ட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக, வியாழன் (ஆகஸ்ட் 1) அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் அருந்ததியின சமூகத்துக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கும் 2009-ஆம் ஆண்டு சட்டத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், “பட்டியலின மக்களுக்கு தமிழ்நாட்டில் 18% இடஒதுக்கீடு உள்ளது. அதில், 76 சாதிகள் உள்ளன. அதில், அருந்ததியர்களும் அடக்கம். அருந்ததியர்களும் 7 பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து அவர்களை முன்னேற்றும் அளவுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை,” என்றும் இந்த தீர்ப்பு அந்த அநீதிக்கு முடிவு கட்டியுள்ளது என்று வரவேற்றுள்ளார்.

பல நூற்றாண்டுகளாக இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான உழைக்கும் மக்களை சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று பெயரிட்டு இழிவுபடுத்தி வந்த பார்ப்பன மற்றும் மேல் சாதி ஆதிக்க கும்பல் தன்னால் ஒடுக்கப்பட்ட சாதியினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உரிமை பெற்று முன்னேறி வருவதை ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை.

இட ஒதுக்கீடு என்பதை பத்தாண்டுகளுக்கு மட்டுமே டாக்டர் அம்பேத்கர் முன்வைத்தார் என்ற பித்தலாட்டமான வாதம் துவங்கி, சாதி ரீதியாக இட ஒதுக்கீடு என்பது தவறானது; பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு என்ற அளவுகோலை முன் வைத்திருக்க வேண்டும் என்ற வாதம் வரை அனைத்துமே பார்ப்பன கும்பலுக்கும், ஆதிக்க சாதிகளுக்கும் சேவை செய்கின்ற  வாதம்தான்.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் உரிமை மறுக்கப்பட்ட மக்கள் சமூக ரீதியாக சம அந்தஸ்தை பெறுகின்ற வரையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த இட ஒதுக்கீடு பற்றிய கொள்கையாகும். ஆனால் அது பின்னாளில் மொத்தமுள்ள 100 இடங்களை இன்னின்ன சாதிகளுக்கு இத்தனை சதவீதமாக பிரித்துக் கொடுப்பது என்று நாட்டை ஆண்ட கட்சியினரால் திரித்துப் புரட்டப்பட்டதால் இது போன்ற கிரிமினல்தனமான கேள்விகளை கேட்பதற்கு வழி வகுத்துள்ளது.

”கிராமப்புறமானாலும் சரி, நகர்ப்புறமானாலும் சரி தன்னுடைய சாதி பின்னணியை பயன்படுத்திக் கொண்டு சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆதிக்க சாதியினர், இட ஒதுக்கீடு என்று வரும்போது மட்டும் தன்னை பிற்படுத்தப்பட்டவன் என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்டவன் என்றும் வகைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பதும், சமூக ரீதியாக ஆதிக்கம் செய்து வரும் ஒருவர், சாதி ரீதியாக சலுகைகளை பெற்று முன்னேறுவதற்கு துடிப்பதும் என்ன வகையான சமூக நீதி” என்பதை தான் புதிய ஜனநாயகம் நீண்ட காலமாக கேள்வியாக எழுப்பி வருகிறது.

பல நூற்றாண்டுகளாக சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது உண்மையான சமூகநீதி ஆகும். அந்த அடிப்படையில் இருந்து பார்க்கின்ற போது சமூகத்தில் ஆக கேடாக ஒடுக்கப்பட்டு வரும் பட்டியலின மக்களிலேயே மிகவும் கீழாக ஒடுக்கப்படுகின்ற அருந்ததியர்கள் போன்ற சாதிகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது மிகச் சரியானது தான்.

பொருளாதார ரீதியாக அளவுகோலை முன்வைத்து இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கேள்வி எழுப்புபவர்கள்; அதனை ஆதரிக்கின்றவர்கள்; அம்பேத்கர் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வேண்டும் என்று கூறினார் என்றும் திரித்துப் புரட்டுபவர்கள் அனைவரும் இயல்பிலேயே பிறப்பால் பார்ப்பனர்களாகவும், அரசு பதவிகளில் முக்கிய பொறுப்பு வகிக்கின்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகவும், நீதிபதிகளாகவும், அதிகார வர்க்கத்தில் முக்கிய புள்ளிகளாகவும் இருக்கின்றனர் என்பதும், இருந்து ஓய்வு பெற்றுள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

அரசு வேலை வாய்ப்புகள் சுருங்கிக் கொண்டு உள்ளது; தனியார் நிறுவனங்களில் தான் வேலை வாய்ப்பு உள்ளது என்பதால் இட ஒதுக்கீட்டினால் பயனில்லை என்று வாதம் புரிவதும், இத்தகைய இட ஒதுக்கீட்டினால் எந்த பயனும் இல்லை என்று அடித்து பேசுவதும், ஆதிக்க சாதித் திமிரை குறிப்பாக பார்ப்பன, மேல்சாதித் திமிரை வெளிப்படுத்துகிறதேயன்றி வேறு ஒன்றும் இல்லை.

எனவே பட்டியலின மக்கள் என்ற பொதுவாக அடையாளப்படுத்துவதை காட்டிலும் அதிலும் குறிப்பாக ஒடுக்கப்படுகின்ற அருந்ததி இனத்தவர் உள்ளிட்டவர்களுக்கு மூன்று சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளது என்ற உயர்நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு வெளியிட்டுள்ள இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியது அவசியமாகும்.

படிக்க: சம உரிமை; இட ஒதுக்கீடு=பார்ப்பன மேலாதிக்கம்!

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் உரிமை மறுக்கப்பட்ட மக்கள் இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் முன்வைத்ததை அதன் உண்மையான பொருளில் புரிந்து கொள்ளாமல் நாடு முழுவதும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதவர் என்று இரண்டே பிரிவுகள் தான் உள்ளது என்றும், இருக்கின்ற நூறு இடங்களை அனைத்து சாதிகளுக்கும் பிரித்துக் கொடுப்பது என்றும் அமுல்படுத்தினாலும், இட ஒதுக்கீட்டு கொள்கையை அமல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது என்பதும், 69% இட ஒதுக்கீடு என்பதை அமல்படுத்தி நாட்டிலேயே ’சமூக நீதியை’ நிலை நாட்டுவதில் முன்னிலையில் உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

தமிழகத்தை கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வருகின்ற திராவிட இயக்கங்களின் சாதனைகளில் ஒன்றாக கருதப்படும் இட ஒதுக்கீடு இன்று நாடு முழுவதும் விவாதத்தை தோற்றுவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு செய்யப்படுவதும், உண்மையிலேயே இட ஒதுக்கீடு போன்றவை உரிய மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் முன்வைக்கப்படுகின்ற பிரச்சாரங்கள் அனைத்தையும் நாம் ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு நாம் முன் வைப்பதாலேயே, ”இட ஒதுக்கீடு என்பதை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை” என்ற முந்தைய நிலைப்பாட்டை கைவிட்டு விட்டீர்களா என்ற கேள்விக்கு மண்டல் கமிஷன் அறிக்கை தொடர்பாக இந்த விவாதங்கள் எழும்பிய போதே இட ஒதுக்கீட்டை மறுக்கின்றவர்களுக்கு எதிராக போராடுகின்றோம் என்ற பதிலையே, அழுத்தமாக அதுவும் இட ஒதுக்கீடு என்பதே கூடாது என்று மொத்தமாக நிராகரிக்கின்ற பார்ப்பன பாசிச கும்பலுக்கு எதிராக போராடுகிறோம்  என்ற பதிலையே மீண்டும் முன் வைக்கின்றோம்.

  • மாசாணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here