“யாராவது ஒரு ஐயரை போய் நாம் பாராட்ட முடியுமா ?” என தோழர்.தியாகு கிருஷ்ணய்யர் பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது நக்கலாக கேள்வி எழுப்பி, அதன் பின்பு ஏன் அவர் பாராட்டப்பட வேண்டிய, கொண்டாடப்பட வேண்டிய நபர் என்று விளக்கம் அளிப்பார். இதே கேள்வி யாருக்காவது எழுமென்றால் அவரின் கீழ்க்கண்ட கருத்துக்களை வாசித்து ஒரு புரிதலுக்கு வரவும்.
“நீதித்துறையின் இன்றைய உண்மை நிலை என்ன ?
அரசியல் அமைப்புச் சட்டம் ஏறத்தாழச் செத்து விட்டது. அனைவருக்குமான அதன் சம உரிமை மதிப்பீடுகள் அனைத்தும் மீறப்பட்டுவிட்டன. பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி புதிய உயரத்திற்குச் செல்கிறார்கள். அதே சமயம் ஏழைகளோ இன்னும் அவலமான ஆழத்தில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரம் பன்னாட்டு நிறுவனங்களின் கரங்களில் இருக்கிறது. நாட்டின் சொத்து திசைமாறிச் செல்கிறது. பணக்காரர்கள் பல சமயங்களில் வாக்காளர்களை லஞ்சம், வகுப்புவாதம், நிர்வாகத்தின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தல், ஆகியவற்றால் கட்டுப்படுத்த முடிகிறது. அவர்கள் மக்களின் கண்ணீரைக் கண்டு கொள்வதில்லை, மாறாக அவர்களது வாக்குச் சீட்டுக்களைப் பணத்தாலும் ஆடம்பரமான விளம்பரத்தாலும் விலைக்கு வாங்குவதற்கு விரும்புகின்றனர்.
நீதி வழங்கப்படும் வழக்கு மன்றங்கள் கூட மற்றவர்களை விட பணக்காரர்களுக்கே மிகவும் ஒத்துழைப்புத் தரக்கூடியவையாக இருக்கின்றன. ஏழைகளாகவும் வசதி வாய்ப்பு அற்றவர்களாகவும் இருக்கும் வெகுமக்கள் பல சமயங்களில் தமது வாக்குகளைக் காசுக்கு விற்கிறார்கள். அவர்களுக்கு இந்த அமைப்பில் நம்பிக்கையில்லை. ஒன்று அதனிடம் சரணடைய வேண்டும், அல்லது அதை வன்முறையினாலோ அல்லது தீவிரவாதத்தினாலோ தூக்கியெறிய வேண்டும்.
பயங்கரவாதத்தாலும் ஜனநாயகத்தைப் போலியாகப் பின்பற்றுவதனாலும் எதிர்காலத்தில் நம்பிக்கையில்லாதது போல சில நேரத்தில் தோன்றுகிறது. கடவுள் ஏன் இந்த அளவுக்கு பாகுபாட்டுடன் இருக்கிறார் என்று ஒவ்வொருவருக்கும் வியப்பு மேலிடுகிறது. பாவம், கடவுளும் கூட பணக்காரர்களால் விலைக்கு வாங்கப்படும் ஒரு பண்டமாகி விட்டார். பேராயர் (பிஷப்) வசதி படைத்த, உயர்ந்த வாழ்க்கையை வாழ்கிறார். அவரைச் சுற்றியுள்ளவர்களோ அவரது தேவாலயத்தின் முன்பு பிச்சையெடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு புரட்சிக்காரரைப் போல மாற்றத்தை வேண்டிய ஏசுவின் தலைவிதியே இப்படித்தான் இருக்கிறது.
இந்துத்துவாவிலும் இசுலாத்திலும் இதே வகையில் சொத்து உடையவர்களும் இல்லாதோரும் இருக்கின்றனர். உண்மையில் தெய்வ நம்பிக்கையும் பக்தியும் நிலவும் சமுக அமைப்புக்கு மக்களை அடி பணியச்செய்து ஆட்சிமுறையை ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன. சுரண்டல் மறைக்கப்பட்டு, அது உண்மையில் சட்டத்தின் ஆட்சியாகி விடுகிறது. ஏனென்றால் சட்டமே சமுதாயத்தின் மேல் மட்டத்தில் உள்ள சிலராலேயே வகுக்கப்பட்டுள்ளது. நீதியைப் பொறுத்தவரை பணம் படைத்தோர்க்கும் இல்லாதோர்க்கும் இடையில், அது ஏழைகளுக்கு மிகவும் விலைமிகுந்த ஒன்றாக இருக்கிறது. அதிகாரவர்க்கம் பல சமயங்களில் அவர்கள் நெருங்க முடியாத தூரத்தில் இருக்கிறது.
இந்தத் தீங்கிழைக்கும் அமைப்பு முறைக்கு உதவியாக மசூதிகளும் தேவாலயங்களும் கோயில்களும் இருக்கின்றன, அவை எதிர்ப்போரின் குரலை அமிழ்த்தும் வலுமிக்க கருவிகளாக இருக்கின்றன. நீதிபதிகளுக்குப் புனிதமான மரியாதை இருக்கிறது. அவர்கள் பாதிரியார்களைப் போல ஆடம்பரமான உடைகளை அணிந்து கொள்கிறார்கள். நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் மர்மமான சொற்களில் அதிகாரத்தைப் பயன்படுத்தும் மர்மமான முறையியலைக் கண்டுணரக் கூடியவர்கள் மனித இனத்தின் வெறுப்பின் ஆழத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
நீதிமன்றங்களின் அமைப்புமுறைகளையும் அவை வழங்கும் தீர்ப்புக்கள் இறுதியானவை தவறே இழைக்காதவை என்ற மூடநம்பிக்கைகளையும் நாம் மாற்ற வேண்டியிருக்கிறது. உண்மையில் அவர்கள் சாதாரண மனிதர்களே, அவர்களிடமும் குறைகளுண்டு, தப்பெண்ணங்கள் உண்டு. பக்கச்சார்பு உண்டு. அவர்கள் மனிதர்களுக்கு மேலானவர்கள் அல்ல. ஆனால் தெய்வீகக் கலாச்சாரமும், கட்டளையிடும் உடையும், பேச்சும் அவர்களைக் குறுந்தெய்வங்களாகத் தோன்றச் செய்கின்றன. இது ஏழைகளுக்கு எட்டாத உயரத்திலுள்ள அவர்களது சமூகத் தத்துவத்துடன் ஒத்துப்போகிறது.
நீதித்துறை ஒரு சிக்கலான அமைப்பு முறையின் விதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவற்றை நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அவை விக்டோரியா காலத்து மதிப்பீடுகளாலும் சட்டநெறிகளாலும் நிர்வகிக்கப்படுகின்றன. அவை பிரிட்டனிடமிருந்து இரவல் பெறப்பட்டவையாகும். அவற்றை டென்னிங்கும் மெக்காலேயும் தமது உரிமையியல், குற்றவியல் நடைமுறையாலும் எடுத்துரைத்துள்ளனர்.
கண்ணீரில் வாழும் பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாக இந்த அமைப்பு முறையை நீங்கள் மாற்ற விரும்பினால், நாம் மெக்காலேயை விடுத்து மகாத்மாவுக்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும். உரிமையியல் நடைமுறைச் சட்டமும் குற்றவியல் நடைமுறைச் சட்டமும் எந்தவிதமான இரக்கமும் இல்லாமல் அகற்றப்படவேண்டும். மக்களால் எளிதில் அணுகக் கூடிய வகையிலும் மக்களுக்குப் பொறுப்பாகப் பதிலளிக்கக்கூடிய வகையிலும் இயங்காற்றல் கொண்டதாகவும் இயக்கவியல் அடிப்படையிலும் இச்சட்டங்கள் இயற்றப்படவேண்டும். இது பணத்தின் அதிகாரத்திற்கு ஒத்துழைக்கக் கூடிய பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களால் செய்யப்பட முடியாது. மாறாகப் புதியதொரு சமத்துவமுறையில் வாக்களிக்கத் தகுதி பெற்ற முற்போக்காளர்களால் தான் முடியும்.
இந்தியாவிற்கு ஒரு தேசிய ஆணையம் தேவை. அதில் பணக்காரர்களுக்கும் பலம் பொருந்தியவர்களுக்கும் எதிராக, தாழ்த்தப்பட்டோரும் பழங்குடியினரும் நலிவடைந்தோரும் மேலாதிக்கம் கொண்டவர்களாக இடம் பெற்றிருக்க வேண்டும். இது எப்போதாவது நடக்குமா ? வி.ஐ.லெனினின் சோவியத் ஒன்றியம் கூட பலம் வாய்ந்த மாற்றத்திற்கு உள்ளாகியது. ஒரு புதிய உலக அமைப்பு குறித்த அவநம்பிக்கை மக்கள் திரளினரிடையே இருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கருதப்பட்டுள்ள மாற்றத்தை வன்முறையின்றி எவ்விதம் நடைமுறைப்படுத்துவது என்பது தான் இந்தியாவின் முன்னுள்ள சவாலாகும்.
அங்கியணிந்த நீதித்துறை சகோதரர்களோ, அல்லது மதத்தலைவர்களோ, தொட முடியாத உயரத்திலும் எளிதில் அணுகவியலாத வகையிலும் இருக்கிறார்கள். நீதி, நீதிபதிகள், நீதி வழங்கல் ஆகியவை புரட்சிகரமாக்கப் படவேண்டிய நிலையில் இருக்கின்றன. பாமர மனிதன், தொழிலாளி, விவசாயி, சமூகப்போராளி ஆகியோர் அவற்றின் முன்பு தோன்றி வாதாடக்கூடிய வகையில் நீதியமைப்பு இருக்கவேண்டும். நீதிபதிகள் ஒரு சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக அமைப்பு முறையை உயர்த்திப் பிடித்து, அதிலிருந்து மாறுபடும் ஒவ்வொரு சட்டத்தையும் அழித்து விடவேண்டும். சட்டத்தின் மொழி எளிமையாகவும் தெளிவாகவும் பாமர மனிதனும் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.”
– முன்னாள் உச்சவழக்காடுமன்ற நடுவர், தோழர்.வி.ஆர்.கிருஷ்ணய்யர்
தமிழ் மொழிபெயர்ப்பு – வெண்மணி அரிநரன்