ந்தியாவில் மக்கள் வசிக்கும் பல கிராமங்களில் சாலைகள் இல்லாமலும் பாலங்கள் இல்லாமல் ஆற்றை கடந்து செல்லும் அவலம் இன்னும் நீடிக்கிறது. இதைப்பற்றி கவலை கொள்ளாத அரசு, 8 வழிச் சாலை, 6 வழிச்சாலை அமைக்க விளைநிலங்களை கைப்பற்றுவதும், உழைக்கும் மக்களின் குடியிருப்புகளை அகற்றுவதும் யாருக்காக?

பெரம்பலூரில் இருந்து மானாமதுரை வரை தேசிய நெடுஞ்சாலை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நகரப்பகுதி வழியாக செல்கிறது. திருவையாறில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இந்த சாலை புறவழிச்சாலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூபாய் 191 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த சாலையானது பெரும்புலியூர், மணக்கரம்பை, கண்டியூர், கீழ்திருப்பூந்துருத்தி, கல்யாணபுரம் , திருவையாறு உள்ளிட்ட கிராமங்களை கடந்து செல்லும் புறவழிச்சாலையாக அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

நெல் வயலுக்குள் சாலை 

இந்த சாலை செல்லும் வழிகள் எல்லாம் தென்னை, வாழை, நெல்வயல்கள் நிரம்பிய விவசாய பகுதியாகும். தற்போது சம்பா விவசாயம் நடைபெற்று வருகிறது. பச்சை பசேலென வளர்ந்த நெல்வயல்களில் கற்களையும், மணலையும் போட்டு நிரப்பி புல்டோசர் கொண்டு நிரவி வருகிறார்கள். 70 நாட்களாக குழந்தைகளைப் போல் பார்த்து பராமரித்து வளர்ந்த நெற்பயிர்களை அழிப்பதைக் கண்டு விவசாயிகள் மனம் பதறி கண்ணீருடன் போராட்டம் நடத்துகிறார்கள்.

சாலை அமைப்பதற்கு எதிராக போராடும் விவசாயிகள்

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார். தான் விளைவித்த பயிர் செழிப்பாக வளர்ந்து நிற்கையில் அதன் மீது மண் கொட்டி ரோடு போடுவதை விவசாயிகள் வேடிக்கையா பார்ப்பார்கள். சாலை அமைக்கும் பணியை நிறுத்தப் போராட ஆரம்பித்தார்கள். விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகளின் போராட்டத்தால் சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

விவசாயிகள் கூறுகையில் “இந்த பகுதியில் வாழை, மா, வெற்றிலை என விவசாயம் செழிப்பாக நடக்கும் பகுதி. இதை அழித்து சாலை அமைக்கிறது அரசு. கடந்த ஆட்சியில் அவசரகதியில் போடப்பட்ட ஒப்பந்தம் தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையை அமைக்க வந்துள்ளார்கள். இழப்பீடும் இதுவரை வழங்கவில்லை விவசாயத்தை அழித்து போடப்படும் சாலை என்றால் அப்படிப்பட்ட சாலை எங்களுக்கு வேண்டாம்” என்கிறார்கள்.

அதிகார வர்க்கத்தை வைத்து மிரட்டும் அரசு 

சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக காவல்துறையை வைத்து விவசாயிகள் மிரட்டப்படுகிறார்கள். கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை அறிவிக்கப்பட்ட அன்று பத்திரிக்கை விளம்பரத்தில் நிலம் சட்டப்படி 29.06.21 அன்று கையகப்படுத்தப்பட்டு விட்டது. ஆகையால் யாரும் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதோ, விவசாய பணிகள் செய்வதோ சட்டத்திற்குப் புறம்பானது என்றும், மீறுபவர்கள் கடும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் எனவும் தேசிய நெடுஞ்சாலை அலுவலகம் தஞ்சாவூர் சார்பில் பிரபல நாளிதழில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி விவசாயிகளை அச்சுறுத்துவதாகவே உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இரட்டைவேடம் போடும் திமுக 

கடந்த அதிமுக ஆட்சியில் 8 வழி சாலையை தீவிரமாக எதிர்த்த திமுக தற்போது அந்த எதிர்ப்பு மனநிலையிலிருந்து மாறி உள்ளது. 8 வழிச்சாலை குறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில் நாங்கள் 8 வழி சாலை வேண்டாம் என்று சொல்லவில்லை எனவும், போக்குவரத்து நெரிசல் அதிகமாவதாலும், வாகனங்கள் பெருகி வருவதாலும் சாலை விரிவாக்கம் தேவை என்கிறார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அளித்த தேர்தல் வாக்குறுதியில்; வாக்குறுதி 43: விவசாயிகளுக்கு எதிரான சென்னை – சேலம் 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படாது என்று கூறி உள்ளார்கள். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் ”சேலம் பசுமை விரைவு சாலை திட்டத்தை மக்களின் ஒத்துழைப்பும், ஒப்புதலின்றி சர்வாதிகார மனப்பான்மையுடனும், அரசு பயங்கரவாதத்தை வைத்துக்கொண்டும் நிறைவேற்றிட முடியாது என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உணரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவதும், அறிக்கை வெளியிடுவதும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது கண்டுகொள்ளாமல் விவசாய நிலங்களை அழித்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுவதும் என இரட்டைவேடம் போடுகிறது.

தொடரும் அரசபயங்கரவாதம்

முன்னாள் அரசை விமர்சிக்கும் போது அரச பயங்கரவாதத்தை வைத்துக்கொண்டு திட்டத்தை நிறைவேற்றிட முடியாது என்று சொன்ன இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவையாறு விவசாயிகள் விஷயத்தில் அரச பயங்கரவாதத்தை கொண்டுதான் விவசாயிகளை மிரட்ட பார்க்கிறார். பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் விசயத்திலும் இதே முறையை தான் திமுக அரசு கையாள்கிறது.

இதையும் படியுங்கள்: விவசாயம் இல்லையென்றால் நாடு இல்லை!  தோழர்.நேருதாஸ்

6 வழிச் சாலைகள், 8 வழிச் சாலை என அத்துணை அதிவேக சாலைகளும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் சரக்குகளை தங்குதடையின்றி கொண்டு செல்வதற்கு ஏதுவாக, அமைக்கப்பட உள்ளது.சாலைகள் அமைப்பதற்கு விவசாயிகளின் விளைநிலங்களை நிலம்கையகப்படுத்தும் சட்டத்தை கேடாக பயன்படுத்தி கைப்பற்ற பார்க்கிறது அரசு. இந்த சாலைகள் அனைத்தும் ஒன்றிய அரசின் பாரத்மாலா, சாகர்மாலா திட்டத்தை உள்ளடக்கி தான் போடப்படுகிறது.

ஆளும் அரசுகள் மக்கள் மீது அரசபயங்கரவாதத்தை, அடக்குமுறையை செலுத்தினாலும் மக்களின் போராட்டத்தின் முன் அரசு அம்மணமாகத்தான் நிற்கும் என்பதை வரலாறு உணர்த்தியுள்ளது. போராட்டத்தின் மூலம் தான் நமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும். மீண்டும் ஒரு வரலாற்றை படைப்போம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here