மதுர் சத்யா விவகாரம்: குட்டி முதலாளித்துவ அற்பவாதிகளே, வெட்கித் தலை குனியுங்கள்!
கொள்கையளவில் கம்யூனிஸ்ட் கட்சியை ஏற்றுக்கொண்டு செயல்பட முன் வந்தால் போதும். அதில் ஏதாவது ஒரு குழுவில் அங்கம் வகிக்க வேண்டும், அமைப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று கம்யூனிச அகிலத்தில் எடுத்த முடிவுகள் இந்த காலகட்டத்திற்கு செல்லுபடியாகாது என்றெல்லாம் குட்டி முதலாளித்துவ அற்பவாதிகள் பிதற்றத் துவங்கினர்.

மீபத்தில் சிபிஐ கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, AIYF, ISCUF அமைப்புகளில் இருந்து மதுர் சத்யா நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது.  இதுகுறித்து மதுர் சத்யா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “கட்சி வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி மூலம் தான் என் மீதான குற்றச்சாட்டுகளை தெரிந்து கொண்டேன். என் தரப்பு கருத்துகளை சொல்ல வாய்ப்பு வழங்கவில்லை. என் வாழ்க்கையில் யாரிடமும் அநாகரீகமாக நடந்த கொண்டதில்லை. அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு தான் உறவை தொடர்ந்துள்ளேன்”. என்று தனது பொறுக்கித்தனத்திற்கு பெண்கள் உடன்பட்டது போல ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த மதுர் சத்யா யாரென்றால் சென்னைப் பகுதியில் போலி முற்போக்குவாதிகளால் ஊட்டி வளர்க்கப்பட்ட இடதுசாரி இயக்கத்தைச் சார்ந்த நபர், இவர் சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் உலக விடயங்கள் தொடங்கி உள்ளூர் விடயங்கள் வரை அலசி ஆராய்கின்ற, ‘சமூக செயல்பாட்டாளர்’ என்ற பெயரில் உலா வந்த பாலியல் பொறுக்கியாவார். இவரைப் பற்றிய விமர்சனமும், அதற்கு எதிராக ஆதரவு-எதிர் கருத்துகள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் சுத்தி வந்து கொண்டிருந்தன.

உலகமயமாக்கம் துவங்கிய பிறகு பாட்டாளி வர்க்க இயக்கத்தின் மீது தொடுக்கப்பட்ட முக்கியமான தாக்குதல்களில் ஒன்று ஸ்டாலினிசப் பாணியிலான, கறாரான, விமர்சன-சுய விமர்சன முறையை பயிற்றுவிக்கின்ற, தவறுகளை நேர்மையாக ஏற்றுக் கொண்டு, பண்பாட்டு நெறிமுறைகள், ஒழுக்க விழுமியங்கள் ஆகியவற்றை உயர்த்திப் பிடித்துக் கொண்டு கட்டுப்பாடுடன் செயல்படக்கூடிய ஒரு கட்சி அமைப்பு தேவையில்லை என்ற தாக்குதல் தான்.

முதலாளித்துவ சமூக அமைப்பு முன்வைக்கின்ற கேடுகெட்ட தனிநபர் சுதந்திரம் என்ற வரம்பற்ற சுதந்திரத்தை கட்சிக்குள் அனுமதிக்க வேண்டும்; ஜனநாயக மத்தியத்துவம் என்ற பெயரில் கோட்பாடு நடைமுறைகளை முன் வைப்பது; மேலிருந்து அரசியல் முடிவுகளையும், அமைப்பு முடிவுகளையும் அமுல்படுத்துவது ஆகியவை அனைத்தும் ‘தனிநபரின்’ ஜனநாயக உரிமைகளை தடுக்கின்றது என்ற அபத்தமான, அப்பட்டமான முதலாளித்துவ கழிசடைவாதம் தலைவிரித்தாட துவங்கியது.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுக்க விதிகளை கீழுள்ள உறுப்பினர்கள் வரை கறாராகவும், நேர்மையாகவும் கடைபிடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை கட்சிக்குள் திணிக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக அவர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தால், பார்களில் சென்று மதுப்பிரியராக தனது குடி வெறியை அனுபவித்துக் கொண்டே கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருக்கலாம். அது போலவே உயர் சாதிகளில் இருந்தும், உத்தரவாதமான வாழ்க்கைப் பின்னணியில் இருந்து வருகின்றவர்களை அந்த பழைய பின்னணியில் இருந்து விலகி எளிமையான-வாழ்க்கை கடினமான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் போன்ற கட்டுப் பெட்டித்தனங்கள் தேவையற்றது என்ற வாதமும், முதலாளித்துவக் கட்சிகளில் உள்ளதைப் போல தாராளவாத சிந்தனையும், நடைமுறையும் தான் ஜனநாயகம் என்ற அப்பட்டமான முதலாளித்துவ கழிசடைவாதம்  தலைவிரித்தாடத் துவங்கியது.

இதனால் கொள்கையளவில் கம்யூனிஸ்ட் கட்சியை ஏற்றுக்கொண்டு செயல்பட முன் வந்தால் போதும். அதில் ஏதாவது ஒரு குழுவில் அங்கம் வகிக்க வேண்டும், அமைப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று கம்யூனிச அகிலத்தில் எடுத்த முடிவுகள் இந்த காலகட்டத்திற்கு செல்லுபடியாகாது என்றெல்லாம் குட்டி முதலாளித்துவ அற்பவாதிகள் பிதற்றத் துவங்கினர்.

இதன் விளைவு மதுர் சத்யா போன்ற ஒழுக்கக் கேடர்கள் அமைப்புக்குள் புகுந்துக் கொண்டனர். இப்போது எடுத்த்து போல ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் அதனை ஏற்க மறுத்து கட்சியை விட்டு நிரந்தரமாக வெளியேறி விடுகிறார்கள். தனது வசதிக்கு ஏற்ப முதலாளித்துவ, சீர்திருத்தக் கட்சிகளில் இணைந்துக் கொள்கிறார்கள். ஆனால் ஊரை ஏய்க்க இணையத்தில் முற்போக்குப் பேசித் திரிந்து கொண்டிருப்பார்கள்.

இத்தகைய நபர்கள் பற்றி, “இணையத்தில் தனிநபர்களாக முற்போக்காக காட்டிக் கொள்பவர்களும் ஏதோ ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை செயல்பட்டு பின்னர் சொந்த வாழ்க்கை காரணமாக விலகியவர்களும் ஏராளமாய் இருக்கின்றனர் இவர்கள் பொதுவில் முற்போக்காய் காட்டிக் கொண்டாலும் அடிப்படையில் கம்யூனிச கட்சிகள் சரியில்லை வரட்டுவாதமாக செயல்படுகின்றன பலர் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு மத்தியத்துவமே காரணம் காலத்திற்கு ஏற்ப இக்கட்சிகள் புதுப்பித்துக் கொள்ளவில்லை என்று விதவிதமாக கம்யூனிஸ எதிர்ப்பு கருத்துக்களை பரப்புகின்றனர்.

யாராவது ஒரு நபர் ஏதோ ஒரு கம்யூனிச கட்சியிலிருந்து விலகினால் இணையத்தில் மாபெரும் பாராட்டு விழாவே நடத்துகின்றனர். நேற்று நாங்கள் விலகியது போல இன்றாவது புரிந்து கொண்டு விலகினீர்களே என்று அற்பவாத அன்பு காட்டுகின்றனர்” என்று 2019 ஆம் ஆண்டு எமது அமைப்பிற்குள் தோன்றிய கடைந்தெடுத்த கம்யூனிச விரோத கருத்துகள், எதிர்  புரட்சிக் கருத்துக்கள், தாராளவாதத்தையும், தனிநபர் சுதந்திரத்தையும் முன்னிறுத்தி எழுந்த சலசலப்புகளை இனம் காண்பதற்கு கட்டுரையாக தொகுத்துப் புரிய வைத்திருந்தோம்.

இது போன்ற இணைய முற்போக்காளர்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி வெளியில் தெரியாது என்ற அசட்டு துணிச்சலில் முகநூல் பக்கங்களிலும், சமூக வலைதளங்களிலும், யூ டியூப்-களிலும், ‘சமூக செயல்பாட்டாளர்கள்’ என்ற பெயரில் கம்பு சுத்துகிறார்கள். மறக்காமல் அவர்களின் கருத்துக்களை மட்டும் பார்த்து அதிசயிக்கின்ற ஏமாந்த சோனகிரிகளின் காதுகளில் பூக்களை சுற்றுகிறார்கள்.

தனி மனித உரிமை, சுதந்திரம், ஜனநாயகம் என்ற பெயரில் தனக்கு தோன்றும் கருத்துக்களை உடனுக்குடன், பொது வெளியில் எழுதுவதையும், பேசுவதையும் தான் ‘முற்போக்கு’ எனக் கருதுகிறார்கள். ஜனநாயக மத்தியத்துவ விதிகளின் படி முறைப்படுத்துகின்ற கம்யூனிச இயக்கங்களில் இருந்துக் கொண்டு அமைப்பு முறைகள், விதிமுறைகளுக்கு உட்பட்டு சிந்திக்க வேண்டும்; எந்த முடிவானாலும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும்; மத்தியத்துவத்திற்கு கட்டுப்பட வேண்டும் போன்ற ‘தொல்லைகளை’ அவர்கள் விரும்புவதில்லை.

“வயிறு முட்ட தின்று செரித்தது, சில மணி நேரங்களில் கழிவாக வெளியேறுவது போல” தான் சிந்தித்த அற்புதமான விஷயங்கள் உடனுக்குடன் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற அற்ப உணர்ச்சியுடன், தான் சிந்தித்ததையும், அது மட்டும் தான் சரி கூட்டு விவாதங்களோ, முறைக்கு உட்படுத்தி அதில் பரிசீலனை நடத்துவதோ தேவையில்லை என்ற கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை சமூக ஊடகங்கள் வழங்கி இருக்கின்ற காரணத்தினால் அதில் மூழ்கி முத்துக் குளிக்கிறார்கள்.

இத்தகைய அற்பவாதிகளின் உண்மை முகம், அவர்கள் என்ன வகையான உணவுகளை விரும்பி தின்கிறார்கள்; என்ன வகையான பாடல்களை ரசித்து கேட்கிறார்கள்; எந்த வகையான பயணமுறையை தேர்வு செய்கிறார்கள்; எந்த வகையான திரைப்படங்களின் மீதும், நடிகர்களின் மீதும் விருப்பத்தை தெரிவிக்கின்றார்கள் என்பதை எல்லாம் ஊடுருவி பார்த்து தான் இவர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள முடியுமே தவிர சமூக ஊடகங்களில் இவர்களின் அரும்பெரும் கருத்துக்களை வைத்து இவர்களின் வாழ்க்கைப் பின்னணியை ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடியாது.

இந்த சுதந்திரத்தை தான் அவர்கள் விரும்புகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்து கொண்டு கட்டுப்பாடான வாழ்க்கையை நடத்துவது பல தொல்லைகளை உருவாக்குகின்றது. குடும்பத்தை அரசியல் படுத்த நிர்பந்திக்கிறது. எளிமையான வாழ்க்கை முறையை அது முன்வைத்து போராடக் கற்றுக் கொடுக்கிறது. சுருக்கமாக சொன்னால் சமூகம் எதையெல்லாம் உயர்ந்தது என்று போதிக்கின்றார்களோ அதனை எல்லாம் வர்க்க சமுதாயத்தின் பெரும்பான்மை மக்களின் ரத்தத்தையும், உழைப்பையும் உறிஞ்சி சேர்க்கப்பட்ட வாழ்க்கை முறை என்பதை எதிர்த்து அத்தகைய கருத்துகளையும், கண்ணோட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கின்ற அவஸ்தையை, துன்பத்தை இவர்கள் விரும்புவதில்லை.

படிக்க:

 சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்

 கம்யூனிசத்தையும், பாட்டாளி வர்க்கத்தையும் அச்சுறுத்தும் சீனாவின் ‘ சோசலிச பாதை?’

“நம்மிடம் குறைபாடுகள் இருக்குமாயின் அவற்றை சுட்டிக்காட்டி விமர்சனத்துக்கு இலக்குகாக்குவதை கண்டு நாம் அஞ்சுவது இல்லை. ஏனெனில் நாம் மக்களுக்கு சேவை செய்கிறோம். எந்த ஒரு மனிதனும் நமது குறைபாடுகளைச் சுட்டிக் காட்டலாம். அவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை. அவர் சொல்வது சரியாக இருந்தால் நாம் அக்குறைபாடுகளைத் திருத்திக் கொள்வோம். அவர் சொல்வது நல்ல யோசனையானால் நாம் அதைச் செயல்படுத்துவோம். ” என்று போதிக்கிறார் தோழர் மாவோ.

சமூகத்தில் சொந்த வாழ்க்கைக்கு வெளியில் சமூகத்தைப் பற்றிய அக்கறையுடன் ஏதாவது ஒரு இயக்கத்தில் இணைந்துக் கொண்டு செயல்படுவது; கம்யூனிச இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்படுவது என்று முன் வருகின்ற, எண்ணிக்கையில் குறைந்த மனிதர்கள் இந்த சமூகத்தில் இருந்து தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருகிறார்கள் என்ற அடிப்படையில் அவர்களிடம் ஏற்படும் சரி, தவறுகளை தொடர்ச்சியாக கண்காணித்து விமர்சனம் சுயவிமர்சனம் என்ற ஆயுதத்தின் மூலம் சரி செய்துக் கொள்வது என்பதை கம்யூனிச இயக்கங்கள் கடைபிடிக்கின்றன.

மதுர் சத்யாவின் உண்மை முகம் தெரியாதவரை, நேர்மையான உத்தமர் என்று ஏற்றுக் கொண்டிருந்த கம்யூனிஸ்டுக் கட்சி அவர் மீது புகார் வந்தவுடன் பிற முதலாளித்துவ கட்சிகளைப் போல பாதுகாப்பதற்கு முயற்சிக்காமல் நடவடிக்கை எடுத்து வெளியேற்றி உள்ளது. இந்த நேர்மையான வழிமுறை எட்டிக்காய் போல் கசக்கின்ற பலருக்கு இயல்பாகவே கம்யூனிச இயக்கத்தின் கட்டுப்பாடுகள் வெறுக்கத் தான் செய்யும்.

“வெளியில் முற்போக்கு- வாழ்க்கையில் பிற்போக்கு” என இரட்டை அணுகுமுறை கொண்டவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்துக் கொண்டு செயல்படுவதை வெறுக்கின்றார்கள். அதற்கு தங்களது சொந்த வாழ்க்கையில் நடந்த சில அற்ப பிரச்சனைகளை முன்னிறுத்தி, இதனால் தான் தாங்களெல்லாம் இப்படிப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்பட முடியவில்லை என்று கதையளக்கிறார்கள். கட்சி சாராத மார்க்சியம் என்ற பெயரில் அரசியல் பிழைப்பு நடத்தும் பல்வேறு போலி முற்போக்குகளின் முகத்திரைகள் அவருடன் நெருக்கமாக உள்ளவர்களுக்கு தெளிவாகத் தெரியும் என்றாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக அமைதி காக்கிறார்கள்.

விதி விலக்கான இந்த சம்பவங்களின் மூலம் கம்யூனிச இயக்கங்கள் அனைத்தும் இப்படித்தான் என்று அவதூறு பரப்புகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக சங் பரிவார கும்பல் முதல் முகநூல் பக்கங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஒளிந்துள்ள பல்வேறு கிரிமினல் கும்பல் வரை தற்காலிகமாக மகிழ்ச்சிக் கொள்வதற்கு இத்தகைய நடவடிக்கைகள் உதவுகின்றன. பாலியல் பொறுக்கிகளையும், சிறுமிகளை வன்கொடுமை செய்த பாலியல் கிரிமினல் பேர்வழிகளையும், தனது கட்சிக்குள் வைத்துள்ள பாசிச பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு இதன் மீது விமர்சிப்பதற்கு எந்த அருகதையும் கிடையாது.

எனினும் ‘ முற்போக்குப் பேசிக் கொண்டு’, தனது உண்மை முகத்தை மறைத்துக் கொண்டு உலா வரும் மதுர் சத்யாக்கள் இன்னும் பலர் இருக்கின்றார்கள் நுட்பமாகவும் மாட்டிக் கொள்ளாமலும் செய்வதற்கு மதுர் சத்யாவுக்கு ‘திறன் இல்லை’; தங்களது வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தாமலேயே புரட்சி பேசுகின்ற பல்வேறு சமூக ஊடகப் புரட்சியாளர்கள் மலிந்துள்ள சூழலில் மதுர் சத்யா சிக்கிவிட்டார். இன்னும் பல சத்யாக்கள் சிக்காமல் சுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

  • கணேசன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

1 COMMENT

  1. கீழ்கண்ட வரிகள் கட்சி, கட்சி சாராத
    முற்போக்கு, ஜனநாயகம் பேசும் சில அற்பவாதிகளுக்கு சமர்ப்பணம்…

    “தனி மனித உரிமை, சுதந்திரம், ஜனநாயகம் என்ற பெயரில் தனக்கு தோன்றும் கருத்துக்களை உடனுக்குடன், பொது வெளியில் எழுதுவதையும், பேசுவதையும் தான் ‘முற்போக்கு’ எனக் கருதுகிறார்கள். ஜனநாயக மத்தியத்துவ விதிகளின் படி முறைப்படுத்துகின்ற கம்யூனிச இயக்கங்களில் இருந்துக் கொண்டு அமைப்பு முறைகள், விதிமுறைகளுக்கு உட்பட்டு சிந்திக்க வேண்டும்; எந்த முடிவானாலும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும்; மத்தியத்துவத்திற்கு கட்டுப்பட வேண்டும் போன்ற ‘தொல்லைகளை’ அவர்கள் விரும்புவதில்லை. “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here