பொங்கல் மதப்பண்டிகையா?


நேற்று ஒரு காணொலியைக் காண நேர்ந்தது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வழக்கம்போல் பிதற்றினார்.

பொங்கல் தொகுப்புகளை தமிழக அரசு ரேஷன் மூலம் விநியோகித்து வருகிறது. இது வாடிக்கைதான். கடந்த அதிமுக அரசும் இந்த பொங்கல் தொகுப்புகளை வழங்கியது .

இத்தகைய பொங்கல் தொகுப்புகளை, முக்காடு போட்டவர்கள் எல்லாம் வாங்கிச் செல்கிறார்கள். பொங்கல் இந்துக்களின் பண்டிகை. பொங்கல் தொகுப்பை அரசு முஸ்லீம்களுக்கு கிறித்துவர்களுக்கு தரலாமா? எனக் கேட்கிறார் அர்ஜூன் சம்பத்.

இந்து மதம் தோன்றுவதற்கு முன்னரே, தமிழரால் கொண்டாடப்பட்டுவருகிற பண்டிகை பொங்கல். இது மதப்பண்டிகை கிடையாது. தமிழர் பண்டிகை.

பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்கிறது கலித்தொகை. பாடுபடுதல் என்பது உழைப்பதைக் குறிக்கும். உழைப்பிலிருந்து தோன்றுவதுதான் பண்பாடு. மருதநிலங்களில் அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் பண்டிகையே பொங்கல்.

சங்க காலத்திலிருந்து பூந்தொடை விழா, இந்திர விழா, உள்ளி விழா, தை நீராடல், என பல பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது பொங்கல் பண்டிகை .

கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் இது
தைப் பொங்கல் என இது பரிணாமம் பெற்றிருக்கலாம்! என தமிழறிஞர்கள் கருதுகின்றனர். இக்காலத்தில் எழுதப்பட்ட சீவகசிந்தாமணியில் தைப்பொங்கல் குறிப்புகள் கிடைக்கின்றன.

தமிழகத்தில் கிபி 8 ஆம் நூற்றாண்டிலிருந்தே இஸ்லாம் , கிறித்துவ மதங்கள் பரவத் தொடங்குகின்றன. இசுலாத்தையோ கிறித்துவத்தையோ இங்கு பின்பற்றியவர்கள் தமிழர்களே. அவர்கள் பின்பற்றிய மதநெறிதான் இசுலாம். இனத்தால் அவர்கள் தமிழர்களே.

நவாப்புகளின் வருகைக்குப் பிறகு, தமிழ் பேசும் இசுலாமியரையும் சாயபு, பாய் என உருது அரேபிய சொற்களில் அழைக்கும் வழக்கு இங்கு உருவானது. பாகிஸ்தான் இசுலாமியரும் வங்கதேச இசுலாமியரும் மதத்தால் இசுலாமியர். தேசிய இனத்தால் வேறுபட்டவர்கள்.

ஆனால் ஒரு இனப் பண்டிகையை மதத்தோடு சேர்த்து குழப்புகிறார் அர்ஜூன் சம்பத். எல்லா மதங்களைப் போலவே இசுலாத்திலும் தூய்மைவாதம் வளர்ந்திருக்கிறது.

இந்த தூய்மைவாதப்போக்கை கடைபிடிப்பவர்களும் பொங்கலை இந்து மதப் பண்டிகையாகப் பார்க்கிறார்கள். இப்போக்கும் தவறானது.

இதற்காக ஒட்டு மொத்த இசுலாமியர்களின் தேசிய அடையாளத்தையும் மறைத்து தமிழர்களிடமிருந்து அவர்களைத் தள்ளிவைப்பது ஆபத்தான போக்கு.

எங்கள் பள்ளியில் இல்லம் தேடி கல்வி பணியில் தன்னார்வலர்களாக பணியாற்றும் எனது மாணவிகளுக்கு பொங்கல் பரிசு அளிக்க வேண்டி ஒரு இசுலாமிய நண்பரின் உதவியைதான் நாடினேன். அவரும் மகிழ்ந்து இசைவளித்தார்.

மதத்தால் தமிழரை பிரிக்க எண்ணும்
அர்ஜூன் சம்பத் போன்றோரின்
சூழ்ச்சிக்கு நாம் பலியாகிவிடக் கூடாது.

தமிழராக இணைந்து பொங்கலைப் பொங்குவோம். பிரிக்க விழையும்
மத ஃபாஸிட்டுகளுக்கு எதிராக
தமிழர் நாம் உளம் பொங்குவோம்!

கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here