கழுத்தை நெரிக்கும் காவி பாசிசம்!
வீழ்த்த ஒன்றுபடுவோம் ! 

மாநாடு – விழுப்புரம். அக்டோபர் 08 சனி, 2022

மாலை 4-00 மணி முதல் 9-00 வரை


மக்களை வதைக்கும்
வேலையின்மை, விலைவாசி உயர்வு!
மாநில உரிமை பறிப்பு, இஸ்லாமிய வெறுப்பு, சமூக நீதி மறுப்பு!
கழுத்தை நெரிக்கிறது கார்ப்பரேட் காவி பாசிசம்!
ஒன்றுபட்டு போராடி வீழ்த்துவோம்!


அன்பார்ந்த பொதுமக்களே!

“இந்தியாவை நான்கு குஜராத்திகள் ஆள்கிறார்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இரண்டு பேர் நாட்டை விற்கிறார்கள். அம்பானி, அதானி ஆகிய இரண்டு பேர் அதை வாங்குகிறார்கள்” என எழுத்தாளர் அருந்ததிராய் குறிப்பிட்டார். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு இருமடங்கு ஆதார விலை, கருப்பு பணத்தை வெளிநாட்டிலிருந்து மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்துவேன், என வாய்ச்சவடால் அடித்து ஆட்சிக்கு வந்தார் மோடி. ஆனால்,கட்டிய கோவணத்தை தவிர அனைத்தும் பறிபோகிறது. உரிய வேலை இல்லை போதிய ஊதியம் இல்லை. வரிக்குமேல் வரிக்கொள்ளை, விலைவாசி உயர்வால் வாழ முடியவில்லை. பெட்ரோல், டீசல், கேஸ் விலை மட்டுமல்ல, பால், தயிர், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மீதும் வரிவிதிக்கப்படுள்ளதால் விலை மேலும் மேலும் உயருகிறது. மக்களிடம் உள்ள வருமானம் சேமிப்புகள் அனைத்தும் உறிஞ்சப்படுகிறது. அடிப்படை தேவையான கல்வி மருத்துவம் செலவிற்கு மக்கள் பெருமளவில் கட்டாய செலவு செய்ய வேண்டி உள்ளது. ஒரு நாளைக்கு 12 முதல் 15 மணி நேரம் உழைக்கின்றோம், தீர்வில்லை. அதிகரிக்கும் மக்களின் எந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத ஒன்றிய மோடி அரசு, அம்பானி அதானிகளை மேலும் மேலும் கொழுக்க வைப்பதற்கான திட்டங்கள், சட்டங்களை அமல்படுத்துகிறது.

நாட்டின் சொத்துக்கள், நிலங்கள் அனைத்தும் ஒரு சதவீதம் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளிடம் குவிகின்றது. இந்தியாவின் 50% சொத்துக்கள் வெறும் 9 கார்ப்பரேட்டுகளிடம் இருக்கிறது. பல லட்சம் கோடி வரி தள்ளுபடி, வாராக்கடன் தள்ளுபடி என பெரு முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை வாரி வழங்குகிறது. அதே நேரத்தில் அனைத்து மக்களுக்கும் சென்றடைய கூடிய அடிப்படை இலவசத் திட்டங்களை நிறுத்த வேண்டும் என ரத்தம் குடிக்கும் ஓநாயாக ஒன்றிய அரசு மாறி நிற்கிறது.

பல ஆண்டுகள் பல லட்சம் தொழிலாளிகளின் உழைப்பால் அரசு முதலீட்டில் உருவான பொதுத் துறை நிறுவனங்களை, மின்சாரத்துறை, வங்கி-இன்சூரன்சு, தொலை தொடர்பு, விமான இரயில்வே-சாலைப் போக்குவரத்து துறைகள், ஆகியவற்றை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்று வருகிறது. பின்னலாடை முதல் ஜவுளி ஆலைகள் வரை, விவசாய இடுபொருட்கள் துவங்கி விதைகள் வரை, கல்வி, மருத்துவம் துவங்கி இராணுவ தளவாட உற்பத்தி, இராணுவம் வரை அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் பகற்கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் பலிகொடுக்கப்படுகிறது.

விவசாயிகளின் நில உரிமையை பறித்து, நாட்டு மக்களின் உணவு தற்சார்பை கார்ப்பரேட்டுகளின் கையில் தாரை வார்க்கும் புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் இலவச மின்சாரத்தை பறிக்கும் புதிய மின்சார சட்டங்கள், இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும், சுற்றுசூழலை நாசமாக்க அனுமதிக்கும் புதிய சுற்றுசூழல் சட்டங்கள், தொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்றும் புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகள், காசு உள்ளவனுக்கே கல்வி என்ற புதிய மனுதர்ம கல்வி கொள்கை, இவ்வாறு மக்கள் மீதான தாக்குதல் கொத்து குண்டுகளாக தொடர்கிறது.

Makkal adhikaram A4 3fold

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை அடக்கி ஒடுக்க பா.ஜ.க அரசு செய்த ஈனச்செயல்கள் நாடறியும். ஐந்து மாநில தேர்தலுக்கு அஞ்சி மோடி அரசு விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்பதாக வாக்குறுதி அளித்தது. ஆதார விலை, விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ், இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, என எதையும் அமல்படுத்தவில்லை. ஜெய்கிசான் ஜெய் ஜவான் என வாயால் வடைசுட்டு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. உ.பி. யில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த ஒன்றிய அமைச்சரை நீக்கவும் இல்லை. பா.ஜ.க அரசு கண்டிக்கவுமில்லை.

ஆங்கிலேயனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து அவனிடம் பென்சன் வாங்கி உயிர் பிழைத்தவர், காந்தி கொலை வழக்கின் குற்றவாளி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் சாவர்க்கர் சுதந்திர போராட்ட தியாகியாம் அதை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பதிவு செய்கிறார். அது தவறு என போராடியவர்கள் சிறைபடுத்த படுகிறார்கள். காந்தியை சுட்டு கொன்ற கோட்சே பற்றி பேசக்கூடாது என கோவையில் போலீசார் தடுக்கிறார்கள். மீண்டும் வர்ணாசிரம மனுதர்மத்தை புதுப்பித்து பார்ப்பனீய இந்து ராஷ்டிராவை ‘2025-க்குள் உருவாக்க ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கூட்டம் மூர்க்கமாக செயல்பட்டு வருகிறது. மாநில உரிமைகளை பறித்து பல்வேறு தேசிய இனங்களின் மொழி, கலாச்சாரம் பண்பாடு, தனித்தன்மை ஆகியவற்றை சிதைக்க முயல்கிறது.

வரலாற்று சின்னமாக இருந்த பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டும் தீர்ப்பை உச்சநீதிமன்ற வழியாக பெற்றது. அயோத்தி தொடர்ந்து காசி மதுரா மசூதியை குறிவைத்து வன்முறையை ஏற்படுத்த முயல்கிறது. சி.ஐ.ஏ, என்.ஆர்.சி மூலம் இசுலாமியர்களின் குடியுரிமையை பறித்து அகதிகளாக்க முயன்றது. இஸ்லாமியர்களை கொலை செய்வோம் என சாமியார்கள் வெளிப்படையாக பேசுவது , இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை, மாட்டுகறி விற்க தடை, ஜெய் அனுமான், ஜெய்ஸ்ரீராம் கோசம் போடச்சொல்லி வன்முறை ஏற்படுத்துவது இவைகள் நாடு முழுவதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டது. இதற்கு எதிராக போராடும் இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர் வைத்து இடிப்பது என பெரும் அபாயத்தை நோக்கி இந்தியா செல்கிறது. இவ்வாறு தொடர்வதை பற்றி “இந்தியாவில் இனப்படு கொலை நடக்கும் ஆபத்து உள்ளது என மானுடவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினார்கள், பேசினார்கள் என்பதற்காக அறிவுத்துறையினர் ஆனந்த் தெல்தும்டே, கௌதம் நவ்லகா, ரோனா வில்சன் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்டவர்கள் ஊபா சட்டத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இதில் பாதிரியார் ஸ்டேன் சுவாமி சிறையிலேயே உயிரிழந்தார். பெகாசஸ் என்ற இஸ்ரேல் உளவு மென்பொருள் மூலம் மோடி அரசு போலீயாக சாட்சியத்தை உருவாக்கி இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது நிரூபிக்கபட்ட பின்னரும் உச்சநீதின்றம் பிணை வழங்க மறுக்கிறது.

2002 குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீதான இனப் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய மனித உரிமை செயற்பாட்டாளர் தீஸ்தா, மோடி அரசுக்கு எதிராக சாட்சி சொன்ன அன்றைய குஜராத் போலீசு டி.ஜி.பி ஸ்ரீகுமார் எஸ்.பி சஞ்சிவி பட் ஆகியோர் இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். நுபுசர்மா என்ற பா.ஜ.க செய்தி தொடர்பாளர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் முகமதுநபியை பற்றி அவதூறாக பேசியது உலக அளவில் பெரிய சர்ச்சை ஆனது. அதை முகமது சுபைர் தனது ஆல்ட் நியுஸ் சேனலில் வெளியிட்டார் என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டார். உ.பி ஹத்ராசில் தலித் சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டு பெற்றோர்களின் சம்மதம் இன்றி உடலை நடுஇரவில் எரித்த போலீசு, ஆதிக்கசாதி வெறி கும்பலைபற்றி செய்தி சேகரிக்க சென்ற கேரள பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். உண்மையை பேசி, நீதிவேண்டி அமைதியாக சட்டப்படி போராடினால் சிறை தண்டனை என்பது பாசிச மோடி அரசின் சட்டம்.

தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்கட்சிகளை அச்சுறுத்தி,பிளவுபடுத்தி பல ஆயிரம் கோடியில் குதிரை பேரம் பேசி, சி.பி.ஐ அமலாக்கத்துறையை ஏவி கடிக்க விட்டு பல மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை பா.ஜ.க கைபற்றி உள்ளது. அவ்வாறு இயலாத மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் கொள்கை உடைய ஆளுநரை அமர்த்தி மாநில அரசுகளின் சட்ட திட்டங்களை முடக்குவது, போட்டி அரசாங்கத்தை நடத்துவது என செய்து வருகிறது. துலக்கமான உதாரணமாக நிற்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

மக்கள் எதை சிந்திக்க வேண்டும்? எப்படி சிந்திக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகள், ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் தங்கள் வலிமையான ஊடக பிரச்சாரங்கள் வழியாக தீர்மானிக்கிறார்கள். உள்நாட்டு பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் முதல் கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் போன்ற உலக தொழில் நுட்ப ஜாம்பவான்கள், அறிவுத்துறை கூலிப்படையினர் வரை இதற்கு துணை போகிறார்கள். மக்கள் போதையில் ஆழ்த்தப்படுகிறார்கள்.

இந்த அடிமைத்தளையிலிருந்து அறுத்து கொண்டு, சுயமாக சிந்திக்கவும், பறிக்கப்படும் நமது வாழ்வாதாரங்கள், அரசியல் உரிமைகள் ஆகியவற்றை மீட்கவும், நாம் அமைப்பாக திரள வேண்டும். பெரும்பான்மை மக்கள் பங்கேற்க கூடிய அரசு அதிகார கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

கார்ப்பரேட்- காவி பாசிசத்திற்கு எதிராக போராட முன்வரும் அனைத்து தரப்பினரும் பங்கேற்க கூடிய புதிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒன்றை அமைக்க வேண்டும். காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பகத்சிங் முதல் பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடிய பெரியார், அம்பேத்கர் வரை போராட்ட மரபுகளை வரித்துக் கொண்டு பாசிசத்தை வீழ்த்தவும், பெரும்பான்மை மக்கள் தரப்பு பங்கேற்கும் ஜனநாயக கூட்டரசு என்ற புதிய மாற்றை உருவாக்கவும் தேவையான ஐக்கியத்தை ஏற்படுத்தும் துவக்கமும், திருப்புமுனையும் தான் விழுப்புரம் மாநாடு.

அனைவரும் வாரீர்!! மாநாட்டு நிதி தாரீர்! 
அறைகூவி அழைக்கும்,

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9597138959

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here