ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்து ராஷ்ட்ர நிகழ்ச்சி நிரல், பல வழிமுறைகள் மூலம் கதைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பண்டிகைகள் அதன் நிகழ்ச்சி நிரலை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களாக இருந்துள்ளன. மேலும், ‘சமூக அரசியல் செய்திக்காக’ சில தெய்வங்களை முன்னிலைப்படுத்துவது அரசியல் அரங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற கும்பமேளா ஒரு மெகா காட்சியாக இருந்தது. ஆம்! இது ஒரு மதக் கூட்டத்தை விட, இது ஒரு தேசிய நிகழ்வாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டன. இந்த ஆண்டு கும்பமேளாவில், கலாச்சார மற்றும் மேம்பாட்டு கண்காட்சியாக மட்டுமில்லாமல், அதனை(மதத்தை) பெரும் சந்தைப்படுத்துதல் என்பது நிகழ்ந்துள்ளது. இது இந்து மதத்திற்கான “பூமியின் மிகப்பெரிய நிகழ்ச்சி” என்று பெயரிடப்பட்டது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பக்தர்களுக்கான தங்குமிடம், சுகாதாரம் மற்றும் போக்குவரத்தை ஏற்பாடு செய்வது அரசின் கட்டாயச் செயல்பாடாகும். ஒருபுறம், அரசு நிகழ்வாக ஏற்பாடு செய்யும் செயல்பாட்டில் முழுமையாக ஈடுபட்டிருந்தாலும், மற்றொருபுறம் மக்களுக்கான எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் இருந்ததும் மூடிமறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆளும் கட்சியின் கூட்டாளிகளான வி.எச்.பி, தர்ம சன்சாத்கள் (மத நாடாளுமன்றங்கள்) மற்றும் தனிப்பட்ட துறவிகள்/சாதுக்கள் இந்த சபையில் இந்து தேசியவாத நிகழ்ச்சி நிரலின் கூறுகள் மற்றும் ‘இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு’ ஆகியவற்றைப் பரப்புவதில் முன்னிலை வகித்தனர்.
கும்பமேளாவில் மத ஆன்மீக முக்கியத்துவம் பக்தர்களால் பெரிதும் பாராட்டப்பட்டாலும், இந்த முறை அதற்கு அரசியல் சாயம் பூசப்பட்டது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. கும்பமேளா ஏற்பாடு செய்யப்படுவது இது முதல்முறை அல்ல! ஆனால், இந்தமுறை இந்த நிகழ்வு இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை மேம்படுத்துவதற்கான களமாக மாறியது. கூட்டத்தை நிர்வகிப்பதில் மாநில அரசு போதுமானதாக இல்லாவிட்டாலும், பக்தர்களை வரவழைக்க பலவழிகளில் விளம்பரப்படுத்தி உள்ளது. இதற்கு கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கும்பமேளாவில் இஸ்லாமிய வியாபாரிகள் தங்கள் கடைகள் அமைப்பது மற்றும் வியாபாரம் செய்வதை புறக்கணித்துள்ளனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவையாவும் போலியானதே. குறிப்பாக, அவிமுக்தேஷ்வரானந்த் என்ற சாமியார் கூறும்போது ”இஸ்லாமியர்கள் உணவில் எச்சில் துப்புகின்றனர்; அதனாலேயே அவர்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்” என அப்பட்டமாக கூறியுள்ளான். இதுபோன்று பல தவறான வீடியோக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இஸ்லாமியர்கள் தங்கள் மசூதிகளைத் திறந்து, கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்தனர் என்பது வேறு விஷயம். முகலாய காலத்தில், பக்தர்களுக்கு மிகவும் வசதியாக கும்பமேளாவை நடத்துவதற்காக, பல படித்துறைகள் (குளிப்பதற்கு ஆற்றங்கரைகள்) மற்றும் கழிப்பறைகள் அவர்களால் கட்டப்பட்டன. கும்பமேளாவின் ஏற்பாடுகளைக் கவனிக்க அக்பர் தனது இரண்டு அதிகாரிகளை நியமித்திருந்தார் என்பதை வரலாற்றாசிரியர் ஹேராம்ப் சதுர்வேதி நினைவு கூறுகிறார்.
கும்பமேளா நடைபெறும் பகுதி முழுவதும் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தின் விளம்பரப் பலகைகளால் நிரம்பியிருந்தது. இந்தமுறை ஒரு பெரிய பகுதி வி.ஐ.பி -க்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, ஏராளமான பக்தர்கள் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி, போக்குவரத்து ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்தது என்பதற்கு புதுதில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏற்பட்ட மரணங்களே சாட்சி!
நரேந்திர மோடி தனது தம்பி என்று அழைக்கும் ஒரு புதுமுக சாமியார் தீரேந்திர சாஸ்திரி, ”கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் மோட்சத்தைப் பெற்றவர்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், ’புனித நீராடும்’ நீரில் E-Coli (மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா ஆகும். இது சில சமயங்களில் நோய்த்தொற்றையும் ஏற்படுத்தும் அபாயகரமானது) மற்றும் அதிக கழிவுகளுடன் தரம் குறைவாக காணப்பட்டது. நீரின் தரம் மற்றும் இறப்புகள் குறித்த அனைத்து விமர்சனங்களுக்கும், ”பன்றிகள் அழுக்கைப் பார்க்கின்றன; கழுகுகள் இறந்தவர்களை எண்ணுகின்றன” என்று நாக்கூசாமல் முதலமைச்சர் யோகி கருத்து தெரிவித்தார்!
படிக்க:
♦ திருப்பரங்குன்றத்தை கலவர குன்றாக்க முயலும் காவிகள்!
♦ ஒடிசா, தெலுங்கானாவில் கலவரத்தை தொடங்கியுள்ள பசுக் காவலர்கள்!
வி.எச்.பி தனது மார்க்தர்ஷக் மண்டல கூட்டங்களை காட்டிலும் இதனை ஒரு பொன்னான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தியது. ஏனெனில், அவர்களின் உரைகள் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாகவும், விஷம் நிறைந்தவையாகவும் அமைந்திருந்தது. மக்கள்தொகை அதிகரிப்பு, வங்கதேசத்திலிருந்து ஊடுருவுபவர்கள், பசு பாதுகாப்பு தொடர்பான இஸ்லாமியர்கள் பற்றிய வழக்கமான பிரச்சாரம் பல்வேறு கூட்டங்களில் குமட்டல் ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் பேசப்பட்டது. சாத்வி ரிதம்பரா, பிரவீன் தொகாடியா மற்றும் யதி நரசிங்கானந்த் சரஸ்வதி போன்ற வெறுப்பைப் பரப்புபவர்கள் இந்த் முறையும் இஸ்லாமியர்கள் பற்றி வெறுப்புடன் கூடிய தங்கள் உரையை நிகழ்த்த களமிறங்கினர். அவர்களின் பேச்சை கேட்க அதிக பார்வையாளர்கள் இருந்தனர். பா.ஜ.க தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு சாதுக்களை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதுமட்டுமின்றி, மாநில செலவிலேயே விளம்பரத்தையும் செய்துள்ளது.
காவி உடை அணிந்த ஒருவர், காசி மற்றும் மதுராவிற்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி, மொத்தம் 1860 கோயில்கள் ‘ஆராய்ச்சி’ செய்யப்பட்டுள்ளன என்றும், அவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், மதரஸாக்களை (இஸ்லாமிய மத கல்வியான அரபி சொல்லி கொடுக்கும் நிறுவனம்) மூடிவிட்டு, குருகுலங்களாக மாற்றுவதன் மூலம் ஒரு இந்து உலகத்தை உருவாக்க முடியும் என்றார்.
2024 இல் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில், இர்ஃபான் இன்ஜினியர் மற்றும் நேஹா தபாதே, மத விழாக்களை வன்முறையைத் தூண்டும் சந்தர்ப்பங்களாகப் பயன்படுத்துவதை குறிப்பிட்டதன்மூலம் நம் கவனத்தை ஈர்க்கிறார்கள். நமது பண்டிகைகள் மத எல்லைகளைத் தாண்டி, இனிமையான சமூக நிகழ்வுகளாக இருந்து வருகின்றன. ஆனால், தற்போது இந்து பண்டிகைகளின் போது ஒரு செயல்முறையை காவி கும்பல் செய்து வருகிறது. அவை, இஸ்லாமிய பகுதிகளைக் கடந்து செல்லும்போது மசூதியில் உள்ள பச்சைக் கொடியை காவி கொடியாக மாற்றுவது மற்றும் கையில் வாளுடன் நடனமாடுவது போன்ற போக்கை காண முடிகிறது. அதே நேரத்தில் இஸ்லாமியர்ளுக்கு எதிரான வெறுக்கத்தக்க முழக்கங்களும் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக இந்த புத்தகத்தில், 2022-2023 ஆம் ஆண்டில் ராம நவமி பண்டிகையை இந்த இரட்டை ஆசிரியர்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, ஹவுரா மற்றும் ஹூக்லி வன்முறை (2023), சம்பாஜி நகர் வன்முறை (2023), வதோதரா வன்முறை (2023), பீஹார்ஷரிஃப் மற்றும் சசாரம் வன்முறை 2023, கார்கோன் வன்முறை (2022), ஹிம்மத் நகர் மற்றும் கம்பாட் வன்முறை (2022) மற்றும் லோஹர்டகா வன்முறை (2022) பற்றியும் இந்த புத்தகத்தில் அம்பலபடுத்தியுள்ளனர்.
” ‘மத ஊர்வலம்’ என்று சொல்லிக்கொண்டு, ஆர்.எஸ்.எஸ்-வி.எச்.பி போன்ற இந்து தேசியவாதிகள் ஒரு சிறிய குழுவை திட்டமிட்டே சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள் வழியாகச் செல்ல வலியுறுத்தக்கூடும்; மேலும், சில இஸ்லாமிய இளைஞர்களை அரசியல் மற்றும் தவறான வரிகளைப் பயன்படுத்தி வன்முறை பாடல்கள் மற்றும் இசையை இசைக்கத் தூண்டக்கூடும்; இதன்மூலம், அவர்களை தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்தலாம். மீதமுள்ள சிறுபான்மையினரை பா.ஜ.க அரசு கைது செய்து, அவர்களின் வீடுகளையும் சொத்துக்களையும் சில நாட்களுக்குள் எந்த நீதித்துறை நடைமுறையும் இல்லாமல் இடித்துவிடும்” என்று இர்ஃபான் இன்ஜினியர் முடிக்கிறார்.
இன்னொரு மட்டத்தில், இந்த வலதுசாரிகள் ஆதிவாசி பகுதிகளில் ஷப்ரி மற்றும் ஹனுமான் என்ற தெய்வத்தை முன்னிருத்தினர். ஏனெனில், கடந்த மூன்று தசாப்தங்களாக(30 ஆண்டுகளாக) வனவாசி கல்யாண் ஆசிரமமும், விஸ்வ இந்து பரிஷத்தும் (ஆர்.எஸ்.எஸ்) இணைந்து ஆதிவாசி பகுதிகளில் கிறிஸ்தவ எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறையை தூண்டி, இந்தப் பகுதிகளில் அனுமான் மற்றும் ஷப்ரியை மக்கள் வழிபட தீவிர முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் உள்ள டாங்ஸ் அருகே ஷப்ரி கும்பமேளா நடைபெற்றது. இந்தப் பகுதிகளில் ஒரு ஷப்ரி கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அந்த கோயிலில் வி.எச்.பி -யின் சாமியார் அசீமானந்த் பணிபுரிந்து வந்தார். இந்த அசீமானந்த் தான் பின்னாளில் மாலேகான், அஜ்மீர் மற்றும் மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்புகளில் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்ப்பட்டார்.
மிகவும் சுவாரஸ்யமானது என்னவென்றால், நகரப் பகுதிகளில் துர்க்கை, லட்சுமி மற்றும் சரஸ்வதி இருக்க இந்தப் பகுதிகளில் மட்டும் ஏன் ஷப்ரி மற்றும் ஹனுமான் அழைத்துச் செல்லப்பட்டனர்? தனது இறைவனுக்கு (ராமருக்கு) படைக்க போதுமான உணவு இல்லாத ஏழைப் பெண் தான் ஷப்ரி. நகரப் பகுதிகளில் துர்க்கை, லட்சுமி மற்றும் சரஸ்வதியை வழிபடுவதற்கு வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. அதேபோல், ஆதிவாசிப் பகுதிகளில் கிறிஸ்தவ எதிர்ப்பை தூண்டி ஷப்ரி மற்றும் அனுமானை வேறுபடுத்தி காட்டவே ஆதிவாசிப் பகுதிகளில் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்து பண்டிகைகளில் இந்துத்துவா அரசியலின் தாக்கம் மற்றும் அரசியல் நிறைய பிரதிபலிக்கிறது. ஏனெனில், இதுபோன்ற பண்டிகை விழாக்களில் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்துவது அல்லது கும்பமேளாவில் இஸ்லாமிய எதிர்ப்புப் பேச்சுக்களுக்கு ஒரு களமாக மாற்றப்பட்டது அல்லது ஆதிவாசிப் பகுதிகளில் ஷப்ரி மற்றும் அனுமானை பிரபலப்படுத்துவது ஆகியவை நாம் அனைவரும் சிந்திக்கத் தக்கவை!
இந்தியாவில் பார்ப்பனிய மத கட்டமைப்பை பயன்படுத்திக்கொண்டு ஆண்டாண்டு காலமாக பிளவுவாத அரசியலில் ஈடுபட்டு வரும் இந்துத்துவ கும்பல் அவர்களால் கட்டமைக்கப்பட்ட பண்டிகைகளையும் மதவெறியை உருவாக்க பயன்படுத்திக் கொள்கிறது. வினாயகர் சதுர்த்தியை கலவரத்துக்காக பயன்படுத்தி வந்த சங்பரிவார் கும்பல் தற்போது தீபாவளி, ஹோலி, ராம நவமி, சங்கராந்தி, கும்பமேளா வரை மதவெறி பரப்ப பயன்படுத்திக் கொள்கிறது. இந்த பட்டியல் நீளவும் வாய்ப்புள்ளது. இதனை வேடிக்கை பார்க்காமல் மதவெறி பாசிச அரசை வீழ்த்த மதசார்பற்ற மக்களுக்கான ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதே தற்போது நம்முன் உள்ள ஒரே வழி.
மொழியாக்கம்: சிறகினி
https://countercurrents.org/2025/03/hindu-festivals-and-sectarian-nationalist-politics/