மூத்த கம்யூனிச அறிவுத்துறையினரோடு விவாதிப்பது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி தரும் விசயம்.  மூத்தவர்கள் என்பதாலேயே   கட்சிவழியை அப்படியே எழுத்து மாறாமல் ஏற்றுப் பேசுகிற  நிர்ப்பந்தத்தை அவர்கள் வைத்துக் கொள்வதில்லை; ஆனால், அதேநேரம் அவர்கள் அனுபவ அறிவோடும் வசீகரத்தோடும் நயமான நாகரிகத்தோடும் செழுமையும் ஈர்ப்பும் கலந்த தீராநம்பிக்கை கொப்பளிக்க எதிர்காலத்தை எதார்த்தமாகப் பார்க்கும் பார்வை அவர்களிடம் உண்டு.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை  (JNU) வளாகத்தில் பணியாற்றிய நாட்களில் அப்படிப்பட்ட இரண்டு மூத்த கம்யூனிஸ்டுகளோடு அருகே வாழும் வாய்ப்பு பெற்றேன்; சக ஆசிரியர் குவாதீருடைய இரண்டு சகோதரிகளை அவர்கள் மணம் முடித்திருந்தார்கள். ஒரு தோழர் அஷ்ரஃப், பீகார் கம்யூனிஸ்டுக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். உருது மொழியில் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” யை முதன்முதலாக  முழுமையாக மொழியாக்கம் செய்தவர். ( கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் சாரத்தைச் சுருக்கி முதலில் மொழியாக்கம் செய்தவர்  மவுலானா ஆசாத் என்பதை நாமறிவோம்.) ஆனால் அவரோடு பல விவாதங்களில் ஈடுபட வாய்ப்பில்லாமல் போயிற்று.

மற்றொரு தோழர் ஜியாவுல் ஹஸன், இவர் அஷ்ரஃபின் நண்பர். இவரும் பீகாரிலிருந்து வரும் மூத்த கம்யூனிஸ்டு. இவர் அநேக வருடங்கள் காஷ்மீரில் கட்சிவேலை செய்தவர் ; அந்நாட்களில் அவர் “நாட்டுப் பற்றாளர்”  ( Patriot : பேட்ரியட் ) என்ற பத்திரிக்கை ஆசிரியர் குழுவில் இருந்தார்.

ஹஸனோடு வளாகத்தில் பேசுவதும் விவாதிப்பதுமாகக் கழித்த நாட்கள் சுவாரசியமானவை. ஆனால், பல்கலைக் கழகத்தின் பல விவகாரங்களில் நானும் என் நண்பர்களும் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் பல பொறுப்பற்றவை என்பது அவரது கருத்து; அந்நாட்களில் அவரது இதயம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது; சிகரெட் பிடிக்கக்கூடாது என்பது அவருக்குப் போடப்பட்ட கண்டிப்பு. “ஒரே ஒரு சிகரெட்” என்று அவரது மகள் சபாஹஸனுக்குத் தெரியாமல் ரகசியமாக என்னிடம் கேட்டுவாங்கிப் பிடிப்பார். (அப்போதெல்லாம் நான் புகை பிடித்துக் கொண்டிருந்தேன்.) அந்தப் பழைய நாட்களில் என்னைக் குற்ற உணர்வில் தள்ளிவிடுவார். இப்போது ஸபா புகழ்பெற்ற ஓவியராகிவிட்டார்.

அந்நாட்களில் ஜியா பாய்  (அவரை நாங்கள் அப்படித்தான் அழைப்போம் ) விவாதித்துவந்த ஒரு விசயம் என் நினைவில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அப்போது பல்கேரிய கம்யூனிஸ்ட்டான தோழர் திமித்ரோவ் மீது “ஜெர்மன் நாடாளுமன்றத்துக்குத் தீ வைத்துவிட்டார்” என்ற பொய்வழக்கு இட்லரால் போடப்பட்டு அது நிருபிக்கப்படாததால் பின் விடுதலை செய்யப்பட்டிருந்தார்;

தோழர் டிமிட்ரோவ்

பின்னர்,  திமித்ரோவ் கம்யூனிச அகிலத்தின் தலைவராக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் “ஐக்கிய முன்னணி செயல்தந்திரம்” என்ற கோட்பாடு அவரால் முன்மொழியப்பட்டது. சமூகஜனநாயகவாதிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்குமிடையே மட்டுமல்லாமல், பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணியில் முதலாளித்துவ அரசியல் பிரிவினர்களையும்கூட இணைத்துக்கொள்ளவேண்டும் என்று திமித்ரோவ் வரையறுப்பு கொடுத்தார். இந்த ஐக்கிய முன்னணி முன்பே ஏற்பட்டிருக்குமானால் இட்லர் ஆட்சிக்கு வருவதையே கூட அது தடுத்து நிறுத்தியிருக்கும்.  வெகுவிரைவிலேயே பாசிசத்துக்கு எதிரான ஐக்கியமுன்னணி செயல்தந்திரத்தை  உலக அளவில் எல்லா கம்யூனிஸ்டுகளும் வரவேற்றனர், ஏற்றனர். பாசிசத்துக்கு எதிரான கட்டத்தில் மட்டுமல்ல, மற்ற எல்லா சந்தர்ப்பங்களிலும்கூட , திமித்ரோவின் கோட்பாடு குறிப்பிட்ட சூழ்நிலையையும் தாண்டி பொதுமுக்கியத்துவமும் வாய்ந்தது என்று வாதிட்டார் ஜியா பாய்.

இதையும் படியுங்கள்: இலங்கை: தேவை புரட்சிகர கட்சி – ஐக்கிய முன்னணி – படை எனும் மந்திர ஆயுதங்கள்!

ஜியா பாயின் நிலைப்பாட்டை நான் பெருத்த ஈடுபாட்டோடு கவனித்தேன் ; ஆனால், திமித்ரோவ் கோட்பாட்டை பொத்தாம்பொதுவில் விரிவாக்குவது பிரச்சினையை உருவாக்கக் கூடியதே என்றும் கருதினேன். பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில், ஒரேஒரு எளிய பொதுநிகழ்ச்சிநிரல் மட்டுமே உண்டு; பாசிஸ்டுகளை முறியடிப்பதே அது. ஆனால் ஐக்கிய முன்னணி என்பதையே (எல்லாக் காலங்களுக்குமான)  பொதுச் செயல்தந்திரமாக்கினால், முன்னணியைச்சுற்றி குறிப்பான திட்டம் வைப்பது எப்போதும் முதன்மையாக வந்துநின்றுகொள்ளும். தற்போது உலக அரசியல் பிரச்சினை சம்பந்தமாக ஜெர்மன் இடது கட்சியில் (Die Link) உடைப்பு நேர்ந்துவிட்டது.

Die Link – கட்சியின் ஒரு பிரிவு சமூக ஜனநாயகவாதிகளுடன் ஐக்கிய முன்னணி கட்டுவதென்ற பெயரில் அரசாங்கத்தில் சேரவேண்டும் என்று விரும்புகிறது. இதற்காக குறிப்பான இன்றைய நிலையில் உக்ரைன் போர் சம்பந்தமாக தற்போதுள்ள சமூகஜனநாயகவாதிகள் தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்க வேண்டி நேரும். அதாவது, ரசியாமீது தடைகள் ஏற்படுத்தவேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஆனால், அத்தடைகளால் வீடுகளுக்கு பகிரப்படும் எரிவாயு நிறுத்தப்பட்டுள்ளது ; குளிர்காலத்தில் ஜெர்மன் தொழிலாளிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்; நாடுமுழுவதும் இதற்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இச்சூழலில் ஐக்கிய முன்னணி நடைமுறை வைப்பது தொழிலாளிகளிடமிருந்து இடது கட்சியை அந்நியப்படுத்திவிடும். சுருங்கச் சொன்னால், தொழிலாளிவர்க்கத்தை  எடுத்து பாசிஸ்டுகளிடம் ( AfD ) தூக்கிக் கொடுத்ததாகிவிடும் ; தற்போது தொழிலாளிகள் படும் கஷ்டங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கின்ற இவர்கள்  ஐக்கிய முன்னணிக் கண்ணோட்டத்தில் அதிகாரத்துக்கு அருகில் சென்றுவிட்டால் என்ன நிலைப்பாடு எடுத்து எப்படிச் செயல்படுவார்கள் என்பதைச் சொல்லவே முடியாது.

OskarLafontaine

இக்காரணத்தினாலேயே லிங்க் (Die Link) கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான ஆஸ்கார் லஃபோன்டீன் (இவர் தற்போது தீவிர நடைமுறைகளைக் குறைத்துவிட்டார்) மற்றும் நாடாளுமன்றக் குழுவின் தலைவர்களில் ஒருவரான சாஹ்ரா வாகுன்நெக்ஷ்ட் இருவரும் அரசின் கொள்கையை எதிர்த்துள்ளார்கள். ஜெர்மனி அரசை “அமெரிக்க அடிமை” என்று ஆஸ்கார் விமரிசித்துள்ளார் ; சாஹ்ராவோ ஜெர்மன் அரசைப்போல “ஐரோப்பாவிலேயே முட்டாள்தனமான ஒரு அரசை”  எங்கும் பார்க்கமுடியாது என்று சொல்லி எள்ளிநகையாடியுள்ளார். வாகுன் நெக்ஷ்ட் அரசுக்கெதிராகத் தொழிலாளர்களை அணிதிரட்டிப் போராடவேண்டும் என்கிறார்; அதாவது, ஐக்கியமுன்னணிச் செயல்தந்திரத்துக்கே அங்கே கொஞ்சமும் இடமில்லாமல் போய்விடும்.

இந்தியாவிலும் இதேபோல இரண்டகநிலை ஏற்படக்கூடும். இந்திய ஆளும்வர்க்க புதிய பாசிச சக்திகள் புதிய தாராளவாத நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தி வருகின்றன; கார்ப்பரேட் – இந்துத்துவக் கூட்டின் விளைவாகவே இந்த புதிய பாசிச சக்திகள் அரசியல் அரங்கில் தீவிரமாகியுள்ளன ; புதிய தாராளவாத நெருக்கடிச் சூழ்நிலையில் அதைத் தாங்குவதற்கு ஒரு ஆதாரம் தேவைப்படுகிறது; இந்துத்துவா அதைக் கொடுக்கிறது ; பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தும் பலவிதப் பிரச்சினைகளைத் திசை திருப்ப இந்துத்துவா பயன்படுத்தப்படுகிறது – எல்லாவற்றுக்கும் காரணம் வழிவகையற்ற, போக்கற்ற சிறுபான்மை மக்கள்தான் என்று பழிதூற்ற, வெறுப்பைப் பரப்பி அவதூறு செய்ய  இந்துத்துவா தயாராக உள்ள, சுலபமான, விஷக்கருவியாகியுள்ளது.

ஒரு ஐக்கிய முன்னணி — புதிய பாசிஸ்டுகளுக்கு எதிராக நடைமுறைக்குப் போகவேண்டுமானால் — அது “மக்கள்நல அரசைக் கட்டும் திசைநோக்கிய நிகழ்ச்சிநிரலோடு பயணப்பட்டாகவேண்டும்; நாட்டின் எல்லைதாண்டிச் செல்லும் மூலதனத்தைக் கட்டுப்படுத்தியாகவேண்டும் ; அதற்குத் தக்கவாறு கட்டுப்பாடுகளை விதிப்பதும் அவசியம். (அந்த அளவு புதிய தாராளவாத உலகமயத்திலிருந்து வெட்டிப் பிரிக்கப்படவேண்டும்.) அவ்வாறு செயல்படுத்தவில்லையானால், ஆட்சி அதிகாரத்திலிருந்து புதிய பாசிஸ்டுகளை அப்புறப்படுத்தினாலும், சிலகாலம்  கழித்து அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள்.

எந்தச்சூழ்நிலை இணைப்பில் புதிய பாசிசம் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டுவரப்பட்டதோ, அதைக் கீழ் அடக்காமல் வெல்லமுடியாது; அதற்கேற்ற ஒரு திட்டமில்லாமல்  ஒரு ஐக்கியமுன்னணி சூழ்நிலையை மாற்றவும் முடியாது. அவ்வாறு ஊடுருவிப் பரவும் ஆற்றல் கொண்ட ஐக்கிய முன்னணி தேவை. அதை நாடிச்செல்ல, அது எவ்வளவு விருப்பமாக இருந்தாலும் கூர்மையான கவனத்தோடு  ஒரு திட்டம் உருவாக்கப்படவேண்டும்.

பிரபாத் பட்நாயக்

தி டெலகிராஃப் இந்தியா,

07.12.2022.

மொழி ஆக்கம் : பா. மணி.

குறிப்பு: பிரபாத் பட்நாயக்  :  JNU, புதுடெல்லி பொருளாதார ஆய்வு மையத்திலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ; ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை  (NEP, 2020) எதிர்த்துப் போராடி வருபவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here