திருப்பதி லட்டு விவகாரத்தில் பொதுவாக இந்து பக்தர்கள் மனம் கொதிக்கிறார்களோ இல்லையோ பார்ப்பன கும்பல் பொங்க ஆரம்பித்து விட்டது. அதனை நேற்று வெளியாகி உள்ள இந்து தமிழ் திசை நிரூபித்துள்ளது.

பிற ஊடகங்கள் கலப்படம் நடந்துள்ளதா என்பதை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கும் சூழலில் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று அழைக்கப்படும் இந்து தமிழ் திசை தனது பூணூலை உருவிக்கொண்டு பல பக்கங்களில் லட்டு பற்றிய விவகாரத்தை எழுதிக் குவித்துள்ளது.

நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் தலை விரித்தாடுகின்ற போது லட்டு விவகாரம் ஒரு பிரச்சனையா என்று நாம் கடந்து சென்றாலும், லட்டு விவகாரத்தில் பல கோணங்களில் தோண்டி துருவி நாற்றத்தை கிளப்புவதால், நாமும் மூக்கை பிடித்துக் கொண்டு இதில் இறங்கி பக்தர்களின் மத்தியில் சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. அதற்க்கு லட்டு குறித்த விவரங்களை புரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது.

திருப்பதியில் கடந்த 300 ஆண்டுகளாக அதாவது 1715 முதல் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு வரை தினமும் ஒரு லட்சம் லட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்ததால் இதன் எண்ணிக்கை 3.2 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு 2014 ஆம் ஆண்டு கிடைக்கப்பட்டுள்ளது.

அன்றாடம் லட்டு தயாரிப்பு ஒரு திட்டம் அளவு என்கிறார்கள். ஒரு திட்டம் என்பது சுமார் 5,100 லட்டு கொண்ட தாகும். இந்த அளவு மாறாமல் இருப்பதற்காக ஒரு திட்டத்திற்கு 180 கிலோ கடலை மாவு, 165 கிலோ பசு நெய், 400 சர்க்கரை, 300 கிலோ முந்திரி, 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கற்கண்டு, 4 கிலோ ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. இந்த லட்டு தயாரிப்பில் வைஷ்ணவ பிராமணர்களே பங்கேற்பார்கள் என்பதும், அதுவும் ஆகம விதிகளின்படி இந்த லட்டு தயாரிக்கப்படுமாம். இந்த லட்டு விற்பனை மூலம் திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் கல்லா கட்டுகிறது.

திருப்பதி கோவிலுக்கு நெய் விநியோகிப்பதற்கான புதிய ஒப்பந்தம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தம் மே 8-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு, விநியோகம் மே-15 ஆம் தேதியில் துவங்கியது. ஒரு கிலோ நெய்க்கு ரூ.319 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு விநியோகத்தை துவங்கியது ஏ.ஆர். நிறுவனம்.

இந்த நிறுவனம் திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கிய நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு கலந்திருப்பது ஆய்வக பரிசோதனையில் தெரிய வந்தது. திருப்பதி லட்டுக்கு நெய் வழங்கிய 5 நிறுவனங்களில் ஒரு நிறுவனமான திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் என்ற பால் நிறுவனம், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக நெய் அனுப்பி வந்துள்ளது. நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையையும் தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டது. அதில் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் மூலம் திருப்பதிக்கு அனுப்பிய நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருக்கிறது. அதில் சோயா பீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக 6 லட்சம் லிட்டர் பசும்பாலில் இருந்து தான் 15 டன் நெய்யை எடுக்க முடியும். என்னுடைய கருத்துப்படி திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய்யை விநியோகிக்கும் நிறுவனங்களிடம், இதுபோன்று அதிக அளவில் பசும்பாலை பெறுவதற்கான அமைப்பு இல்லை. மேலும் அவர்களின் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே அங்கே கலப்படம் நடந்து இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் எதை கலப்படம் செய்தார்கள் என்பதை உறுதியாக கூற முடியாது என்று குறிப்பிடுகிறார் ஒரு ஆய்வாளர்..

இந்த கலப்படம் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர் ஒருவர், ”நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அது தாவர எண்ணையா அல்லது விலங்கு கொழுப்பா என்று இந்த இந்த சோதனை முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆய்வுகள் மூலமாக மட்டுமே குறிப்பிட முடியாது. இது தொடர்பாக மேலும் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்”. என்று கூறியுள்ளதை கவனிக்க வேண்டும். எனெனில் அதற்குள் பலவிதமான பார்ப்பனப் புரட்டுகளும், கருத்துகளும் வெளியாகியுள்ளது.

திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியான சியாமளா ராவ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, திருமலாவில் நெய்யை சோதிப்பதற்கான ஆய்வகம் இல்லை என்று புலம்பியுள்ளார். ஏன் ரூ.75 லட்சம் மதிப்பில் ஆய்வகம் கட்டவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார். கவனியுங்கள் லட்டு தயாரிப்பை சோதிக்க ஆய்வகம் தேவை என்று பொங்குகிறது பார்ப்பனக் குமபல்.

ஆந்திர துணை முதல்வரும், சினிமா நடிகருமான திருவாளர் பவன் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், “திருப்பதி பாலாஜி பிரசாத்தில் விலங்குக் கொழுப்பு (மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சிக் கொழுப்பு) கலந்ததை அறிந்து நாம் அனைவரும் மிகவும் கவலையடைந்துள்ளோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். எங்களின் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க உறுதி பூண்டுள்ளது.

படிக்க: 

♦ ஏழைகளின் உணவில் விசம் கலக்கும் பாசிச பாஜக அரசு

♦ வாரணாசி மக்கள் மோடியின் பிம்பத்தை சிதைத்தனர்! 

மேலும், இது கோவிலின் நிலப் பிரச்னைகள் மற்றும் நடைமுறையில் உள்ள பல சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்திய அளவில் கோவில்களில் உள்ள பிரச்னைகளை ஆராய ‘சநாதன தர்ம பாதுகாப்பு வாரியம்’ அமைக்கும் நேரம் வந்துவிட்டது. தேசிய அளவில் அனைத்து கொள்கை வகுப்பாளர்கள், மதத் தலைவர்கள், நீதித்துறை, குடிமக்கள், ஊடகங்கள் மற்றும் அந்தந்த களங்களில் உள்ள அனைவராலும் விவாதம் நடத்த வேண்டும்”. என்று குதித்துள்ளார். இவரது கட்சியின் பெயர் ஜன சேனாவாம், இந்த சேனா யாருக்கு பாதுகாப்பு?

”உண்மையில் திருப்பதி தேவஸ்தானம் போர்டு என்பது பல்வேறு பின்னணியில் இருந்து புகழ்பெற்ற பக்தர்களை உள்ளடக்கிய ஒரு சுயாதீனமான அமைப்பு. டிடிடி போர்டில் தற்போது உள்ள உறுப்பினர்களில் சிலர் பாஜகவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டிடிடியின் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் அதிகாரம் அறங்காவலர் குழுவுக்கு உள்ளது. திருமலை வெங்கடேச கோயில் நிர்வாகத்தில் ஆந்திரப்பிரதேச அரசுக்கு சிறிய அளவிலான பங்கே உள்ளது”.என்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.

இது குறித்து ஆர் எஸ் எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசர், ”கோவில்களின் நிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான 400 கோவில்கள் சனாதனத்தின் சின்னங்களாக அமைந்துள்ளன.

பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மற்றும் நகைகள் பிரம்மாண்டமான அளவில் கடந்த 70 ஆண்டுகளாக ஊழலில் சிக்கி உள்ளன. சுமார் 5 2,000 ஏக்கர் கோவில் நிலங்கள் அரசு நிர்வாகத்தின் கீழ் காணாமல் போய்விட்டன. பல கோவில்களுக்கு சட்டப்படியான எந்த அரசு உத்தரவும் இல்லாமல் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. உதாரணமாக ராமநாதபுரத்தின் ராமநாதசாமி கோயில், சென்னையில் கபாலீஸ்வரர் கோவில், திருச்சியில் தாயுமானவர் கோவில் ஆகியவற்றை அரசு நிர்வகிக்க இடப்பட்ட உத்தரவுகள் இல்லை” என்று கட்டுரையில் குறிப்பிட்டுள்ளன.

விஸ்வ ஹிந்து பரிசத்தில் பொதுச்செயலாளரான பஜ்ரங் பக்தா ”கோவில்கள் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்படுவதாக தான் திருப்பதி லட்டு விவகாரத்துக்கு காரணம். எனவே ஆந்திர பிரதேச அரசு உடனடியாக வெங்கடாஜலபதி கோவில் நிர்வாகத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதுபோல் நாட்டில் அனைத்து கோவில்களும் மடங்கள் மற்றும் புனித தலங்களும் அரசின் நிர்வாகத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.” என்று சந்தடி சாக்கில் நாக்கில் எச்சில் ஒழுக பேசியுள்ளார்.

திருப்பதி லட்டு பிடிப்பதற்கு வைஷ்ணவ பிராமணர்கள் மட்டும்தான் தகுதியானவர்கள் என்று சொல்வது பார்ப்பனரல்லாத பிற பக்தர்களின் மனதை புண்படுத்துவதில்லையா?

நெய் என்றாலே மாட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்படுகின்ற பொருள்தான் என்பது உலகமே அறியும். மாட்டின் பால் மாட்டின் ரத்தத்திலிருந்து கிடைக்கிறது எனும்போது மாட்டு கொழுப்பு என்பது தனியாக எங்கே உள்ளது. சர்க்கரையை ப்ளீச்சிங் செய்வதற்கு மாட்டின் எலும்பு பயன்படுத்தப்படுவது பார்ப்பன கும்பலுக்கு தெரியாதா என்ன?

திருப்பதி லட்டு விவகாரத்தில் மாட்டுக் கொழுப்பும், பன்றிக் கொழுப்பும் கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு துவங்கி படிப்படியாக கோவில்களை நிர்வகிக்கின்ற உரிமை பார்ப்பன கும்பலுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வரை பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்பதுதான் லட்டு விவகாரத்தின் உண்மை நோக்கமாகும்..

ராமர் கோவில் திறப்பின் போது திருப்பதியில் இருந்து லட்டு வரவழைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அந்த லட்டு செரித்து பல மாதங்கள் ஆன பிறகு அது பற்றி ஆய்வு நடத்த வேண்டும் என்று பார்ப்பன பூசாரிகள் கொதிக்க துவங்கியுள்ளனர்.

அன்றாடம் சாக்கடை அடைப்பு எடுக்க மூக்கை பிடித்துக் கொண்டு மலக்குழிக்கிலே இறங்கி உயிர் துறக்கும் ’இந்துக்களும்’, லட்டு கலப்படம் ஆகிவிட்டது என்று கொதிக்கின்ற பார்ப்பன ’இந்துக்களும்’ ஒரே மதம் தான் என்று பேசுவது அயோக்கியத்தனமாகும்.

நாம் அனைவரும் இந்துக்கள் என்ற போர்வையில் அனைவரையும் ஒன்று திரட்டி கொண்டு மதச்சிறுபான்மையினருக்கு எதிராக பாசிச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதற்கும் கோவில்கள், ஆதீனங்கள், மடங்களின் நிலங்களை பார்ப்பன கும்பல் திருடி தின்பதற்கும் மட்டுமே பயன்படும். இது தில்லையில் தீட்சிதர்கள் விவகாரத்தில் அம்பலமாகியுள்ளது என்பதையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

பார்த்தசாரதி.

1 COMMENT

  1. திருப்பதி லட்டு விவகாரத்தை கட்டுரையாளர் தோழர் பார்த்தசாரதி நன்றாகவே திரை கிழித்துள்ளார். சந்தடி சாக்கில் லட்டு விவகாரம் இப்படி சந்தி சிரிக்கக் காரணம், அனைத்துக் கோயில்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் என்றும்; எனவே அனைத்துக் கோயில்களையும் ‘இந்து’க்களிடம் (எந்த இந்து? மலம் அள்ளும் இந்துவா? அல்லது பூணூல் போட்ட இந்துவா) ஒப்படைக்க வேண்டும் என்றும் பார்ப்பனர் மற்றும் சங்கிக் காவி(லி)க் கூட்டமும், அவர்களின் ஊது குழல்களான பார்ப்பனப் பத்திரிகைகளும் வானத்திற்கும்-பூமிக்குமாகக்
    குறிக்கின்றன. கோயில்களை ‘இந்து’க்களிடம் ஒப்படைப்பது என்பது, அப்பட்டமாகப் பார்ப்பனர்களின் – RSS-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே! கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளதைப் போல அப்படி மட்டும் ‘துரதிஷ்டவசமாக’ நிகழ்ந்தால் தில்லை நடராஜர் கோயில் சொத்துக்கள் எப்படி தீட்சிதர் பார்ப்பனர்களால் முழுமையாகக் கொள்ளை அடிக்கப் பட்டதோ, அதேபோல அனைத்துக் கோயில் சொத்துக்களும் முழுமையாக பார்ப்பனர்களால் கிரையம் போட்டு விற்பனை ஆகிவிடும்! ஏன்? கோயில்களையே பத்திரப் பதிவு செய்து விற்பனை செய்து விடுவார்கள் – இந்தக் கொழுப்பேறிய பார்ப்பனர்கள் மற்றும் சங்கிகள்! எனவே, தங்களை ‘இந்து’வாக கருதிக்
    கொண்டிருக்கும் ‘சூத்திர – பஞ்சம’ (தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட) மக்களே! எச்சரிக்கையாக இருந்து இந்தப் பாசிசப் பார்ப்பன நரிக் கூட்டத்தின் ‘தில்லாலங்கடி’ வேலைகளை
    முறியடிக்க அணி திரள்வீர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here