கஜகஸ்தான்: கொடுங்கோல் ஆட்சியின் கோரப்பிடியில்!
கடந்த ஒரு வாரமாக கஜகஸ்தான் நாட்டில் நடந்து வந்த மக்கள் போராட்டங்களை ஒடுக்கி 160க்கும் மேற்பட்டோரைக் கொன்று, 5000க்கும் மேற்பட்டோரை சிறையில் அடைத்து ‘அமைதி’ நிலைநாட்டப்பட்டுள்ளது.

கஜகஸ்தான் அரசு வாகனங்களுக்கான எரிவாயுவின் விலை உச்சவரம்பை கிட்டத்தட்ட இருமடங்கு உயர்த்தியது. அந்த விலை உயர்வை ரத்து செய்யக்கோரி மக்கள் போராட்டங்களில் ஈடுபடத் துவங்கினர். குறிப்பாக, அந்த நாட்டின் முக்கிய நகரமான அல்மாட்டியில் 2022 ஜனவரி 2ந்தேதி தொடங்கிய போராட்டம் பிற நகரங்களுக்கும் பரவியது. எரிவாயு விலை ஏற்றத்துக்கு எதிரான போராட்டம் வேலையின்மை, அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு, தொடர்ந்து நசுக்கப்பட்டு வந்த ஜனநாயக உரிமைகள் என அரசின் மீதான கோபத்தையும் எரிபொருளாக கொண்டிருந்தது. அந்த தன்னெழுச்சியான போராட்டம் விரிவடையும் போக்கில் அதன் கோரிக்கைகளும் விரிவடைந்தன. மக்களின் பிரச்சினைக்கு காரணமான ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. எரிவாயு விலை குறைத்தது மட்டுமல்லாமல் அந்நாட்டின் அதிபர் டோகாயேவ் அமைச்சரவையை கலைத்துவிட்டு அவசர நிலையை அமல்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டன. ஆனாலும் அதிபர் எதிர்பார்த்தது போல் போராட்டங்கள் ஓயவில்லை; அடுத்த கட்டத்திற்கு வளர்ந்தது. “கிழவன் வெளியேற வேண்டும்” என்ற புதிய முழக்கம் வலுத்தது.
Footage from #Kazakhstan. Watch as the Kazakh protestors are reportedly fired on with military grade weapons.pic.twitter.com/oJyLukQrYz
— Steve Hanke (@steve_hanke) January 7, 2022
அந்த போராட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் அந்நாட்டின் அரசு திணறியது. அதன்மீது “வெளிநாட்டு சதி, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்” என முத்திரை குத்தி தனது நாட்டு மக்களையே “கண்டதும் சுடு” என உத்தரவிட்டு 12க்கு மேற்பட்டோரை சுட்டுக்கொன்றது. மக்கள் அதற்கு எதிர்வினையாக அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டனர்; காவல் நிலையத்தை கொளுத்தினர். இந்த தாக்குதல்களை காரணம் காட்டி ரஷ்யா தலைமையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (CSTO) என்ற அமைப்பு நேரடியாக தன் நாட்டு பிரச்சினையில் தலையிட வேண்டும்; ‘அமைதியை’ நிலைநாட்ட படைகளை அனுப்ப வேண்டும் என கஜகஸ்தான் அதிபர் கோரினார். ரஷ்யா தலைமையிலான CSTO படை வந்து இந்த ‘அமைதி’ நிலைநாட்டப்பட்டுள்ளது.
“கிழவன் வெளியேற வேண்டும்”
கஜகஸ்தான் முன்னாள் சோவியத் நாடு. மத்திய ஆசியப் பகுதியில் அமைந்திருக்கும் கஜகஸ்தான் எண்ணெய் வளம் அதிகம் கொண்ட நாடு ஆகும். மேலும் உலகின் யுரேனியம் உற்பத்தியில் 40% அந்த நாட்டில் நடைபெறுகிறது பொருளாதாரமான கிரிப்டோகரன்சி நாணயமான. பிட்காயின் வர்த்தகத்திலும் பெரும்பங்காற்றுகிறது.
1991யில் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு உலகெங்கும் உள்ள முதலாளித்துவ அறிவுஜீவிகள் “கம்யூனிச சர்வாதிகாரம் முடிவுக்கு வந்தது; முதலாளித்துவ ஜனநாயகமே இனி மனித சமூகத்தை முன்னேற்றும் ஒரே வழி” என வெற்றுக் கூச்சல் போட்டனர். அந்த கூற்று எந்த அளவு பொய்யானது என்பதற்கு கஜகஸ்தான் நாட்டின் கடந்த 30 ஆண்டு கால வரலாறு மிக முக்கியமான உதாரணமாகும்.
கஜகஸ்தான் நாட்டிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு வரை நுர்சுல்தான் நாசர்பயேவ் மட்டுமே அதிபராக இருந்துள்ளார். அவர் கடந்த 30 ஆண்டுகளில் தோன்றிய அத்தனை எதிர்கட்சிகளையும் நசுக்கியதன்மூலம் இந்த ‘சாதனை’யை நிகழ்த்தியுள்ளார். தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை கைப்பற்றிய முதலாளித்துவ பாதையாளர்கள் சர்வாதிகாரிகளாக சீரழிந்து போயினர்.
அந்த வரிசையில் நுர்சுல்தான் நாசர்பயேவ் கஜகஸ்தான் அதிபரானவுடன் வைத்த முழக்கம் “முதலில் பொருளாதாரம்” என்பதே ஆகும். போலி சோசலிச நாடாக சீரழிந்து போன ரஷ்யாவின் அங்கமாக இருந்த வரைகூட அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த எண்ணெய் வளங்கள் உட்பட நாட்டின் பல்வேறு துறைகளையும் தனியாருக்கு திறந்துவிட்டார். அந்த துறைகளில் ஏகபோக உரிமைதாரராக தனது குடும்பத்தை வளர்த்தெடுத்தார். அந்நாட்டின் எண்ணெய் வளங்கள் நுர்சுல்தானின் மருமகன் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நுர்சுல்தானின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில்தான் “கிழவன் வெளியேற வேண்டும்” என்ற முழக்கம் போராட்டக்காரர்களால் எழுப்பப்பட்டது.
இப்போதுள்ள அதிபர் காசிம் ஜொமார்ட் டோகாயேவும் நுர்சுல்தானால் அடையாளப்படுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவராகும். அந்த தேர்தலை ஜனநாயகமற்ற, நேர்மையற்ற தேர்தல் எனக் கூறி எதிர்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தது முக்கியமானதாகும். கஜகஸ்தானில் சிறிய அளவிலான எதிர்ப்பையோ, போராட்டத்தையோ நடத்தியவர்கள்கூட மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஊடக சுதந்திரத்தில் 180 நாடுகளில் 158வது இடத்தில் உள்ளது. சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு ஜனநாயகம் பூத்ததாக கூறப்பட்ட கஜகஸ்தானில் ஜனநாயகத்தின் நிலைமை இதுதான்.
இன்னொருபுறம் 81 வயதான நுர்சுல்தான் அந்த நாட்டின் இரண்டாவது பெரிய பதவியான தேசிய பாதுகாப்பு கவுன்சில் பொறுப்பை எடுத்துக்கொண்டார். இது நுர்சுல்தான் அதிகாரத்தில் இருந்து விலக விரும்பாததையே காட்டியது. இந்நிலையில் தற்போது நடைபெற்ற போராட்டங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அதிபர் டோகாயேய் நுர்சுல்தானை பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அவரது நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் கரீம் மசமோவை கைது செய்தார்.

இதன்மூலம் நுர்சுல்தான் ஆதிக்கத்தை தகர்த்து அந்த இடத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறார். அதற்காக தனது நண்பர் ரஷ்ய அதிபர் புதினின் உதவியை பெற்றுள்ளார். ரஷ்யா தலைமையிலான படை இந்த போராட்டம் முடிவுக்கு வந்தவுடன் கஜகஸ்தானைவிட்டு வெளியேறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. “கஜாக்கு” என்றால் “விடுதலை உணர்வு”. பெயருக்கு ஏற்ற வகையில் விடுதலை உணர்வை பெற்ற கஜகிஸ்தான் மக்கள் மீண்டும் எழும் போது ரஷ்ய வல்லரசின் ஆதிக்கமும் டோகாயேவின் கொடுங்கோல் ஆட்சியும் முடிவுக்கு வரும்.
- சதாம் உசேன்