தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு!
போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை!

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணமான தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனமான ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை உருவாக்கி அமைதியாக போராடிய வந்தனர். நூறாவது நாள் போராட்டமாக 2018, மே 22-ஆம் தேதியன்று “லட்சம் மக்கள் கூடுவோம் ஸ்டெர்லைட்டை மூடுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் திரண்டனர். அமைதியாக கூடிய மக்கள் மீது வன்முறையை ஏவியதுடன் துப்பாக்கிச்சூடும் நடத்தியது அப்போதைய தமிழக அரசு. இதில் எமது மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உட்பட 2 பெண்கள் என மொத்தம் 13 பேர் ஈவிரக்கமே இல்லாமல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடாமல் இறந்தவர்களின் உடல்களை வாங்க மாட்டோம் என்று உறுதியாக மக்கள் தொடர்ந்து போராடியதின் விளைவாகவே ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. இன்று வரை ஆலையை திறக்க பல்வேறு சதி வேலையை செய்து வருகிறது வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கும்பல். இதற்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது.

தூத்துக்குடி மக்கள் மீது போலீசார் நடத்திய படுகொலையை தமிழகத்தையே குலைநடுங்க வைத்தது. ஆனால் அன்றைய அதிமுக அரசோ படுகொலையை மூடி மறைக்கவே முயன்றது. தூத்துக்குடி மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளில் நீதி கேட்டு தமிழக மக்கள், ஜனநாயக சக்திகள், அனைத்து கட்சிகள் என அனைவரும் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராடிய நிலையில் வேறுவழியின்றி கார்ப்பரேட்டுகள் மற்றும் பாஜகவின் கொத்தடிமையான எடப்பாடி அரசு துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி விசாரணை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை கடந்த மே மாதம் முடிவடைந்தது. ஆறு மாதத்திற்குள் இந்த அறிக்கை சட்டமன்றத்தில் மக்கள் முன் வைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் திமுக முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. தற்போது அறிக்கையின் முக்கியமான பகுதிகள் வெளியாகி உள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில்,
போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல்!

காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி!

துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர்!

ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, ஹெரிடேஜ் பூங்காவில் ஒளிந்துகொண்டு போலீசார் சுட்டுள்ளனர்.
எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார் தாசில்தார்!

தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது!

போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்!

துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார்!

ஒரே போலீசாரை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது!

அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் பாசிச அரசு கார்ப்பரேட் கொள்ளைக்காக உழைக்கும் மக்களை கொன்று குவித்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாக மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக சொந்த நாட்டு மக்களை பச்சை படுகொலை செய்த அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடியும் கொலைக் குற்றவாளியே. அதேபோல், ஸ்டெர்லைட் நிறுவனமும் அதன் தலைவருமான அனில் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்காக சுற்றுச்சூழலை நாசமாக்கி விவசாயத்தை கெடுத்து நாட்டையே சுரண்டிக் கொழுக்கும் கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து போராட வேண்டும்.

இன்றைய தினம் இவர்களின் குற்றம் நிரூபணம் ஆகி உள்ளது குற்றவாளிகள் அம்பலம் ஆகியுள்ளனர். தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளின் போராட்டத்தின் மூலமே இது சாத்தியமானது.

மக்கள் உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் தொழிற்சாலைகள் சமூக பாதுகாப்புடன் மக்கள் நலன் சார்ந்து தேவையையொட்டி மட்டுமே நடத்தப்பட வேண்டும். இதற்கென தனி சட்டம் இயற்றப்பட வேண்டும்.இதுதான் தூத்துக்குடி போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வாகும்!

படுகொலையின் குற்றவாளிகளான போலீசார் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. வழக்கு பதிவு இல்லை. கைது சஸ்பென்ட் நடவடிக்கை இல்லை. ஆனால் நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு அவற்றை திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்ப்பரேட் காவி பாசிசத்தை தாங்கி பிடிக்கும் இந்த அரசமைப்பில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா என்பது சந்தேகமே. தூத்துக்குடி உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு, புரட்சிகர அமைப்புகள், அரசியல் கட்சியினர், ஜனநாயக முற்போக்கு சக்திகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுப்போம் ! அனில் அகர்வால், எடப்பாடி உள்ளிட்டு குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைக்க போராடுவோம்!

வழக்கறிஞர் சி.ராஜூ
மாநிலப் பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

1 COMMENT

  1. நிச்சயமாக இந்த ஒரு நபர் விசாரணை கமிஷன் அளித்துள்ள பரிந்துரைகளை தமிழக அரசு நடைமுறை படுத்த வேன்டும் துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்த உயர் அதிகாரிகளுடன் அரசு பொறுப்பில் இருந்தவர்களையும் விசாரித்து தண்டிக்க வேன்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here