ருத்துவ முதுகலை படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் பூஜ்ஜியம் கட் ஆஃப் எடுத்தால் கூட சீட் உறுதி என்று ஒன்றிய அரசின் சுகாதாரத் துரை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது மருத்துவர்களிடம், பல்வேறு மருத்துவ சங்கங்களிடமும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

முதுகலை படிப்பிற்கான இடங்கள் காலியாக இருக்கக் கூடாது என்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறினாலும் இது பலனளிக்க போவது என்னவோ தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தான்.

இந்த நடவடிக்கைக்கு இந்தியாவில் வசிக்கும் மருத்துவர்களின் கூட்டமைப்பு (FORDA) மற்றும் சில மருத்துவ சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இவையல்லாமல் மற்ற சங்கங்கள் மற்றும் மருத்துவர்கள் இதுவொரு மோசமான நடவடிக்கை என்றும் சுகாதார கட்டமைப்பையே கேலி செய்வதாக அமைந்துள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் ஒருவர் தனது X (டிவிட்டர்) பதிவில் “கட் ஆஃப்பை மதிப்பெண்ணை பூஜ்ஜிய சதவீதமாக (percentile) குறைத்துள்ளதால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கட்டணக் கொள்ளை நடத்துவதற்கும் ஊழலுக்கும் வழிவகுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் மருத்துவ முதுகலை படிப்பிற்கான நீட் தேர்வுக்கு பொதுப்பிரிவு மாணவர்கள் 50 சதவீதம் (percentile) பெற்றதால் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை இருந்தது. இதற்கு அர்த்தம் என்னவென்றால் மொத்த மாணவர்களின் மதிப்பெண்ணில் 50 சதவீதம் இருக்க வேண்டும் அப்போது தான் கட் ஆஃப்-ன் அடிப்படையில் படிக்க வேண்டிய துறைகளை தேர்ந்தெடுப்பார்கள்.

இதைத்தான் தற்போது எல்லாத் துறைகளுக்கும் பூஜ்ஜிய சதவீதமாக (percentile) அறிவித்துள்ளது ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம். இதனால் முதுகலை படிப்பிற்கான செயற்கையான போட்டியை உருவாக்கி தனியார் மருத்துவ முதலாளிகள் லாபம் கொழிக்க வழி ஏற்படுத்தியுள்ளது. பணம் இல்லாதவர்கள் முதுகலை படிப்பதற்கான வழியை அடைத்துள்ளது.

Percentage vs Percentile

இது குறித்து மருத்துவர் மற்றும் எழுத்தாளர் டாக்டர் சென்பாலன் கூறுகையில் “Percentage vs Percentile இரண்டும் பார்ப்பதற்கு ஒன்று போல் தெரிந்தாலும் percentageக்கும் percentileக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.

பெர்சண்டேஜ் என்பது சதவீதம். நூறில் எத்தனை பங்கு எனக் கணக்கிடுவது. உதாரணமாக 100 மதிப்பெண் தேர்வில் 50 பெர்சண்டேஜ் என்பது 50 மதிப்பெண்கள். இந்த பெர்சண்டேஜ் எத்தனை பேர் தேர்வு எழுதினாலும் மாறாது. யார் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் மாறாது. 50 தான்.

பெர்சண்டைல் என்பது அனைத்து மாணவர்களும் எடுத்த மதிப்பெண்களை வரிசைப்படுத்தி அதில் ஒரு இடத்தை குறிப்பது. உதாரணமாக, ஒரு தேர்வில் 9 மாணவர்களின் மதிப்பெண்கள் = 89, 90,90,91,92, 96,98,98,99. இதில் 50வது பெர்சண்டைல் = 92. அதாவது 50% மாணவர்கள் 92க்கு மேல் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 92க்கு கீழ் பெற்றுள்ளனர். 50th percentile is 92.

இதே தேர்வு சற்று கடினமாக இருந்தது என வைத்துக் கொள்வோம். அப்போது மதிப்பெண்கள் = 18,22, 34, 35, 36, 40,41,41,42 50th percentile is = 36 அதாவது 50% மாணவர்கள் 36க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 36க்கு கீழ் பெற்றுள்ளனர்.

நீட் தேர்வில் நெகடிவ் மதிப்பெண் உண்டு. ஸீரோ பெர்சண்டைல் என்பது ஸீரோ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண். அதாவது கடைசி மதிப்பெண் நெகடிவில் இருந்தாலும் அதுதான் ஸீரோ பெர்சண்டைல்.

எனவே முட்டை மதிப்பெண்ணுக்கும் கீழ் நெகடிவ் மதிப்பெண் எடுத்தாலும் சீட் உறுதி. ” என்கிறார் டாக்டர் சென்பாலன்.

பல்லிளிக்கும் நீட் தேர்வு!

தகுதியான மருத்துவர்களை உருவாக்குவது தான் நீட் தேர்வின் நோக்கம் என்று பாமர மக்களுடைய குழந்தைகளின் மருத்துவ கனவில் மண் அள்ளிப் போட்டவர்கள் தான் இன்று பூஜ்ஜியத்திற்கும் குறைவான மதிப்பெண் எடுத்தாலும் முதுகலை மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

இரண்டு சுற்று நீட் முதுகலை கவுன்சிலிங்கிற்கு பிறகு பெரும்பாலான இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலே காலியாக இருப்பதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இடங்கள் நிரப்பப்படாததற்கு காரணம் தகுதியான நபர்கள் இல்லை என்பதல்ல. பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகப்படியான கட்டணங்களை வசூலிப்பதால் தான்.

இதிலிருந்து நமக்கு ஒன்று புரியவரும் பணம் படைத்தவன் கல்லூரிகளில் சேர்ந்திருப்பான். அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும் பணம் இல்லாதவன் படிப்பதற்கு வழியில்லாமல் தெருவில் நிற்கும் நிலையை தான் நீட் உருவாக்கியுள்ளது.

இப்போது முதுகலை நீட் தேர்வில் பூஜ்ஜியத்திற்கு குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் பெரும்பாலும் நீட் தேர்வின் மூலம் மருத்துவர்கள் ஆனவர்கள் தான். ஒன்றிய பாசிச மோடி அரசு சொன்ன நீட் தேர்வின் தகுதியும் இவ்வளவு தான்.

இதையும் படியுங்கள்:

 நீட்  மாணவர்கள் தற்கொலை! குற்றவாளி யார்?
 மருத்துவர் கனவை எட்டாக்கனியாக்கும் நீட் தேர்வு!

மருத்துவ படிப்பிற்கே தகுதியில்லாதவர்களை நீட் தேர்வின் மூலம் குறுக்குவழியில் மருத்துவர்களாக்கி முதுகலை மருத்துவ படிப்பில் எளிமையாக நுழைவதற்கான வழியை ஏற்படுத்தும் அதே வேளையில், கஷ்டப்பட்டு படித்து நீட் தேர்வின் மூலம் மருத்துவர்களானவர்களை மேலே படிக்கவிடாமல் பணம் இருப்பவன் மட்டுமே படிக்க முடியும் என முட்டுக்கட்டை போடும் வேலையையும் செய்துள்ளது பாசிச மோடி அரசு.

நீட் தேர்வில் ‘ஜீரோ’க்களை சேர்க்கும் இவர்கள்தான் அரசு மருத்துவமனைகளில் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவ படிப்பில் 50% இடம் ஒதுக்கீட்டையும், மலைப்புற, கிராமப்புற பகுதிகளில் சேவை செய்யும்  மருத்துவர்களுக்கு ஊக்குவிப்பு மதிப்பெண் (Incentive Marks) கொடுப்பதையும் மருத்துவ படிப்பின் தரத்தை குறைத்துவிடும் என வழக்கு கொடுப்பவர்கள். அதன் அரசு சுகாதார கட்டமைப்பையும் ஒழிக்க முயல்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர்கள் உருவாக்கிய தேர்வு முறையை அவர்களே அம்பலமாக்கியுள்ள நிகழ்வு தான் இந்த பூஜ்ஜிய மதிப்பெண் கட் ஆஃப். இதனால் மருத்துவ மேல்படிப்பு படிப்பவர்களுக்கு மட்டும் பிரச்சினை அல்ல. தகுதியில்லாத மருத்துவர்களை உருவாக்கி மக்களின் நலனை கேள்விக்குள்ளாக்கியுள்ளது மோடி அரசு. இதை மக்களிடம் அம்பலப்படுத்தி நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவோம்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here