தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி இலக்கு வைத்து டாஸ்மாக் மூலம் மது விற்கப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதியில் டாஸ்மாக்கை மூடுவோம் என்றும், பெண்களின் தாலி அறுபடுவதை இனியும் சகித்துக் கொள்ள முடியாது என்றெல்லாம் வசனம் பேசினர்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இன்று வரை டாஸ்மாக்கை மூடுவது பற்றி எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக தேர்தல் அறிக்கையில் முன்வைத்த படி கடைகளை மூடுவதில் வாக்குறுதி கொடுத்ததை விட அதிகமாகவே மூடி விட்டோம் என்று சட்டமன்றத்திலேயே செந்தில் பாலாஜி அறிக்கை வெளியிடுகிறார்.
நாடு முழுவதும் சாராயம் ஆறாக ஓடுகிறது. கள்ளச்சாராயம், சீமைச் சாராயம் மற்றும் உள்நாட்டு சாராய ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற சரக்குகள் விற்பனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சாராய போதை மட்டும் இன்றி மக்களை பான்பராக், கஞ்சா, அபின், கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் மூலம் போதையூட்டுவது, கையில் செல்பேசியை கொடுத்து காட்சி போதை ஊட்டுவது என்று அடுத்த தலைமுறை ஏறக்குறைய சிந்தனை ரீதியாக சீரழிக்கப்பட்டு கிடக்கிறது.
நாடு முழுவதும் சாராய விற்பனை கொடி கட்டி பறப்பதால் தமிழகத்தில் மட்டும் சாராயத்தை தடுத்து விட முடியாது என்று திமுகவின் விசுவாசிகள் மற்றும் மக்களின் தாலி அறுவது கண்டு மனம் பதறாத ‘அறிவார்ந்த சமூகத்தினர்,’ திமுகவின் சாராய விற்பனைக்கு முட்டுக் கொடுக்கின்றனர்.
கணிசமான தொகை சாராய விற்பனை மூலம் கிடைப்பதால் அரசுக்கு கஜானா நிரம்புகிறது. ஆனால் நாடு முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கை சீரழிந்து கொண்டே செல்வது மட்டுமின்றி இளம் வயதில் கணவனை இழந்து கோடிக்கணக்கான பெண்கள் வீதியில் நிற்கின்றனர்.
இதனால்தான் சாராய விற்பனையை திமுக உள்ளிட்ட எந்த அரசாங்கம் நடத்தினாலும் அது மக்களுக்கு எதிரானது உடனடியாக டாஸ்மாக் உள்ளிட்ட சாராயக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று அறிவித்து போராடுகின்றோம். அதேபோல அனைத்து விதமான போதைகளுக்கும் எதிராகவும் தொடர்ந்து போராடுகின்றோம்.
தமிழகத்தில் சாராய ஊழல், டெல்லியில் சாராய ஊழல் என்று கூச்சலிடுகின்ற பாசிச பாஜக ஆட்சி புரிகின்ற உத்தர பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மது விற்பனைக் கொள்கை நாடு முழுவதும் சந்தி சிரித்து வருகிறது.
படிக்க:
♠ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து செத்த உழைப்பாளிகள்! தடுக்கவே முடியாதா?
♠ டாஸ்மாக்: தேசத்துரோக வழக்கிலிருந்து தோழர்கள் விடுதலை?
டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக எழுந்த புகாரில்தான், ஆம் ஆம் கட்சியின் 2 மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோர் ஜெயிலுக்கு செல்ல நேரிட்டது. பிறகு, டெல்லி அரசு இந்த கொள்கையை ரத்து செய்தாலும், உத்தரப்பிரதேசத்தின் முதல்வரான பாசிச சன்னியாசி யோகி ஆதித்யநாத் அரசு, புதிய கலால் கொள்கை 2024-25க்கு கடந்த 2023-ல் ஒப்புதல் அளித்திருந்தது.
அதன்படி, உபியின் ரயில்வே ஸ்டேஷன், மெட்ரோ ஸ்டேஷன்களில் இனி மதுபானங்களை விற்பனை செய்யலாம் என்றும் மதுபான சில்லறை கடைகள் திறப்பது குறித்தும் உத்தரவுகளை வெளியிட்டிருந்தது
இந்நிலையில், உத்தர பிரதேச அரசின் புதிய மதுபான கொள்கை வரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமலாக உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள மதுக் கடைகளில் இருக்கும் பழைய சரக்குகளை 31 ம் தேதிக்குள் விற்கும் முயற்சியில் கடை உரிமையாளர்கள் இறங்கி உள்ளனர்.
தற்போது கையில் உள்ள சரக்குகளை விற்பனை செய்வதற்கு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று வரவேற்பு போர்டு வைத்து சாராயத்தை விற்றுத் தள்ளி வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் ‘ராம ராஜ்ஜியம்’ அமைகிறதோ இல்லையோ சாராய சாம்ராஜ்யம் தலைவிரித்தாடப் போகிறது.
சாராயம் உள்ளிட்ட போதைகளுக்கும், பார்ப்பன (இந்து) மதத்திற்கும் நெருக்கமான உறவு உள்ளது என்பது மட்டும் இன்றி சோம பானம், சுரா பானம் என்று அந்த காலத்திலேயே மது குடித்து களிவெறியாட்டம் நடத்திய கும்பல் தான் ஆர்எஸ்எஸ் இன் முன்னோர்கள்.
தமிழகத்தில் மூடு டாஸ்மாக்கை என்று போராட்டம் நடத்தி பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு இன்றுவரை கோர்ட்டுகளின் படிக்கட்டுகளில் ஏறி வருகிறது மக்கள் அதிகாரம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள்.
மூடு டாஸ்மாக்கை என்று தொடர்ச்சியாக போராட வேண்டும் என்பது மிகச் சரியான கோரிக்கையாகிவிட்டது என்பதை தான் உத்தரபிரதேசத்தில் தற்போது அமல்படுத்த உள்ள புதிய மதுபான கொள்கை நமக்கு அறிவித்துள்ள செய்தியாகும்.
ஒரு மாநிலத்தில் மட்டும் மதுபானத்தை தடுத்து விட முடியாது என்றும்; அரசாங்கத்திற்கு வேறு வருமானத்திற்கு வழியில்லை என்றும்; படிப்படியாக கடைகளை மூடி இறுதியாக இழுத்து மூட வேண்டும் என்றும்; மது பிரியர்களுக்கு மீண்டும் அந்த எண்ணம் வராமல் கவுன்சிலிங் தந்து குடி நோயாளிகளை காப்பாற்ற வேண்டும் என்றும், பலவிதமான ஆலோசனைகளை வாரி வழங்குகின்ற அறிவாளிகளையும், நாட்டை சாராயக்காடாக மாற்ற துடிக்கின்ற அரசியல் கட்சிகளையும் மக்களின் துணையுடன் எதிர்த்துப் போராடி முறியடிப்போம்.
டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து போதைகளுக்கும் நிரந்தரமாக முடிவு கட்டுவோம்.
- கணேசன்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி