முதலாளித்துவ சோம்பேறிகளின் விளையாட்டான கிரிக்கெட் இந்தியாவின் தேசிய விளையாட்டு போல ஆளும் வர்க்கத்தினராலும், கிரிக்கெட் விளையாடுகின்ற நபர்களை கோடிக்கணக்கில் ஏலம் எடுத்து அவர்கள் மீது குதிரைப் பந்தயம் நடத்தும் கார்ப்பரேட் முதலாளிகளாலும் கட்டமைக்கப்படுகிறது.

இந்த பணம் புழங்கும் சூதாட்டத்தில் சட்டவிரோதமாக புக்கிகள் மூலம் லாபம் ஈட்டுவது, உள் நாட்டில் மாநிலங்களின் பெயரில் அல்லது வெவ்வேறு பெயர்களில் அணிகளை உருவாக்கிக் கொள்வது, நாடுகளுக்கு இடையில் அணிகளை உருவாக்கி போட்டி நடத்தி அதனை லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களிடம் கொண்டு சென்று கோடிக்கணக்கான ரூபாய் சுருட்டுவது என்பதை விளையாட்டு என்ற பெயரிலான சூதாட்டமாக நடத்தி வருகின்றனர்.

இந்த மையமான உண்மையை புரிந்து கொள்ளாத அப்பாவிகளான அல்லது ஏமாளிகளான கிரிக்கெட் ரசிகர்கள் விளையாட்டை போர் நடப்பது போல கருதி கொள்வதும், பிற நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் நாட்டின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டது போல கருதிக் கொண்டு கூச்சலிடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இதிலும் கேடுகெட்ட முறையில் குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி ஃபெவிலியனுக்கு திரும்பும் போது கிரிக்கெட் ரசிகர்கள் என்ற போர்வையில் அமர்ந்திருந்த பாஜகவின் குண்டர் படையினர் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டுள்ளனர், பின்னர் இதுவே வெறி கூச்சலாகி மீண்டும், மீண்டும் எதிரொலித்துள்ளது.

ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கமிடுவது சரியா என்று கேட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மைதானத்திற்குள் தொழுகை நடத்தும் போது, “இந்து பக்தர்கள் மற்றும் ரசிகர்கள்” தனது இந்திய அணியை ஊக்குவிக்க ஜெய் ஸ்ரீ ராம் என்று கூச்சலிடுவது சரிதான் என்று வாதிடுகின்றனர் சங் பரிவார மூடர்கள்.

கருணையே வடிவானவர் என்று சித்தரிக்கப்படும் ராமரின் பெயரால் கலவரங்களை தொடங்கியது இன்று, நேற்று அல்ல! ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக பார்ப்பன இந்து மதவெறி கலவர கும்பல் ராமனின் பெயரை உச்சரித்து வந்தாலும், அதன் உச்சகட்டமாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் குண்டர் படைகள் ஒன்றிணைந்து அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து தள்ளிய போது துவங்கியது இந்த கலவரங்களுக்கான முழக்கமான “ஜெய் ஸ்ரீ ராம்”!

1992 முதல் தற்போதைய கிரிக்கெட் மைதானத்தில் கூச்சல் போட்டது வரை நாடு முழுவதும் உள்ள நான்கு திசைகளிலும் நடந்த வெவ்வேறு சம்பவங்களை முதலாளித்துவ ஊடகங்களில் இருந்து எடுத்துக்காட்டிற்கு சிலது என்ற வகையில் வரிசைப்படுத்தி இருக்கிறோம்.

டிசம்பர் 1992 இல் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட்ட கும்பல் வடக்கு நகரத்தின் மீது அணிவகுத்து 16 ஆம் நூற்றாண்டின் பாபர் மசூதியை இடித்தது.

கிழக்கு நகரமான கொல்கத்தாவில், மதரஸாவில் (மத செமினரி) 26 வயதான ஹபீஸ் முகமது சாருக் ஹல்தார் என்பவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட்டுக் கொண்டிருந்த ஒரு குழுவினரால் தாக்கப்பட்டார். அவரையும் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்குமாறு கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்தியாவின் தொழில்துறை மற்றும் வர்த்தக தலைநகர் மும்பையில், 25 வயது முஸ்லீம் டாக்ஸி ஓட்டுநர் ஃபைசல் உஸ்மான் கான் தனது டாக்சி  பழுதடைந்ததால் அதை சரிசெய்ய முயற்சித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட ராம பக்தர்கள் .“ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடச் சொன்னார்கள். கடுமையாக தாக்கினார்கள்.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் உள்ள பார்பெட்டா மாவட்டத்தில், முஸ்லிம் இளைஞர்கள் குழு ஒன்று, , “ஜெய் ஸ்ரீராம்”, “பாரத் மாதா கி ஜெய்” (இந்தியா தாய் வாழ்க) மற்றும் “பாகிஸ்தான் முர்தாபாத்” போன்ற கோஷங்களை எழுப்பிக் கொண்டே தாக்குதலில் இறங்கிய ஆர்எஸ்எஸ் குண்டர் படையால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 24 வயதான தப்ரேஸ் அன்சாரி தனது உயிருக்காக மன்றாடிக் கொண்டு, அவர் முகத்தில் இருந்து ரத்தமும், கண்களில் இருந்து கண்ணீரும் வெளிவந்து துடித்த போதும் அவரைத் தாக்குபவர்கள் அவரை “ஜெய் ஸ்ரீராம்” என்று திரும்பத் திரும்பக் கூறும்படி வற்புறுத்துகின்றனர். கடுமையாக தாக்கப்பட்டதால் சில மணி நேரம் கழித்து அவர் இறந்து போனார்.

அடையாளம் தெரியாத ராணுவ வீரர்கள் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், கிராமப் பகுதியில் உள்ள  ஒரு மசூதிக்குள் புகுந்த மிலிட்டரி காவிகள், ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை ஜூன் 17 அன்று முதன்முறையாக கூடியபோது, முஸ்லிம் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதவியேற்க எழுந்து நின்றபோது, பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) உறுப்பினர்களால் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூச்சலிட நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

ஆர் எஸ் எஸ் பாஜகவின் குண்டர் படையினரான பஜ்ரங் தனம், விஷ்வ ஹிந்து பரிஷத், சனாதன் சன்ஸ்தான், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் மதச்சிறுபான்மையினர் மீதும் தலித்துகள் மீதும் நாத்திகர்களில் மீதும் தாக்குதல் நடத்தும் போது ஜெய்ஸ்ரீராம் என்று கூச்சலிடுகின்றனர். தாக்கப்படுபவர்களை ஜெய்ஸ்ரீராம் என்றும் முழங்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இவை அனைத்தும் சமூக ஊடகங்களிலும் நாளேடுகளிலும் பிபிசி உள்ளிட்ட ஊடகங்களிலும் வெளியாகி நாறிக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:

ஆனால் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழங்குவது தனது உரிமை என்று வெறி கூச்சலிடுகின்றன காவி பாசிச குண்டர் படை. தனது நம்பிக்கை என்ற பெயரில் ராமனின் பெயரால் நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது வெறும் கண்டனங்களால் நிறுத்தப்பட முடியாது.

பயிற்றுவிக்கப்பட்ட குண்டர் படையை எதிர்கொள்ள பொருத்தமான வழிமுறைகளை கையாண்டு வீதிகளில் முறியடிப்பதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது.

பார்ப்பன (இந்து) மதத்தின் கொடுங்கோன்மையிலிருந்து விடுதலை! அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் மறுகாலனியாக்க கொடூரங்களில் விடுதலை!  கார்ப்பரேட்- காவி பாசித்திலிருந்து விடுதலை! என்ற விடுதலை உணர்வை நாடு தழுவியதாக மாற்றுவோம். முழக்கத்தை தேசிய முழக்கமாக்குவோம் “ஜெய் ஆசாதி” – “ஓங்கட்டும் விடுதலை உணர்வு” என்று முழங்குவோம்.

  • சண்.வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here