மூக விஞ்ஞானி மாமேதை காரல் மார்க்ஸ் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக- விடியலுக்காக, இயக்க இயல் பொருள் முதல் வாதம் மற்றும் வரலாற்று இயல் பொருள் முதல் வாதம் போன்ற மாபெரும் சமூக விஞ்ஞானத் தத்துவங்களை தனது உற்ற தோழன் பிரடெரிக் எங்கெல்ஸ் துணையுடன் உலகப் பாட்டாளி மக்களுக்காக விட்டுச் சென்றார். உலகப் புகழ் பெற்ற “மூலதனம்” படைத்தார்.

அவற்றைத் தன் மண்ணுக்கேற்ற வகையில் ஆசான் லெனின் சோவியத் ரஷ்யாவில் நடைமுறைப்படுத்த முயன்ற பொழுது மார்க்சியத்தை அவர் மேலும் வளர்த்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினார். அந்த நாட்டின் சூழல், உற்பத்தி முறை, உற்பத்தி உறவு, பிரதான முரண்பாடு முதலானவற்றை ஆய்ந்து, முதலில் ரஷ்ய மக்களின் வாழ்வைப் படு பாதாளத்தில் தள்ளிக் கொண்டிருந்த- மக்களின் பரம எதிரியாக இருக்க கூடிய ஜார் மன்னனை வீழ்த்த வேண்டும்; அதற்கடுத்து அங்கே இருக்கக்கூடிய சமூகச் சூழலைப் பொறுத்து முதலாளித்துவ புரட்சியை நடத்த வேண்டும்! அதனுடைய நீட்சியாக சோசலிசப் புரட்சியை சாதிக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் தனது புரட்சிகரப் பயண நிரலை வகுத்துக் கொண்டு தன்னுடைய பெரும் படையுடன் களம் இறங்கி வேலை செய்தார்!

அவ்வாறே 1917 பிப்ரவரி புரட்சியின் போது மக்களைத் திரட்டித் தலைமை தாங்கி – கேரன்ஸ்கி போன்ற பிற்போக்கு சக்திகளுடன் கூட கூட்டணி அமைத்துக் கொண்டு ஜார் மன்னனை வீழ்த்தினார்! இதில் வெகு மக்கள் ரத்தம் சிந்தினர். வரலாற்றில் சிவப்பு ஞாயிறு உதயமாயிற்று! அதன் பிறகு முதலாளித்துவப் புரட்சியின் வாயிலாக கேரன்ஸ்கியே பிரதமர் ஆனார். ஆனாலும் ரஷ்யப் பாட்டாளிகளுக்கு விடிவு ஏற்படவில்லை.

அதனைத் தொடர்ந்து, 1917 நவம்பர் 7-ல் பாட்டாளி மக்களினுடைய பெரும்படை திரட்டி அந்த மகத்தான உலகம் போற்றும் சோசலிசப் புரட்சியைத் தலைமை தாங்கி வெற்றிக் கனியை ஈட்டினார் ஆசான் லெனின் .

இவ்வாறு லெனின் தனது அனைத்துவித செயல்பாடு களுக்கும், மார்க்சியத்தை அடிப்படையாக எடுத்துக் கொண்டிருந் தாலும், அதனை மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்களுடைய விடுதலைக்காக தன்னுடைய தனித்த அறிவியல் கண்ணோட்டத்திலிருந்து மார்க்சியத்தை மேலும் வளர்த்தெடுத்தார். அதை விரிவு படுத்தி உலகம் முழுதும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பரவிடத்தக்க வகையிலே பல்வேறு தத்துவார்த்தங் களை உருவாக்கினார். அதுதான் மார்க்சிய- லெனினியமாக உருவெடுத்தது. இன்று உலகம் முழுமையும் உள்ள பாட்டாளி மக்களுக்கான விடுதலையைப் பெற்றுத் தருவதற்கான ஆயுதமாகப் பிரகாசிக்கிறது.

ஆசான் ஸ்டாலின் தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல “இரண்டாம் அகிலத்தினுடைய சந்தர்ப்பவாதத்தின் கடிவாளமற்ற ஆதிக்கம் மேலோங்கி யிருந்த ஒரு முழுநிறைவான காலம் இருந்ததை நாம் கட்டாயம் மறந்து விடக்கூடாது…..”

“ரஷ்யாவின் தனிச் சிறப்பான சூழ்நிலைக்குப் பொருத்தமாகப் பிரயோகிக்கப்பட்ட மார்சியமாக மட்டுமே லெனினியம் இருந்திருக்குமானால் அது வெறும் தேசியத் தன்மை கொண்டதாகவே, ஒரு ரஷ்யத் தத்துவமாக மட்டுமே அல்லவா இருந்திருக்கும்.

வெறும் தேசியத் தன்மை வாய்ந்த ரஷ்யாவுக்கு மட்டுமே உரிய நிகழ்ச்சிப் போக்காக மட்டுமல்லவா இருந்திருக்கும். இருந்தபோதிலும், நமக்கு நன்றாகத் தெரியும்—- லெனினிய மானது ரஷ்யாவுக்கு மட்டுமே உரிய நிகழ்ச்சிப் போக்கு அல்ல; மாறாக, அது ஒரு சர்வதேச நிகழ்ச்சிப் போக்கு” –என்று பட்டவர்த் தனமாக அடித்துக் கூறுகிறார் ஸ்டாலின்.

லெனினியத்தின் மிகக் குறிப்பான அம்சங்களை உள் வாங்கிக் கொண்ட ஆசான் ஸ்டாலின், அவற்றின் மிக முக்கியமான – தேவையான சாரத்தை ஆவணப் படுத்தினார். அவைதான் ஆசான் ஸ்டாலின் வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திய மகத்தான “லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்” என்னும் படைப்பு! ஆசான் ஸ்டாலினின், லெனினியத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ள ஒரு ‘தீப்பொறி’ போன்ற சிறு உள்ளடக்கம் மட்டுமே கீழ்க்கண்டவாறு பகிரப்படுகிறது. அதன் மூலமாக அந்த மகத்தான நூலை அனைத்து வாசகர்களும் முழுமையாகக் கற்று உணர்ந்து பயன் பெற வேண்டும் என்பதோடு, பலருக்கும் அதனை எடுத்துச் செல்ல வேண்டுமாய்த் தோழமையுடன் கேட்டுக்கொள்ளப் படுகிறது.

எழில்மாறன்.

000

“லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்”


“….. ஏகாதிபத்தியமானது…..

ஒரு உற்ற துணை சாதனம் என்ற பாத்திரத்தை ஆற்றியது. அது புரட்சியை ஒரு தவிர்க்க இயலாத நடைமுறையாகச் செய்தது மட்டுமல்லாமல், முதலாளித்துவத்தின் கோட்டை கொத்தளங்களை நேரடியாகத் தாக்குவதற்கு சாதகமான நிலைமைகளையும் உருவாக்கிக் கொடுத்தது.

இத்தகைய ஒரு சர்வதேச நிலைமைதான் லெனினியம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தது.

சிலர் பின்வருமாறு சொல்லக் கூடும். இதெல்லாம் மிகச் சரிதான். ஆனால், இதற்கும் ரஷ்யாவுக்கும் என்ன தொடர்பு? ஏனென்றால், ஏகாதிபத்தியத்தின் பலமிக்கக் கோட்டையாக ரஷ்யா இல்லையே; அப்படி ஒரு கோட்டையாக முடியாமல் தானே ரஷ்யா இருந்தது. ரஷ்யாவில், ரஷ்யப் புரட்சிக்காக பிரதானமாக வேலை செய்த லெனினுக்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன தொடர்பு? மற்ற எல்லா நாடுகளையும் விட ரஷ்யா மட்டும் ஏன் லெனினியத்தின் தாயகமாயிற்று? பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கோட்பாடு மற்றும் செயல் தந்திரங்களின் தாயகமாக ரஷ்யா மட்டும் ஏன் ஆயிற்று?

ஏனென்றால், ஏகாதிபத்திய முரண்பாடுகள் அனைத்தின் குவி மையமாக ரஷ்யா விளங்கியது.

படிக்க:

♦ உலகை விழுங்கவும், நசுக்கவும் பரவும் பாசிசம்! தீர்வு கம்யூனிசம் மட்டுமே!

♦ உண்மையறிவோம் “லெனின்- ஸ்டாலின் – குரூப்ஸ்கயா”

ஏனென்றால், மற்றெல்லா நாடுகளைக் காட்டிலும் ரஷ்யாவானது புரட்சியைக் கருக்கொண்டு இருந்தது. ஆகவே, ரஷ்யா மட்டுமே, ஒரு புரட்சிகரமான வழிமுறையில் இந்த முரண்பாடுகளைத் தீர்க்கும் நிலையில் இருந்தது‌‌.

எல்லாவற்றுக்கும் முன்னதாக, ஜாரிச ரஷ்யாவானது, முதலாளித்துவ- காலனிய- ராணுவ என்று எல்லா வகையான ஒடுக்குமுறைகளுக்கும் பிறப்பிடமாக இருந்தது. அங்கு இருந்த ஒடுக்குமுறையோ ஆகமிகக் கொடூரமானதாகவும் ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமாகவும் இருந்தது. ரஷ்யாவில், மூலதனத்தின் சர்வ வல்லமை எவையெவற்றுடன் இணைந்திருந்தது என்பது யாருக்குத்தான் தெரியாது? ஜாரிச எதேச்சதிகாரத்துடன் அது இணைந்திருக்கவில்லையா? ரஷ்யா தேசிய வெறியுடன் அது இணைந் திருக்கக்கவில்லையா? ரஷ்யர்கள் அல்லாதவர்களைத் தூக்கி விடுபவனாக ஜாரிசம் பாத்திரமாற்ற வில்லையா? துருக்கி, பாரசீகம், சீனா ஆகியவற்றைக் கொண்ட பெரும் பிரதேசங்களைச் சுரண்டுவதற்கு, ஜாரிசம் துணை போகவில்லையா! இதற்காக இந்த நாடுகளின் பிரதேசங்களை, ஆக்கிரமிப்புப் போர்கள் மூலம் ஜாரிசம் கைப்பற்றவில்லையா? இவையெல்லாம் யாருக்கும் தெரியாதா? இவற்றையெல்லாம் ஜாரிசத்துடன் சேர்த்துத் தானே மூலதனம் செய்தது? ஜாரிசம் என்பது ஒரு “ராணுவ – பிரபுத்துவ- ஏகாதிபத்தியம்” என்று லெனின் மிகச் சரியாகவே வரையறுத்தார். ஏகாதிபத்தியத்தின் ஆகப்படு மோசமான கூறுகள் அனைத்தையும் தன்னகத்தே தாங்கி, அவற்றை அதியுயர் நிலையில் கொண்டிருந்தது தான் ஜாரிசம்.

இன்னும் கவனிப்போம். மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு ஜாரிச ரஷ்யா பெரியதொரு பக்க பலமாக விளங்கியது. இது, அந்நிய மூலதனம் சர்வசாதாரணமாக உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு அளித்தது என்பதோடு மட்டுமானது அல்ல; எரிபொருள், உலோகத் தொழில் போன்ற ரஷ்ய தேசிய பொருளாதாரத்தின் அடிப்படையான கிளைகளில், அந்நிய மூலதனம் ஆதிக்கம் செய்யத் துணை போனது ஜாரிசம். இது மட்டுமல்ல; மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்கு பல பத்து லட்சக் கணக்கான படை வீரர்களை உதவிக்கு அனுப்புவதையும் அது மேற்கொண்டது. இப்படி இரண்டு வழிகளிலும் அது ஏகாதிபத்தியத்திற்குப் பெரியதொரு சேம சக்தியாக இருந்தது. 1.4 கோடி என்ற பெரு எண்ணிக்கையிலான ரஷ்யப்படைகள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு முதலாளிகளின் தள்ளாடித் தடுமாறிய லாபங்களை நிலைநிறுத்திப் பாதுகாப்பதற்காக, ஏகாதிபத்தியப் போர் முனைகளில் ரத்தம் சிந்தியதைச் சற்றே நினைத்துப் பாருங்கள்!

***

ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியுமான சகாப்தத்தின் மார்க்சியம்தான் லெனினியம்!

இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், பொதுவில் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கோட்பாடும் செயல் தந்திரங்களுமே லெனினியம்!

குறிப்பாக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கோட்பாடும் செயல் தந்திரங்களுமே லெனினியம்!

ஆசான் ஸ்டாலின்.

1 COMMENT

  1. கடந்த மூன்று நாட்களாக மக்கள் அதிகாரம் இணையதளத்தில் ஆசான்களின் மேற்கொள்களையும் அவர்களின் புத்தகங்களில் இருந்து குறிப்பான விஷயங்களையும் சுட்டிக்காட்டி எழுதி இருப்பது மிகச் சிறப்பு. இதுபோன்ற கட்டுரைகள் படிக்கும் வாசகர்களிடையே உற்சாகத்தை கொடுக்கும். வர்க்க உணர்வைத் தூண்டும் .எழுதிய கட்டுரையாளருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here