கள்ளக்குறிச்சியில் நடப்பது போலீசு ராஜ்ஜியமா? 

நியாயத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடும் மக்களை நிரந்தர அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்க வேண்டும்.இனி யாருமே போராட வரக்கூடாது என்று நினைக்கிறது அரசு நிர்வாகம்.

0
113

கள்ளக்குறிச்சியில் நடப்பது போலீசு ராஜ்ஜியமா? 

மாணவி ஸ்ரீமதி மரணத்தின்
குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே!
நீதி கேட்டு போராடியவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையா?

பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தோழர்.ராமலிங்கம் உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்!

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி மாணவியின் மரணம் தொடர்பான கலவர வழக்கில், கைதான மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலாளர் தோழர் ராமலிங்கம் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி நிரந்தர குற்றவாளியாக்க முயற்சித்து வருகிறது தமிழக அரசின் போலிசு.

மாணவி ஸ்ரீமதியின் மரணத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் நடந்த கலவரத்தை பயன்படுத்தி, போராடும் அமைப்புக்கள்,அப்பாவி பொதுமக்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குகளை போட்டு வருகிறது மாவட்ட நிர்வாகம்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை தராமல் 60 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்துள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ராமலிங்கத்தை தனிமை சிறையில் அடைத்து துன்புறுத்தியது. ஆனால், மாணவியின் மரணத்திற்குக் காரணமான பள்ளி நிர்வாகிகளைப் பிணையில் விடுவித்துள்ளது. நீதிமன்றம், போராடியவர்களை பிணையில் விடுவிக்கும் போது 5000 முதல் 50,000 வரை பிணைத்தொகை கட்ட உத்தரவிடுகிறது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ராமலிங்கத்தை சிறையிலேயே வைத்திருப்பதன் மூலம் அப்பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறையில் இருக்கும் தோழர் ராமலிங்கம் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களின் மீது பல்வேறு வழக்குகளை ஜோடித்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் நிரந்தரமாக சிறையிலேயே வைக்க முயற்சித்து வருகிறது.

இதன் மூலம் நியாயத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடும் மக்களை நிரந்தர அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்க வேண்டும்.இனி யாருமே போராட வரக்கூடாது என்று நினைக்கிறது அரசு நிர்வாகம்.

மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க நீதிமன்றங்கள் தான் கடைசி புகலிடம் என்பதெல்லாம் எப்போதோ காலாவதியாகி விட்டது. இப்போது கள்ளக்குறிச்சி போல ஏற்கனவே, தூத்துக்குடி, கூடங்குளம், கதிராமங்கலம் உள்ளிட்ட எண்ணற்ற போராட்டங்களில் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை மக்கள் போராட்டங்கள் மூலம் விடுவித்துள்ளது நீதிமன்றம்.

அந்த வகையில், கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் பொய் வழக்கு, சிறை, குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட அரசின் அடக்குமுறைகளிலிருந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை விடுவிக்கப் கோருவது ஜனநாயகம் எண்ணம் கொண்ட ஒவ்வொருவரின் கடமை ஆகிறது.

அரசின் அடக்கு முறைக்கு எதிராக போராடும் அமைப்புகள், ஜனநாயக சக்திகள், சமூக அக்கறையுடன் செயல்படும் இயக்கங்கள் என அனைவரும் ஒரே அணியில் நின்று பொதுமக்கள் மீது போடப்படும் குண்டாஸை தடுத்து நிறுத்த குரலெழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here