“சில நேரங்களில் தீர்வே கண்ணுக்குத் தெரியாத வழக்குகள் எங்களிடம் வரும். அயோத்தி வழக்கும் அது போன்ற ஒன்றுதான். சுமார் மூன்று மாதங்களாக அது என் முன்னால் பிரச்சினையாக இருந்து வந்தது. அப்போது கடவுள் முன் உட்கார்ந்து அவரிடம் இதற்கு தீர்வு கேட்டேன். தீர்வு கிடைத்தது.
(என்னை) நம்புங்கள். நம்பிக்கை இருந்தால் கடவுள் ஒரு வழி காட்டுவார்.”
என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் புனேவில் ஒரு நிகழ்வில் அயோத்தி பாபர் மசூதி இருந்த இடம் குறித்த வழக்கைக் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.
அவரது இந்த கூற்று நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவெளியில் ஜனநாயகம் குறித்தும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நீதிமன்றங்களின் பாத்திரம் குறித்தும் தொடர்ந்து உரையாற்றும் லிபரல் முகம் கொண்ட, ஒரு நீதிபதியாக அறியப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்படி பேசியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்திய நீதித்துறை குறித்தும் தற்போது அது காவி பாசிசமயமாக்கப்பட்டுள்ளது குறித்தும் புரிதல் உள்ளவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சி கொடுக்கக் கூடியதல்ல. நீதிபதிகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்காமல் கடவுளின் ஆணைப்படியும், பெரும்பான்மை மக்கள் கூட்டு மனசாட்சியின்படியும் தீர்ப்புகள் வழங்குவதை பார்த்து வந்துள்ளோம். பார்த்து வருகிறோம்.
பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கை மட்டும் எடுத்துக் கொண்டாலே பாபர் மசூதிக்குள் 1949இல் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை, இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்தரவை 1986இல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991இல் வெளியிட்ட தனது சுய சரிதையில்
“பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40 க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலீசு கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்து கொண்டு அதனை வணங்கினேன்.” என்று பாபர் மசூதி வளாகத்தில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் தந்த கதையைக் கூறினார்
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களோ தான் ஓய்வுபெறும் முன்னரே பாபர் மசூதி இடத்தை சட்டபூர்வமாக இல்லையில்லை, தெய்வவாக்குபடி ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பலிடம் ஒப்படைத்தது பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தன் வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் மோடியை பங்கேற்க செய்ததன் மூலம் நீதித்துறைக்கும் ஆட்சியில் உள்ளவர்களுக்கும் இருக்க வேண்டிய இடைவெளியை இல்லாமல் செய்து புதிய முன்னுதாரணத்தை உருவாக்கியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி டி.ஒய். சந்திரசூட்: நம்பத்தகுந்த நீதிமானா?
அயோத்தி பாபர் மசூதி இடத்தை ராமர் கோயில் கட்ட வழங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளில் எவரும் தாங்கள் தான் தீர்ப்பை எழுதியது எனக் குறிப்பிடவில்லை. அந்த தீர்ப்பு இதுவரை மொட்டை கடுதாசியாகவே இருந்து வருகிறது. அந்த மொட்டை கடுதாசி தீர்ப்பு அரசியல் அமைப்புச் சட்டப்படி எழுதப்படவில்லை. கடவுள் தான் வழிகாட்டியதாக சந்திரசூட் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆதாரங்கள், வழக்கறிஞர்கள் வாத, பிரதிவாதங்கள் என பலவற்றையும் கேட்ட பிறகும் தன்னால் தீர்வுகாண முடியாத வழக்குகளைப் பற்றி சந்திரசூட் என்ன முடிவு எடுத்திருக்க வேண்டும்.
நியாயமாக அந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால் அதை சந்திரசூட் செய்யவில்லை.
பல வருடங்களாக வழக்கு நடந்த பிறகும் சட்டப்படி தீர்ப்பு வழங்க எது தடையாக இருந்தது என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.
இந்திய நீதித்துறையின் நம்பிக்கை நட்சத்திரம் என்று விதந்தோதப்பட்ட தலைமை நீதிபதி சந்திரசூட்டின் அருகதையே இதுவாக தான் உள்ளது.
பாபர் மசூதிக்குள் குழந்தை ராமர் சிலை திருட்டுத்தனமாக வைக்கப்பட்டது ஊரறிந்த கதை. அயோத்தி பாபர் மசூதி இடிப்பு என்பது இந்தியாவின் வரலாற்றில் கரும்புள்ளி. பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பது கட்டுக்கதை. அந்த இடத்தில் பாபர் மசூதி நீண்ட காலம் இருந்தது 400 ஆண்டுகால வரலாறு.
இவையனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தெரிந்தே இருக்கும். இருந்தும் அந்த வழக்கில் தீர்ப்பு எழுத என்ன நெருக்கடி? அவர் சொல்லாமலேயே நாம் அதை புரிந்து கொள்ளலாம். அந்த வழக்கில் தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் தற்போது வகிக்கும் அரசு பதவிகள் தான் அதற்கு பதில்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில் நீதிபதியாக தன் பணிகாலத்தை மக்கள் எப்படி நினைவுகொண்டிருப்பார்கள் என்று கவலையுடன் பேசி வருகிறார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் நிறுவனங்களின் சுயாட்சியை மீட்டெடுக்க (தேர்தல் ஆணையர்களை நியமித்தல், அமலாக்கத்துறை இயக்குநர் நியமனம், உயர் நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்), பாஜக ஆளும் மாநில அரசுகள் (உ.பி., ம.பி மற்றும் உத்தரகாண்ட்) புல்டோசர் ஆட்சி செய்வதை தடுக்க, பெகாசஸ் வழக்கில் குடிமக்களின் மீதான சட்டவிரோத கண்காணிப்பைத் தடுக்க, காஷ்மீர் சிறப்பு சட்டம் 370 நீக்கியதை செல்லாததாக்க, PMLA, UAPA வழக்குகளின் மூலம் அரசை விமர்சிப்பவர்களை நீண்ட காலம் சிறை வைப்பதை தடுக்க எனப் பல வாய்ப்புகளைப் பெற்றார். அதை எதையும் மக்களுக்காக பயன்படுத்தவில்லை.
மேலும், தேர்தல் செயல்பாட்டில் நம்பகத்தன்மையைக் கொண்டு வர (தாள் வாக்குச் சீட்டுக்கு திரும்பவும் அல்லது நூறு சதவீத சரிபார்ப்பு மற்றும் வி.வி.பேடுகளை பொருத்தவும் மீண்டும் மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன), அதன் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் (வாக்காளர் எண்ணிக்கையை பதிவேற்றுவதில் தாமதம், வெளியிடாதது, படிவம் 17C, பதிவான வாக்குகள் மற்றும் எண்ணப்பட்ட வாக்குகளில் பொருந்தாதது, அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மீது மாதிரி நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தவறியது) என அவர் தவறிய விஷயங்கள் அதிகம். தேர்தல் பத்திரங்கள் வழக்கில் சிறப்பான தீர்ப்பை வழங்கியிருந்தாலும் அதுவும் தாமதமாகவே வழங்கப்பட்டது.
இதையெல்லாம் தனிநபராக அவர் சாதித்துவிட முடிந்திருக்கும் என்பதல்ல. அதற்கான முயற்சியே அவர் எடுக்கவில்லை என்பதுதான் எதார்த்தம். ஆளும் பாசிச பாஜக அரசுக்குச் சாதகமாகவே பல முடிவுகளையும் எடுத்தார். இப்படிதான் அவரை இந்திய சமூகம் நினைவுகூறும்.
சந்திரசூட் மட்டுமல்ல எந்த தனிநபரை நம்பியும் நமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாது. நம்மை ஏறித் தாக்கி வரும் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை மக்களாகிய நாம் ஓரணியில் திரண்டு ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை நிறுவ போராடுவதே தீர்வைத் தரும்.
திருமுருகன்