மூன்றாவது முறையாக, பல்வேறு தில்லுமுல்லுகளை செய்து பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொண்டிருக்கும் மோடி உண்மையில் மூளையை பயன்படுத்துகிறாரா? அவரின் அரசு அறிவுப்பூர்வமாகத்தான் முடிவெடுத்து செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆயுஸ்மான் பாரத் காப்பீடு திட்டத்தைப் பற்றி படிப்பவர்கள் மேற்கண்ட எழுப்புகின்றனர்.

இந்தியாவில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச மருத்துவ காப்பீடு தருவது தான் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம். இது, மத்திய மாநில அரசுகள் இணைந்து அமல்படுத்த வேண்டிய திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசு 60% நிதியை ஒதுக்கும் என்றால், மீதமுள்ள 40% மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும்.

காப்பீட்டில் என்ன கிறுக்குத்தனம் உள்ளது?

இந்தியா எங்கும் அரசு மருத்துவமனைகள் உள்ளன; அரசு மருத்துவர்கள் உள்ளனர்; அரசு மருந்தகங்கள், ஆய்வகங்கள் உள்ளன. தமிழகத்தில் இவை ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையில் இருப்பதோடு அவற்றின் சேவையும் சிறப்பானதாகவே உள்ளது. இங்கு சாதாரண சிகிச்சைகளுக்கு காப்பீடு இல்லை என்றாலும் அறுவை சிகிச்சைகளுக்கு காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நமது மருத்துவமனையில் நாம் சிகிச்சை பெற எதற்காக காப்பீட்டு நிறுவனத்திடம் போய் பதிவு செய்து முறையாக காப்பீட்டை செலுத்த வேண்டும்? அது நமது சார்பாக மோடி அரசே செலுத்துவதாக இருந்தாலும், அதற்கு என்ன அவசியம் வந்துள்ளது? நடுவில் நுழைந்துள்ள காப்பீட்டு நிறுவனங்களை கொழுக்க வைக்கும் சதியைத் தவிர இதில் வேறு என்ன உள்ளது? இதை புரிந்து கொள்வது அவசியம்.

சொந்த வீட்டில் சாப்பிட யாராவது டோக்கன் வாங்குவார்களா?

காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கவும், காலையில் டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என சாப்பிடவும், சொந்த வீட்டிலேயே யாராவது வேலைக்கு ஆள் வைத்து பில் போடவும், டோக்கன் வழங்கவும், ஏற்பாடு செய்வார்களா? நாம் ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் சாப்பிடுவதற்கான தொகையை முன்கூட்டியே செலுத்தி, டோக்கனை வாங்கி வைத்துக் கொண்டா சொந்த வீட்டில் சாப்பிடுவோம்?

மோடி அத்தகைய திருப்பணியைத்தான் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மொத்த இந்தியாவிற்கும் விரிவு படுத்துகிறார். முதல் கட்டமாக 3,437 கோடி ரூபாய்களை காப்பீட்டு நிறுவனங்களுக்கு மொய் எழுதப் போகிறது மோடி அரசு.

இந்த ஒதுக்கீடு போதுமானதாக இருக்காதாம். இத்திட்டத்தில் இணைக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அதிகரிக்கவும் வேண்டுமாம். இதை வல்லுனர்கள் தெரிவிப்பதாக தினமணி தனது தலையங்கத்தில் பெருமையோடு அறிவிக்கிறது. மேலும், உலகின் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவிலான திட்டம் செயல்படுகிறதா என்பது சந்தேகம்தான் என்றும் மோடி அரசை பாராட்டுகிறது.

மக்கள் விரோத திட்டம் என பளிச்சென்று தெரியும் இதை மருத்துவத்துறையில் உள்ள யாரும் தட்டி கேட்பதாக தெரியவில்லை. அரசின் நிர்வாகத்துறையில் உள்ள யாருக்கும் மூளை இருக்கிறதா என்றும் புரியவில்லை. ஒருவேளை இவர்கள் அனைவரும் கமிஷனுக்கு விலை போய் விட்டனரோ? அதை விசாரிக்க வேண்டிய ஒன்றிய அரசின் துறைகளும் கார்ப்பரேட்டுகளுக்கு அடியாட்களாக மாற்றப்பட்டு விட்டன. நீதித்துறையும் காவிதுறையாகி வருவதால் அங்கும் போக முடியாது. நேர்மையற்றவர்கள் எப்படியோ தொலையட்டும்; நம் நாட்டில் சேவை வழங்கி வரும் அரசு மருத்துவமனைகளாவது நீடிக்குமா என்றால் அதுவும் இல்லை.

காப்பீட்டு முறையை திணிக்கும் அயோக்கியத்தனம்!

தற்போது இலவச காப்பீடு என்று கவர்ச்சிகரமாக அறிவிக்கப்பட்டு எதெல்லாம் பிரதமரால் – ஒன்றிய அரசின் தனித்திட்டமாகவும் அல்லது ஒன்றிய மாநில அரசுகளின் கூட்டு திட்டமாகவோ – கொண்டுவரப்படுகிறதோ அவை அனைத்தும் நாளை கைவிடப்படும். இது மாநில அரசுகள் தனித்து அறிவிக்கும் காப்பீடு திட்டங்களுக்கும் பொருந்தும் தான்.

காப்பீடு அட்டை இருந்தால் மட்டுமே சிகிச்சை என்ற நிலைக்கு அரசு மருத்துவமனைகளையும் தள்ளி, நம்மை காப்பீட்டு நிறுவனங்களிடம் நிரந்தர அடிமைகளாக சிக்க வைக்கும் சதியே இது. அடுத்ததாக, காப்பீடு அட்டை இருந்தால் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறலாம் என விரிவாக்குவதன் மூலம் அரசு மருத்துவமனைகளையும், மருத்துவ கார்ப்பரேட்டுகள் விலை பேசி வளைத்து போட்டு விடுவார்கள். தமிழகத்தில் ஏற்கனவே இதுதான் நடந்தும் வருகிறது.

படிக்க:

♦ எல்ஐசி பங்கு விற்பனை: உங்கள் காப்பீட்டுத் தொகை சூதாடிகளின் கையில்!

♦  மருத்துவக் கல்வியிலும் இந்துத்துவ சித்தாந்தமா..?

பல மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தில் வரையறை செய்யப்பட்டு இருக்கும் கட்டணங்களை ஏற்றுக்கொள்ளவில்லை; அதனால், மருத்துவ சேவையை இந்த காப்பீட்டு அட்டையின் கீழ் வழங்க மறுக்கின்றன. மாநில அரசுகள் இலவச காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய கட்டணத் தொகையை உடனடியாக வழங்காமல் இழுத்தடிக்கின்றன. இதுவும் தனியார் மருத்துவமனைகளின் தயக்கத்திற்கு காரணம் என தினமணி புலம்புகிறது. இதன்மூலம், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள கோடிகள் போதாது; மேலும் லட்சக்கணக்கான கோடிகளை மருத்துவ கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைக்க வேண்டும் என கருத்துருவாக்கம் செய்கிறது தினமணி.

மோடி அரசு முன்னெடுக்கும் கல்விக் கொள்கையால், நமக்கு இனிமேல் அரசு பள்ளியிகள் இருக்காது; அரசு கல்லூரிகள் இருக்காது; அரசு பல்கலைக்கழகங்கள் இருக்காது; அதுபோல் அரசு மருத்துவமனைகளோ, அரசு ஆய்வகங்களோ, அரசு மருந்தகங்களோவும் இனி இருக்காது. இவை அனைத்துக்குமான முன்னேற்பாடுதான் நம்மை காப்பீட்டு அட்டைக்கு பழக்குவது. அதாவது காப்பீட்டின் தயவில் மருத்துவம் பெறுவதை உறுதிப்படுத்துவது.

மோடியின் 3.0 ஆட்சியில் தொடரும் இத்தகைய மக்கள் விரோத திட்டங்களை புரிந்து கொள்வோம்; மக்களுக்கும் புரிய வைப்போம்; உயிர்வாழும் உரிமையை தக்க வைக்க, கார்ப்பரேட்டுகளின் பிடிக்குள செல்லும் மருத்துவத்துறையை மீட்டெடுக்க ஒன்றிணைவோம். மாற்றத்திற்காக களம் காண்போம்.

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here