அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் அயல் மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பான கவலை தீவிரமாகியுள்ளது. வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களைத் தாக்குகின்றனர்; தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது எனப் போராடுகின்றனர்; போதைப் பொருட்கள் கடத்துகின்றனர்; கொலை-கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவை போன்ற பீதியூட்டும் செய்திகள், வதந்திகள், பேச்சுகள் நம்மை நிதானம் இழக்கச் செய்கின்றன. அண்மையில், ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் “2 கோடி வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்” என்றும், ‘நான் முதலமைச்சாரானால் அவர்கள் மீது கஞ்சா, கொலை, கொள்ளை வழக்கு போட்டு அச்சுறுத்தி வெளியேற்றுவேன்’ என்றும் பேசியது பரவலான கவனத்தைப் பெற்றது. இதுபோன்ற பேச்சுகளாலும் இன்னும் பல காரணங்களாலும் அயல் மாநிலத் தொழிலாளர்கள் மீது மக்களிடையே ஒருவித வெறுப்புணர்வு தோன்றி வளர்ந்து வருவதைக் காணமுடிகின்றது.

இந்தியாவில் இடம்பெயரும் தொழிலாளர்கள்

தொழிலாளர் இடப்பெயர்வுச் சிக்கலைப் பற்றி அறிய முயன்றபோது, முதலில் கண்ணில் பட்டது தகவல் பற்றாக்குறைதான். இந்தப் பற்றாக்குறை பலவித இயல்புகளைக் கொண்டது. 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பெருந்தொற்று பேரிடராலும், தேசிய மக்கள் பதிவேடு சிக்கலாலும், இன்னும் இதர பல சிக்கல்களாலும் தள்ளிப் போய்கொண்டுள்ளது. அனேகமாக 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடியும் வரையிலும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்காது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு குழு உறுப்பினராகவும் பதிவுத் தலைமை அலுவலராகவும் பணியாற்றி வந்த கே. நாராயணன் உன்னி தெரிவிக்கின்றார். இதனால் அண்மைக்கால பொதுவான நிலவரம் நமக்குத் தெரியவில்லை.

2011ம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஒட்டுமொத்த இந்தியாவில் இடம்பெயரும் தொழிலாளர் எண்ணிக்கை 45 கோடி பேர். இதில் மாவட்டங்களுக்குள் இடம்பெயர்ந்தோர் 11 கோடி பேர்; மாவட்டம் கடந்து ஒரே மாநிலத்திற்குள் இடம்பெயரும் தொழிலாளர் எண்ணிக்கைத்தான் அதிகம், 28 கோடி பேர்; மாநிலங்களுக்குள்தான் தொழிலாளர் இடப்பெயர்வு மிக வேகமாக வளர்ந்து செல்கிறது. மாநிலம் கடந்து இடம்பெயரும் தொழிலாளர் எண்ணிக்கை 5 கோடி பேர் மட்டுமே. இது ஒட்டுமொத்த இந்தியாவின் சித்திரம். இந்தச் சித்திரம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் வயது, பாலினம், தொழில், இருப்பிடம் குறித்த அட்டவணை விவரங்களிலிருந்து தருவிக்கப்படுகின்றது.

ஆகவே எந்தெந்த மாவட்டங்களிலிருந்து, மாநிலங்களிலிருந்து எந்தெந்த மாவட்டங்களுக்கு, மாநிலங்களுக்கு, நாடுகளுக்கு தொழிலாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்ற துல்லியமான விவரத் தொகுப்பு ஒன்றிய, மாநில அரசுகளிடம் இல்லை. இது இடம்பெயரும் தொழிலாளர் குறித்த சிக்கலின் முதல் அம்சம். உள்நாட்டிற்குள்ளும், ஏன் அயல்நாட்டிற்கும்கூட இடம்பெயரும் தொழிலாளர்கள் குறித்த துல்லியமான விவரங்கள்கூட ஒன்றிய, மாநில அரசுகளிடம் இல்லை என்பது விநோதம்தான். ஆய்வுகளில் இதுகுறித்த விவரங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புகளிலிருந்தும் தேசிய மாதிரி சுற்றாய்வுகள் விவரங்களிலிருந்தும் (NSS) தருவிக்கப்படுகின்றன. இதற்கு சற்று விதிவிலக்காக கேரளம் மாநிலம் மட்டும், The Kerala Migration Suvey (KMS) மூலமாக மேலும் துல்லியமான விவரங்களையும் பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

தமிழ்நாட்டில் அயல் மாநிலத் தொழிலாளர்கள்

இடம்பெயரும் தொழிலாளர்கள் குறித்த சிக்கலில் இரண்டாவது முக்கியமான அம்சம், தமிழ்நாட்டிற்கு எந்த அளவிற்கு அயல் மாநிலத் தொழிலாளர்கள் வருகின்றார்களோ, அந்த அளவைவிட அதிகமாகத் தமிழ்நாட்டிலிருந்து தொழிலாளர்கள் அயல் மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் வெளியேறி வருகின்றார்கள்.

1991 2001 2011
தமிழ்நாட்டிற்குள் வரும் தொழிலாளர்கள் 8,42,996 7,27,172 16,50,771
தமிழ்நாட்டிலிருந்து வெளியேறும் தொழிலாளர்கள் 14,04,758 16,68,200 19,85,157
பற்றாக்குறை தொழிலாளர் எண்ணிக்கை 5,61,762 9,41,028 3,34,386

தமிழ்நாட்டில் உடல் உழைப்பாளிகள் உழைக்காமல் இருக்கவில்லை. தமிழ்நாட்டில் கடந்த  முப்பது ஆண்டுகளாக கூலி விகித உயர்வு காணப்பட்டாலும், மாவட்டங்களிடையேயும் வேலைவாய்ப்பு துறைகளுக்கு இடையேயும் தீவிரமான கூலி விகித வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஓரளவு கூலி விகிதம் தேங்கிவிட்டது என்றும் விவரங்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது; அகில இந்திய சாராசரி கூலி அளவு குறைவாகவும்கூட உள்ளது. அதனால் தொடர்ந்து அதிக கூலி கிடைக்கும் வேலைகளைத் தேடி வெளியில் சென்றுகொண்டிருக்கிறார்கள். இதனால் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை, குறிப்பாக உடல் உழைப்புத் தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகின்றது என 1991, 2001, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் தெரிவிக்கின்றன. அயல் மாநிலத் தொழிலாளர்கள் பெரும்பகுதியினர், குறிப்பாக சத்திஸ்கர், ஒரிசா, பிகார், அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளர்கள் மிக மோசமான கொத்தடிமைத் தனத்திலிருந்து தப்பிப்பதற்கும் பெருநிறுவனக் கட்டுமானப் பணிகளிலும் ஏற்றுமதி சார்ந்த தொழில்முனைவு நிறுவனங்களிலும் உள்ள மலிவான கூலி உழைப்பிற்கும் வந்துகொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அயல் மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை: 34,87,974 [(2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி) 2022 ஏப்ரல் மாதம் ஒன்றிய அரசு தொழிலாளர் – வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவல்] என்று தெரிவிக்கப்படுகின்றது. இதே மாதிரி தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயந்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை மதிப்பீடு: உள்நாட்டில் 19 இலட்சம் பேர்; வெளிநாடுகளுக்கு 22 இலட்சம் பேர்; மொத்தம் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் 41 இலட்சம் பேர் (இந்த மதிப்பீடு 17வது NSS விவரங்களிலிருந்து தருவிக்கப்பட்டது. இந்த மாதிரி ஆய்வுக்கு 20,000 குடும்பங்கள் ஆய்வுத் தரவாகக் கொள்ளப்பட்டன). இந்த எண்ணிக்கை இன்று சற்று அதிகமாகி இருக்கலாம். ஆனால், நமது மக்கள் தொகை பண்பையே மாற்றிவிடும் என்று பீதி ஏற்படும் நிலையில் இல்லை.

தமிழர் நலனுக்கு எதிரிகள் யார்?

நிலைமை இவ்வாறு இருக்க, இடம்பெயரும் தொழிலாளர்களை ஆதாரமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் வெறுப்பு அரசியல் தமிழ்நாட்டில் வளர்ந்துசெல்வதாகத் தோன்றுகிறது. இதில் முன்னணியில் நின்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் பேச்சாளர்களும் ஆதாரமற்ற வெறுப்புப் பேச்சுகளைத் தொடர்ந்து பேசிவருகின்றனர். அக்கட்சியினர், தேர்தல் அரசியலில் பெரும்பான்மை வாக்குகளை ஈர்ப்பதற்காகவும்; ஏற்கனவே நடப்பில் தேர்தல் அரசியல் பேச்சுகளிலும் நடைமுறையிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற பார்ப்பனரல்லாத – திராவிட இயக்க அரசியல் உணர்வை மழுங்கடித்து அழிப்பதற்காகவும் தமிழ் சாதிகள் X தமிழர் அல்லாத சாதிகள் என்ற அரசியல் பாகுபாட்டைக் கட்டி எழுப்பி வருகின்றனர். இதைப் போலவே வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த வாதங்களை, வடக்கு – வடகிழக்கு இந்தியாவில் இந்துத்துவ பாரதிய ஜனதா கட்சி செய்தது போலவே, முன்வைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: பஞ்சம் பிழைக்க வரும் வட மாநிலத்தவர்கள் நம் எதிரிகளா?

நாம் தமிழர் கட்சியினர், ஒரே நேரத்தில் அயல் மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டை அழிக்க, இந்துத்துவத்தை வளர்க்க வடமாநிலத்திலிருந்து திட்டமிட்டு குடியேற்றப்படுகின்றனர் என்றும்; பங்காளதேஷிகள் (இதன் பொருள் முஸ்லிம்கள்) திட்டமிட்டு குடியேறி தமிழ்நாட்டுப் பண்பாட்டை அழிக்கின்றனர் என்றும்; கொலை – கொள்ளை – குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் பேசிவருகின்றனர்.

இந்த வாதங்களை அப்படியே இல்லையென்றாலும், இடம்பெயரும் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பது ‘வடவர் ஆதிக்கம்’ என்றும், இந்துத்துவத்தை வளர வைப்பதற்காக மக்களை மாற்றுகிறார்கள் என்றும் திராவிட இயக்கத் தோழர்கள் ஓவியா, ஜீவா ஆகியோர் பேசி வருகின்றனர்.

இந்த வெறுப்பு அரசியல் பேச்சுகள் உண்மை விவரங்களையும் பகுப்பாய்வு விளக்கங்களையும் ஏறெடுத்து பார்ப்பதில்லை எனத் தோன்றுகிறது. கார்ப்பரேட்டுகளையும் பெருவணிகர்களையும் அடகுகடைக்காரர்களையும் தொழிலாளர்களையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புகின்றது. தொழிலாளர் இடம்பெயர்தல் குறித்த கால இடப்பெயர்ப்பு. 18 – 35 வயது காலத்தில் மட்டுமே உழைப்பாளர் இடப்பெயர்கின்றனர்; பின்னர் ஊருக்குத் திரும்பி விடுகின்றனர். பெருவணிகர், அடகுகடைகாரர்கள், பல்வேறு கார்ப்பரேட் துறை பொதுத்துறை – வங்கித்துறை அலுவர்கள் நீண்ட காலம் தங்குகின்றனர்; அல்லது நிரந்தரமாகச் சொத்துகள் வாங்கித் தங்கிவிடுகின்றனர்.

இந்த வெறுப்புப் பேச்சு, கண்கூடாகப் புலப்படும் அயல் மாநிலத் தொழிலாளரைத் தமிழ்த் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்துகிறது. பார்ப்பனரல்லாதார் அரசியல், திராவிட இயக்க ஆட்சிகள் மக்களை / உழைப்பாளிகளைச் சோம்பேறி ஆக்கிவிட்டன; போதைக்கு அடிமை ஆக்கிவிட்டன; அதனால் அது தவறான அரசியல் என்கிறது. இது முழுக்க உழைக்கும் மக்கள் மீதான வெறுப்பு பேச்சு; அத்துடன் தமிழ்ச் சாதிகள் X அயல் மொழிச் சாதிகள் எனப் பகுத்து தேர்தல் பெரும்பான்மையைக் கட்டமைக்க முனையும் தமிழர் நல விரோத அரசியல். இது பார்ப்பன – பனியா வகுப்பு ஆதிக்கத்தை எதிர்ப்பதில்லை; மூடிமறைக்கின்றது. பார்ப்பனரல்லாத உழைக்கும் மக்களைப் பிளவு செய்து மோதலில் ஈடுபடுத்துகிறது; ஒடுக்கப்பட்டோரை ஒடுக்கப்பட்டோருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடத் தூண்டி, இனவாதப் போதையை ஊட்டுகின்றது.

ஆர்எஸ்எஸ், பாஜக முதலான இந்துத்துவ அரசியலுக்கு இங்கு நிலவும் அதிமுக அரசியல்தான் முதல் அடிப்படை. அது சாதிப் பெரும்பான்மைவாத அரசியல். இதுபற்றி கவலை இல்லாமல், ஊக நோக்கில் அல்லது சதிக் கோட்பாட்டு நோக்கில் அயல் மாநிலத் தொழிலாளர் மூலம் வருகிறார்கள் என்பது போலி வாதம். இடம்பெயரும் அயல் மாநிலத் தொழிலாளர்களில் 80 சதமானவர்கள் இந்தி தெரியாதவர்கள் அல்லது ஓரளவு மட்டுமே தொடர்பாடலுக்கு இந்தியைப் பயன்படுத்துகின்றவர்கள். இந்த எளிய, கண்கூடான உண்மையைக் கூட காண மறுப்பது ஏன்? பார்ப்பனரல்லாத உழைக்கும் மக்கள் மீதான வெறுப்பு மட்டும்தான்.

தமிழரின் நலன்களுக்கும், தமிழ்நாட்டின் நலன்களுக்கும் உண்மையான எதிரி அயல் மாநிலத் தொழிலாளர்கள் அல்ல; பார்ப்பன-பனியா வகுப்பு ஆதிக்கக் கும்பல். மோடி – அமித்ஷா – அதானி சிறுகுழுவின் ஆதிக்க பார்ப்பன பாசிச ஆட்சி. இதைத் தமிழ்நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

மேலே எழுதியவற்றின் மூலம் ஓரளவு எனது கருத்துகளைத் தெளிவாகப் பகிர்ந்துள்ளேன் என நினைக்கிறேன். இதிலிருந்து தமிழ்நாடு அரசு பின்வரும் செயல்களை மேற்கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது :

1. இடம்பெயரும் தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளில் உள்ள அயல் மாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை முறைப்படி சேகரிக்க வேண்டும்; பொதுவெளியில் முன்வைக்க வேண்டும்.

2. இடம்பெயர்ந்த தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியம், பணிப் பாதுகாப்பு முதலானவற்றுக்கான சட்டங்களை நடைப்படுத்த வேண்டும்.

3. பொறுப்பற்ற வெறுப்புப் பேச்சுகளையும் அயல்மாநிலத்தவர்கள் மீதான வன்முறைகளையும் மோதல்களையும் கட்டுப்படுத்த அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இதை எழுதப் பயன்பட்ட நூல் – கட்டுரைகள் – அறிக்கைகள்

1. S. Irudaya Rajan (editor), Sumeetha M. (editor) – Handbook of Internal Migration in India (2020, SAGE Publications)

2. S.Irudaya Rajan and R.B. Bhagat – Internal Migration in India: Integrating Migration with Development and Urbanization Policies, 2021

3. S. Irudaya Rajan – Emigration from Kerala, Andhra Pradesh and Tamil Nadu : A mapping of surveys on international labour migration from India. May 2014 : Migrant Forum in Asia

4. Ram B. Bhagat and Kunal Keshri – Internal Migration and Labour Circulation in India

5. Francis Jayapathy, Sebastian Crossian, P.O. Martin, Bernard D’Sami – A survey on inter-state migrants in Tamil Nadu : (Kanchipuram, Thiruvallur and Chennai districts) – 2018: Chennai : Loyola Institute of Social Science Training and Research (LISSTAR).

6. J.Jeyaranjan – The Life and Times of Migrant Workers in Chennai, Report submitted to S.R.Sankaran Chair, N.I.R.D., Hydrabad

தமிழ் காமராசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here