இந்தியாவின் தலைநகரான டெல்லி காற்று மாசினால் வாழ்வதற்கு தகுதியற்ற நிலைமையில் உள்ளது. டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் உழைக்கும் மக்கள் அன்றாட வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
இதேபோல தமிழகத்தின் தலைநகரமான சென்னை, கொரானா பாதிப்பின் போதும், தற்போது பெய்துள்ள கனமழை காரணமாகவும், மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரவாதமான வாழ்க்கை உள்ள நபர்களுக்கு சில சிக்கல்களை தவிர வேறு எதுவும் கிடையாது.
ஆனால் அன்றாடம் வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தும் தினக்கூலி தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டதால், குடும்பம் குடும்பமாக நடுத் தெருவுக்கு வந்துள்ளனர், என்பதையே கீழ்கண்ட உண்மை சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. எதார்த்தம் நம் முகத்தில் அறையும் போதும், இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று எந்திர கதியான வாழ்க்கை நடத்துவது எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கும் என்பதை நாம் உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ பகுதியில் மதியம் 12 மணியளவில் ஏழு, எட்டு பெண்கள், குழந்தைகள் சேர்ந்து சாலையில் போகிற இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி ஏதோ பேசினர்.
பொதுவில் அப்பகுதி தொழிற்சாலைகளில் பணிப்புரியும் வயது முதிர்ந்த பெண்கள் வேலை முடிந்து அருகாமையில் உள்ள குடியிருப்புக்கு செல்ல வாகன ஓட்டிகளிடம் லிப்டு கேட்டு செல்வது வழக்கம். அதுப்போல் பெண்கள் லிப்டு கேட்கிறார்கள் என்றே நினைத்து அருகில் சென்றேன்.
எனது வாகனத்தை மறித்த நடுத்தர வயது பெண்மணி, சார் ஒரு நிமிஷம் என கூறினார். என்னங்க என்றேன். சார், நாங்க பக்கத்துல இருக்குற சூளையில மன்னு வேலை செய்றவங்க, எங்க குடிசையில நேத்து பெய்த மழையில தண்ணீ பூந்துரிச்சி, குழந்தைகள் வைச்சிகிட்டு நேத்தையில இருந்து ஒன்னும் சாப்பிடல, உங்களால ஏதாச்சும் உதவி பன்ன முடிஞ்சா பன்னுங்க, இல்லைன்னா குழந்தைக்கு மட்டும் சோறு வாங்கி கொடுங்க சார் என்றார்.
அந்த ஒரு நிமிடம் என் நெஞ்சு பதைபதைத்து, கண்கள் குளமானது. என் சட்டை பையில் 20 ரூபாய் மட்டுமே இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல், அவர்களிடம் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொல்லி ATMல் பணம் எடுக்க போறேன் என்று சொன்னேன். சரி சார் முடிஞ்சா ஏதாச்சும் உதவி பன்னுங்க சார் என்றார் அப்பெண்மணி.
அங்கிருந்து நகர்ந்த எனக்கு அவர் என்னை உதவி கேட்ட வார்த்தைகள் உலுக்கி எடுத்தது. சற்று தூரத்தில் இருந்த ATM ல் பணம் எடுத்து அவர்களை சந்தித்த இடத்திற்கு 30 நிமிடம் கழித்து சென்றால் யாரும் இல்லை. அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உதவி கேட்டு அந்த பக்கமாக சென்றுவிட்டார்கள் என்று பாதசாரி ஒருவர் சொன்னார்.
கொரோனா பெருந்தொற்று ஒருபுறம், சென்னையின் பெருமழை ஆகியவை ஏழைகளை பரம ஏழைகளாக்கி தெருதெருவாக கையேந்த வைத்துள்ளது. ஆனால் மற்றொருபுறம் நேற்றைய தினசரியில் கௌதம் அதானி இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்றும், நாளொன்றுக்கு 1002 கோடி வருமானம் ஈட்டி, இந்த ஆண்டு மட்டும் ரூபாய் 5500 கோடி சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாம்.
அதானி, அம்பானிக்கான புதிய இந்தியா பிறந்துவிட்டது. உரக்க சொல்லுங்கள் ஆத்ம நிர்பார் பாரத்…
- முகிலன்,
புஜதொமு.