இயன்முறை மருத்துவர்கள் என்பவர்கள் தொழில் முறை சிறப்பு வல்லுநர் பட்டப்படிப்பு (professional course)படித்து பட்டம் பெற்றவர்கள்; சுயமாக தொழில் செய்வதற்கு தகுதி படைத்தவர்கள். அதாவது இயன்முறை (physiotherapy) சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை சுயமாக பரிசோதித்து, உடற்பயிற்சி கொடுத்து, நோயாளிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு தகுதி படைத்தவர்கள்.
இயன்முறை மருத்துவத்தை தனித்துறையாக அங்கீகரித்து அதற்குரிய உரிமைகளுடன் கூடிய ஆணையத்தை அமைக்க கோரி வரும் நிலையில், அங்கீகாரத்துடன் கூடிய ஆணையத்தை அமைத்துள்ளதாகவும், ஆணையத்தில் இயன்முறை மருத்துவர்கள் உள்ளிட்ட 10 பிற துறையை சேர்ந்தவர்களும் பதிந்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது தமிழக அரசு.
ஆணையத்தின் உறுப்பினர் பெயர் படிவத்தில், அடைப்பு குறிக்குள் தொழில்நுட்ப பணியாளர் (Technician) என்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துறை சார்ந்தவர்களின் கருத்துகளை கேட்காமலே ஒரு முடிவுக்கு வந்துள்ளது ஆணையம். அப்படி ஒரு ஆணையம் தேவையா? என்று கேள்வி எழுகிறது.
மேலும் இத்தகைய ஆணையம் அமைப்பதற்கான, ஒரு ஜனநாயக பூர்வமான, துறை சார்ந்த சங்கங்களின் கருத்தை கேட்கும் சடங்கு சம்பிரதாயம் கூட இல்லாமல், மேல் இருந்து வரும் வழிகாட்டுதல்களை, தமிழக அரசு பூம்பூம் மாடு மாதிரி அப்படியே அமல்படுத்துவது வியப்புக்குரியதாகவும் கண்டனத்திற்குரியதாகவும் இருக்கிறது.
ஆணையத்தின் சரத்துகள், விதிகள், ஜனநாயக பூர்வ மற்ற அமைப்புமுறை போன்றவை மூலம் துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வாய்ப்பே இல்லை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த ஆணையத்தின் அறிவிப்பின் வாயிலாக தானும் ‘ஒரு கார்பரேட்டுகளின் நலன்விரும்பி’ என்பதை திமுக உணர்த்தியுள்ளது.

1970களில் தொழில்நுட்ப பணியாளருக்கான பட்டயப்படிப்பை அறிமுகம் செய்த நிலையில், 1991முதல் அத்தகைய படிப்பை நிறுத்தியது தமிழக அரசு. 1986களில் இருந்து கைதேர்ந்த தொழிற்முறை படிப்பான BPT( இளந்தலைமுறை இயன்முறை மருத்துவம்) அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை ஆயிரக்கணக்கானோர் பட்டப்படிப்பை முடித்து வெளிவந்துள்ள நிலையில் ,பல பத்தாண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட கல்வித்தகுதியில் பதிய சொல்லுவது ஜனநாயக பூர்வமற்ற நடவடிக்கையும், கண்டிக்கத்தக்கதும் ஆகும். அப்படி பட்டயப்படிப்பிற்குரிய தகுதி போதும் என்று கருதும் தமிழக அரசு எதற்கு பல தனியார் கல்லூரிகளில் தொழில்முறை கல்வியை பல ஆண்டுகளாக வழங்க அனுமதிக்க வேண்டும்.? அல்லது மக்கள் நலனில் ஏன் இந்த அக்கறையற்ற நடவடிக்கை?
சுயமாக கிளினிக் வைத்து இயன்முறை சிகிச்சை அளிக்கும் தகுதி உடைய படிப்பை படித்து தொழில் செய்து கொண்டிருக்கும் இயன்முறை மருத்துவர்களை, சுயமாக தொழில் செய்வதற்கு பதிலாக, எம்பிபிஎஸ் மருத்துவர்களின் அறிவுரை இன்றி நேரடியாக தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தகுதியற்றவர்கள், என்று இவ்வாணையத்தின் மூலம் சட்டபூர்வமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசு.
தமிழக அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஏன் ஈடுபட்டுள்ளது?
இந்த தகுதி குறைப்பு நடவடிக்கையின் மூலம் உழைப்பு சந்தையில் மலிவான கூலிக்கு இயன்முறை மருத்துவர்கள் கிடைப்பதை இந்த ஆணையமும், தனியார் கல்லூரி முதலாளிகளும்உறுதி செய்ய முடியும். தமிழகத்தில் தற்போது 200 சொட்சம் இயன்முறை மருத்துவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிவருகிறனர். அவர்களும் தொழில் நுட்ப பணியாளர்கள் என்ற தகுதியிலேயே பணியமர்த்தப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள இயன்முறை மருத்துவர்களின் சிகிச்சையைப் பெற நோயாளிகள், எம்பிபிஎஸ் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி நேரடியாக இயன்முறை சிகிச்சை பெற முடியாது. மாறாக தொழில் முறை வல்லுநர் பட்டப்படிப்பு (BPT) முடித்த, தகுதி உடைய, இயன்முறை மருத்துவர்களை பெரும் அளவில் வேலைக்கு அமர்த்தியுள்ள தனியார் மருத்துவமனைகள், சொற்ப கூலிக்கு தொழில்நுட்ப பணியாளர்களாக(Technician) ,அவர்களின் தொழில்முறை நிபுணத்துவ உழைப்பின் பலனை எவ்வித உரிமைகளும் இன்றி சுரண்டி வருகின்றனர்.
உதாரணமாக பல நூறு படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையில் 5-10 பிசியோதெரபி மருத்துவர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாறாக சில நூறு படுக்கைகள் கொண்ட தனியார் மருத்துவமனையில் 20-50 பிசியோதெரபி மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒரு புறம் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு இயன்முறை மருத்துவம் என்பதே கிடைக்கப்பெறாத அவலமும்,மற்றொரு புறம் தனியார் துறையின் இலாபத்திற்கு பலியாவதும் அக்கம் பக்கமாக நிகழ்வது சமூக ஏற்றத்தாழ்வினை பிரதிபலிக்கும் அம்சமாகும்.
படித்து பட்டம் பெற்ற வேலையில்லா இளைய தலைமுறையினரை ,மக்களை தேடி மருத்துவம் என்று விளம்பரம் செய்து வீட்டிற்கே இயன்முறை மருத்துவம் வழங்குகிறேன் என்ற பெயரில் மாதம் ரூ.11000க்கு இளைய தலைமுறை இயன்முறை மருத்துவர்களின் இலவச உழைப்பை பெற்று, மாற்றுத்திறனாளிகளின் நலன் விரும்பி பதக்கத்தை நெஞ்சில் ஏந்தியுள்ளது திமுக அரசு.
இத்தகைய சூழலுக்கு உட்படாமல் விதிவிலக்காகஇருந்தது, தனியாக கிளினிக்குகளை நடத்தி வரும் இயன்முறை மருத்துவர்கள் மட்டுமே ! இப்படி விதிவிலக்காக இருக்கும் தனியார் கிளினிக் இயன்முறை மருத்துவர்களுக்கு, இந்த உத்தரவால் சாவு மணி அடித்துள்ளது தமிழக அரசு.
பிற மருத்துவர்களின் ஆலோசனை தேவைப்படாத, ஆனால் இயன் முறை மருத்துவர்களால் சுயமாக சிகிச்சை அளித்து சரி செய்யக்கூடிய நிலையில் உள்ள நோயாளிகள் நேரடியாக இயன்முறை மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலமாக மக்களின் நேரமும் செலவும் பெரிதும் குறைகிறது என்பது நிதர்சனமான உண்மை. தமிழக அரசின் இந்த உத்தரவின் மூலமாக நோயாளிகள் தேவையற்ற வகையில் வேறு மருத்துவர்களை சந்தித்து, அவர்களிடம் பரிந்துரை பெற்று, அவர்களுக்கும் கட்டணம் செலுத்திய பிறகு தான் இயன்முறை மருத்துவர்களிடம் சிகிச்சை பெறவேண்டும் என்பது மிகுந்த கால விரயத்தையும் பணவிரயத்தையும் ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. மக்கள் அல்லல் பட்டாலும் பரவாயில்லை ஆனால் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கொழிக்க வேண்டும் என்ற நோக்கில் போடப்பட்டுள்ள இந்த உத்தரவு மக்கள் நலனுக்கு எதிரானது.
இதையும் படியுங்கள்:
- திருச்சி பெல் மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் போராட்டம் வெல்க!
- மருத்துவர் கனவை எட்டாக்கனியாக்கும் நீட் தேர்வு!
இத்தகைய நடவடிக்கைகளால் சங்கிலி தொடர் இயன்முறை மருத்துவ சேவையை வழங்க 5000 கோடியை ஆதித்தியா குழுமம் மூலதனத்தை இறங்கியுள்ளது. மேலும் அப்போலோ (Apollo) மற்றும் தொழிநுட்ப (Tech Gaints:Practo,Facebook) ஏக போக நிறுவனங்களும்கை கோர்த்து இறங்குவதன் மூலம் எவ்வித உரிமைகளும் இல்லாத கிக் (Gig ) தொழிலாளர்களாக இயன்முறை மருத்துவர்களை ஆக்கும் ஆபத்து உள்ளது. இப்படி இயன்முறை மருத்துவர்களை கார்ப்பரேட் நலன்களுக்காக காவு கொடுக்க எத்தனித்துள்ள ஒன்றிய அரசையும் அந்த நடவடிக்கைகளுக்கு ஒத்தூதும் மாநில அரசுகளையும் எதிர்த்து போராட வேண்டும். இந்த போராட்டம் என்பது இயன்முறை மருத்துவர்களின் நலனுக்கானது மட்டுமல்ல, மக்களின் நலனுக்கானதும் கூட என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இத்தகைய “மக்கள் நலன் விரோத,தகுதி குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு” தெரிவித்து இந்திய இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பில், கடந்த வாரம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வரும் 18ஆம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், இயன்முறை மருத்துவர்களின் இந்த போராட்டங்களை ஆதரிப்போம். அவர்களின் கோரிக்கைகளை வெற்றிபெறச் செய்வோம் !.
Dr. கா.ராம்மோகன்
இயன்முறை மருத்துவர்.