மகாராஷ்டிராவில் இந்தி் திணிப்பு தொடர்பான சர்ச்சை மீண்டும் மொழி பிரச்சினையை தேசிய விவாதத்தின் மையப் புள்ளிக்கு கொண்டு வந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக்கும் உத்தரவை பிறப்பித்தது. இந்த நடவடிக்கை சகோதரர்களான ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் சந்தித்தது, அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் அது விரைவாக திரும்பப் பெறப்பட்டது.
ஆனால் இந்த சம்பவம் மகாராஷ்டிராவைத் தாண்டி, குறிப்பாக இந்தி அதிகமாக பேசப்படுவதாக கருதப்படும் பகுதிகளில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில், இந்தி ஆதரவாளர்கள் பலர், பள்ளிகளில் இந்தி நிராகரிக்கப்பட்டதற்கும், மும்பையில் இந்தி பேசுபவர்களை மராத்தியர்கள் புறக்கணிப்பதாகவும், இந்தி பேசுபவர்கள் உடல் ரீதியாக தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளுக்கும் மராத்தியர்களின் மீது குற்றம்சாட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இது மறுபடியும் ”யாரும்-யாரையும் ஒரு மொழியைப் பேச கட்டாயப்படுத்தவோ அல்லது ஒரு மொழியைப் பேசுவதைத் தடுக்கவோ கூடாது.” என்ற பிரபலமான வாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது: இருப்பினும், இச்சமயம் இந்திக்கு ஆதரவாக உரிமைக்குரல் கொடுப்பவர்கள், இதற்கு முன்பு பல்வேறு சமயங்களில் அதிகாரத்துவத்தின் மூலமும் அரசுக் கொள்கைகள் மூலமும், கலாச்சார ஆதிக்கத்தின் மூலமும் பல்வேறு இடங்களில் இந்தி திணிக்கப்படும்போது பெரும்பாலும் அமைதியாக இருந்தவர்கள் தான். அவர்கள் இந்தி மொழி-“இந்தி அல்லாத” இந்தியர்களை தேசிய நீரோட்டத்தில் ஒருங்கிணைக்கும் பிணைப்பு கருவி என்றும் வாதிடுகிறார்கள். அது மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக இருந்ததால் கூட இந்தியை அவசியமானதாக தாங்கள் கருதுவதை போல் மற்றவர்களும் கருத வேண்டும் என்று எண்ணுகிறார்கள், இந்தியை சிக்கலாக கருதி எதிர்ப்பவர்கள் அதனை கசப்பாக இருந்தாலும் நன்மை பயக்கும் மருந்தாக எண்ணி ஏற்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அதே சமயம், கர்நாடக மாநில அரசு தனது மாநிலத்தில் – மத்திய பாடதிட்டங்களுடன் இயங்கும் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளும் கன்னடத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை கடுமையாக எதிர்க்கின்றனர். இந்தி பேசப்படாத மற்ற மொழிப் பகுதிகளில் இந்தி கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள், கர்நாடகாவில் கன்னடம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றால் எதிர்க்கிறார்களே இது ஏன்? இந்தியாவில் வாழ இந்தி அவசியம் என்றால், பெங்களூருவில் வாழ கன்னடம் அவசியமில்லையா?
மராத்தி பேசாததற்காக மற்றவர்களைத் தாக்குபவர்கள் அந்த மொழியின் மீது தீரா பற்றுகொண்டவர்களோ… பாதுகாவலர்களோ… அல்ல என்பதை நாம் இங்கே தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். அவர்கள் தங்களின் அரசியல் இலாபத்திற்காக மராத்தி பற்றை வெறும் ஆயுதமாக பயன்படுத்தும் பெரும்பான்மைவாத அரசியலின் முகவர்கள். உண்மையில், இந்திக்கு ஆதரவாக உரத்த குரலில் பேசுபவர்களுக்கும் இது பொருந்தும். அவர்களின் ஆதரவு என்பது இந்தியின் இலக்கிய மரபிற்கோ அல்லது மொழியியல் செழுமைக்கோ அல்ல, மாறாக அவர்களின் அரசியல் திட்டத்திற்கு இந்தி ஒரு கருவியாக பயன்படுகிறது, மற்றபடி எதுவுமில்லை.
மொழியின் பெயரால் வன்முறைகள் நிகழும்போது, பிரச்சினை இங்கு வெறும் மொழியியல் சார்ந்ததாக சுருக்கிப் பார்க்கப்படுகிறது. உண்மையில் அது அதிகாரப் பிரச்சினையாகவும், மாற்று மொழி மற்றும் கலாச்சாரம் கொண்ட மக்களின் மீது தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இதுபோன்ற வன்முறை ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டு செயலாக இருக்கும்போது, மொழி,மாநில கட்டுப்பாடு மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஒரு கேடயமாக மாறுகிறது.
“நாங்கள் எங்கள் மொழியை யார் மீதும் திணித்ததில்லை” என்ற கூற்றை முன்வைக்கும் இந்தி ஆதரவாளர்கள் டெல்லி, பாட்னா அல்லது வாரணாசி போன்ற நகரங்களில் இந்தி பேசாத தமிழர்கள், மலையாளிகள், மணிப்பூரிகள் ஆகியோர்-சமூக கட்டாயத்தால் தங்கள் அன்றாட வாழ்க்கையின் தேவையையொட்டி பேச்சு வழக்கில் சமாளிக்கும் அளவிற்கோ அல்லது சரளமாக பேசுமளவிற்கும் கூட இந்தி பேச பழகியிருக்கிறார்கள். தங்களின் குழந்தைகளுக்கு பள்ளியின் மூலம் இந்தியை கற்றுக்கொடுக்கிறார்கள் என்ற வாழ்க்கையின் எதார்த்தத்தை வசதியாக மறந்துவிகிறார்கள்.
ஆனால் இதே தர்க்கத்தை தலைகீழாக எப்படி பொருத்தி பார்க்க முடியும்? தமிழ்நாடு அல்லது கர்நாடகாவில் வசிப்பவர்கள் இதே போன்று தங்கள் தாய்மொழியை விட்டு இந்தி கற்றுகொள்ள வேண்டும் என்று எப்படி வாதிட முடியும்? இந்தி ஒருவரை “முழு இந்தியராக” ஆக்குகிறது என்ற கூற்று அடிபடையிலேயே தவறானது . இந்தி பேசுவது அல்லது தெரிந்துகொள்வது ஆழமான இந்தியத்தன்மையை அளிக்கிறதா? இந்தி பேசுபவர்களே முழுமையான இந்தியர்கள் என்றால் தமிழ்,மராத்தி, அசாமி அல்லது பெங்காலி பேசுபவர்கள் எல்லம் முழுமையான இந்தியர்கள் இல்லையா?
இந்தி மொழி மட்டுமே இந்தியாவை ஒன்றிணைக்கும் என்ற கட்டுக்கதை நீண்ட காலத்திற்கு முன்பே காலாவதியாகிவிட்டது. நடைமுறையில் இன்று, பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆங்கிலம் தொடர்பு மொழியாக செயல்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பொது வாழ்க்கைக்கு இந்தி அவசியம் என்று வாதிடுபவர்களிடம் “இந்தி எந்த வகையில் அவசியம்?” என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு அல்லது கர்நாடகாவில் இந்தி மொழி (திணிப்பு) எதிர்கொள்ளும் எதிர்ப்பைப் பார்த்து இந்தி ஆதரவாளர்கள் பெரும்பாலும் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்கள். மக்கள் ஏன் இந்தியை இவ்வளவு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள்? இந்திவாலாக்கள் பிராந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏன் மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒவ்வொரு இந்தியரும் இந்தி பேசுபவருடன் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில், இந்தி கற்கும் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே அவர்கள் கனவு காண்கிறார்கள்.
படிக்க:
♦ ஒட்டாண்டி நிலையினை நோக்கி இந்தியாவினை உந்தித் தள்ளும் இந்துத்துவா!
♦ இந்துமதமும்! இந்துத்துவாவும் ஒன்றல்ல!
பெங்களூருவில் ஒரு வங்கி ஊழியர், வாடிக்கையாளரிடம் இந்தியில் மட்டுமே பேசுவேன் என்று வாதிடுவது போன்ற ஒரு வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் பொதுமக்களை நேரடியாகப் பார்த்து வந்த மருத்துவர்கள், எழுத்தாளர்கள், கடைக்காரர்கள் என அனைவரும் உள்ளூர் மொழியைக் கற்றுக்கொண்டனர். இன்றோ “நாங்கள் கன்னடம் பேச கற்றுக்கொள்ள அவசியமில்லை. நீங்கள்தான் இந்தியைப் பேச பழக வேண்டும்” என்ற திணிப்பு எண்ணம் மேலோங்கியுள்ளது.
இந்த மனநிலைக்கு பின்னால் என்ன இருக்கிறது?
இந்தி பேசுபவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் எண்ணிக்கையின் பலத்தால் நாட்டையே சொந்தமாக்கிக் கொண்டதாக நம்புகிறார்களா? குடியரசில் மற்றவர்களுக்கு இருக்கும் சட்டபூர்வ உரிமைகளைவிட தங்களுக்கு அதிக உரிமை இருப்பதாக கருதுகிறார்களா? டெல்லி தலைநகராக உல்ளதால் மொத்த இந்தியாவின் பகுதிகள் அனைத்தையும் அவர்களின் சொந்த நாடாக கருதுகிறார்களா? அதனால்தான் மும்பைவாசிகள் இந்தி பேச வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதே வேளையில், மும்பையில் மராத்தியைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா?
இந்தி சினிமாவின் ஊற்றூக்கண்ணான மும்பையில் கூட இந்திக்கு எதிர்ப்பு இருக்கிறதே ஏன்? ஏனென்றால் இந்தி இயல்பாக ஆரோக்கியமான முறையில் பரவலாகவில்லை. அது இயல்பாக அரவணைப்புக்கு, மாறாக அரசின் நிதியுதவியாலும், அதிகாரப்பூர்வ ஆணைகள், பொது நிதி மற்றும் கொள்கை ஊக்கத்தொகைகள் மூலமும் பயணிக்கிறது. பெரும்பான்மை பலத்தால் பாராளுமன்றத்திலும் அதிகாரத்துவத்திலும் அது ஊக்குவிக்கப்படுகிறது.
வேறு எந்த இந்திய மொழிக்கும் இதே போன்று அரசு நிறுவனங்களின் ஆதரவு இல்லை. இந்திய தூதரகங்களில், இந்தியை ஊக்குவிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். அரசாங்க வேலைவாய்ப்புகளில் மற்றவர்களை விட இந்தி மொழிபெயர்ப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தேவையற்ற இடங்கள் மற்றும் நிறுவனங்களில் கூட அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு மொழியாக இந்தி திணிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் மொழியாக இந்தியை மாற்றுவதற்கு பெருமளவில் நிதி ஒதுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ், வங்காள மொழி, மலையாளம் பேசுபவர்கள் இதைப் புரிந்துகொண்டு அதன் பின்னணியில் உள்ள அரசியலைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களும் இந்தக் குடியரசின் குடிமக்களே. அவர்களுக்கும் தங்கள் கலாச்சாரத்திற்கும் கண்ணியத்திற்கும் மாநில வளங்களுக்கும் உரிமையுடையவர்களே. ஆனால் மத்திய அரசு மற்ற மொழிகளைக் காட்டிலும் இந்திக்கு அதிக சலுகைகளை அளிக்கிறது.
ஏன் ஒருவர் இந்தி கற்க வேண்டும்? அது உலகளாவிய அறிவின் களஞ்சியமா? உலக இலக்கியத்திற்கான நுழைவாயிலா? இந்தக் காரணங்களுக்காக ஒரு தமிழ்ப் பேச்சாளர் இந்தி மீது ஈர்க்கப்படுவாரா? நிச்சயமாக இல்லை. நாட்டின் பல மொழிகளுக்கு இந்தி ஒரு பாலமாகவும் இல்லை. சாகித்ய அகாடமி, தேசிய புத்தக அறக்கட்டளை ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் அரிதாகவே உள்ளதோடு பெரும்பாலும் படைப்பு இலக்கியத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இந்தப் படைப்புகளில் பெரும்பாலானவை ஏற்கனவே ஆங்கிலத்தில் பரவலாக அணுகக்கூடியவை. ஆகையால், இந்தியை விருப்ப மொழியாக பார்க்கலாமே தவிர, அவசியமானதாக கருத முடியாது.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான பயிற்று மொழியாக இந்தியை அறிமுகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தியின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்ற மாயையை பாஜக தொடர்ந்து ஊட்டி வருவது துரதிர்ஷ்டவசமானது. இந்த முயற்சிகள் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் அவற்றை நிராகரித்தபோது அமைதியாக கைவிடப்பட்டன. ஆனாலும், இந்தக் கொள்கைகளைப் பற்றிக் தொடர்ந்து பெருமை பேசி, இந்தி பேசுபவர்களை தவறாக வழிநடத்தி, அவர்களுக்கு மொழியியல் பெருமை என்ற தவறான உணர்வை பா.ஜ.க வினர் கொடுத்து வருகின்றனர்.
இன்று, இந்தி தனது இலக்கிய வலிமைக்காகவோ அல்லது கலாச்சார வலிமைக்காகவோ முக்கியமான மொழியாக முன்னிறுத்தப்படவில்லை, மாறாக அரசியல்வலிமையால் முன்னிறுத்தப்படுகிறது. அதற்காகவே அதற்கு எதிர்ப்பும் பலமாக இருக்கிறது. இந்தி அல்லாத மாநிலங்களின் அரசியல்வாதிகள்தான் இந்தியை எதிர்க்கிறார்கள், அதே நேரத்தில் மக்கள் அதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்று இந்திவாலாக்கள் அடிக்கடி கூறுகிறார்கள். அது உண்மைதான்.
ஒரு மொழியாக இந்திக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் வட இந்தியர்களின் பெரும்பான்மைவாத அரசியலின் விரிவாக்கத்திற்கான கருவியாக இந்தியை பயன்படுத்த முனையும்போது அது எதிர்ப்புக்குள்ளாகிறது.
இந்துத்துவா திட்டத்திற்கு இந்தி மிக முக்கியமானது. இந்துத்துவாவின் சித்தாந்தவாதிகள், அவர்களில் பெரும்பாலோர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள், ஏன் இந்தியை தங்கள் அதிகார மொழியாகத் தேர்வு செய்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும்? அவர்கள் கலாச்சார பலத்திற்காக இந்தியை தேர்வு செய்யவில்லை. மக்கள்தொகை பலத்திற்காக தேர்வு செய்தனர்.
இந்தி பெல்ட் எனப்படுவது இந்தி மொழி பேசும் பெரும்பான்மை மக்கள் கொண்ட மிகப்பெரிய பகுதி என கற்பனை செய்யப்படும் இடம் ஆகும். இங்கே, இந்துத்துவா அதன் எண்களின் வலிமையை உருவாக்குகிறது. இந்த எண் எவ்வாறு புனையப்படுகிறது? இந்தியை தங்கள் தாய்மொழியாக அடையாளப்படுத்துபவர்கள் பெரும்பாலும் போஜ்புரி அல்லது மைதிலி அல்லது பஜ்ஜிகா மொழியை தாய்மொழியாக கொண்டவர்களாக இருப்பார்கள். இந்தி அவர்களின் முதல் மொழி அல்ல. ஆனால் அவர்களெல்லாம் இந்தி பேசுபவர்களாகக் கணக்கிடப்படுகிறார்கள், இது இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
இந்தியா-பாக் பிரிவினை காலத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு, உருது மொழி பேசுபவர்கள் இந்தியை தங்கள் தாய்மொழியாக எப்படி ஏற்றுக்கொண்டனர் என்பது தெரிந்திருக்கும். இந்திக்கு ஆதரவாகவும் உருதுவுக்கு எதிராகவும் உருது மொழியில் நடத்தப்பட்ட போராட்டம் அது. இது இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகவே செய்யப்பட்டது. இந்த அர்த்தத்தில், இந்தி என்பது ஒரு மொழி அல்ல, மாறாக பெரும்பான்மை அரசியலின் ஒரு கருவியாக செயல்படுவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மூன்று வருடங்களுக்கு முன்பு, ஜபல்பூரைச் சேர்ந்த ஒரு வங்காள நண்பர் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைப் பற்றி என்னிடம் கூறினார். ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் மூத்த தலைவர் – அவரும் ஒரு வங்காளி – வங்காளிகள் கூட்டத்தில் இந்தியில் துணிச்சலாகவும், ஆணவமான உடல்மொழியுடனும் உரையாற்றினார். அதற்கு அவர் கூறிய காரணம்: வங்காளிகள், முதலில் உத்தரபிரதேசத்தின் கன்னோஜில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்று அவர் கூறினார், எனவே இந்தியே அவர்களின் உண்மையான மொழி என்றும் அவர்கள் அதை தங்கள் மொழியாக ஏற்றுக்கொண்டு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வங்காளத்தில் ஆர்எஸ்எஸ் முழக்கத்தின் பின்னணியில் உள்ள தர்க்கம் இதுதான்: “துர்கா வேண்டாம், காளி வேண்டாம்; ராமர் மற்றும் பஜ்ரங்க்பலி மட்டுமே.”
துர்க்கைக்கு மாற்றாக ராமனை முன்னிறுத்துவது என்பது வட இந்தியாவை மையமாகக் கொண்ட இந்தி சார்ந்த இந்துத்துவா அடையாளத்தை வங்காள கலாச்சார அடையாளத்தின் மீது மேலிழுதி திரிக்கும் செயலாகும். அதேபோல், கேரளாவில் பாலி மீது வாமன தெய்வத்தை உயர்த்துவது, திராவிட சிந்த்னை மற்றும் மலையாள கலாச்சாரத்தின் மீது சமஸ்கிருத, வட இந்திய ஒழுங்கைத் திணிக்கும் முயற்சியைக் குறிக்கிறது.
இந்த இந்தி அரசியல் திட்டம் குறித்து மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்: இன்று ஊக்குவிக்கப்படும் இந்தி காந்தி, பிரேம்சந்த், மகாதேவி வர்மா, முக்திபோத், அக்யேயா அல்லது ஓம்பிரகாஷ் வால்மீகி போன்ற எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் இந்தி அல்ல. உருதுவை ஏற்றுக்கொண்ட ஒத்திசைவான இந்தி அல்ல. இன்று காணப்படுவது அரசியல் நோக்க்கில் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பதிப்பாகும், இது “அன்னிய” சொற்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு, இந்துக்களுக்கான மொழியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் அரசியல் விஞ்ஞானி சுஹாஸ் பால்ஷிகர் இது அபாயகரமான, ஆயுதம் ஏந்திய இந்தி, இந்துத்துவாவின் இந்தி என்று எச்சரிக்கிறார் மேலும் ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்கள், இந்துத்துவாவுடன் தொடர்ந்து இணைந்தால், விரைவில் இந்த இந்தி வலையில் சிக்கிக் கொள்வார்கள் என்றும் எச்சரிக்கிறார்.
இந்துத்துவாவும் இந்தி மொழியும் இனி பிரிக்க முடியாதவை. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஏன் இந்தியை ஆதரிக்க வேண்டும், அல்லது ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் தெலுங்கு மாநிலத்தில் இந்தியை ஏன் ஆதரிக்க வேண்டும்? பதில் தெளிவாக உள்ளது: இருவரும் இந்துத்துவா அரசியலின் தூதர்கள், இந்தி இப்போது அதன் அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறது.
இந்தி பேசுபவர்களும் இந்த சங்கடமான உண்மையை எதிர்கொண்டாக வேண்டும். அவர்களுக்காகவும், இந்திக்காகவும், இப்போது இந்தியின் பெயரில் முன்னிறுத்தப்படும் சித்தாந்தத்திலிருந்து தங்கள் மொழியைப் பிரித்தெடுக்கும் கடினமான பணியை அவர்கள் தொடங்க வேண்டும்.
இது விரைவாக நிகழ்ந்தால் இந்திக்கும்-இந்திய குடியரசிற்கும் அது நல்லது.
இக்கட்டுரையை எழுதியுள்ள அபூர்வானந்த் அவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்தி கற்பிக்கும் இந்தி பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொழியாக்கம்: தாமோதரன்






