை அப்படியே நிகழ்காலத்திற்கு உண்மையில் பயன்படுத்த முடியாது. நோக்கம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. உப்பு சத்தியாக்கிரகத்திற்கான பயணத்தில் பயன்படுத்தப்பட்ட வழிமுறை நம் காலத்தின் ஒரு பிரச்சினைக்கு சாத்தியமானதாக இருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். எனினும் குறைந்தபட்சம் அதைப் போன்ற ஒரு முறையை பின்பற்றுவதில் அடங்கியுள்ள கேள்விகளை நம்மால் அதிலிருந்து பெறக் கூடும். இது நமது சிந்தனைக்கு மேலும் உதவக்கூடும்.

சாதாரண மக்களின் எதிர்வினையைப் போன்றதாக இல்லாமல், கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துவதென்பது உபநிஷத்துகளில் வெளிப்படுவதுபோல இந்திய வரலாற்றில் ஓர் அறிவார்ந்த செயலாக இருந்தது என்று கூறலாமா?

கருத்து வேறுபாடு என்பது மாறுபட்ட வடிவங்களில் வெளிப்படுத்தப்படுவதை நாம் காண வேண்டும். சில தத்துவக் கோட்பாடுகளையும் விளக்கங்களையும் எதிர்கொள்வதில் தத்துவ விவாதத்தில் கருத்து வேறுபாடு என்பது பெரும்பாலும் அறிவுசார் மட்டத்தில் இருந்தது. ஆனால் இவை அனைத்தும் அறிவுக் கூர்மையான விஷயங்கள் என்பதோடு மட்டுமே மட்டுப்படுத்தப்படவில்லை. இந்த விவாதங்களில் வெளிப்பட்ட சில யோசனைகள் மற்றும் கருத்தாக்கங்கள் சமூக ரீதியான கேள்விகளுக்கும் பொருத்திப் பார்க்கப்பட்டன. உதாரணமாக, பவுத்தர்கள் தெய்வத்தை மறுப்பதிலும் பலி கொடுக்கும் சடங்குகள் ஆகியவற்றை மறுப்பதிலும் வேத பிராமணியத்தோடு முரண்பட்டு நின்றபோது, அவர்கள் நாத்திகர்கள் அல்லது கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இது கருத்து மட்டத்தில் இருந்தது. எனினும் அவர்கள் தங்களது கருத்துக்களை கற்பித்தலின் மூலம் செயல்படுத்தியதானது மக்கள் அவர்களை பின்பற்றுவதற்கு ஊக்கம் அளித்தது. அந்த மக்கள் அவர்களது நிறுவனங்களை ஆதரித்தனர். சமூகத்தில் நிலவி வரும் சில நடைமுறைகளை அவர்கள் கேள்வி கேட்பதையும் மக்கள் ஆதரித்தனர். இவ்வகையில்தான் அவர்களது மடாலயங்கள் அரச குடும்பங்களிடமிருந்தும் கைவினைக் கலைஞர்களின் குடும்பங்களிடமிருந்தும் நன்கொடைகளைப் பெற முடிந்தது.

பின்னாட்களில் பவுத்த மதத்திற்குள்ளேயே கருத்து வேறுபாடுகளைக் கொண்ட சில பிரிவுகள் உருவாயின. நம்பிக்கையின் அடிப்படையிலான விஷயங்களில் மட்டுமே அவர்கள் கருத்து மாறுபடவில்லை. அவற்றின் செயல்முறை குறித்தும் கூட கருத்து வேறுபாடு கொண்டவர்களாக இருந்தனர். உதாரணமாக, துறவிகள் பண நன்கொடைகளை ஏற்க முடியுமா? என்பதன் மீது கருத்து வேறுபாடு நிலவியது என்பதோடு, பவுத்த சங்கமானது இதன் அடிப்படையில் பிளவுபடவும் நேர்ந்தது. இடைக்காலத்தில், ரவி தாஸின் போதனைகள் சாதியின் ஏற்றத்தாழ்வுகளையும் அதை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகளையும் எதிர்த்தன. மேலும் சமூக ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவை மிகவும் பயனுள்ளதாக இருந்தன. அறிவார்ந்த மட்டத்தில் நிலவும் கருத்து வேறுபாடு பொதுவாக மக்களின் வாழ்க்கையின் அம்சங்களை பாதிக்கவில்லை என்று எப்போதும் கருத முடியாது. கருத்து வேறுபாடு என்ற செயல்முறை நுட்பமானதாக இருக்கலாம். எனவேதான் அதன் பல்வேறு வடிவங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகத் திகழ்கிறது.

இந்து மதத்தின் அடித்தளங்களும் வரலாற்று ரீதியான மாற்றங்களும் தாங்கள் முன்வைக்கும் கருத்துதான் இந்து மதத்தின் உண்மையான சாராம்சம் என்பதாக இந்துத்துவாவை முன்வைப்போர் எடுத்துக் காட்ட முயற்சிக்கும் நிலையில், இந்தியாவில், குறிப்பாக இந்து மதத்திற்குள், நிலவும் மதரீதியான கருத்துவேறுபாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா?

கருத்து வேறுபாடுகளின் குரல்கள் என்ற எனது நூலில் இதைத்தான் நான் சுட்டிக் காட்டி முயன்றிருக்கிறேன். குறிப்பாக, மதங்கள் என்பவை பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்ட குழுக்களைக் கொண்டதாகவே அமைகின்றன. கருத்திலும் பரப்புரையிலும் எந்த அளவிற்கு அதிகமாக ஒற்றைக் கடவுளைக் கொண்டதாக ஒரு மதம் மாறுகிறதோ, அந்த அளவிற்கு இத்தகைய குழுக்களுக்கு இடையிலான பிரிவினை என்பதும் மேலும் கூர்மையானதாக மாறுகிறது.

தொடரும்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here