குள்ள மனோபாவம்! |கரிகாலன்

'ஊர்க் கட்டுப்பாடா? அப்படின்னா?' ஏதுமறியாது அப்பாவித்தனமாக கேட்கும் இக்குழந்தைகளின் வேரில் வெந்நீரை ஊற்றுகிறது கிராமத்தின் சாதி வெறி மனோபாவம் .

0
82

உடல் அமைப்பினால் குள்ளமான மனிதர்களைவிட கவிஞர் கரிகாலன் சொல்வது போல் சாதிய பிற்போக்குவாத, குள்ள மனோபாவ கொண்டவர்களே இந்த சமூகத்தின் இழுக்கு. அவர்களே இந்த நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்கள். சாதிய அழுக்கை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்காத சமூகத்தை உருவாக்க போராடுவோம்!

000

குள்ள மனோபாவம்!

‘ எல்லாரும் சமம்தானே டீச்சர்? ‘
என்ற குரலில் தென்பட்ட ஆதங்கம் அழியவில்லை.

‘எந்த கம்யூனிட்டியால பிரச்னைனு உனக்கு தெரியும்னு நெனக்கிறேன்!’ சாதிய வன்மம் நிறைந்த ஒரு பேராசிரியையின் குரலைக் கேட்டோம்.

நேற்று ஒரு காணொலியைப் பார்த்தேன். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலை அடுத்துள்ளது பாஞ்சாகுளம் கிராமம்.

இக்கிரமத்தில், பள்ளிக்கூடம் செல்லும் அப்பாவி தலித் சிறுவர்கள் சிலர். ஒரு பெட்டிக்கடையில் காசை நீட்டி மிட்டாய் கேட்கிறார்கள். ‘உங்களுக்கெல்லாம் மிட்டாய் கொடுக்க மாட்டோம். இது ஊர்க்கட்டுப்பாடு’ என்கிறார் கடைக்காரர். கடைக்காரர் மட்டுமல்லர். ஊர்த் தலைவராம் அவர் .

‘ஊர்க் கட்டுப்பாடா? அப்படின்னா?’
அந்த குழந்தைகள் அப்பாவித்தனமாகக் கேட்கிறார்கள்.

இந்தக் காணொலியை அந்தக் கடைக்காரரே இணையத்திலும்
சாதித் திமிரோடு பதிவேற்றுகிறார்.

அழுகையும் தாள முடியாத கோபமும் பொங்கி வந்தது. இது போன்ற சமயங்களில் கிராமத்தின் மீதும் அதன் சாதித்திமிர் மீதும் எரிச்சலாக வருகிறது.

நகரங்களின் சூப்பர் மார்க்கெட்டிலோ, பெருநகரங்களின் மால்களிலோ இப்படிப்பட்ட குரல்களைக் கேட்க முடியாது.

ஒரு ஆசிரியனாக இத்தகைய சம்பவங்களால் பெரிதாக வருத்தமடைகிறேன்.

இந்திய மாணவர்களை சாதித் தீண்டாமை உளவியல் ரீதியாக பாதிக்கிறது. இந்திய தலித் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், உயரக்குறைபாடுக்கும், இந்தத் தீண்டாமை முக்கியமான காரணமாக இருக்கிறது! என்று ஒரு ஆய்வுக் கட்டுரையில் படித்தது ஞாபகத்துக்கு வருகிறது.

சிறு வயதில் ஏற்படும் இந்த உயரக் குறைபாடு அக்குழந்தைகளது பதின்பருவத்திலும் தொடர்கிறது. தம்மீது திணிக்கப்படும் தீண்டாமையால்
அளவற்ற தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகின்றனர் பள்ளிக் குழந்தைகள்.

ஸ்காலர்ஷிப்புக்காகவோ எதற்காகவோ, ‘SC மாணவர்கள் எழுந்து நில்லுங்கள்’ என்று வகுப்பறையில் ஆசிரியர் கூறும்போது, அதுவரை தன் சாதி குறித்து அறியாத வசதியான தலித் குடும்பப் பிள்ளைகளும் உளவியல் ரீதியாக வகுப்பில் தனிமைக்குள்ளாகிறார்கள்.

இந்திய தலித் குழந்தைகளின் உயரக் குறைவுக்கு, ஊட்டச் சத்துக் குறைபாடு, வசதி, வசதியின்மை மட்டும் காரணம் இல்லை. தீண்டாமையும்தான்.

இத்தகு குறைபாடு குழந்தைகளின் கணித அறிவு மற்றும் சொல்லகராதித் திறன் போன்றவற்றையும் பாதிக்கிறது.

ஏழை ஆப்ரிக்க நாடுகளைவிடவும் இந்திய தலித் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைவு விகிதம் அதிகம்! என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

‘ஊர்க் கட்டுப்பாடா? அப்படின்னா?’ ஏதுமறியாது அப்பாவித்தனமாக கேட்கும் இக்குழந்தைகளின் வேரில் வெந்நீரை ஊற்றுகிறது கிராமத்தின் சாதி வெறி மனோபாவம் .

குழந்தைகளின் ஒரு கையில் சத்துணவுத் தட்டைத் தரும் ,
இந்திய/தமிழ்ச் சமூகம் மறுகையில்
ஒரு மிட்டாயைத்தர மறுக்கிறது .
மாறாக, சாதித் தீண்டாமை என்கிற
கசப்பைத் திணிக்கிறது.

குழந்தைகளை தீண்டாமையால் குள்ளமாக்கி விட்டு, தேசத்தை மட்டும் எப்படி உயர்த்திவிட முடியும்?

கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here