டந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு தொலைக்காட்சி மற்றும் வானொலியில் மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியாவில் புழங்குகின்ற ரூபாய் 500,1000  நோட்டுகள் இன்று இரவு முதல் செல்லாது என்று அறிவித்தார்.

இவ்வாறு அறிவித்ததுடன் நில்லாமல் “சகோதர, சகோதரிகளே நான் இந்த நாட்டினரிடம் 50 நாட்களை கேட்கிறேன். வெறும் 50 நாட்கள். எனக்கு டிசம்பர் 30ஆம் தேதி வரை நேரம் தாருங்கள். நான் செய்தது தவறு அல்லது என் நோக்கம் தவறு என்று நிரூபிக்கப்பட்டால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் அளியுங்கள்” என்றார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் மாட்சிமை தாங்கிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு 4:1 என்ற விகிதத்தில் பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு என்ற நடவடிக்கை சரியானது தான், அது செல்லும் என்று தீர்ப்பளித்து மோடியின் பிம்பத்தை பாதுகாத்துள்ளனர்.

உண்மையில் 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவின் பொருளாதாரத்தில் கடும் விளைவுகளை உருவாக்கியது. உள்நாட்டு உற்பத்தியை நாசம் செய்தது மட்டுமின்றி ஏறக்குறைய மூன்றில் இருந்து மூன்றரை லட்சம் கோடி ரூபாயை இழக்க செய்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அதற்கு முக்கிய காரணங்களாக மூன்று அம்சங்களை முன்வைத்தது பாசிச மோடி கும்பல். 1) பயங்கரவாதிகளுக்கு செல்கின்ற பணத்தை தடுப்பது, அதாவது போலியான பணத்தை புழக்கத்தில் இறக்கி இந்திய பொருளாதாரத்தை நாசமாக்கி வருகிறார்கள். அதனால் வங்கியில் பணத்தை கட்டச் செய்வதன் மூலம் அவர்கள் கையில் உள்ள பணத்தை செல்லாததாக்கி விட முடியும். இந்த வகையில் அவர்கள் கையில் பணம் செல்லாமல் தடுக்கப்படும் என்று விளக்க உரை ஆற்றினர். 2) ரிசர்வ் வங்கி வெளியிட்ட பணத்தில் கணக்கில் வராத கருப்பு பணம் வெளியில் உலவுகிறது. அதை முற்றாக ஒழிப்பது. 3) நேரடியாக பணப்பரிவர்த்தனை என்பதற்கு பதிலாக டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய வைப்பது. இந்த நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறும் என்று உறுதி அளித்தனர்.

முதலாவதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட  15.4 லட்சம் கோடியில், சுமார் 20 சதவீதத்திற்கும் மேல் கருப்பு பணமாக அதாவது அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில் கணக்கில் வராத பணமாக சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் புழங்குவதாகவும் அந்த தொகையை நீக்குவதற்கு இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெருமளவில் உதவும் என்றனர்.

ஆனால் ரிசர்வ் வங்கி கணக்குப்படி 98.3% ரூபாய் திரும்பவும் வங்கிக்குள் திரும்பியது. சுமார் 10,702 கோடி மட்டுமே வங்கி கணக்கில் திருப்பம் பெறவில்லை. 20% என்று முன்வைத்த அரசாங்கத்தின் கணக்கின்படிகூட வரவில்லை. வெறும் 0.01 சதவீதம் மட்டும் தான் வங்கிக்கு வரவில்லை. இதிலும் கூட அந்த சமயத்தில் நேபாளம் மற்றும் பூட்டானில் புழக்கத்தில் இருந்த இந்திய ரூபாய்களை பற்றிய கணக்கு திட்டமிட்டு தவிர்க்கப்பட்டது.  அரசின் நடவடிக்கை அப்போதே தோல்வியுற்றது. கணக்கில் வராத கருப்பு பணம் ஒழிக்கப்பட போவதாக கூறிய கதை முடிவுக்கு வந்தது.

உடனடியாக வேறொரு கதையை துவங்கினர், அதாவது இந்த நடவடிக்கையின் மூலம் வரி வருவாய் அரசுக்கு உயர்ந்துள்ளது பாருங்கள். இதனால் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதுதான் என்று பித்தலாட்டம் புரிய துவங்கினர்.

இரண்டாவதாக, முக்கியமாக பீற்றிக் கொள்ளப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது தற்காலிகமாக முன்னேறியதே தவிர, நேரடியான ரொக்க பரிவர்த்தனை 83 சதவீதம் உயர்ந்துள்ளது. நவம்பர் 4, 2016 அன்று சிஐசி 17.74 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே டிசம்பர் 23, 2022 அன்று 32.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை என்பதன் மூலம் டிஜிட்டல் சேவைக்காக கட்டணம் என்ற முறையில் பேடிஎம், கூகுள்பே, போன்ற தனியார் நிறுவனங்கள் லட்சக்கணக்கான கோடிகளை சுருட்டினர் என்பதுதான் உண்மையாகும். சேவை கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனையின் உண்மை முகம் இதுதான்.

மூன்றாவதாக, தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு பணப்புழக்கம் இருக்காது என்று சண்டமாருதம் புரிந்தனர். இவர்கள் யாரை பயங்கரவாதிகள் என்று கூறுகிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை. இந்தியாவின் பொருளாதாரத்தையே முடக்குகின்ற அளவிற்கு பல லட்சம் கோடிகளை வைத்துள்ள தரகு முதலாளிகள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள், பல்வேறு மட்டங்களில் உலவுகின்ற இடைத்தரகர்கள் (புரோக்கர்கள்), கந்து வட்டி முதல் மணல் கொள்ளை வரை சமூக விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் செய்து வந்த சேகர் ரெட்டி  போன்றவர்களிடம் இருந்த பணம் அனைத்தும் 2000 ரூபாய் நோட்டுகளாக மாறிய கதையை இந்திய மக்கள் அனைவரும் அறிவார்கள். இவர்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தும் நபர்களிடம் தற்போது இந்திய ரூபாய் இல்லை என்று அடித்து சொல்ல முடியுமா என்றால் அது தனியே ஒரு விவாத பொருளாகிவிடும்.

சேகர் ரெட்டி

உண்மையில் நடந்தது என்ன? நாட்டு மக்கள் அனைவரும் 2016 நவம்பர் 9ஆம் தேதி காலையிலிருந்து வங்கிகளின் முன்னாள் குவியத் துவங்கினர், வரிசையில் நின்று தன் கையில் இருந்த பணத்தை மாற்றுவதற்கு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தனர். சிறு குறு தொழிலில் இருந்த வியாபாரிகள் பணத்தை மாற்ற முடியாமல் தவித்தனர். விவசாயிகள் கையில் இருந்த சேமிப்பு பணத்தை மாற்றுவதற்குள் பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்தனர். உச்சகட்டமாக பணத்தை மாற்றுவதற்கு வரிசையில் நின்ற போது பலர் உயிரிழந்தனர்.

பாசிச மோடி முன்வைத்த 50 நாட்களுக்குள் இந்திய மக்கள் சொல்ல முடியாத பல்வேறு துயரத்தில் மூழ்கினர் என்பது மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரம் கணிசமான பாதிப்பை சந்தித்தது. அதைவிடவும் கேடாக புதிய ரூபாயை அச்சடிப்பதற்கு 21,000 கோடி ரூபாய் செலவானது. இது வங்கிக்கு திரும்பாத பணத்தைவிட ஒரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள நாட்டுப் பற்றுள்ள பல்வேறு பொருளாதார அறிஞர்கள் இந்த நடவடிக்கை ஒரு பொருளாதார நடவடிக்கை அல்ல; அரசியல் நடவடிக்கை என்று முன் வைத்தனர். அதுவே உண்மை என்பது தற்போது நிரூபணம் ஆகிவிட்டது.

இதையும் படியுங்கள்: பணமதிப்பிழப்பின் பயங்கர நினைவுகள் 

பாசிச ஆர்.எஸ்.எஸ்- மோடி கும்பல் தனது அரசியல் நோக்கத்திற்காக பெரும்பான்மை மக்கள் மீது கேடுகளை உருவாக்கிய பண மதிப்பிழப்பு நடவடிக்கை சரியானது தான் என்று நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் துணிச்சலுடன் தீர்ப்பு வழங்குகின்றனர். ஒருவேளை சோற்றுக்கு அல்லல்படுகின்ற உழைப்பாளி மக்கள் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் உள்ள நாட்டில், ஐந்து நட்சத்திர பங்களாக்களில் குடியிருந்து கொண்டு மக்களின் பிரச்சனையை அறியாத மேட்டுக்குடி கும்பலான இப்படிப்பட்ட நீதிபதிகள் நாட்டின் மனசாட்சிக்கு எதிராக தன்னுடைய மனசாட்சியை விற்றுவிட்டு மோடியை பாதுகாப்பதற்கு வழங்கி உள்ள இந்த தீர்ப்பு கேடு கெட்டதாகும்.

இதிலும் எஸ்.ஏ. நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் நேரடியாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்தனர். மற்றொரு நீதிபதியான பி எம் நாகரத்னா இதனை சட்டப்படியும், பாராளுமன்றத்தில் முறையாக விவாதித்தும் செய்திருக்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார். மற்றபடி இவர்கள் ஐந்து பேருமே அரசாங்கம் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கத்தை குறை கூற முடியாது என்று தான் நீதியாக மொழிந்துள்ளனர்.

பாசிச பயங்கரவாதம் நீதித்துறை உள்ளிட்டு அனைத்து துறைகளிலும் புகுந்து கொண்டு விட்டது. இனி ஒரு மக்கள் எழுச்சியின் மூலமே பண மதிப்பிழப்பு போன்ற கொடூரமான, முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்கு உண்மையான தண்டனை வழங்க முடியும் என்பதே இந்த தீர்ப்பில் இருந்து நாம் பெறக்கூடிய நீதியாகும்.

  • கணேசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here