பாலஸ்தீனம்-காசா வுக்கு எதிரான இஸ்ரேலின் போர்: உலகிற்கு உணர்த்தும் உண்மைகள்!

காசா பகுதியின் கட்டிடங்கள், மக்கள் வாழ்விடங்களில் 60 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், 68 சதவீத சாலைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், 67 சதவீத விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

பாலஸ்தீனம்-காசா வுக்கு எதிரான இஸ்ரேலின் போர்:  உலகிற்கு உணர்த்தும் உண்மைகள்!
ஓராண்டுகாலமாக காசாவை 85000 டன் எடையுள்ள குண்டுகளையும் ஏவுகணைகளையும் போட்டு சிதைத்தாலும் ஹாமாஸ் இயக்கத்தினரை சரணடைய வைக்கமுடியவில்லை

ரண்டாம் உலகப்போர் காலத்தில் பாலஸ்தீன பகுதி ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பில் இருந்தபோது ஜெர்மனியிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் துரத்தப்பட்ட யூதர்கள் பாலஸ்தீனர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிலங்களை வாங்கியும், அம்மக்களிடம் தஞ்சம் கேட்டும் குடியேறினர். பின்னர் நாளடைவில் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் சதியினாலும், ஆயுத உதவியினாலும் அதுவரை உலக வரைபடங்களில் இல்லாத இஸ்ரேல் என்ற இனவெறி அடிப்படையிலான ஒரு புதிய நாடு 1948-ஆம் ஆண்டு பாலஸ்தீனர்களின் மண்ணை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டது.

அப்போது இஸ்ரேல் நாட்டின் பரப்பளவு வெறும் 5600 சதுர கி.மீ. தான் இருந்தது. சியோனிச வெறிகொண்ட யூதமதவெறியர்களால் அவ்வப்போது பாலஸ்தீன மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி அவர்களை விரட்டிவிட்டனர். பின்னர் அவர்களின் மண்ணை படிப்படியாக ஆக்கிரமித்து தற்போது 22,072 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக இஸ்ரேல் விரிவுபடுத்தப் பட்டுள்ளது. இன்னும் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை பகுதியில் யூதர்களை குடியேறவைத்து தனது பரப்பளவை விரிவுபடுத்திவருகிறது. இவ்வாறு எண்ணெய்வளம் மிகுந்த மேற்காசிய பகுதியில் உள்ள நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முழு ஆசியுடன் யூத சியோனிச வெறிபிடித்த, பிராந்திய வல்லரசான இஸ்ரேல் என்ற நாடு திட்டமிட்டு உருவாக்கப் பட்டது.

பாலஸ்தீனர்களோ தங்கள் சொந்த மண்ணில், காசா மற்றும் மேற்கு கரை என்ற இரண்டு துண்டு நிலங்களாக சுருக்கப்பட்டு இஸ்ரேலின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பிரிக்கப்பட்டு உள்ளனர். இதில் இஸ்ரேலின் மேற்குப் பகுதியில் 21 லட்சம் மக்கள் வாழும் காசா பகுதி 41 கி.மீ. நீளமும், 6 கி.மீ. மற்றும் 12 கி.மீ. அகலமும் கொண்டு மொத்த பரப்பளவு 325 சதுர கி.மீ.-களையும், இஸ்ரேலின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்குக்கரை அதாவது ஜோர்டான் ஆற்றின் மேற்குக்கரையின் 5640 சதுர கி.மீ. பரப்பளவில் 27.47 லட்சம் மக்களும் வாழ்கிறார்கள்.

ஹமாஸின் திடீர் தாக்குதல் –  வெடித்துக்கிளம்பிய ஆற்றாமை!

காசாவில் 2007-ல் நடைபெற்ற தேர்தலில் ஆளும்கட்சியாக இருந்த பாலஸ்தீன விடுதலை முன்னணியின் ஃபதா கட்சியைத் தோற்கடித்து பெருவாரியான மக்களின் ஆதரவுடன் ஹாமாஸ் போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்றுவரை ஹாமாஸ் அமைப்பினர்தான் அப்பகுதியை நிர்வகித்துவருகின்றனர். காசாவின் பிரதமராக இஸ்மாயில் ஹனியே இருந்துவந்தார். அப்பகுதியில் வாழ்ந்துவரும் சுமார் 21 இலட்சம் மக்களும் அனைத்து அடிப்படை வசதிகளுக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் மேற்குக்கரை பகுதியையே சார்ந்து இருக்கவேண்டியிருந்தது. ஆனால் மேற்குக்கரைக்கு செல்லவேண்டுமென்றால் இஸ்ரேல் அமைத்துள்ள பல சோதனைச்சாவடிகளைக் கடந்துதான் போகவேண்டும், அதாவது இஸ்ரேல் அனுமதித்தால்தான் மட்டுமே செல்லமுடியும். காசாவின் மேற்குப்பகுதியில் மத்திய தரைக்கடல் உள்ளது. ஆனால் அதுவும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இப்படி நாலாபுறமும் சுற்றிவளைக்கப்பட்டு 2007-ஆம் ஆண்டுமுதல் காசா பகுதி கிட்டத்தட்ட ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. இதனால் அங்குவசித்துவந்த மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துவந்தனர். அதன் வெளிப்பாடாகத்தான் 2023 அக்டோபர் 17 -ஆம் தேதி ஹமாஸ் போராளிகளின் திடீர்தாக்குதல். அன்று இஸ்ரேலின் கிப்புட்ஸ் என்ற இடத்தில நடந்த ஒரு இசைவிழாவில் புகுந்த ஹமாஸ் போராளிகள் 1200  பேரை சுட்டுக்கொன்றும், 250  பேரை பணயக்கைதிகளாகவும் காசாவிற்குள் கொண்டு சென்றனர்.

உலக முதலாளித்துவ ஊடகங்களில் கணிசமானவற்றை கையில் வைத்திருக்கும் யூத இனத்தைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலாளிகளாலும், வலதுசாரிகளாலும், பார்ப்பனர்களாலும் ஹமாஸ் நடத்திய இத்தாக்குதலை ஒரு தீவிரவாதத் தாக்குதலாகவே உலக மக்களிடம் கொண்டுசென்றனர். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக திறந்தவெளிச் சிறைச்சாலையாக ஆக்கப்பட்டுள்ள காசா பற்றியோ, தினமும் சுட்டுக்கொல்லப்படும் அப்பாவி பாலஸ்தீனர்கள் பற்றியோ, காணாமல் ஆக்கப்பட்டுள்ள பாலஸ்தீன இளைஞர்கள் பற்றியோ, பொய்குற்றச்சாட்டுகளில் இஸ்ரேல் சிறைகளில் கொடுமைப்படுத்தப்படும் பாலஸ்தீன ஆண்களையோ, தங்கள் மகனை, கணவரை, உறவினரை இழந்து தவிக்கும் பாலஸ்தீன மக்களை பற்றியோ எந்த செய்தியும் வெளிவராமல் வெளிவராமல் பார்த்துக்கொண்டன.

ஹமாஸ் தாக்குதல் நடத்திய அந்த காலகட்டத்தில் இஸ்ரேலில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் சட்டதிருத்தத்துக்கு எதிராக நடைபெற்றுவந்த மக்கள் போராட்டத்தையும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பதவிவிலக்கோரி நடைபெற்றுவந்த போராட்டங்களையும் மடைமாற்ற இஸ்ரேலின் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாஹு ஹமாஸ் போராளிகளின் இத்தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு காசாவின்மீது முழுஅளவிலான போரைத் தொடுத்தார்.

கைவிடப்பட்ட பாலஸ்தீன் மக்கள்!

இஸ்ரேலில் உள்ள சியோனிச வெறிபிடித்த யூதர்களும், வலதுசாரிகளும், இனவெறிபிடித்த அரசியல்வாதிகளும், காசா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனர்களை இன அழிப்பு செய்து அப்பகுதியை இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ள இதுதான் சரியான நேரமென்று பிரச்சாரம் செய்தனர். அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல் எடுக்கும் முடிவுகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவும் ஒருவேளை அந்நாடு காசாவின் மீது படையெடுத்தால் தேவையான எல்லா உதவிகளும் செய்வதாக அறிவித்தன. அந்நாடுகளின் ஆயுத வியாபாரிகள் காசாவின் மீதான இஸ்ரேலின் போரால் மகிழ்ச்சியடைந்து “எவன் செத்தால் எனக்கென்ன? நமக்கு வேண்டியதெல்லாம் இலாபம் மட்டுமே” என்று பலவருடங்களாகத் தேங்கிக்கிடக்கும் ஆயுதங்களை தங்கள் நாட்டு அரசாங்கங்கள் மூலம் இஸ்ரேலுக்கு கப்பல் கப்பலாக அனுப்பிவைத்தனர். ஆயுத உற்பத்தியையும் முடுக்கிவிட்டனர்.  இந்தியாவிலிருந்தும்கூட ஆயுதங்கள் கப்பல்களில் அனுப்பிவைக்கப்பட்டன.

பாலஸ்தீன மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற நாடு தோற்றுவிக்கப்பட்டபோதே மண்ணின் மைந்தர்களுக்கும் வந்தேறிகளுக்குமான மோதல் தொடர்ந்து வந்தது. அவை 1948 மற்றும் 1967 ஆண்டுகளில் போராகவும் வெடித்தது. இப்போர்களில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போரை நடத்திய எகிப்து, ஜோர்டான், லெபனான், சிரியா, ஈராக்,  சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் இஸ்ரேலால் தோற்கடிக்கப்பட்டன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பரிபூரண ஆதரவு இருந்ததால் குறுகிய காலத்திலேயே பொருளாதார, தொழில்நுட்ப, மற்றும் இராணுவ ரீதியாக இஸ்ரேல் தனது பலத்தை கட்டமைத்துக்கொண்டது.

அந்நாட்டின் ஆளும்வர்க்கம் தங்களுடைய யூத மதநூலில் சொல்லப்பட்டுள்ளபடி பாலஸ்தீன பகுதி முழுவதுமே தங்களுக்கு கடவுளால் கையளிக்கப்பட்ட நிலம் என்று யூத மக்கள் மத்தியில் தீவிரமான பரப்புரை செய்து பாலஸ்தீனர்களை இழிபிறவிகளாக, திருடர்களாக, ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரித்தனர். இந்தியாவில் எப்படி ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்பரிவார் கும்பல் இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்துவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறதோ அதேபோல யூத மதவெறி அமைப்புகளும் பாலஸ்தீனர்களின் மீதான வெறுப்புணர்வை யூதர்களிடத்தில் வளர்த்தெடுத்தனர். அதனால் பாலஸ்தீனர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதும், சொத்துக்களை சூறையாடுவதும், எதிர்ப்பவர்களை காக்கை, குருவிகளை சுடுவதுபோல சுட்டுத்தள்ளுவதும் ஒரு இயல்பான நிகழ்வாக மாற்றப்பட்டது. மேலை நாடுகள் தங்களின் பொருளாதார நலனுக்காக இஸ்ரேல் என்ற ரவுடிநாடு மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டாலும், சர்வதேச உடன்படிக்கைகளை மீறினாலும் தட்டிக்கேட்பதில்லை.

அதுபோலவே உலகம் முழுவதும் மத அடிப்படையில் பெருமான்மையாக இருக்கும் கிறிஸ்தவ மக்களும் தங்களின் புனிதநூலான பைபிளில் சொல்லப்பட்டவாறு யூதர்கள்தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவார்ந்த இனம் எனவும், அவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாதென்றும் இந்தியாவில் பார்ப்பனர்களை சாதாரண மக்கள் எப்படி பார்க்கிறார்களோ அதேபோல யூதர்களை உயர்வாகக் கருதி அவர்களின் அடாவடிகளுக்கு, மனித உரிமை மீறல்களை கண்ணைமூடி ஆதரிக்கின்றனர். தற்போது நடந்த இந்தப் போரின்போதும் பெரும்பாலான கிறிஸ்தவர்களிடத்தில் இந்த எண்ணமே மேலோங்கியிருந்தது.

படிக்க:

🔰  காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்: பின்னணி என்ன?
🔰  சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு: சியோனிச இஸ்ரேலை தண்டிக்க முடியுமா?

அதேசமயத்தில் சுற்றியும் இஸ்லாமிய நாடுகள் இருந்தபோதும் அனைவராலும் கைவிடப்பட்டவர்களாக பாலஸ்தீனர்கள் இருந்துவருவதையும் உலகம் கண்டது. நடந்துமுடிந்துள்ள காசாவின் மீதான இஸ்ரேலின் போரில் குறிவைத்துக்கொள்ளப்படும் குழந்தைகள், பெண்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், பத்திரிக்கை நிருபர்கள், ஐ.நா. அமைப்புகளின் தன்னார்வத் தொண்டர்கள், மற்றும் அப்பாவி பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஈராக்கின் போராளிக் குழு, மற்றும் ஈரான் நாட்டின் ஹயாத் போன்றவை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி பாலஸ்தீன மக்களுக்குத் தங்களது ஆதரவை அளித்தனர். ஆனால் அமெரிக்க அடிமைகளாக முற்றுமுழுதாக மாறிவிட்ட  பாலஸ்தீனத்தை சுற்றியிருக்கும் மன்னராட்சி நடக்கும் மற்ற இஸ்லாமிய நாடுகள் எந்தவிதமான உதவியும் செய்யத் துணியவில்லை.

இஸ்ரேலை பணியவைத்த நெருக்கடிகள்!

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தபோதிலும், 21 லட்சம் மக்கள் தொகையுள்ள காசா பகுதியை சுற்றிவளைத்து பள்ளிகள், மருத்துவமனைகள், அகதி முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி தொடர் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சியோனிச இஸ்ரேலைக் கண்டித்து உலகம் முழுவதிலும் பேரெழுச்சியுடன் மக்கள் நடத்திய போராட்டங்கள் இனவெறி இஸ்ரேலையும், அதை ஆதரிக்கும் நாடுகளையும் நெருக்கடிக்குள் தள்ளியது.

ஓராண்டுகாலமாக காசாவை 85000 டன் எடையுள்ள குண்டுகளையும் ஏவுகணைகளையும் போட்டு சிதைத்தாலும் ஹாமாஸ் இயக்கத்தினரை சரணடைய வைக்கமுடியாதது; அவர்கள் பிடித்துச்சென்ற இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்கமுடியாதது; ஹமாஸ் போராளிகளின் அதிரடி கொரில்லா தாக்குதலை சமாளிக்கமுடியாதது; போர்நிறுத்ததை வலியுறுத்தி போருக்கான அமைச்சரவையிலிருந்து அதற்கான அமைச்சர் பதவி விலகியது; இராணுவத் தளபதிகள் பதவி விலகியது; போரில் இராணுவ அதிகாரிகளின், சக சிப்பாய்களின் மரணங்கள் ஆகியவை இஸ்ரேலிய இராணுவ வீரர்களிடையே மனச்சோர்வையும், மனஅழுத்தத்தையும் உண்டாக்கி போர் நிறுத்தம் செய்யவில்லையென்றால் நாங்கள் ஆயுதத்தை கீழே போட்டுவிடுவோம் என்று தங்கள் ஆட்சியாளர்களை எச்சரிக்கும் அளவுக்குப் போனது. உள்நாட்டிலும் போர்நிறுத்தம் செய்து பிணைக்கைதியாக உள்ள தங்கள் உறவுகளை விடுவிக்கவேண்டும் என்று தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள், வெளிநாட்டு நெருக்கடிகள் ஆகியவற்றால் வேறு வழியின்றி சியோனிச இஸ்ரேல் தற்போது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு வந்துள்ளது.

உலகநாடுகளின் எதிர்வினை!

பெரும்பாலான முதலாளித்துவ நாடுகள் ஹமாஸின் தாக்குதலை ஒரு தீவிரவாதத் தாக்குதலாகவும், இஸ்ரேல் அத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடாகவும் நிலைப்பாடு எடுத்து சியோனிச இஸ்ரேலுக்கு ஆதரவளித்தன. ஆனால் ஒருசில இஸ்லாமிய நாடுகளும், இடதுசாரி அரசாங்கங்கள் உள்ள நாடுகளும் இஸ்ரேலின் தொடர் போர்க்குற்றங்களை, மனித உரிமை மீறல்களையும் கண்டித்தன. ஐக்கிய நாடுகளின் சபையில் இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்தி ஏற்கனவே ஆக்கிரமித்திருந்த பாலஸ்தீன பகுதிகளை விட்டு வெளியேற வேண்டுமென்றும், 1976-ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் முடக்கிவைத்திருக்கும் பாலஸ்தீன மக்களின் சொத்துக்களை விடுவிக்கவென்றும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக 124 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

இது தவிர சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் மீதான விசாரணைகோரி வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கில் அல்ஜீரியா, சவுதிஅரேபியா, நெதர்லாந்து, வங்காளதேசம், பெல்ஜியம், பெலிஸ், பொலிவியா, பிரேசில், மற்றும் சிலி ஆகிய நாடுகள் தங்களையும் இணைத்துக்கொண்டு இஸ்ரேலுக்கு எதிராகத் தங்கள் வாதங்களை முன்வைத்தன. வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர்க்குற்றவாளியாக அறிவித்து கைது வாரண்ட் பிறப்பித்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் செல்லப்பிள்ளையாக இஸ்ரேல் இருப்பதால் இந்த வாரண்டெல்லாம் ஒன்றுமில்லாததாக ஆக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சகோதரத்துவம் குறித்து பீற்றிக்கொள்ளும் இஸ்லாமிய நாடுகள் குறிப்பாக பாலஸ்தீனத்தை சுற்றியிருக்கும் செல்வச்செழிப்பு மிக்க இஸ்லாமிய நாடுகள் தன் சொந்த மதத்தைப் பின்பற்றும் அப்பாவி பாலஸ்தீனர்கள் அநியாயமாக ஆக்கிரமிப்பாளானால் இன அழிப்புக்கு உள்ளானபோதும் கண்டும் காணாததுபோல இருந்துகொண்டன. இன்றும் இசுலாமிய அடிப்படைவாத பிற்போக்கு மன்னராட்சியின்கீழ் இருக்கும் இந்நாடுகள் அமெரிக்காவின் கண்ணசைவை மீறி எதுவும் செய்யமுடியாத கைப்பாவைகளாக உள்ளன. உலகம் முழுவதிலும் இஸ்லாம் இல்லாத நாடுகளில் சியோனிச இஸ்ரேலின் போர்க்குற்றங்களைக் கண்டித்து பெரும் மக்கள் போராட்டங்கள் நடந்தன. ஆனால் இந்நாடுகளில் மக்கள் போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. இஸ்ரேலைக் கண்டித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

ஒருபுறம் அப்பாவி பாலஸ்தீன பெண்களையும், குழந்தைகளையும் கொன்றுகுவிக்க இஸ்ரேலுக்கு அதன் ஆதரவு நாடுகள் ஆயுதங்களை கப்பல் கப்பலாக அனுப்பிக்கொண்டிருக்க, பாலஸ்தீன ஆதரவு நாடுகளோ அவற்றை தடுத்து நிறுத்தவோ, பாலஸ்தீன மக்களின் தற்காப்பிற்கு ஆயுதங்களை வழங்கவோ இல்லை. ஹமாஸ் இயக்கத்தினர் தங்களின் சொந்த ஆயுத பலத்தைக்கொண்டுதான் பலம் வாய்ந்த இஸ்ரேலின் இனவெறி படைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தியாவின் நிலைப்பாடு

பாலஸ்தீனம் இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளவேண்டும், இஸ்ரேலும் பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற இருநாடுகள் தீர்வை இந்தியா கொள்கை முடிவாக ஏற்றுக்கொண்டுள்ளதாக நடுநிலை நாடகம் நடத்தினாலும், யூத சியோனிஸ்டுகளை, உள்ளூர் பார்ப்பனர்கள் ஆதரித்தே வந்தனர். இஸ்ரேல் நடத்தும் படுகொலைகளில் கொல்லப்படுபவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தால் ஆர்.எஸ்.எஸ்.-சும், பாஜக மற்றும் பிற சங்பரிவார அமைப்புகளும் சியோனிச இஸ்ரேலுக்கு முழு ஆதரவளித்தனர். சமூக ஊடகங்களில் இனவெறி இஸ்ரேலை ஆதரித்து பலவேறு பதிவுகளை பதிவிட்டனர். இந்தியாவிலும் இதுபோல இஸ்லாமியர்களை இனவழிப்பு செய்யவேண்டும் என்று பார்ப்பன மதவெறியைக் கக்கினர்.

ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களின்மேல் வாக்கெடுப்பு நடந்தபோதெல்லாம் நடுநிலை என்ற பெயரில் அவைக்கு வராமலேயே இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் இந்தியா  எடுத்தது. அதுமட்டுமல்லாமல் அதானி மற்றும் இஸ்ரேலின் எல்பிட் நிறுவன கூட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு கப்பலில் அனுப்பியது அம்பலப்பட்டபோதும் அதில் தலையிட்டுத் தடுக்காமல் கள்ளமௌனம் காத்தது. ஒருபுறம் இப்பிராந்தியத்தில் அமைதி நிலவவேண்டும் என்று கூறி பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிவிட்டு கூடவே இரண்டு கப்பல்களில் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்பி “பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டியது.”

காசா சந்தித்துள்ள பேரழிவு!

கடந்த 15  மாதங்களாக நடைபெற்ற போரில் சுமார் 47,200 பாலஸ்தீனர்கள், பெரும்பாலும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதத்தினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 1,10,453 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர், அதில் 25% சதவீதத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். சுமார் 17,000 ஹமாஸ் இயக்கத்தினரை இஸ்ரேல் இராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறுகிறது. இதுதவிர, மருத்துவப் பணியாளர்கள் மரணமடைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. சுமார் 1 இலட்சம் குழந்தைகள் மனநல சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

காசா பகுதியின் கட்டிடங்கள், மக்கள் வாழ்விடங்களில் 60 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், 68 சதவீத சாலைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், 67 சதவீத விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

காசாவின் 50 சதவீத மருத்துவமனைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியிருக்கும் மருத்துவமனைகளும் முழுமையாக இயங்கும் நிலையில் இல்லை, சரியான உபகாரணங்களோ, மருத்துவப் பணியாளர்களோ இல்லாமல் உள்ளதால் நோய் பரவலை கட்டுப்படுத்தக்கூடியதாகவும், சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவும் இயலாததாகவும் உள்ளன. அகதி முகாம்களாக மாற்றப்பட்டுள்ள பள்ளிக்கட்டிடங்களில் பெரும்பாலானவை இஸ்ரேலின் கொடிய தாக்குதலில் அழிக்கப்பட்டுவிட்டன.

இதுமட்டுமில்லாமல் காசாவில் வசிக்கும் 21  லட்சம் மக்களும் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு அலைக்கழிக்கப்பட்டு வீடில்லாதவர்களாகவும், உணவுப் பஞ்சத்துக்கும் ஆளாகியுள்ளனர். ஐ.நா. சபையின் மதிப்பீட்டின்படி, காசா மீண்டும் எழுவதற்கு ரூ.34 லட்சம் கோடிகளுக்கு (40 பில்லியன் அமெரிக்க டாலர்) மேல்  தேவைப்படும் என்கிறது.

உலகம் உணரவேண்டிய உண்மைகள்!

  • இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகில் அமைதியை நிலைநாட்ட என்று உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை ஏகாதிபத்திய நாடுகளுக்கெதிராக எதுவும் செய்யமுடியாத ஒரு மனமகிழ்மன்றமாகவே உள்ளது. ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்து ஐ.நா. சபையால் இதுவரை எந்தப்போரையும் தடுத்ததில்லை, முடிவுக்கும் கொண்டு வந்ததில்லை.
  • ஏகாதிபத்திய வல்லரசு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள வீடோ (veto) அதிகாரத்தைப் பறிப்பதன் மூலம்தான் ஐ.நா. சபையால் உலகில் அமைதியை நிலைநாட்டமுடியும். பெரும்பாலான நாடுகள் ஆதரிக்கும் தீர்மானங்களைக்கூட மயிரளவும் மதிக்காமல் வீடோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்யும் சிறிதும் ஜனநாயகமற்ற நடைமுறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.
  • உலகின் தலைசிறந்த “மொசாத்” என்ற உளவுத்துறை கொண்ட இஸ்ரேலின் இராணுவ பலம் மற்றும் தொழில்நுட்பத்துக்கு எதிராக ஹமாஸ் இயக்கத்தினர் அதிகபட்சம் இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதம்கூட தாக்குப் பிடிக்கமாட்டார்கள் என்று உலகம் நம்பியது. ஆனால் ஹமாஸ் இயக்கத்தினர் தங்கள் சொந்தபலத்தின் மூலம் ஓராண்டுக்கும் மேல் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொண்டது மட்டுமின்றி இஸ்ரேலின் இராணுவத்தை சின்னாபின்னப் படுத்தியுள்ளனர். “கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமான யூதர்களின்” இராணுவத்தை யாரும் வென்றுவிடமுடியாது என்ற பிம்பத்தை தவிடுபொடியாக்கியுள்ளனர். அதனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறிய நாட்டின் மீதான பலம் பொருந்திய ஓர் பெரிய நாட்டின் போர் என்பதுகூட உடனடியாக முடிந்துவிடும் ஒரு நிகழ்வல்ல என்பதே நிதர்சனம்.
  • ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவு இருந்துவிட்டால் எந்தவிதமான போர்குற்றங்களையும் தைரியமாகப் புரியலாம் என்ற நிலையை மாற்ற ஆசான் லெனின் சொன்னதுபோல அந்நாடுகளின் தொழிலாளர் வர்க்கங்கள் அரசியல் படுத்தப்பட்டு அநீதிக்குத் துணைபோகும் தங்கள் நாட்டின் ஆளும்வர்க்கத்துக்கெதிரான போராட்டத்தை நடத்தவேண்டும்.
  • உலகம் முழுவதிலும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் மாபெரும் மக்கள் போராட்டங்கள் நடந்ததால்தான் காசா இஸ்ரேல் போர்நிறுத்தம் சாத்தியமானது. ஆனால் இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாமல் மக்களின் ஜனநாயக உணர்வுகளை மதிக்காமல், சகமனிதர்களுக்காக குரல் கொடுப்பதைக்கூட ஒடுக்கும் நிலவுடைமையின் அவமானச்சின்னமாக மிஞ்சியிருக்கும் வளைகுடா நாடுகளின் இசுலாமிய அடிப்படைவாத பிற்போக்கு மன்னராட்சிகள் மக்கள் புரட்சியின் மூலம் விரட்டியடிக்கப்பட வேண்டும்.
  • உலகத்துக்கே ஜனநாயகப் பாடம் எடுக்கும் முதலாளித்துவ ஐரோப்பிய நாடுகள் காசா இஸ்ரேல் போரில் ஆக்கிரமிப்பாளனான இஸ்ரேலின் பக்கம் நின்று தங்கள் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டன. ஆனால் அதேசமயத்தில் உலகில் இடதுசாரிகள் ஆட்சியிலிருக்கும் வெகுசில நாடுகள் பாலஸ்தீனத்தின், நியாயத்தின் பக்கம் நின்றன.
  • இதுநாள்வரை உள்நாட்டு பாதுகாப்புக்காக ஆயுதங்களைத் தயாரித்துவந்த இந்தியா தற்போது ஆயுத உற்பத்தியை அதானி, அம்பானி போன்ற தனியார் தரகு முதலாளிகளுக்கு வழங்கி வியாபார நோக்கில் உற்பத்தி செய்கிறது. இதனால் “உலக சமாதானமே இந்தியாவின் குறிக்கோள்” என்று போட்டுவந்த நாடகம் முடிவடைந்துவிட்டது. இனிமேல் உலகில் எங்கு போர் நடந்தாலும் இந்தியாவின் கார்போரேட் தரகு முதலாளிகள் ஆயுதங்களை வழங்கி மேலும் மேலும் இலாபத்தைக் குவிப்பர். காசா-இஸ்ரேல் போரின் மூலம் கார்போரேட்-காவி கள்ளக்கூட்டு மீண்டும் அம்பலமாகியுள்ளது. ஆகவே குறைந்தபட்ச செயல்திட்டம் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இக்கள்ளக்கூட்டணியை ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கவேண்டும். ஜனநாயகக் கூட்டரசை அமைத்து பெரும்பான்மை மக்களின் கருத்துக்களை உள்ளடக்கி பாலஸ்தீனம்-இஸ்ரேல் தொடர்பான ஒரு உறுதியான கொள்கை முடிவை அறிவிக்கவேண்டும்.
  • இறுதியாக, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் நிதிமூலதன ஏகபோகங்களின் கைப்பவை களாக மாற்றப்பட்டுள்ள அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களினால் ஏகாதிபத்திய வெறியூட்டப்பட்டு நடத்தப்படும் போர்கள் மனிதகுலத்தை பெரும் அழிவுக்குள்ளாக்குகின்றன. ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முதலாளிகளின் இலாபத்துக்காகவும், ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகவும் நடத்தப்படும் இப்போர்களை உலகில் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவம் இருக்கும் வரையிலும் தவிர்க்கமுடியாது.
  • மக்களை இலட்சக்கணக்கில் கொன்றுகுவிக்கும் பேரழிவு ஆயுதங்களை கண்டுபிடிப்பதையும், உற்பத்திசெய்வதையும் ஒருபோதும் நிறுத்தாது. ஆகவே போர்கள் இல்லா அமைதியான உலகம் வேண்டுமென்றால் அழிவுசக்தியான முதலாளித்துவத்தை ஒழித்து ஆக்கசக்தியான சோசலிசத்தின் வழியாக கம்யூனிச சமுதாயத்தை அடைவதுதான் மனிதகுலத்தின் முன்னுள்ள ஒரே சாத்தியமான வழி.

புதிய ஜனநாயகம் (பிப்ரவரி 2025 இதழ்)

  • மதியழகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here