கிரிமினல் குற்ற கும்பலான பாஜகவை வீழ்த்துவோம்!
மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்.

கிரிமினல் குற்றக் கும்பல் கூடாரமான பாரதிய ஜனதா கட்சி, 2014 முதல் 2019-ஆம் ஆண்டு தனது முதல் தவணை பதவிக்காலத்தை முடித்த போது பாராளுமன்றத்தில் பங்கேற்றவர்களில் குற்ற வழக்குகளில் சிக்கியிருந்த கட்சிகளில் முதலிடத்தைப் பெற்றது. இந்த பாராளுமன்றத்தில் பங்கெடுத்த பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 521 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 106 உறுப்பினர்கள் மீது கொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்கள், வகுப்புவாத சதித்திட்டம், கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தன. இதில் 55 சதவீதம் பேர் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் தான்.. அதாவது 92 பேர் இந்த கட்சியை சார்ந்த அகிம்சா மூர்த்திகள் ஆவர்.

பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார்

இவர்களைத் தவிர காங்கிரஸ் கட்சியில் இருந்து 7 பேரும், அதிமுகவிலிருந்து 6 பேரும் சிவசேனாவில் இருந்து 15 பேரும், திரிணாமுல் காங்கிரசிலிருந்து 7 பேரும், இது போன்ற கிரிமினல் குற்றக் கும்பலாக உள்ளனர் என்று இந்த ’உத்தமர்களை’ ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) சார்பில் செயல்படும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு (NEW) ஒன்றின் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. தேர்தல் என்றாலே இதெல்லாம் சகஜம் தான் என்று சமாளிப்பதோ, தேர்தல் பாதைக்கு போனாலே இது போன்று ஆகிவிடுவார்கள் என்று சப்பைக் கட்டுவதோ பிரச்சனையின் ஆழத்தை புரிந்துக் கொள்ள உதவாது!

இந்தியாவின் ’பாராளுமன்ற ஜனநாயகம்’ சந்தி சிரிப்பதை அம்பலப்படுத்துகின்ற வகையில் 2014 தேர்தலில்தான் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகபட்ச குற்றவியல் வழக்குகளில் சிக்கியவர்கள் இருந்தனர். இது 2009 ஐ ஒப்பிடும்போது 14 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இந்தியா ஸ்பெண்ட் என்ற நிறுவனம் 2014 ஆம் ஆண்டே தெரிவித்திருந்தது. 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களில் கிரிமினல் வழக்குகள் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அதாவது முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 உறுப்பினர்களில் 186 பேர் (34%) கிரிமினல்கள் என்று இருந்த நிலையில் இருந்து 2019 ஆம் ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் தருணத்தில் இருந்த 527 உறுப்பினர்களில் 174 பேர் கிரிமினல் குற்ற கும்பலாக சீரழிந்து, நாட்டை ஆள்வதற்கான தனது தகுதியை உயர்த்திக் கொண்டனர் என்று அம்பலமானது.

2019 வரை இருந்த மக்களவையில் குற்ற வழக்கு பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்ட மாநிலங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இதில் ஐந்து மாநிலங்கள் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் தான். நாடு தழுவிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெறும் பீகாரில் தான் அதிகபட்ச கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை இருந்தது. அதாவது 2014 ஆம் ஆண்டு 8 பேர் என்பதிலிருந்து 2019 ஆம் ஆண்டு 18 பேராக அதிகரித்து இருந்தது. என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதுபோல உத்திரப்பிரதேசத்தில் கடுமையான குற்றவியல் வழக்குகளை கொண்டிருந்த பா.ஜ.க எம்.பி-க்களின் எண்ணிக்கை 12-பேரிலிருந்து 20 பேர் ஆக அதிகரித்து இருந்தது.

New Lok Sabha sees 9% rise in number of MPs with criminal charges - Hindustan Times

2014 ஆண்டு பாரதீய ஜனதாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி காலம் துவங்கிய போது கிரிமினல் குற்றப்பின்னணி கொண்ட 98 எம்.பி-க்களில் 35 பேர் மீது தீவிர குற்றசாட்டுகள் இருந்தன. அதுவே 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில் குற்றப் பிண்ணனி கொண்ட 92 எம்.பி-க்களில் தீவிர குற்றப் பின்னணி உள்ளவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்து இருந்தது. அதாவது ’தாழ்நிலை’ கிரிமினல்கள் பலர் ’பக்கா’ கிரிமினல்களாக மாறினர் என்று புரிந்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குற்ற வழக்கு என்றால் என்ன என்கிறீர்களா? அதாவது குற்ற வழக்குள்ள 106 எம்.பிக்களில் 10 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த கொலையாளிகளில் நான்கு பேர் பாஜகவில் உள்ளனர். இதுபோல கொலை முயற்சி வழக்கு சாட்டப்பட்ட 14 எம்.பி-க்களில் 8 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள்.  வகுப்புவாதத்தை தூண்டுகின்றனர் என்று வழக்கு தொடரப்பட்ட 10 பேரில் பா.ஜ.க வை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.

கிரிமினல் குற்ற பின்னணி கொண்டவர்கள் மட்டுமல்ல! மக்களவை உறுப்பினர்களில் 430 பேர் தங்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக அறிவித்திருந்தனர். அதிகபட்ச அதிகளவில் பா.ஜ.க வினரை சேர்ந்த 267 பேர், அதாவது ஆகப் பெரும்பாலானோர் இதில் உள்ளனர் பாரதிய ஜனதா கட்சி  எம்.பிக்களின் சராசரி சொத்து மதிப்பு அதாவது ஒவ்வொரு எம்.பியின் சொத்து 11.89 கோடி ஆகும். இதெல்லாம் அரசாங்கத்திற்கு ஆடிட்டர்களின் மூலம் கொடுக்கும் திருட்டுக் கணக்கு ஆகும். உண்மையில் பல கோடிக்கு அதிபர்கள் தான் பா.ஜ.க- வின் புரவலர்கள். இவர்கள் தான் மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க வெற்றிக்கு உதவினர்.

2021-ஆம் ஆண்டு ஜூலையில் இதே ADR வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தற்போது பாரதிய ஜனதா கட்சியின் புதிய அமைச்சரவையில் இருப்பவர்கள் பற்றி, அவர்களே தெரிவித்த சுய உறுதிமொழி பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் அடிப்படையில் 78 அமைச்சர்ககளில் 33 அமைச்சர்கள் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதிலும் 24 பேர் மீது தீவிர குற்ற வழக்குகளில் பதிவாகியுள்ளன. அதாவது கொலை, கொலை முயற்சி கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் பதிவாகி உள்ளனர். இதில் 4 அமைச்சர்களின் மீது IPC 307 ஆவது பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒருவரின் மீது கொலை வழக்கு IPC 302 பிரிவின் கீழ் பதியப்பட்டுள்ளது. பிரக்யா சிங் போன்ற பாசிச சன்யாசிகள் உட்பட ஏராளமான பேர் எம்.பிக்களாகியுள்ளனர்

கிரிமினல் பிரெக்யா சிங் தாக்கூர்

இதுமட்டுமின்றி மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பது, நல்லிணக்கத்தை சிதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது அதாவது IPC 153 a மற்றும் வேண்டுமென்றே மத உணர்வு மற்றும் மத நம்பிக்கையை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக பதியப்படும் 295 a ஆகிய வழக்குகளின் கீழ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட 5 அமைச்சர்களின் மேல் வழக்கு உள்ளது. இவை தவிர தேர்தல் முறைகேடுகளில் அதாவது தில்லுமுல்லு செய்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய வழக்கு 7 பாஜகவினர் மீது உள்ளது.

இந்த லட்சணத்தில் தமிழகத்தில் ஆளும் திமுகவை வீழ்த்துவதற்கு பாஜக புதிய ஆயுதமாக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீது பதியப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை கையில் எடுத்துக்கொண்டு களமாட போவதாக முதலாளித்துவ கிசுகிசு பத்திரிகைகள் நமக்கு திகிலூட்டுகின்றன. திமுக போன்ற கட்சிகள் மட்டுமன்றி இந்தியாவில் உள்ள தேர்தல் அரசியல் கட்சிகள் அனைத்திலும் நீக்கமற கிரிமினல் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும், வட்டார, மாவட்ட தாதாக்களும், நேரடியாக அசைன்மென்ட் கொடுத்து கிரிமினல் வேலைகளில் ஈடுபடுபவர்களும் தான் நிரம்பி வழிகிறார்கள். இந்த நாடாளுமன்ற தேர்தல் அரசியல் கட்டமைப்பு தோல்வியடைந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது.

இந்தக் கட்டமைப்பு தோற்றுவிட்டது என்பதை மக்கள் அதிகாரம் 2015 ஆம் ஆண்டே முன்வைத்து அதற்கு எதிராக போராடி வருகிறது. ஆனால் அதற்கு பொருத்தமான மாற்று ஒன்றை முன்வைக்க இயலாத சூழலில் அந்த வரையறையே தவறு என்று ஆகிவிடாது. எனவே தோற்றுப்போன இந்த கட்டமைப்பை பயன்படுத்திக்கொண்டு கிரிமினல் குற்றப்பின்னணி கொண்டவர்களே அரசியல் அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் எனும்போது அதையே தனது பாசிச சிந்தாந்த அடிப்படையாக கொண்ட பா.ஜ.க உத்தம வேடம் கட்டுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் பா.ஜ.க அடிப்படையிலேயே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சி அல்ல! பிற அரசியல் கட்சிகளை போன்று மற்றொரு கட்சியும் அல்ல!

கார்ப்பரேட்- காவி பாசிச குண்டர் படையான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, தொடர்ந்து அம்பலமாகி நாறி வருகிறது. லக்கிம்பூர் கெரியில் விவசாயிகளை கார் கொண்டு அடித்து கொலை செய்து தனது ஒரிஜினல் புத்தியை காட்டி விட்டது. இது வெளியில் தெரியக் கூடாது என மைய ஊடகங்களை மிரட்டி சொம்படிக்க வைக்கிறது. சமூக ஊடகங்களை முடக்கி வைக்கிறது. பல மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சிகளை விலைக்கு வாங்கி குறுக்கு வழியில் பதவியை பிடிக்கிறது அல்லது பிரபலமான நபர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை பிடிக்கிறது. பா.ஜ.க மக்களின் மீதோ, தேர்தல் அரசியலின் மீதோ நம்பிக்கை கொண்ட கும்பல் அல்ல. ஆனால் கணிசமான மக்களிடம் ஆதரவை பெற்றுள்ள கட்சி என்பதை கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது.

எனவே, அரசியல் அதிகாரத்தில் இருக்கும் கிரிமினல் குற்ற கும்பலும், பாசிச குண்டர் படையுமான ஆர்.எஸ்.எஸ்-பாஜகவை வீழ்த்துவதற்கு, அதற்கு மாற்றாக கீழிருந்து நேர்மை, நாணயம், சுய ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற அடிப்படைப் பண்புகளை கொண்ட உழைக்கும் மக்களிடையே உருவாக்கப்படுகின்ற, சோவியத் பாணியிலான மக்கள் அதிகார குழுக்கள் தான் இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர முடிவு கட்டும் அதுவே அரசியல் ரீதியான தீர்வாகும் என்றாலும் ஓட்டுக் கட்சிகளிடையே எல்லோரும் மோசம் யார் தான் சரி என்று சூனிய வாதக் கண்ணோட்டத்தில் செயல்படுவது அல்லது கட்சிகள் என்றால் இப்படித்தான் அனுசரித்துப் போக வேண்டும் என்று இறங்கிப் போவது இரண்டுமே கூடாது. அவர்களை அம்பலப்படுத்துகின்ற அதே நேரத்தில் அவர்களிடமுள்ள சரியான அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதே இன்றைய அரசியல் சூழலில் சரியான திசை வழியாக இருக்கும்.

  • சண்.வீரபாண்டியன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here