மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
பத்திரிக்கைச் செய்தி
நாள் 5-12-2021
நாகாலாந்தில் ராணுவத்தால் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொலை!
உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பதவி விலகு!
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டம், ஓட்டிங் என்ற கிராமத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் நேற்று 4-12-2021 மாலை சுரங்க வேலைக்கு சென்று வீடு திரும்பிய அப்பாவி இளம் தொழிலாளர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டிலும் இதை கண்டித்து போராடிய பொது மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டிலும் மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.
அசாம் துணை ராணுவம் என்னும் கொலைகார படைதான் இந்த படுகொலையை செய்துள்ளது. இது மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுபாட்டில் இயங்க கூடியது. தீவிரவாதிகள் என கருதி தவறுதலாக சுட்டு கொன்றுவிட்டோம், நடந்த சம்பவத்திற்கு விசாரணை நடத்துகிறோம் என ராணுவம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் நாகலாந்து மக்கள் மத்தியிலும் சுரங்க தொழிலாளர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் கடந்த 65 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. எத்தகைய படுகொலைகள், பாலியல் வன்முறைகள் செய்தாலும் இத்தகைய படை குற்றவாளிகளை தண்டிக்க முடியாது, இதனால் கைது செய்பவர்களை சித்ரவதை செய்வது என தொடர்ச்சியான அக்கிரமங்களை நிகழ்த்தி வருகிறது. இதே போல்தான் காஷ்மீரிலும் தினம்தோறும் அப்பாவிகள் ராணுவத்தால் வேட்டையாடப்படுகின்றனர். உலக அளவில் இந்த அநீதிகள் மீது கண்டனங்கள் எழுந்த போதும் ஒன்றிய மோடி அரசு இதை மூடி மறைப்பதையே வாடிக்கையாக்கி வருகிறது.
வடகிழக்கு மாநில மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ராணுவப்படைகள் செயல்படுகின்றன. வரம்பற்ற அதிகாரங்கள் கொண்ட ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் காஷ்மீரிலிருந்தும் உடனடியாக விலக்கி கொள்ளப்பட வேண்டும். இச்சட்டம் முழுமையாக ரத்து செய்யபட வேண்டும்.
தற்போதைய சுரங்க தொழிலாளிகளின் படுகொலைக்கு காரணமான ராணுவத்தினர் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு உடனடியாக விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும். நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்.
யாரையும் தீவிரவாதியாக கருதி ஊபா வழக்கில் பல ஆண்டுகள் பிணையின்றி சிறையிலடைத்து வரும் மோடி அரசு, இன்று யாரையும் தீவிரவாதியாக கருதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய துவங்கி உள்ளது. இத்தகைய பாசிஸ்டுகளை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியாமல் மக்களுக்கு நிரந்தர பாதுகாப்பு இல்லை.
காளியப்பன்
மாநில பொருளாளர்
மக்கள் அதிகாரம்