ரைன்லாந்து பிரதேசம், ஜெர்மெனுக்குமில்லாமல் – பிரான்சுக்குமில்லாமல் – இரண்டும் கெட்டான் நிலையில் இருந்தது. அப்படிப்பட்ட ரைன்லாந்தில் – ஜெர்மனியின் மேற்கு எல்லையிலும், பிரான்சின் கிழக்கு எல்லையிலுமாக அமையப்பெற்ற இயற்கை எழில் சூழ்ந்த ரைன்லாந்தில் ‘ட்ரியர்’ எனும் நகரில், ஹிர்ஷெல் மார்க்ஸ் (முன்பு யூத மதத்தினராய் இருந்த பொழுது அவர் பெயர் இது – பிரபல வழக்கறிஞர் – மார்க்ஸின் தந்தை) – ஹென்ரிட்டே (மார்க்ஸின் – தாய் – குடும்ப நிர்வாக வல்லுநர்) தம்பதியருக்கு “1818 மே 5” -ல் பிறந்தவரே நமது மாபெரும் ஆசான் கார்ல் மார்க்ஸ்.

ஒரு வழியாக பேச்சுவார்த்தையின் மூலமாக ரைன்லாந்து ஜெர்மனி நாட்டின் முழு ஆளுகைக்குட்பட்டது.மார்க்ஸ் தந்தை வழக்கறிஞராகையால், யூதர்களை வெறுக்கும் ஜெர்மனி ஆட்சியாளர்களின் கீழ் வழக்கறிஞர் தொழிலை சிறப்புடன் ஆற்றிட இயலாதவராயிருந்தார். மேலும், அவருக்கு இயற்கையாகவே மத நம்பிக்கைகளில் பெரிதும் ஈடுபாடு ஏதுமில்லாதவராய் இருந்துள்ளார்.

எனவே தனது ஏழு குழந்தைகளுடன் 1824 ஆகஸ்ட் 24-ம் நாளில் கிறித்தவ மதத்தைத் தழுவினார் மார்க்ஸின் தந்தை. அதன் பின்னரே யூத மதத்தில் இருந்த ஹிர்ஷெல் மார்க்ஸ் என்பதை ஹென்ரிக் (ஹைன்ரிக்) மார்க்ஸ் என கிறித்தவ மதத்திற்கு ஏற்ற வகையில் பெயர் மாற்றம் செய்து கொண்டார். (அதன் பிறகு இவர்களுக்கு 8-வது குழந்தை இறுதியானதாகப் பிறந்துள்ளது) இவனது நேர்மையான நற்பண்புகள் காரணமாக வழக்கறிஞர் தொழிலில் மிகப் பிரபல்யமானார். தனது தந்தையின் நிழற்படத்தைத், தான் சாகும் காலம் வரையிலும் தனது சட்டைப்பை அல்லது கோட் பை-யில் வைத்து பூஜித்து வந்துள்ளார் கார்ல் மார்க்ஸ் – எனில் தமது தந்தையைப் பற்றிய கணிப்பில் எவ்வளவு உயர்ந்த எண்ணம் கொண்டிருந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறதல்லவா? கார்ல் மார்க்ஸ் இறந்த தருணத்தில் அவரது சவக்குழியில் – கல்லறை சவப் பெட்டியினுள் மார்க்ஸ் போற்றிப் பாதுகாத்து வந்த அவரது தந்தையின் நிழற்படத்தை ஆசான் ஏங்கெல்ஸ் உள்ளே கிடத்தினார் என்பதும் ஈங்கு குறிப்பிடத்தக்கது.

விளையும் பயிர் முளையில் தெரியும்…!

மார்க்ஸ் ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்தரப்பள்ளிப் படிப்பை ட்ரியர் நகரியிலேயே முடித்தார். அப்பொழுதே அவருக்கு இலத்தீன், கிரீக், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மிகச் சிறந்த பயிற்சி பெற்றிருந்தார். அந்த வயதிலேயே கவிதை இயற்றும் ஆற்றலையும் பெற்றிருந்தார். உயர்தரப் பள்ளி இறுதித் தேர்வின் போது ஒரு வினா, அது இதோ:-

“ஓர் இளைஞன் ஏதேனும் ஒரு தொழிலில் பிரவேசிப்பதற்கு முன்பு அவன் மனதில் உதிக்கும் எண்ணங்கள்” – என்பதைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதப் பணிக்கப்
பட்டிருந்தது.

அதற்கு மார்க்ஸ் மிகுந்த தொலைநோக்கோடு எழுதிய மதி நுட்பமான கருத்துக்களைக் கொண்ட கட்டுரையை இவருடைய ஆசிரியர்கள் பலரும் படித்துப் பார்த்துவிட்டு பிரமித்துப் போனார்களாம்! ‘வருங்காலத்தில் இவன் மற்றவர்களுக்கு வழிகாட்டியாயிருப்பானென்று தீர்மானித்துக் கொண்டார்களாம்! வாழ்த்துக்களைப் பதிவு செய்தார்களாம்!

அந்தக் கட்டுரையின் சில வரிகள் இதோ: “…நாம் எந்தத் தொழிலுக்குத் தகுதி உடையவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அந்தத் தொழிலில் நாம் அநேகமாக பிரவேசிக்க முடியாமல் இருக்கலாம்; ஏனென்றால், நமக்கும் சமுதாயத்திற்கும் எந்த விதமான சம்பந்தம் இருக்க வேண்டுமென்று நாம் நிர்ணயிப்பதற்கு முந்தியே அந்த சம்பந்தம் உருவகப்பட்டுவிட்டிருக்கிறது. பொதுவாக மானிட சமுதாயத்திற்கு அதிக நன்மை செய்யக்கூடிய ஒரு தொழிலை நாம் தெரிந்தெடுத்துக் கொண்டு விடுவோமேயானால் உலக வாழ்க்கை நமக்கு ஒரு சுமையாயிராது; அந்த சுமையின் கீழ் நாம் அழுந்திப் போக மாட்டோம். ஏனென்றால் நாம் சுமக்கின்ற அந்தச் சுமை, எல்லோருடைய நன்மைக்காகவும் நாம் செய்கிற தியாகம்!

எவன் ஒருவன் பெரும்பாலோருக்குச் சந்தோஷத்தை உண்டு பண்ணுகிறானோ அவன் தான் அதிகமான சந்தோஷத்தை அடைகிறான். மானிட சமுதாயத்தின் நன்மைக்காக ஒவ்வொருவனும் தன்னைத் தியாகம் செய்து கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தைப் பெற வேண்டும்…”

படிக்க:

 ஆசான் மார்க்ஸ் பற்றி அவரது இளமைக் காலத்து சகாக்கள் என்ன கூறுகின்றனர்?

 ஆசான் கார்ல் மார்க்ஸ் நினைவைப் போற்றுவோம்…! மார்க்சியம் பயில்வோம்!

இந்தத் தொலைநோக்குப் பார்வையுடைய கட்டுரையின் சில வரிகளிலிருந்தே, அதுவும் மார்க்ஸ் தமது 17-ம் வயதிலேயே எழுதி இருக்கிறாரென்றால்,
பிற்காலத்தில் அவர் செய்த சாதனைகளும் – கண்டுபிடிப்புகளும் – தியாகங்களும்… “விளையும் பயிர் முளையில் தெரியும்” என்பதற்கு மார்க்ஸின்
இந்த இளம் வயதுக் கட்டுரை சான்றாக அமைந்துள்ளது அல்லவா?

“ஜென்னி”யை உச்சரிக்காமல் “மார்க்ஸை” மட்டும் கொண்டாட முடியுமோ?

ஜென்னியின் முன்னோர் பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள். நிறையச் சொத்துக்களுக்கு உரிமையாளர்கள்.‌ ஜென்னியின் தந்தை ‘லுட்விக் வான் வெஸ்ட் பாலென்’ ஜெர்மன் அரசாங்கத்தில் முக்கியமான பதவி ஒன்றில் இருந்தவர். இவர் 1816- ல்-அதாவது காரல் மார்க்ஸ் பிறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு – ரைன்லாந்து பகுதியில் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டு ட்ரியர் நகரத்தில் கார்ல் மார்க்ஸ் (தந்தை) வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடி புகுந்தார்.
அப்போது ஜென்னிக்கு வயது 2.

மார்க்ஸின் தந்தையும்- ஜென்னியின் தந்தையும் பொறுப்பு மற்றும் மதிப்பு மிகுந்த அளவில் பதவிகளில் இருந்ததால் இரு குடும்பத்தினரின் நட்புறவு வளர்ந்தோங்கியது. அந்த அடிப்படையில் குழந்தைப் பருவத்திலிருந்தே (மார்க்ஸை விட ஜென்னி 4 வருடம் மூத்தவராயினும்) ஓடியாடி விளையாடும் மிக நெருக்கமான நண்பர்களாயினர். சற்று வளர வளர ஒருவரின் சித்தத்தை மற்றொருவர் புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்று விட்டனர் போலும். சிறுவனான மார்க்ஸின் கூர்மையான அறிவாற்றலை உணர்ந்த வான் வெஸ்ட் பாலென் மார்க்ஸிடம் அடிக்கடி கலந்துரையாடுவது; சிறுவன் எனக் கருதாமல் தம்முடன் அழைத்துக் கொண்டு பல இடங்களுக்கு உலாவச் செல்வது; சேக்ஸ்பியரின் ஆழ்ந்த கருத்தோட்டங்களை – பிரெஞ்ச் அறிஞர்களான ஸான்ஸீமன், பூர்யே போன்றோரின் அபேதவாத கருத்துக்களைப் பற்றி – அரசியல் பொருளாதார சூழ்நிலைகளைப் பற்றி எடுத்துரைத்துக் கொண்டே செல்வது; அரசாங்கத்தாரின் லஞ்ச ஊழல்களை ஏகடியும் செய்து பேசுவதுமாக இருந்துள்ளார்.

இப்படியாக மார்க்ஸை சம வயதொத்த தோழன் போல் பாவிக்கத் தொடங்கினார் ஜென்னியின் தந்தை லுட்விக். மார்க்ஸும் அவரை தமது குருநாதராக ஏற்றுக் கொண்டிருந்தார். எப்படியோ மார்க்ஸின் 17-ம் வயதிலேயே பேரழகி ஜென்னியுடனான காதல் மலர்ந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

உயர் பள்ளி படிப்பை முடித்து பான் நகரில் உள்ள சர்வ கலா சாலையில் சட்டம் பயிலச் செய்தார் மார்க்ஸின்தந்தை. கல்லூரி பருவத்தில்இளம் வயதினருக்கே உரிய குறும்புகளையும் மார்க்ஸ் கொண்டிருந்திருக்கிறார். எனினும் பான் நகரத்தில் செயல்பட்ட கவிஞர்கள் சங்கத்தில் தன் பெயரையும் இணைத்துக் கொண்டு கவிதை இயற்றுவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தார்.

படிக்க:

 டார்வின், மார்க்ஸ் குறித்த பரப்புரைக்கு வித்திட்ட ஆளுநருக்கு நன்றி! | வீடியோ

 மார்ச் 14:காரல் மார்க்ஸ் நினைவு தினம்! – மீள்பதிவு

ஆனாலும் அவரது கூர்ந்த அறிவாற்றலைக் கண்ட தந்தை அவரை ஓராண்டிலேயே பான் சர்வகலா சாலையில் இருந்து விடுவித்துக்கொண்டு ஜெர்மெனியின் மிகப் பிரசித்து பெற்ற பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு கார்ல் மார்க்ஸ், தத்துவ சாஸ்திரம், சட்டம், சரித்திரம் (வரலாறு), பூகோளம், இலக்கியம் ஆகியவற்றை தேர்வு செய்து படித்தார். இரவு பகலென விழுந்து விழுந்து படிக்கின்ற பழக்கம் அவரது கல்லூரிப் பருவத்திலேயே துவங்கி விட்டது.

இத்தருணத்தில் தான் அக்காலந்த்தில் ஐரோப்பாவில் குறிப்பாக ஜெர்மனியில் இளைஞர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றிருந்த அறிஞன் என போற்றப்பட்ட ஹெகல் கருத்துக்களில் ‘அரச சக்தி என்பது ஜன சக்தியினின்று பிறப்பதனால், ஜன சக்தியினின்று வேறாக, அதற்கு விரோதமாக, அந்த அரசு சக்தி இருக்க முடியாதென்று கூறினார்கள். எது இப்பொழுது இருக்கிறதோ, அஃது அவசியமாயிருக்கிறதனால் தான் இருக்கிறதென்றும், அதனால் அது நியாயம்’ என்றும் முதியவர்கள் – அதாவது ஜெர்மனியின் ராஜ பக்தர்கள் கூறினார்கள். ஆனால் ‘எது நியாயமோ அதுவே அவசியமென்றும் அதுவே இருக்க வேண்டும் என்றும் இளைஞர்கள் – அதாவது ஜெர்மனியின் தேச பக்தர்கள் – கூறினார்கள். ஆக, முந்தியவர்கள் உள்ளதை ஊர்ஜிதம் செய்யப் பார்த்தார்கள்; பிந்தியவர்கள் உள்ளதை மாற்றப் பார்த்தார்கள். இறுதியில் முந்தியவர்கள் “முதிய ஹெகலியர்”களென்றும், பிந்தியவர்கள் “இளைய ஹெகலியர்”களென்றும் இரு கட்சியினராகப் பிரிந்தனர்.

மார்க்ஸ் இளைய ஹெகலியர் கட்சியில் சேர்ந்து கொண்டான். இந்த இளைஞர் கட்சிக்கு ரூட்டென் பெர்க், கோபன், பாவர் ஆகிய மூவர் தலைவர்களாயிருந்தனர். ஹெகலின்கருத்தோட்டத்தில் மார்க்ஸால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. காரணம் மார்க்ஸ் சமூகப் பொருளாதார நியதிகளை – சமூக ஏற்றத் தாழ்வுகளை சார்லஸ் டார்வின் விட்ட இடத்தில் இருந்து துவங்கி குரங்கிலிருந்து மனிதன் ஆன பிறகு மனிதன் எந்தெந்த வகைகளில் எல்லாம் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறான்; அந்த வளர்ச்சிப் போக்கு இறுதியில் எங்கு போய் முடியும் என்பது வரை இயக்கவியல் மற்றும் வரலாற்றியல் பொருள் முதல்வாத சித்தாந்தத்தின்படி சுயம்புவாக சிந்திக்கும் ஆற்றலைப் பெற்ற பின் ஹெகல் கருத்து முதல்வாதியாக இருந்து உள்ளார் என்பதனை எளிதில் கண்டறிகிறார். ஆக மாணவப் பருவத்திலேயே உலகளாவிய விடயங்கள் குறித்து தொலைநோக்கான சமூக விஞ்ஞானப் பார்வையை மார்க்ஸ் கொண்டிருந்தார்.

படிக்க:

 இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் சொன்னது தான் என்ன?

 அமேசான் அமோக விற்பனை! மார்க்ஸ் சொன்னது உண்மைதான்!

அவர் பல்வேறு துறைகளில் ஈர்க்கப்பட்டு அதிலும் பலவற்றைப் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் தத்துவ சாஸ்திரத்தில் அவர் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆனால் தந்தையோ தன்னைப் போல் தனது மகனும் சிறந்த வழக்கறிஞராக பவனி வரவேண்டும் என எதிர்பார்த்தார். தந்தைக்கு மகனுக்கும் இதனால் எண்ணற்ற போராட்டக் கடிதப் போக்குவரத்துகள் இருந்திருக்கின்றன.

1836-ல் கோடைகால விடுமுறைக்கு ட்ரியர் வந்திருந்த பொழுது மார்க்ஸும்- ஜென்னியும் சில நாட்கள் ஆழமாக விவாதித்து முடித்து திருமணம் செய்து கொள்வதாக ரகசிய ஒப்பந்தம் ஒன்றினைப் போட்டுக் கொண்டார்கள். இவ்விவரத்தை மார்க்ஸ், தனது தந்தை ஹென்ரிக்- கிடம் மட்டுமே தெரிவித்திருந்தார்.

மார்க்ஸ் பெர்லினில் படிக்கின்ற பொழுது அவரது தந்தை கீழ்க்கண்டவாறு ஜென்னியைப் பற்றி எழுதுகிறார்:

“…ஜென்னியிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன்; அவள் மனம் நிம்மதி அடைகிற மாதிரி நான் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்கும். என்னால் முடிந்தவரை பேசினேன். ஆனால் எல்லா விஷயங்களையும் நான் அவளிடத்தில் நேர்முகமாகச் சொல்ல முடியாதல்லவா? அவளுடைய பெற்றோர் உங்கள் திருமணம் பற்றி என்ன அபிப்பிராயப்படுவார்கள் என்பது எனக்குத் தெரியாது; உற்றாரும் உறவினரும் சொல்வதை நாம் லேசாகப் புறக்கணித்து விட முடியாதல்லவா…? ஜென்னி உன்னைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் மகத்தான தியாகத்தைச் செய்தவளாகிகிறாள். இதை நீ மறந்து விடுவாயானால் உனக்கு வாழ்க்கையிலே பல சங்கடங்கள் உண்டாகும். உன் மனதை நீ பரிசோதனை செய்து பார். நீ ஒரு இளைஞனாய் இருந்த போதிலும் உலகத்தினரால் மதிக்கப்படக்கூடிய ஒரு மனிதனாக வேண்டுமானால் அது நீ உறுதியாக நடந்து கொள்வதிலும் உன்னுடைய பல்வேறு திறமையான முயற்சிகளிலுமே அடங்கியிருக்கிறது..”

“… உன்னை விட்டு ஜென்னியைப் பிரிப்பதென்பது எந்த ஒரு அரசிளங் குமரனாலும் முடியாத காரியம். இதைப் பற்றி எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. நீயும் இதை நிச்சயமாக நம்பு. அவள் தன்னுடைய உடலையும் ஆத்மாவையும் உன்னிலே ஐக்கியப் படுத்திக் கொண்டு விட்டாள். இது விசயத்தில் உனக்கு அவள் மகத்தான தியாகம் செய்து இருக்கிறாள். அவளைப் போல் சம வயதுடைய பெண்கள் இந்த மாதிரியான தியாகத்தைச் செய்ய முடியாது. இதனை நீ மறந்து விடவே கூடாது…”

இதுபோன்று ஜென்னி குறித்து மார்க்ஸ்க்கு அவரது தந்தை இன்னும் சில கடிதங்கள் எழுதியுள்ளார்.

நகரில் பலரும் ஜென்னியின் பேரழகுடன் ஒப்பிட்டு மார்க்ஸின் முரட்டுத்தனம், குரூரமான தோற்றம் மற்றும் எதற்கெடுத்தாலும் போராடும் சுபாவம் உடையவருக்கா ஜென்னி மணமகள் ஆகப் போகிறாள் எனப் பலரும் வறுத்தெடுத்தார்கள்!

படிக்க:

 சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்

 மார்க்ஸ் ரிப்பன் பில்டிங் வாயிலில் தொழிலாளர்களுக்கு துணையாக நின்றிருந்தார்…

ஆனால் பெரிய வேடிக்கை என்னவென்றால், ஜென்னி, மார்க்ஸ் மீது காதல் கொள்வதற்குப் பிரதானக் காரணமே, ‘தமது எதிர்கால வாழ்க்கைத் துணைவன் மார்க்ஸ், உலகம் முழுமையும் பெயர் எடுக்கத்தக்க மாபெரும் ஆசானுபாவனாக – அறிஞனாக – பேராற்றல் மிக்கவனாக விளங்குவதற்கான முழுத் தகுதியையும், பெற்றிருக்கிறான்; பல துன்ப துயரங்களை எதிர்கொள்ள வேண்டியும், தியாகங்களையும் கூடச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறான்…’ என்பதை நன்கே உணர்ந்திருந்தார். ஆக, பருவத்திற்கியந்த காதல் என்பதை விட, சமூக லட்சியத்தை அடிப்படையாகக் கொண்ட பக்குவப்பட்ட காதலாக அது மலர்ந்திருந்தது என்பதே சரியானதாகும்!

ஜென்னியே குறிப்பிட்டது போல ‘எவர் எதைச் சொன்னாலும், அவரது இரண்டு நிமிட மவுனத்திற்கு முன்பாக அனைத்தும் தூளாகிவிடும்’ என்பதை எவ்வளவு ஆழமாக கிரகித்து வெளிப்படுத்துகிறார் பாருங்கள்!

மார்க்ஸ் படிப்பு முடியும் வரை – சுய சம்பாத்தியத்தில் அமரும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என்றிருந்தான். இருவருக்கும் இடையில் கடிதப் போக்குவரத்துக்கள் மற்றும் எண்ணற்ற மார்க்ஸின் ஜென்னியைப் பற்றிய கவிதைப் படைப்புக்களே ஜென்னிக்கு பிரிவாற்றாமையைப் போக்கி உள்ளது. ஆனந்தக் கண்ணீர் சிந்தவும் வைத்துள்ளது.

இந்நிலையில் மார்க்ஸின் 20-வது வயதில் – 1838-ல் தமது வழிகாட்டியும், ஆசானு பாவனுமாகிய தமது தந்தை ஹென்ரிக் காலமானது மார்க்ஸை ஆராத் துயரில் ஆழ்த்தியது. கடைசியில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் 1841 மார்ச் 30ஆம் நாள் பெர்லினில் படித்து முடித்து பட்டங்களைப் பெற்றதற்கான சான்றிதழ்களைப் பெற்றான் மார்க்ஸ். அதோடு ஓய்ந்துவிடவில்லை. தத்துவ சாஸ்திரம் தொடர்பாக ஜீனா என்ற நகரின் சர்வகலா சாலைக்கு ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை அனுப்பியதில் ‘டாக்டர்’ பட்டமும் பெற்றான்.

ஆம், சூட்டோடு சூட்டாக தமது 23-வது வயதிலேயே ‘டாக்டர் மார்க்ஸ்’ ஆனான். இங்கு ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். தந்தை ஹென்ரிக் மார்க்ஸ் மறைவுற்றதும் தாய் மூலமாக எவ்வித உதவியையும் மார்க்ஸால் பெற இயலவில்லை. காரணம் இவர் இவ்வளவு படித்து பட்டங்கள் பெற்றும் சம்பாதிக்கும் திறமையைப் பெற்றிருக்க வில்லையே என்பதே பிரதான காரணம்.

வேலை கிடைக்கவில்லை! திருமணம் நடந்து விட்டது!

தந்தை இறந்ததால் வருமானம் ஏதுமில்லை. ஜென்னியோ ஏக்கப் பெருமூச்சில் இருக்கிறார். பான் சர்வ கலாசாலையில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெறக் காத்திருந்த மார்க்ஸின் நண்பர் பாவர், போதகாசிரியராக இருந்தார்.
அவருக்குப் பதவி உயர்வு கிடைத்தவுடன், தற்போதைய தமது போதகாசிரியர் பணியிடத்தில் மார்க்ஸை அமர்த்தலாம் என்ற ஆர்வத்தை ஊட்டினார்.
மார்க்ஸும் நம்பிக்கை உடன் காத்திருந்தார்.

ஆனால் அரசு பீடமும் மத பீடமும் ஒருங்கிணைந்து அலசி ஆராயும் பொழுது மார்க்ஸ் “இளம் ஹெகலியர்” இயக்கத்தின் சார்பினன் என்பதை அறிந்திருந்ததும், பத்திரிக்கையில் – தமது கட்டுரையில் “இன்றைய அரசாங்கம் என்பது முதலாளிகளுக்குச் சம்பந்தப்பட்ட பொதுவான விவகாரங்களை நிர்வாகம் செய்வதற்கென்று ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடிய ஒரு கமிட்டி…” என்று ஜெர்மானிய அரசாங்கத்தின் யோக்கியதாம்சத்தை படம்பிடித்து காண்பித்து இருந்தார் மார்க்ஸ்.

இந்த வரிகள் உலகம் முழுமையும் உள்ள நாடுகளின் அரசாங்கங்களுக்கும் முற்றும் முழுதாக பொருந்தும். இவ்விவரங்களை எல்லாம் அறிந்திருந்த அரசாங்கத்தாரும் – மத வழி சாம்ராஜ்யத்தாரும் பான் பல்கலைக்கழகத்தில் மார்க்ஸைப் போதகாசிரியர் பணியில் அமர்த்த மறுத்துவிட்டனர். ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டம் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை ஒரே வகையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது.

படிக்க:

 சோசலிசம் தொற்றுக்கிருமிகளை வீழ்த்தும்! தோழர் லெனின்

♦ “இன்றைய தேசிய – சர்வதேசிய கடும் நெருக்கடிகளிலிருந்து மீள, ஆசான்கள் லெனின்-ஸ்டாலின் வழிகாட்டுதல்கள் மூலமாகவும் படிப்பினை பெறுவோம்!”

வேறு வழி இல்லாமல் பத்திரிகை தொழிலில் பிரவேசிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார் மார்க்ஸ். 1842 முதல் “ரைன்லாந்து கெஜட்” என்ற பத்திரிகை வெளிவந்தது. அதில் கார்ல் மார்க்ஸ் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிக் கொண்டு வந்தார். ஏங்கெல்ஸும் கூட கட்டுரை அனுப்பினார். மார்க்ஸ்னுடைய கட்டுரைகளின் வீச்சு ஐரோப்பா, ரஷ்யா, ஜெர்மன், பிரெஞ்சு… நாடுகளின் அறிவு ஜீவிகள், ஏன் – தொழிலாளர்கள் மத்தியில் கூட மிகவும் பெயரை ஈட்டித் தந்தன.

மார்க்ஸின் எழுத்தாற்றலுக்கு கிடைத்த வரவேற்பினால் அப்பத்திரிக்கைக்கு அவரே ஆசிரியராகவும் முன்னேறினார். ஜெர்மானிய அரசாங்கத்தின் சுயேச்சதிகாரக் கோலத்தை “ரைன்லாந்து கெஜட்”டில் புட்டு புட்டு வைத்து அம்பலப்படுத்தினார் மார்க்ஸ். கட்டுரைகளின் தாக்கம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அரண்டு போனது அரசாங்கம்! பொறுக்குமா அரசாங்கம்? எனவே பத்திரிகை அலுவலகத்தில் எண்ணற்ற தணிக்கைகள் – சோதனைகள் – பணிகள் செய்யவிடாமல் முட்டுக்கட்டைகள்… தொடர்ந்த வண்ணம் இருந்தன. மார்க்ஸ் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பத்தே மாதங்களில் 1843 ம் வருடம் பத்திரிக்கை இழுத்து மூடப்பட்டது.

இப்படிப்பட்ட துயரச் சூழலில்தான் 1843 ஜூன் 19-ல் மார்க்ஸ்(25) – ஜென்னி (29) இணை ஏற்பு நிகழ்வு க்ராய்ஷ்னாக் என்ற ஊரில் நடைபெற்றது – திருமணப் பதிவும் செய்து கொண்டனர். சில மாத காலம் மண வாழ்க்கை இன்பகரமாகக் கழிந்தது.
தந்தையின் மறைவுக்குப் பிறகு தாயிடமிருந்து மார்க் ஸால் எவ்வித உதவியை பெற முடியவில்லை என்பது மட்டுமின்றி, மகனை வெறுத்தொதுக்கவும் செய்தார்.

மார்க்ஸே குறிப்பிட்டுள்ளது போல் ‘என் தாய்க்கு என் மீது மிகவும் வருத்தம்; பணத்தைப் பற்றி எழுதத் தெரிந்தவனுக்கு பணம் சம்பாதிக்க தெரியவில்லை’ – என்பதே தாயின் மனக்குறை.

1843-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கடைசியில் மார்க்ஸ் தனது இணையர் ஜென்னியுடன் பாரிஸில் குடியேறினான். அங்கு தான் தமது 2-வது பத்திரிக்கையான “ஜெர்மன் பிரெஞ்ச் மலர்” இதழை 1844 பிப்ரவரி மாதம் துவங்கினான். அந்த வருடம் முதல் மகள் ஜென்னி பிறந்தாள். அடுத்தடுத்து பல்வேறு நாடுகளுக்கு நாடு கடத்துகின்ற சூழலிலும் கூட மொத்தம் 7 பிள்ளைகள் பிறந்தனர். அதில் ஒரே ஒரு பாச மகன் எட்கர். எழுவரில் நால்வர் மறைந்து விட்டனர். எஞ்சி இருந்த மூவரில் மார்க்ஸ் இறப்பதற்கு முன்பே மூத்த மகள் ஜென்னியும் இறந்துவிட்டார்.

திருமணம் ஆன நாள் முதல் வாழ்க்கை இணையர் எதிர்கொண்ட வாழ்க்கை முழுவதும் போராட்டம்! போராட்டம்! போராட்டம் தான்…!

முதலாளித்துவ வர்க்கக் கோரப் பிடியிலிருந்து, பாட்டாளி வர்க்க விடுதலை எனும் லட்சியப் பயணத்தில் மார்க்ஸ் எதிர்கொண்ட அனைத்து வித துன்ப துயரங்களிலும், வறுமைக் கோலங்களிலும், நாடு கடத்தப் படுதல்களிலும், சிறை ஏகுதலிலும், நோய் நொடிகளைச் சந்திப்பதிலும், வறுமையில் குழந்தைகளைப் பறி கொடுத்ததிலிலும் மார்க்ஸுடன் சம பங்கு வகித்தார் ஜென்னி. இன்னும் சொல்லப் போனால் ஜென்னி ஒரு படி மேலே நின்றார் என்று தான் கூற வேண்டும்.

படிக்க:

  ‘ஜென்னியின் காதலை’ நேசிக்கிறேன்!

 கோட்பாடுகளில் மட்டுமல்ல; ஆசான்களின் குடும்ப வாழ்க்கையினின்றும் மேலும் கற்போம்

‘ரைன்லாந்து கெஜட்’ வெளியிடுவதை ஜெர்மன் தடுத்து நிறுத்திய தோடு நாடு கடத்தவும் செய்தது. லண்டன் சதுப்பு நிலப்பகுதியில் இரண்டே அறைகள் கொண்ட ஒரு சிறிய கூடத்தில் குடும்பம் வசிக்க நேர்கிறது. குடும்பத்தை நடத்திச் செல்ல ‘நியூயார்க் ட்ரீப்யூன்’ பத்திரிக்கைக்கு மார்க்ஸ் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தான். இதில் கொடுமை என்னவெனில் இந்தக் கட்டுரைகளைத் தபாலில் அனுப்புவதற்கு ஸ்டாம்புகள் வாங்குவதற்குக் காசு இல்லாமல் அநேக சமயங்களில் திண்டாடி இருக்கிறான்.

இவன் வீட்டு சாமான்களில் ஏதேனும் ஒன்றாவது எப்பொழுதும் அடகு கடையைத் தரிசித்துக் கொண்டு வரும். ஒரு சமயம் குழந்தைகளின் பூட்ஸ்களைக் கூட அடகு வைத்திருக்கிறான்; உணவுப் பொருள் வாங்குவதற்காக – பெரும் குளிரிலிருந்து விடுபடுவதற்காக வைத்திருந்த தனது ஒரே ‘கோட்’-டையும்கூட அடமானம் வைத்திருக்கிறான்.

சுயம்புவான அறிவாற்றல் நிரம்பப் பெற்றவனாக மார்க்ஸ் இருந்திட்டாலும், லண்டன் மாநகரில் இருந்த மிகப் பெரும் நூலகத்தில், நூலகம் திறக்கப்படும் நேரம் முதல் அடைக்கப்படும் நேரம் வரை மார்க்ஸ் எண்ணற்ற நூல்களை படித்துக் கொண்டே இருந்தான். குறிப்பெடுப்பதிலும் தவறுவதில்லை. “நியூ யார்க் ட்ரிப்யூன்” பத்திரிக்கையினிடமிருந்தும், தமது உற்ற தோழன் ஏங்கெல்ஸிடமிருந்தும் அவ்வப் பொழுது கிடைத்துக் கொண்டிருந்த பணம், மார்க்ஸின் எளிய குடும்ப வாழ்க்கைக்குப் போதுமானதாயில்லை. அந்தப் பணமும் ஒழுங்காக கிடைத்துக் கொண்டிருந்தால் லட்சியவாதிகளான அத்தம்பதியர் சற்றுப் பொறுத்துக் கொண்டிருப்பர். ஆனால் அவையும் ஒழுங்காக கிட்டியதில்லை என்பதே வேதனை தரும் விசயம்.
ஆனாலும் மார்க்ஸ் எண்ணற்ற தோழர்களைப் பெற்றிருந்தான். ஆனாலும் எத்தருணத்திலும், எவரிடத்திலும் எள்ளின் முனையளவும் யாசகம் கேட்கும் துணிவு கொண்டவனில்லை.

மார்க்ஸ் – ஏங்கெல்ஸ்

தமது மனைவி ஜென்னி ப்ருஷ்ய மந்திரியான வெஸ்ட் பாலன் பிரபுவின் சகோதரி; நன்றாகப் படித்தவள்; வசீகரமான சுபாவமுடையவள். ஆனாலும் இந்த அநாகரிக வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டாள். அதற்குக் காரணம் தன் கணவன் மேலுள்ள தீராத காதல்தான். இத்தருணத்தில் இவளுக்கு வறுமை வாழ்க்கை என்பது சகஜம் ஆகிவிட்டது.

மார்க்ஸ் அமைதியற்ற சுபாவமுடையவனாகவும், காட்டுமிராண்டி போலவும் இருந்தபோதிலும்கூட, கணவன் அல்லது தந்தை அல்லது தோழன் என்ற முறையில் மிகவும் சாந்த மானவன்; சரளமாகப் பழகுபவன்; இவன் லண்டன் அருகாமையில் ஏழை மக்கள் வசிக்கின்ற ஒரு கேவலமான சதுப்பு நிலப் பகுதியில் – அதாவது வாடகை அதிகம் இல்லாத வீட்டில் வசித்தான். மொத்தமே இரண்டு அறைகள். தெருப்பக்கம் இருக்கிற அறை தான் நான்கு பேர் இருந்து பழகுவதற்கான அறை. பின்பக்கம் படுக்கையறை. இந்த இரண்டு அறைகளிலும் சுத்தமாகவும் பார்வைக்கு லட்சனமாகவும் உள்ள ஒரு மரச் சாமான்கள் கூட கிடையாது; எதை எடுத்தாலும் உடைசல் அல்லது கிழிசல்; எதைத் தொட்டாலும் அதன் மீது தூசி; எங்கு பார்த்தாலும் ஒரே அழுக்கு; அசுத்தம்! முன்பக்கம் உள்ள அறையின் நடுவில் பழைய மாதிரியான ஒரு மேஜை. அதன் மீது மெழுகுச்சீலை விரிக்கப்பட்டிருந்தது. அதன் மீது எத்தனை சாமான்கள்? கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள், பத்திரிகைகள், குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள், தையல் கூடையில் இருக்க வேண்டிய துண்டு துணுக்குகள், உடைந்த விளிம்புடைய கோப்பைகள், அழுக்கு நிறைந்த ஸ்பூன்கள், கத்திகள், விளக்குகள், மசிக்கூடு, டம்ளர்கள், சுருட்டு பிடிக்கிற குழாய், சுருட்டுச் சாம்பல்… ஆகிய எல்லாம் ஒன்றாக அந்த மேஜையின் மீது காட்சியளிக்கும். காதல் தம்பதியர் எப்படிப்பட்ட குடும்ப வாழ்க்கைப் பின்னணியிலிருந்து பிறந்து வளர்ந்து லட்சியத்திற்காக மட்டுமே தங்களை இப்படிப்பட்ட ஈன சுரம் சார்ந்த வாழ்க்கை முறைக்குத் தங்களை ஈகம் செய்து கொண்டார்கள் என்பதற்கு மேற்கண்ட சில வரிகளே போதுமானதல்லவா?

தோள் கொடுத்த தோழன் ஏங்கெல்ஸ்!

அரசியல் சித்தாந்த துறையில் மார்க்ஸ்க்கு இணையாகவே – சிந்தித்தான் – எழுதினான் – செயல்பட்டான், பிரெடெரிக் ஏங்கெல்ஸ். ‘ஜென்னி இல்லாவிட்டால் மார்க்ஸ் இத்தகையவனாக இருந்திருக்க வாய்ப்பில்லை’ என்று ஒரு அறிஞன் கூறினான். அதே உவமை ஏங்கெல் ஸ்க்கும் பொருந்தும்.

பொருளாதார ரீதியிலும், தத்துவார்த்தக் கோட்பாடுகள் ரீதியிலும் ஏங்கெல்ஸின் மாபெரும் உதவி மார்க்ஸ்க்குக் கிடைக்காமல் போயிருக்குமேயானால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருப்பான் மார்க்ஸ். இவர்கள் இருவரின் உதவிகள் மட்டும் இல்லாமல் இருந்திருக்குமேயானால் 65 வயதில் மரணமுற்ற மார்க்ஸ் வெகு காலத்திற்கு முந்தியே மரணத்தைத் தழுவியிருப்பான் என்பது மிகைப்படுத்தும் கூற்றன்று.

இரண்டு ஆசான்களும் சேர்ந்து 1848-ல் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (Manifesto of Communist Party)யை இளம் வயதுக் காத்திலேயே வெளியிட்டு உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கு, அறிவு ஜீவிகளுக்கு மிகப்பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தினர்.

ஆம், ஆசான் மார்க்ஸின் பெரும் படைப்பான “மூலதனம்” முதல் தொகுதி வெளியிடும் காலத்தில் மட்டுமே மார்க்ஸ் உயிருடனிருந்தார். மூலதனம் தொகுதி 2 மற்றும் 3-க் கான குறிப்புக்களை மார்க்ஸ் தயாரித்து வைத்திருந்தும் அவற்றை வெளியிடுவதற்குள் 1883-ல் மரணத்தைத் தழுவி விட்டார். ஆம், மருத்துவரின் ஆலோசனைகளை மீறுதல்; ஓயாத உழைப்பின் காரணமாக உறக்கமின்மை, தொடர்ந்து படித்துக் கொண்டிருந்ததால் தீராத தலைவலி; கண் வலி வயிற்றுக் கோளாறு உடலெல்லாம் கொப்புளங்கள்,வீட்டின் வறுமை கோலம்; பிள்ளைகளை சாக கொடுத்தது; அதிலும் குறிப்பாக மகன் எட்கர் 1855-ல் மறைந்தது; தனது மனைவி ஜென்னியும், தொடர்ந்து மூத்த மகள் ஜென்னி லோங்கேயும் தமக்கு முன்பே மறித்துப் போனது எல்லாமுமாகச் சேர்ந்து மார்க்ஸை 65 வயதில் அள்ளிச் சென்று விட்டது இயற்கை.

அவர் இறந்த பிறகு 12 ஆண்டுகள் வாழ்ந்தார் ஏங்கெல்ஸ். தமது உற்ற தோழனின் எஞ்சிய பணிகள் அனைத்தையும் தான் உயிர் வாழ்ந்த காலத்தில் செய்து முடித்து விட்டே மாண்டார். தான் தனித்து எழுதிய எண்ணற்ற நூல்கள் தவிர்த்து, மார்க்ஸின்
“மூலதனம்” தொகுதி 2, மற்றும் 3 இவற்றை வெளியிட்டு மனநிறைவு பெற்றார்.

ஜெர்மன் கொலைகார முதலாளித்துவ வர்க்கம் 1852 கோலான் சதி வழக்கில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உட்பட பல்வேறு தோழர்களும் சிறைப்படுத்த முயன்றனர். ஆனால், மார்க்ஸும், ஏங்கல்ஸும் லண்டன் தப்பினர். பலர் கைதாகினர். நீண்ட நெடிய விசாரணை காலத்திற்குப் பிறகு சிலர் விடுதலையாகினர்; சிலர் சிறைப்பட்டனர். இதற்காக இரட்டையர்களான மார்க்ஸும் ஏங்கெல்ஸும் பட்ட பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல!

இவர்கள் மட்டுமா?இந்தக் கோலோன் சதி வழக்கு குறித்து “அடோல்ப் கிலுஸ்”-
ற்கு ஜென்னி எழுதிய நீண்ட கடிதத்தில் ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் பாருங்கள்:

“… போலீசார் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்; அவர்கள் திருடுகிறார்கள்; கள்ளக் கையொப்பமிடுகிறார்கள்; புத்தக மேசைகளை உடைத்து திறக்கிறார்கள்; பொய்ப் பிரமாணம் எடுக்கிறார்கள்; சமூக வட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கம்யூனிஸ்டுகளைக் கருதி அவர்களுக்கு விரோதமாகச் செயல்படுவதற்கு விசேஷ அதிகாரம் இருப்பதாக உரிமை பாராட்டுகிறார்கள்; இவற்றையெல்லாம் பார்த்தால் போலீசார் அவர்களிலும் பொல்லாத சில வில்லர்களாக நீதித்துறை அமைச்சின் அலுவல்களை எல்லாம் தாமே எடுத்துக் கொண்டு, சேட்டை பின்னணிக்குத் தள்ளிவிட்டு அதிகாரப்பூர்வமில்லாத துண்டுக் காகிதங்களையும், வெறும் ஊகம், அறிக்கை, கேள்விப்பட்டது இவற்றை மெய்யாக நீதிமன்றத்தின் முன் நிரூபிக்கப்பட்ட உண்மைகளாயும், சாட்சியங்களாயும் ஜோடனை செய்வதையும் பார்த்தால் உண்மையிலேயே மயிர் கூச்சல் எடுக்கும். இவற்றின் போலித்தன்மையை நிரூபிப்பதற்கான சாட்சிய முழுவதும் இங்கிருந்து சமர்ப்பிக்கப்படல் வேண்டும். எனவே என் கணவர் பகல் முழுவதும் இரவில் வெகு நேரம் வரையிலும் வேலை செய்ய நேர்ந்தது. வீட்டுச் சொந்தக்காரர்களிடமிருந்து முறையாக அங்கீகரிக்கப்பட்ட பிரமாணங்கள் வாங்கப்பட வேண்டும். குறிப்புகளை எழுதியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள லீப்க்னெஹ்ட், ரீங்ஸ் முதலியோரின் கையெழுத்துக்கள் அதிகாரப்பூர்வமாகச் சரி என்று அத்தாட்சி பெற்று போலீசார் செய்துள்ள போலிக் காரியங்களை நிரூபிக்க வேண்டும்‌. பிறகு இந்த பத்திரங்கள் அனைத்தும் ஆறு முதல் எட்டு பிரதிகள் வரை எடுக்கப்பட்டு சுற்றி வளைத்த மார்க்கத்தில் பிராங்க்புர்ட், பாரிஷ் வழியாக கொலோனுக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். ஏனெனில் எனது கணவர் முகவரிக்கு வரும் எல்லாக் கடிதங்களும் இங்கிருந்து கோலோன் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் எல்லா கடிதங்களும் உடைத்து பார்க்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்படுகின்றன. விசயம் முழுதுமே போலீசுக்கும், என் கணவருக்கும் இடையில் நடக்கும் போராட்டமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும், புரட்சி முழுமைக்கும், ஏன் இந்த வழக்காடலுக்கும் கூட ஆன பழியும் அவர் மீது போடப்பட்டிருக்கிறது. இதற்கு முழுமுதற் காரணமாக உளவுத்துறை அதிகாரி ஸ்டீபெர் திகழ்கிறார்…”

குடும்பம் வறுமையில் – லண்டனில் வாடுகின்ற பொழுது, கோலோன் சதி வழக்கில் மாட்டிக்கொண்ட தோழர்களை விடுவிப்பதற்காக எப்படி எல்லாம் ஜென்னி செயல்பட்டு தமது தனிப்பெரும் ஆற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதனை இக்கடிதத்தின் ஒரு பத்தியிலிருந்தே உணர முடிகிறதல்லவா?

கண்ணீர்க் காவியம்…!

எப்படியோ மார்க்ஸ் ஏங்கெல்ஸ் ஜென்னி கூட்டுழைப்பு உலக பாட்டாளி மக்களுக்கு மகத்தான பேருதவியை ஈட்டியது. அந்த இரு பெரும் ஆசான்களின் சமூக விஞ்ஞான ரீதியான தத்துவார்த்த கோட்பாடுகளை முதன் முதலில் சோவியத் மண்ணில் ஆசான் லெனின் 1917 நவம்பர் 7-ல் சோசலிசப் புரட்சி மூலமாக மெய்ப்பித்துக் காண்பித்தார். அதனைத் தொடர்ந்து சீனத்தில் தலைவர் மாவோ, வியட்னாமில் கோ-சி-மின், க்யூபாவில் பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா இன்னும் பல்வேறு நாடுகளிலும் புரட்சி மலர்கள் பூத்துக் குலுங்கத் துவங்கின.

அதற்காக ஆசான்கள் பட்ட பாடுகளை நாம் இன்னும் விவரித்துக் கூற முடியாது. ஆனாலும் மார்க்ஸ், ஒருமுறை ஏங்கெல்ஸுக்கு இவ்வாறு எழுதுகிறான்:

“என் மகன் எட்கர், வீட்டின் ஜீவன் நாடி போல் இருந்தான். அவன் இறந்துவிட்ட பிறகு வீடு சூனியமாய் இருக்கிறது. திக்கற்றது போல் ஆகிவிட்டது. ஒவ்வொரு நிமிஷமும் அவனைப் பற்றி நினைக்க வேண்டி இருக்கிறது. அப்படி நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை; அப்பொழுது எங்களுக்கு உண்டாகும் துயரத்தை வர்ணிக்க முடியாது. நான் எத்தனையோ துன்பங்களை அனுபவித்திருக்கிறேன். ஆனால் உண்மையான துயரம் இன்னது என்பதை இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். இந்தத் துயரத்திற்கு மத்தியிலே உன்னைப் பற்றிய நினைவு உன்னுடைய நட்பு நாம் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியங்கள் இருக்கின்றனவென்ற ஒரு நம்பிக்கை ஆகியவையே என்னை நிமிர்ந்து நிற்கும்படி செய்து இருக்கின்றன…”

ஒருபுறம் மார்க்ஸ் ஏங்கெல்ஸிடம் இவ்வாறு மனம் உடைந்து கசிந்துருகிறார் என்றால் மறுபுறம் ஜென்னி தமது குடும்ப வறுமையின் காரணமாக ஜோசப் வெய்டெமையருக்கு 1850 மே 20-ல் இப்படி எழுதுகிறார்:

“… சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னைப் பேனா எடுத்து எழுதும்படி நிற்ப்பந்திக்கின்றன.
Revue பத்திரிக்கையில் இருந்து ஏற்கனவே கிடைத்த அல்லது கிடைக்கப் போகும் பணம் இருக்குமானால் கூடிய விரைவில் அனுப்பி வைக்கும்படி இறைஞ்சுகிறேன். எங்களுக்கு பணம் மிக மிகத் தேவை. நாங்கள் செய்து வருகிற பல ஆண்டுகளாய் செய்து வந்துள்ள தியாகங்களை வைத்து கேட்கிறோம் என்று நிச்சயமாக யாரும் எங்கள் மீது குறை கூற முடியாது; எங்கள் நிலை குறித்து பொதுமக்களுக்கு என்றுமே தகவல் கொடுக்கப்பட்டது இல்லை. எனது கணவர் இது விஷயங்களில் மிகவும் மான உணர்ச்சி உள்ளவர். கடைசியாக ஏதேனும் இருந்தால் அதையும் தியாகம் செய்வாரு தவிர அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள “பெரிய மனிதர்களைப் போல” ஜனநாயக பிச்சையில் இறங்க மாட்டார். ஆயினும் நமது Revue-க்கு தமது நம் நண்பர்களிடமிருந்து குறிப்பாக கொலோனில் உள்ள நண்பரிடம் இருந்து தீவிரமான உச்சமான ஆதரவை அவர் எதிர்பார்க்க முடியும் தானே…

இங்கு என் கணவர் வாழ்க்கையின் சில்லறை கவலைகள் மிக மிக மோசமான உருவில் வந்து மூழ்கடிப்பதன் விளைவாக இதற்கு ஈடு கொடுத்து தினசரி மணிக்கு மணி போராட தமது சக்தி முழுவதையும் தமது அமைதியான தெளிவான நிகாலமான கௌரவத்தையும் பயன்படுத்தி நிலை நிற்க வேண்டி இருக்கிறது. பத்திரிகைக்காக என் கணவர் புரிந்துள்ள தியாகங்கள் பற்றி உங்களுக்கு தெரியும். அவர் ரொக்கமாக ஆயிரக்கணக்கில் இதற்காக முதல் போட்டார். உரிமையாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லாத காலத்தில் ‘மதிப்பிற்குரிய ஜனநாயவாதிகள்’ இதைச் செய்ய அவரைத் தூண்டினார்கள் இல்லாவிடில் அவர்களே கடனுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கும் அல்லவா? பத்திரிகையின் அரசியல் மதிப்பையும், தமது கோலோன் நண்பர்கள் குடியுரிமைக் கௌரவத்தையும் காப்பாற்றுவதற்காக முழுப் பொறுப்பையும் அவரே ஏற்றுக் கொண்டார். தமது அச்சகத்தை விற்றார். வருமானம் முழுவதையும் பிரித்துக் கொடுத்தார்…

“… இல்வாழ்க்கையின் ஒரு நாளை இருந்தது இருந்தபடி சித்தரித்துக் காட்டுகிறேன் இதை பார்த்தால் இத்தகைய இன்னல்களை நாடு கடத்தப்பட்ட மிகச் சிலரே அனுபவித்திருப்பர்.‌ செவிலித்தாய் அமர்த்தோதி என்றால் மிகவும் செலவாகும் ஆதலால் எனது மார்பிலும் முதுகிலும் தொடர்ந்து பயங்கரமான தாங்க முடியாத வேதனைகள் இருந்த போதிலும் குழந்தைக்கு நானே பாலூட்டுவது என்று முடிவு செய்தேன் ஆனால் இந்த பூஞ்சை குழந்தை பாலுடன் சேர்ந்து அளவற்ற கவலையினை அடக்கி மூடப்பட்ட வருத்தங்களையும் சேர்த்து பலியதால் இரவும் பகலும் பரிகாரமாக துன்பப்பட்டிருந்தபடி இருந்தது இந்த உலகிற்கு வந்த நாள் முதல் அவன் ஒரு இரவிலாவது இரண்டு மூன்று மணி நேரத்திற்கு மேல் நிம்மதியாக உறங்கியதில்லை அண்மையில் அவனுக்கு கடுமையான வலிப்புகள் வரத் தொடங்கின வாழ்விற்கும் சாவிர்க்கும் இடையே அவன் எப்பொழுதும் போராடிக் கொண்டிருந்தான். அவனுக்கு இருந்த வேதனையில் அவன் பலமாக உறிஞ்சியதன் விளைவாக எனது மார்பு உரசலுக்கு இலக்காகி தோல் வெடித்து நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் ரத்தம் கொட்டியது. இவ்வாறு ஒருநாள் அவனுடன் நான் அமர்ந்திருந்த போது எங்கள் வீட்டு நிர்வாகத்தைப் பார்ப்பவள் உள்ளே வந்தாள். குளிர்காலத்தில் அவளிடம் நாங்கள் 250 தேலர்கள் செலுத்தி இருந்தோம். எதிர்காலத்தில் வாடகை பணத்தை அவரிடம் கொடுக்காது அவள் மீது கடனுக்கு ஜப்தி வாரண்ட் வைத்திருந்த வீட்டு சொந்தக்காரரிடம் கொடுப்பதாக உடன்பாடு செய்திருந்தோம்.

அவள் உடன்பாட்டை மறுத்து தனக்கு சேர வேண்டிய 5 பவுன்களை கொடுக்குமாறு கேட்டால்.‌ அப்போது எங்களிடத்தில் பணம் இல்லை. எனவே இரு ஜப்தி அதிகாரிகள் வந்து எனது உடைமைகள் எல்லாவற்றையும்- கம்பளித் துணிகள், படுக்கைகள் துணிகள் அனைத்தையும் – எனது அப்பாவி குழந்தையின் தொட்டிலையும் எனது புதல்வியரின் சிறந்த விளையாட்டு சாமான்களையும் கூட பறிமுதல் செய்து ஜப்தி செய்தனர். என் புதல்வியர் நின்றபடி கரைந்தழுதனர்…

… என்னைப் பொருத்தவரை நான் மகிழ்ச்சியுள்ள சலுகைகள் பெற்ற அதிருஷ்டக்காரி என்றே என்னைக் கருதுகிறேன். காரணம் எனது வாழ்க்கையின் ஆதரவான என் அருமைக் கணவர் இன்னும் என் அருகில் இருக்கிறார்; அவருக்குத் தேவையான உதவியின் அளவு சிறிதாக இருந்த போதிலும், இந்தச் சில்லறை விஷயங்களுக்காக அவர் இவ்வளவு தூரம் தனியே அமர்ந்து வருந்த வேண்டி இருக்கிறதே எத்தனையோ பலருக்கு விருப்பத்துடன் உதவி புரிந்த அவர் இவ்வாறு உதவியற்ற நிலையில் இருக்கிறாரே என்பதுதான் எனது உள்ளத்தை சித்திரவதை செய்கிறது; இதயத்தில் ரத்தம் பீரிடச் செய்கிறது…. அன்புள்ள வெய்டடெ மையர் அவர்களே, நாங்கள் மற்றவர்களிடத்தில் கோரிக்கை கேட்கிறோம் என்று நினைத்து விடாதீர்கள். தமது கருத்துக்களையும் உற்சாகத்தையும் ஆரவையும் என் கணவர் யாருக்குக் கொடுத்தாரோ, அவர்களிடம் அவர் எதிர்பார்ப்பது வேலைகளில் மேலும் சுறுசுறுப்பு தமது Revue-வுக்கு மேலும் ஆதரவு இது மட்டுமே ஆகும்…”

இன்று இந்திய நாடு இருக்கும் அரசியல் சூழ்நிலையில் – கார்ப்பரேட் காவி பாசிசம் தலைவிரித்தாடும் சூழலில் – இருக்கக்கூடிய போலி பாராளுமன்ற ஜனநாயக மன்றத்தில் கூட கவர்ச்சி வாதமும் மக்களின் அறியாமை இருளும் ஒரு சேரக் கலந்து நாட்டை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிற இவ்வேளையில் நாம் எவரும் ஒதுங்கி இருக்க முடியாது. மேலே கண்ணீர் காவியத்தில் உணர்ச்சிகளைக் கொட்டும் மார்க்ஸின் வரிகளும் ஜென்னியின் வரிகளும் நம்மைப் பலமாக இடித்துரைத்து செயலுக்குத் தள்ளுமாக!

அதுவே இன்றைய ஆசான் கார்ல் மார்க்ஸின் 208-வது பிறந்தநாளில் நாம் மனத்தில் இறுத்திக் கொள்ள வேண்டிய அம்சங்களாகும்.

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here