பொதுமருத்துவமனையின் கோவிட் வார்டிலிருந்து எப்படி அரிதாக உயிர்பிழைத்தேன்?


கட்டுரை தொடர்ச்சி…

அந்த பொது மருத்துவமனையின் பொது வார்டில் 50 படுக்கைகள் இருந்தன. அவை பெரும்பாலும் நிரம்பி இருந்தன. அங்கிருந்த செவிலியர் என்னிடம் காலியான படுக்கையைப் பார்த்து படுத்துக் கொள்ள சொன்னார். நான் குழப்பத்துடன், ” எனக்கு அணிந்து கொள்ள மருத்துவமனை ஆடைகளை தரமாட்டீர்களா?” எனக் கேட்டேன். எங்களிடம் அப்படி எதுவுமில்லை என முரட்டுத்தனமான பதில் வந்தது. வேறு வழியின்றி உடுத்திய ஆடையுடன் ஒரு படுக்கையில் படுத்தேன்.

அங்கு 24 மணி நேரமும் ஓயாமல் ஒலித்த காதை துளைக்கும் இரைச்சல் என்னை முதலில் தாக்கியது. இதன் ஒரு பகுதி, வார்டு பாய்கள் மற்றும் செவிலியர்கள் எப்போதும் எழுப்பிய சத்தம், மற்றது அங்கிருந்த மானிட்டர்களின் அலறல். என் படுக்கைக்கு அருகிலிருந்த மானிட்டர் கவனிக்கப்படாத ஓசை எழுப்பிக்கொண்டே இருந்தது. இதன் பொருள், எனது உடல் நிலை கண்காணிப்பில் இல்லை என்பதுதான்.

வீட்டில் குறைந்தபட்சம் எங்களிடம் ஆக்சி மீட்டராவது இருந்தது. இங்கு எனது ஆக்சிஜன் அளவு சரிந்தாலும் கண்டறிய வழியில்லை. நோயாளிகளின் அலறல் சத்தம் அவ்வப்போது கேட்டவண்ணம் இருந்தது. இறக்கும் தருவாயில் சிலர் இருந்தபோதிலும், குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் உள்ளே அனுமதியில்லை. வார்டு ஊழியர்களும் அவர்களுக்கு எந்த ஆறுதலும் அளிக்கவில்லை. இத்தகைய அவலங்களுக்கும், அவநம்பிக்கைக்கும் இடையே தூங்க முயற்சித்தும் நள்ளிரவில் கூட தூங்க முடியவில்லை.

அங்கு விண்வெளி வீரர்களைப் போல தோற்றமளித்த வார்டு பாய்களிடம் உரையாட நினைத்தேன். அதில் ஒருவரிடம் பேசியபோது, பெரும்பாலானவர்கள் பயிற்சி பெறாதவர்கள் என அறிந்தேன். மருத்துவமனையில் பணியாற்றும் வார்டு பாய்கள் கோவிட் வார்டில் வேலை செய்ய மறுத்துவிட்டனராம். ” லாக்டவுனுக்கு முன் நான் ஒரு ஹோட்டலில் ரூம் பாயாக இருந்தேன். நிர்வாகம் பணிக்கு வரவேண்டாம் என்றது. எனது குடும்பம் பசியில் வாடியது. கோவிட் வார்டில் பணிபுரிய முன்வரும் எவருக்கும் மருத்துவமனை வேலை வழங்கியது. எனக்கு பயமாக இருந்தாலும் வீட்டுப் பசியை போக்க வேறு என்ன செய்ய முடியும் ? ” என்றார் அவர்.

Around 1 Crore Healthcare Workers Will Be 1st To Get Covid Vaccine: Government

நான் வார்டில் இருந்த நாட்களில் ஒரு முறை கூட எந்த மருத்துவரும் வரவில்லை. நான் வெளியேற வழியின்றி சிக்கிக்கொண்டதாக நினைத்தேன். மேலும் மிகவும் அழுக்காக உணர்ந்ததால், ஊழியர்களிடம் குளிக்க அனுமதிக்குமாறு கெஞ்சினேன். முதலில் மறுத்தாலும் பிறகு என்னை குளியலறைக்கு அழைத்து சென்றனர். இவ்வளவுதான் எனக்கு நினைவில் உள்ளது. அதன் பிறகு நடந்தவற்றை எனது மனைவி மற்றும் மகளிடம் பிறகு கேட்டறிந்தேன்.

எனக்கு வந்த அழைப்புக்கு நான் பதிலளிக்காததால், எனது மனைவி செவிலியரை அழைத்து விசாரித்த போது, நான் நலமாக இருப்பதாகவும் கோவிட் தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சொன்னாராம். எனினும் சந்தேகமடைந்து அடுத்த நாள் அங்கு வந்து என்னை டிஸ்சார்ஜ் செய்ய சொல்லி வலியுறுத்தி உள்ளார். கோவிட் பாதிப்புள்ள ஒருவரை அப்படி விடுவிப்பது வழக்கத்துக்கு மாறானது என்ற ஊழியர்கள், எனது மனைவியின் தொடர் வற்புறுத்தலால் வேறு வழியின்றி என்னை விடுவித்தனர். அதுதான் என்னை பிழைக்க வைத்தது.

வீட்டில் எனது மனைவி மற்றும் மகளை கூட என்னால் அடையாளம் காண முடியவில்லை. அவர்களை செவிலியர்கள் என கூறினேனாம். நான் எதுவும் சாப்பிடாமல், பேசாமல் எப்போதும் குமட்டல் மற்றும் தலைவலி உள்ளதாக கூறியுள்ளேன். இரு நாட்கள் கழித்து எனது நெற்றியில் நீலநிற திட்டுகள் தென்படவே என்னை ஒரு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட பல பரிசோதனையின் முடிவில் எனக்கு கோவிட் பாதிப்பு இல்லை என்றும் மூளையில் காயங்கள் உருவாகி இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. பொது மருத்துவ மனையில் எனக்கு வழங்கப்பட்ட ஆஸ்பிரின் மாத்திரைகளால் இப்படி நிகழ்ந்திருக்கலாம் எனவும், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உடனே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தனர். ஆனால் அந்த மருத்துவமனையில் வசதி இல்லாததால் குருகிராமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்.

அங்கிருந்த இளம் நரம்பியல் மருத்துவர் மேலும் சில பரிசோதனை மேற்கொண்டு, மருந்துகளின் துணையோடு முயற்சித்து பார்த்து விட்டு, பிறகு தேவையெனில் அறுவை சிகிச்சை செய்யலாமென கூறியுள்ளார். இதில் எனக்கு நினைவு சிறிது, சிறிதாக திரும்பியது. எனக்கு உடல்நிலை சரியாகி என்னை நேசிப்பவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக முதலில் கற்பனை செய்து பார்த்தேன்.

அடுத்து, உச்சநீதிமன்றத்தில் எங்களது தலையீட்டிற்குப் பிறகு அசாமின் தடுப்பு மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்களை போய் பார்க்கவேண்டும். அங்குள்ள நோயாளிகள், சுற்றித்திரியும் குழந்தைகள் ஆகியோருடன் நேரில் உரையாடுவது போல எண்ணினேன். ஆனால் குளியலறைக்கே தனியாக செல்ல முடியாத நான் அஸ்ஸாம் எப்படி செல்ல முடியும்? எனது நினைவு மீட்கப்பட்டவுடன் வீடு திரும்பினேன்.

எனது நண்பர்களின் தொடர் வலியுறுத்தலால் முன்னணி நரம்பியல் மருத்துவர்களை சந்தித்தேன். அவர்கள் எனது ஸ்கேன்களைப் பார்த்து, எனக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பு புதிராக இருப்பதாகவும், ஆனாலும் உடல் மற்றும் ஆளுமையில் பாதிப்பில்லாமல் குணமடைந்தது மிகப்பெரிய அதிசயம் எனவும் தெரிவித்தனர். நான் இன்னும் சிலநாள் பொதுமருத்துவமனையில் இருந்திருந்தால் எனது மரணத்தை தடுத்திருக்க முடியாது.

எனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் எனது பழைய வேலைகளுக்குத் திரும்பினேன். அந்த மக்களின் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடி, என்னை அவர்களை விட்டு விலகாமல் வைத்தது. எனவே அஸ்ஸாம், மேவாட், மேற்கு உத்திரப் பிரதேசம், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் பயணித்தேன்.

நான் மீண்டும் நோய்வாய் பட்டேன். இந்த முறை கண்டறிய முடியாத காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்ந்தேன். எனது உடல் முழுவதும் சிவந்த திட்டுகள் தோன்றின. இதை முதியோருக்கு வரும் தட்டம்மை என்றனர். இதிலிருந்து குணமான பிறகு வழக்கமான பணிகளைத் தொடர்ந்தேன். மீண்டும் ஒருமுறை திடீரென இருவாரங்களில் ஆபத்தான வேகத்தில் 8 கிலோ எடை இழப்பு ஏற்பட்டது.என்னால் மூச்சு விடவோ எதையும் விழுங்கவோ இயலவில்லை.

மீண்டும் மருத்துவமனையில் புற்றுநோய், காசநோய்க்கான பரிசோதனைகள் நடந்தன. இம்முறை எனது நுரையீரல் முழுவதும் பூஞ்சையின் ஆதிக்கம். மூளை பிரச்சினைக்காக எடுத்த ஸ்டீராய்டுகளால் இது ஏற்பட்டு இருக்கலாம். மருந்துகளோடு, பீம்டாஸ் மலை வசிப்பிடத்தின் காற்றும், எனது 3 வயது பேரன் மற்றும் குடும்பத்தாரோடு இருந்ததாலும் மெதுவாக ஆரோக்கியத்துக்கு திரும்பினேன். ஒருபுறம் உடல் தகுதியை மீட்டெடுக்க போராட்டம். மறுபுறம் என்மீது அரசாங்கத்தால் தொடுக்கப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும் போராடவேண்டியுள்ளது.

அரசியலமைப்பு, சுதந்திரம், நீதி மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றுக்காகவும் குரல் கொடுக்கும் நிலை உள்ளது. எனது உடல்நிலை முழுமையாக மீள்வதற்கு நாளாகும் என உணர்கிறேன். ஆனாலும் எனது குரல், மக்களுக்கான ஆதரவு, அன்பு போன்றவை ஒரு வைரஸால் தோற்கடிக்கப்படுவதை நான் அனுமதிக்கப் போவதில்லை.

இந்தியாவில் பொதுமக்களின் நலன் மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ சேவையை பெற முடியாதவர்கள் நரகத்துக்குத் தள்ளப்படும் கவலைக்குரிய நிலைமைகள் எனது மனசாட்சியை உலுக்குகின்றன. நான் இந்தக் கடினமான பதிவை எழுதக் காரணம், நம் மக்களுக்கு இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான்!

ஹர்ஷ் மந்தேர். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்.

ஹர்ஷ் மந்தேர் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இஸ்லாமிய மக்களின் மீதான இனப்படுகொலையில் குஜராத்தில் அப்போது ஆட்சி செய்து வந்த மோடி அரசாங்கத்தின் பங்கை கண்டித்து தான் வேலை செய்து வந்த ஐஏஎஸ் பணியை தூக்கி எறிந்தார்.

தமிழில் : குரு

மூலக் கட்டுரை:
https://scroll.in/article/1012095/harsh-mander-how-i-barely-survived-covid-19-in-a-general-ward-of-a-public-hospital.

முந்தைய பதிவு:

பொதுமருத்துவமனையின் கோவிட் வார்டிலிருந்து எப்படி அரிதாக உயிர்பிழைத்தேன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here