ஹிஜாப் தடை:
முஸ்லிம் மாணவிகளின் கல்வி உரிமை பறிப்பு!

கர்நாடக பாஜக அரசும் நீதிமன்றங்களும் இழைத்த அநீதி!

கர்நாடக பாஜக அரசே!
ஹிஜாப் தடையை நீக்கு! மீண்டும் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்து!

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!

கர்நாடகா மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 21,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை. இது கடந்த ஆண்டு பொதுத் தேர்வுக்கு வராமல் விட்ட மாணவர்களின் எண்ணிக்கையை விட 457% அதிகம். தேர்வு எழுதாத மாணவர்கள் எண்ணிகை இந்த அளவு உயரக் காரணம் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற கர்நாடக அரசின் உத்தரவே காரணம்.

இப்படி ஆயிரக்கணக்கான முஸ்லிம் மாணவிகளை தேர்வு எழுதவிடாமல் தடுத்து கர்நாடக பாஜக அரசும் நீதிமன்றங்களும் மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளது. கடந்த பிப் 5 ம் தேதி கல்வி துறை சார்பில் கல்லூரியல் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தது. அதன் ஒரு பகுதியாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான பல்கலைக்கழக கல்லூரியில் ஹிஜாப் அணிந்ததற்காக ஆறு முஸ்லீம் மாணவிகளை வகுப்பறைக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. மறு புறம் இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவித் துண்டு அணிவோம்! என இந்து மாணவர்களை தூண்டிவிட்டது கர்நாடகாவை ஆளும் RSS – BJP- ABVP கும்பல். இத்தனை நாட்களாக நண்பர்களாக, தோழிகளாக பழகிய மாணவர்களிடையே மத நஞ்சை விதைத்து, பிரிவினை சிந்தனையை வளர்க்கிறது சங்பரிவார் கும்பல்.

படிக்க:

♦  ஹிஜாப் தடை: முக்காடுகளும், அரைவேக்காடுகளும்!

♦  ஹிஜாப் பிரச்சனை அல்ல ! 

ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பலின் ரவுடித்தனங்களை கண்டிக்காத கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியமையாத அங்கம் அல்ல என்றும் மாணவர்களை சீருடை அணியச் சொல்வது அவர்களின் கருத்து மற்றும் தனியுரிமையை மீறுவதில்லை என்றும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைவதை தடுத்து ஆர்.எஸ்.எஸ்- பாஜக குண்டர்கள் சட்டவிரோதமாக, காலித்தனமாக செய்ததை சட்டப்பூர்வமாக நிகழ்த்தியுள்ளது. தேர்வு காலம் நெருக்கமாக இருந்ததாலும் உயர்நீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுத இயலாது என்பதாலும் அவசர வழக்காக எடுக்க உச்ச நீதிமன்றத்திடம் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இவை அனைத்தும் சேர்ந்துதான் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மாணவிகளை தேர்வு எழுதவிடாமல் தடுத்துள்ளது. ஹிஜாப் தடையை நீக்கி, தேர்வெழுதாத மாணவர்களுக்கு மீண்டும் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவதே சரி!

நடுநிலையாக, மதசார்பின்மையாக பேசுவதாக இருக்கும் பலரும்கூட பள்ளிச் சீருடைகளுக்கு மாற்றாக ஹிஜாப் அணிந்து வரத் தேவையில்லை என்றும், ஹிஜாப் முஸ்லிம் மாணவிகள் மீதான அடக்குமுறை என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். இவர்களின் இந்த அப்பாவித்தனமான நடுநிலையை ஆர்.எஸ்.எஸ்- சங்பரிவார் கும்பல் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. சீருடை என்பதன் நோக்கம் வர்க்க ஏற்றத்தாழ்வு மானப்பான்மை உருவாவதை தடுப்பது தானே ஒழிய அனைவரையும் ஒரே அடையாளத்துக்குள் கொண்டு வருவதல்ல. அப்படி கொண்டுவருவது எனில் விபூதி, நாமம், தாலி, பூணூல், டர்பன் அணிவது ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். ஹிஜாப் அணிவது பிற்போக்கா, முற்போக்கா என்பதல்ல விவாதப் பொருள். அதை அணிய விரும்பும் முஸ்லிம் பெண்களை தடுக்கும் உரிமையை ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பலுக்கு யார் தந்தது?

ஹிஜாப் பிரச்சினை தனித்த பிரச்சினை அல்ல. ஹிஜாப் அணிந்தால் பள்ளிக்கு வராதே என்ற குரலும் லட்சக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவிப்போம் என்ற ஹரித்வார் சாமியாரின் குரலும் வேறுவேறல்ல; கல்வியை காவிமயப்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது என்ற கேட்ட துணை குடியரசு தலைவர் வெங்கையாநாயுடுவின் குரலும் இதுவும் வேறுவேறல்ல. மாட்டுக்கறி தடை; ஹிந்து கோயில்களை சுற்றி முசுலிம்கள் கடை நடத்தக்கூடாது; ஹலால் கறி விற்கக்கூடாது; பொது இடத்தில் தொழுக அனுமதியில்லை என்று இசுலாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. முசுலிம் மக்களின் உணவு, உடை, தொழில், வழிபாடு அனைத்தும் சட்டவிரோதமாகவும் சட்டப்பூர்வமாகவும் தடுக்கப்படுகிறது. இவை குடியுரிமை திருத்தச் சட்டம் போல முசுலிம் மக்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்துராஷ்டிர திட்டத்தின் ஒரு பகுதியே. இந்த அடக்குமுறைகளை நாகரிக வளர்ச்சி அடைந்ததாக கூறிக்கொள்ளும் மக்கள் சமூகம் ஏற்க முடியாது. சமூகத்தை நேசிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் சக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை பொறுத்தக் கொள்ளக்கூடாது. நாட்டை நாசமாக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசத்துக்கு எதிராக ஒரணியில் திரள்வோம்!

பாசிச எதிர்ப்பு மாணவர் முன்னணியை கட்டியமைப்போம்!
பாசிஸ்டுகளிடம் இருந்து கல்வித்துறையை மீட்போம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

தலைமை அலுவலகம்;
எண்; 12, மூவேந்தர் நகர், தில்லை நகர், 7-வதுகுறுக்கு தெரு, திருச்சி – 620018. தொடர்புக்கு; 9445112675, rsyftn2021@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here