
மதுரை மாவட்டத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோவிலும், மலையின் மேலே சிக்கந்தர் தர்காவும் அமையப்பெற்று பல ஆண்டுகாலமாக அமைதியான முறையில் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
வழிபாட்டு முறைகளிலும் பழக்கவழக்கங்களிலும் அரசு தலையிடக்கூடாது என்று வெறிக் கூச்சல் போடுகின்ற பாசிச ஆர்.எஸ்.எஸ் – பாஜக மற்றும் இந்து முன்னணி குண்டர் படை இந்த உரிமை பார்ப்பன (இந்து) மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உள்ளது என்று வெளிப்படையாகவே அறிவித்து செயல்படுகிறார்கள்.
பாசிச ஆர்.எஸ்.எஸ் – பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்வதற்கும் அவர்களின் மத வழிபாட்டுத்தலங்கள் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதற்கும் நெருக்கமான உறவு உள்ளது.
இந்த வரிசையில் திருப்பரங்குன்றத்தில் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவை சென்று வழிபடுவதற்கும் அவர்கள் விரும்பிய வழியில் அதாவது ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபடுவதற்கும் இந்து மத வெறியர்கள் அனுமதி மறுக்கின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன?
கடந்த மாதம் சிக்கந்தர் தர்காவில் கந்தூரி நடத்த ஆடு, சேவலுடன் சென்றவர் தடுத்து நிறுத்தப்பட்டார். மலை மீது உயிர்ப்பலி கொடுக்க தடை விதிக்கப்பட்டதாக போலீசார் கூறியதால், இஸ்லாமியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இந்து முன்னணி அமைப்பு அதன் மாநில தலைவரான காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் போராடப் போவதாகவும் மலை மீது தீபத்தூண் ஏற்ற போவதாகவும் அறிவித்து வந்தனர்.
இதற்கு பிரிட்டன் ஆட்சி காலத்தில் இந்த மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக புதிதாக ஒரு பித்தலாட்டத்தை அவிழ்த்து விட்டு உள்ளனர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த ஆண்டு சிக்கந்தர் தர்கா வழிபாட்டை முற்றாக தடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் சந்தனக்கூடு திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 17-ம் தேதி இரவு சந்தனக்கூடு வைபவம் நடைபெற்றது.
அதையொட்டி, ஜனவரி 18-ம் தேதி காலை ஆடு, கோழிகள் பலி கொடுத்து கந்தூரி விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு கிராம மக்கள் என்ற போர்வையில் சாதி வெறியர்களும் இந்து அமைப்புகள் என்ற போர்வையில் இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ் குண்டர் படையினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடையை எதிர்த்து போராடுவதற்கு முயற்சி செய்த இஸ்லாமிய அமைப்புகள் மீது கலவரத்தை தூண்டுவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னொரு புறம் திருப்பரங்குன்றம் மலை மீது தீப தூண் விளக்கு ஏற்ற போவதாக கிளம்பிய காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்ட கும்பல் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
படிக்க: ♦ இந்துக்களே எச்சரிக்கை! இந்து முன்னணி காலிகள் வருகிறார்கள் எச்சரிக்கை!
கவனியுங்கள்! இதே மாவட்டத்தில் மேலூர் மற்றும் அரிட்டாப்பட்டி பகுதிகளில் கொண்டுவரப்பட இருக்கின்ற டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் கும்பலோ அல்லது இந்து முன்னணி அமைப்போ நேரடியாக எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை.
“மீனாட்சிபுரம் ஓவா மலை தமிழிக் கல்வெட்டு சமணர் கற்படுக்கைகள் கொண்ட குகைத் தளமும், அரிட்டாபட்டி கழிஞ்சமலை தமிழிக் கல்வெட்டு சமணர் கற்படுக்கைகள் கொண்ட குகைத் தளமும் மகாவீரர் சிற்பமும், முற்கால பாண்டியர் குடைவரை சிவன் கோயிலும் Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளரிபட்டி – நரசிங்கம்பட்டி – பெருமாள்பட்டி – அரிட்டாபட்டி – மீனாட்சிபுரம் ஆகிய ஊர்களுக்கு இடையில் பெருமாள்மலை வனப்பகுதி அமைந்துள்ளது. சுமார் 5.5 கி.மீ நீளமும் ஆயிரம் ஏக்கர் பரப்பளவும் கொண்ட பெருமாள்மலை – புள்ளிமான், மிளா மான், தேவாங்கு, காட்டு பூனை, மரநாய் உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகளின் வாழிடமாக பெருமாள்மலை விளங்குகிறது. பெருமாள்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் மேற்குச் சரிவும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பகுதிக்குள் வருகிறது” என்று முன்வைக்கிறது பூவுலகின் நண்பர்களின் அறிக்கை.
படிக்க: ♦ மதுரை மேலூரில் கனிமவளக் கொள்ளைக்குத் திட்டமிடும் கார்ப்பரேட் வேதாந்தாவை விரட்டியடிப்போம்!
ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்ற உயிரி பன்மயம் நிறைந்துள்ள, வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் ஆய்வுக்குரிய பகுதிகள் அமைந்திருக்கின்ற, இதற்கும் மேலாக பல்வேறு நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள இப்பகுதியை காவு கொடுப்பதற்கு எதிராக காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையிலான இந்து முன்னணி கும்பல் பொங்கி எழவில்லை.
ஆனால் திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் விரும்பிய அடிப்படையில் வழிபடுவதற்கு தடைவிதிக்கப்படுவது மட்டுமின்றி திருப்பரங்குன்றம் இந்துக்களின் மலை, அறுபடை வீடுகளில் ஒன்று என்று இந்து பக்தர்களை ஈர்க்கின்ற வகையில் இந்து முன்னணி வெறியாட்டத்தை போடுகிறது.

இந்து முன்னணி என்ற அமைப்பும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக உள்ளிட்ட சங்பரிவார கும்பலும் பார்ப்பனக் கும்பலின் மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும், பார்ப்பனக் கும்பலின் வாழ்வியல் மற்றும் நலன்களை முன்னிறுத்தி போராடுபவர்கள்தான் என்பதையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராக சுண்டுவிரலையும் அசைக்க மாட்டார்கள் என்பதை திருப்பரங்குன்றம் போராட்டம் நமக்கு பட்டவர்தனமாக அறிவித்துவிட்டது.
இனியும் இந்து முன்னணி என்ற பெயரில் பார்ப்பன முன்னணி நடமாடுவதை அனுமதிக்க கூடாது. கருப்பு பார்ப்பனர்களான காடேஸ்வரா சுப்பிரமணியம், கருப்பு முருகானந்தம் போன்றவர்கள் வேண்டுமானால் பார்ப்பன அடிமைகளாக இருந்து விட்டுப் போகட்டும். நாம் தன்மானம் உள்ள மனிதர்களாக வாழ்வோம்.
மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் சிக்கந்தர் தர்கா உள்ளிட்டு வழிபாட்டு உரிமையை ஒழித்துக் கட்டுகின்ற முயற்சிகளுக்கு முடிவு கட்டுவோம்.
- கரட்டுப்பட்டியான்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி