ச்சநீதிமன்ற கொலீஜியத்தின் சார்பில் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 5 வழக்கறிஞர்கள் மற்றும் 3 நீதித்துறை அதிகாரிகளை நீதிபதிகளாக உயர்த்த பரிந்துரைத்துள்ளதாக LIVELAW இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிபதி பணிக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வழக்கறிஞர்களில் “அவாள்களே” நிறைந்துள்ளார்கள். வேங்கடாச்சாரி, லட்சுமிநாராயணன், லேக்ஷ்மன சந்திர விக்டோரியா கௌரி, பிள்ளைபாக்கம் பாஹுகுடும்பி பாலாஜி, ராமசாமி நீலகண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.

இதில் அவாள்களை தாண்டிய ஆபத்து என்னவென்றால் லேக்ஷ்மன சந்திர விக்டோரியா கௌரி எனும் விக்டோரியா கௌரி பாஜகவின் தேசிய மகளிரணி செயலாளராக இருந்தவர். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் வழக்கறிஞராக இருந்துள்ளார்.

கட்சியில் விசுவாசமாக இருப்பவர்களுக்கு லஞ்சமாக அரசின் அதிகாரத் துறையில் பதவி வழங்கப்படுவது போல் இப்போது பாஜக கட்சியில் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி பதவியும் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாஜக தலைவரான அண்ணாமலையை பாராட்டி பேசியதும், அது குறித்து சமூகவலைதளங்களில் கழுவி ஊற்றியதும் நடந்தேறியது. பலர் பாஜக, வழக்கறிஞர் பிரிவு போல நீதிபதி பிரிவையும் உருவாக்கி உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்கள். அந்த அளவு ஜி.ஆர்.சுவாமிநாதனின் செயல்பாடுகள் அமைந்திருந்தன..

இதுமட்டுமல்லாமல் மதுரைக் கிளையின் இன்னொரு நீதிபதி, ‘கர்மா அடிப்படையில் தீர்ப்பு’ வழங்கிய கேவலமும் நடந்தேறியது. அந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக சித்தாந்தவாதிகள் நீதித்துறையில் நீக்கமற நிறைந்துள்ளார்கள்.

இதையும் படியுங்கள்: நீதித்துறையின் யோக்கியதை! || நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்.

தற்போது நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள விக்டோரியா கௌரியும் அதே வகையை சேர்ந்தவரே! வழக்கறிஞராக இருப்பவர்கள் கட்சியில் இருக்கக் கூடாது என்பதில்லை. ஆனால் ரவுடிகளையும், பாலியல் குற்றவாளிகளையும், குண்டர்களையும், மதவெறியர்களையும் கொண்ட ஒரு பாசிச கட்சியில் உள்ளவர்கள் வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் இருந்தால் அவர்கள் யாருக்கு சாதகமாக செயல்படுவார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம், The indian Express தமிழ் இணையதளத்தில், நேரலை கேள்வி பதில் நிகழ்ச்சியில் கொரோனாவை மோடி சிறப்பாக கையாண்டார், மோடி கொரோனாவை அடித்து விரட்டினார், மோடியை வசைபாடுபவர்கள் பாடி விட்டு போகட்டும் என்று மோடி புராணம் பாடியதின் காரணமாக அவருக்கு கிடைத்த வெகுமதி, 2020ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு ஒன்றிய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக விக்டோரியா கௌரி நியமனம் செய்யப்பட்டார். அதற்கு முன்னர் சென்னை காமராஜர் துறைமுகத்தின் தனி இயக்குனராகவும் இருந்துள்ளார்.

இப்படி பாஜகவின் புகழ் பாடும், பாஜகவின் தேசிய மகளிரணி செயலாளரை தான் நீதிபதியாக பரிந்துரைத்துள்ளது உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம். உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தலைமை நீதிபதிகளாக இருந்த தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய், சதாசிவம் உள்ளிட்டவர்கள் பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு ஆதரவாக தீர்ப்புகள் வழங்கினார்கள்.

அதில் சதாசிவத்திற்க்கு ஆளுநர் பதவியும், ரஞ்சன் கோகாய்க்கு ராஜ்யசபா எம்.பி பதவியையும் வெகுமதியாக பெற்றார்கள். இது உச்சநீதிமன்றத்தின் நிலை. இவர்கள் நேரடியாக பாஜக கட்சியில் இருந்தவர்கள் இல்லை. தற்போது பாஜக கட்சியில் இருந்தவர்களை மாநில நீதிமன்றங்களில் நீதிபதிகளாக புகுத்தும் வேலையை செய்து வருகிறது.

அண்ணாமலையுடன் விக்டோரியா கௌரி

விக்டோரியா கௌரியின் டிவிட்டர் பக்கத்தில் சௌகிதார் விக்டோரியா கௌரி என குறிப்பிட்டுள்ளார். அவரின் டிவிட்டர் பக்கமே அவர் எந்தளவுக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலின் தீவிர செயற்பாட்டாளராக இருந்துள்ளார் என்பதை புரிந்துக் கொள்ள முடியும். அவர் பாஜகவின் மகிளா மோர்ச்சா பதவில் இருந்து வெளியேறியிருந்தாலும், அவருக்கு கிடைக்க போகும் பதவி அவரின் கட்சி கொடுத்தது. அதனால் அவர் பாஜகவுக்கே விசுவாசமாக செயல்படுவார் என்பது அனைவரும் அறிந்ததே!.

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும், கொலீஜியங்களில் அரசின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என ஆளும் பாஜக அரசு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தான் விக்டோரியா கௌரியை நீதிபதியாக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளதும் நடந்துள்ளது. இது அனைவரின் மத்தியிலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பாசிசம் தன்னை அரசின் அனைத்து இடங்களிலும் நிலைநிறுத்திக் கொள்ள அவர்கள் தயார்படுத்தியவர்களை பதவியில் அமர்த்தி வருகிறது. இது நீதித்துறையிலும் நுழைவது பெரும் ஆபத்து. அதற்கு நாம் இடமளிக்காமல் பாசிச கும்பலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.

  • நந்தன்

1 COMMENT

  1. ரஞ்சன் கோகோய்க்கு எம்பி பதவி. ஆளுநர் பதவியல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here