இந்தியாவில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்புச் சட்டம் அதன் இயல்பிலேயே பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது. அது பார்ப்பனர்களுக்கும் பிற மேல் சாதியினருக்கும் ஆளும் வர்க்கங்கலான பெரும் நிலப்பிரபுக்களுக்கும் தற்போது அதிகாரத்தை கைப்பற்றி வரும் கார்ப்பரேட்டுகளுக்கும் சேவை செய்வதையே உள்ளடக்கமாக கொண்டுள்ளது. எனினும் இந்தியாவில் முக்கியமான அறிவுஜீவிகள் பலரும் அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கையும், மாயையும் கொண்டுள்ளனர் இதுபற்றி எமக்கு மாற்றுக் கருத்து உள்ளபோதிலும் பேராசிரியர் சம்சுல் இசுலாம் எழுதிய இந்த கட்டுரை தற்போது மோடி கும்பலின் இரட்டை வேடத்தை தோலுரிப்பதற்கு பயன்படுகிறது என்ற கண்ணோட்டத்தில் இருந்து இதனை வெளியிடுகிறோம்.

000

இந்திய அரசியலமைப்பை இழிவுபடுத்திய RSS – அதன் ஆவண காப்பகத்தில் இருந்து சான்றுகள்!

இந்திய அரசியல் நிர்ணய சபையானது, 1949 – ம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி அன்று இந்திய அரசியலமைப்பை இறுதி செய்தது. இந்த நாள் இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில் நிகழ்ந்த இந்த கொண்டாட்ட தினத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் ” அம்பேத்கர் நாட்டிற்கு ஆற்றிய சேவை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை அரசியல் சாசனம் நிரூபித்துள்ளது. அவரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்துக்கு எதிரானவர்கள் ”  என முழங்கினார். ஆனால் அவரது இத்தகைய சவடால் பேச்சு போலியானது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

இன்றைய பிஜேபி (மோடி) அரசை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் -ன்  கடந்த கால வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த வரலாற்று நிகழ்வுக்குப்பின், நான்கு நாட்கள் கழித்து வெளிவந்த RSS – ன் அதிகாரப்பூர்வ ஆர்கனைசர் ஏட்டின் தலையங்கத்தில், ” நமது அரசியலமைப்பில் பண்டைய பாரதத்தின் தனித்துவமான அரசியல் வளர்ச்சி பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள சட்டங்கள், உலகம் முழுவதும் போற்றப்பட்டு வருகின்றன. ஆனால் நமது அரசியலமைப்பு பண்டிதர்களுக்கு அது ஒன்றுமே இல்லை” என குற்றம் சாட்டியது.

ஆக, புதிதாக இயற்றப்பட்ட அரசியலமைப்புக்கு பதிலாக மனுவின் சட்டங்கள் அமலாக்கப்பட வேண்டும் என்பதே RSS – ன் விருப்பமாக இருந்தது. அதாவது எந்த மனுஸ்ருமிதி சூத்திரர்களை, தீண்டத்தகாதவர்களை மற்றும் பெண்களை  மனிதாபிமானமற்ற முறையில் இழிவுபடுத்தி உள்ளதோ, அதை இந்திய அரசியலமைப்பு சட்டமாக்க வேண்டும் என விரும்பியது. இதன்மூலம் சுதந்திர இந்தியாவில் தனது குருநாதர் சாவர்க்கரின் பாதையை அடியொற்றி பின் தொடர்ந்தது.

” இந்திய அரசியலமைப்பு சட்டமானது சமத்துவம் மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ள சிறந்த ஆவணம்” என உலக அளவில் போற்றப்படும் இந்திய அரசிலமைப்பு சட்டத்தை  RSS தொடர்ந்து வெறுத்தது. அதன் முக்கிய சித்தாந்தவாதியான கோல்வால்கர், அதை இந்துக்களுக்கு எதிரானது என அறிவித்தார். RSS காரர்களின் பைபிள் என கருதப்படும் அவரது எண்ணங்கள்/ எழுத்துகளின் தொகுப்பில் இருந்த அவரது அறிக்கை ” நமது அரசியலமைப்பு என்பதும், மேற்கத்திய நாடுகளின் பல்வேறு அரசியலமைப்பு சட்டங்களில் உள்ளது போல சிக்கலான மற்றும் பன்முகத்தன்மை  கொண்டதாகவே உள்ளது. நமக்கு சொந்தமான எதுவும் அதில் இல்லை” என குறிப்பிட்டுள்ளது.

மனுவின் சட்டங்களை அமலாக்குவதன் மூலம் RSS மற்றும் இந்துத்துவ முகாம்கள் எத்தகைய நாகரீகத்தை உருவாக்க விரும்பின என்பதை தாழ்த்தப்பட்ட/ தீண்டத் தகாதவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக மனுவால் வகுக்கப் பட்டுள்ள சட்டங்கள் மூலமாக புரிந்துகொள்ள முடியும்.

தலித் ( தீண்டத்தகாதவர்கள்) குறித்த மனுவின் சட்டங்கள்:

01. இவ்வுலகின் செழுமைக்காக, தெய்வீக ஆற்றலானது பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் போன்றோரை தனது வாய், கை, தொடை மற்றும் கால்களில் இருந்து வெளியேறச் செய்தது.

02. இதில் மற்ற மூன்று சாதியினருக்கு பணிவுடன் சேவை செய்வதே சூத்திரருக்கான தொழில் என இறைவன் விதித்தார்.

03. ஒரு பிறவி கொண்ட சூத்திரன், இரு பிறவி கொண்ட மற்றவர்களை இழிவாகப் பேசினால் அவனது நாக்கை வெட்ட வேண்டும்.

04. மேலும் அவர்களது பெயர்கள் மற்றும் சாதியை அவதூறாக பேசினால் பத்து விரல் நீளமுள்ள பழுக்க காய்ச்சிய ஆணியை வாயினுள் திணிக்க வேண்டும்.

05. பிராமணர்களின் கடமையைப் பற்றி ஆணவத்துடன் கூறினால், அரசன் அவர்களது வாயிலும், காதிலும் சூடான எண்ணையை ஊற்ற வேண்டும்.

06. தாழ்ந்த சாதியை சேர்ந்தவன், உயர்சாதியினருக்கு எந்த அவயத்தால் காயம் ஏற்படுத்துகிறானோ, அந்த அவயம் துண்டிக்கப்பட வேண்டும்.

07. கையையோ, குச்சியையோ ஓங்கினால் அவனது கையை வெட்ட வேண்டும். கோபத்தில் காலால் உதைத்தால் காலை வெட்ட வேண்டும்.

08. உயர்சாதியைச் சேர்ந்தவனுடன் சமமாக அமர முயன்றால், அவனது இடுப்பில் முத்திரை குத்தி வெளியேற்ற வேண்டும் அல்லது அரசன் அவனது பிட்டத்தை காயப்படுத்த வேண்டும்.

மனுவின் சட்டத்தில் சூத்திரர்களின் சிறு தவறுக்குக் கூட கடுமையான தண்டனைகளும், பிராமணர்கள் எத்தகைய கொடும் குற்றத்தை செய்தாலும் அவனை சிறு காயமின்றி அவனது சொத்துகளோடு வெளியேற்றினால் போதும் என்ற மென்மையான போக்குமே உள்ளது.

படிக்க:

தனக்குத் தானே “வீரன் ” பட்டம் கொடுத்துக் கொண்ட தேச விரோத கோழையின் வரலாறு…!

அடுத்து, பெண்கள் குறித்தான மனுவின் சட்டங்களைப் பார்ப்போம்.

01. பெண்கள் இரவும், பகலும் ஆண்களைச் சார்ந்தே இருக்க வேண்டும். அவள் சிற்றின்ப வேட்கையில் ஈடுபட்டால் அவளை யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

02. அவள் குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவனின் கட்டுப்பாட்டிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் இருப்பாள். சுதந்திரமாக இருக்க அவள் ஒருபோதும் தகுதியானவள் அல்ல.

03.அவளது தீய விருப்பங்களுக்கு (அற்பனமானவை என்றாலும்) எதிராக பாதுகாப்புடன் இருக்கவேண்டும். இல்லையென்றால் இரு குடும்பங்களுக்கு துக்கத்தை ஏற்படுத்தி விடுவாள்.

04. அனைத்து சாதிகளிலும் உள்ள பலவீனமான கணவன்கள் உட்பட, அவர்கள் தங்களது மனைவியை காப்பதை உயர்ந்த பட்ச கடமையாக கருத வேண்டும்.

05. கணவன் தனது செல்வத்தை சேர்ப்பதிலும், மதக்கடமைகளை நிறைவேற்றவும், உணவு தயாரிக்கவும் மனைவியை பணியாளாக பயன்படுத்தலாம்.

06. பெண்கள் தங்களது அழகிலும், வயதிலும் அக்கறை செலுத்தாமல், வசீகரமான அல்லது அசிங்கமான ஆண்களிடம் தன்னை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும்.

07. பெண்களை எவ்வளவு கவனமாக பாதுகாத்தாலும், ஆண்கள் மீதான அதீத ஆர்வத்தினாலும், மாறக்கூடிய தங்களின் மனநிலையினாலும், இயற்கையாகவே உள்ள இதயமற்ற தன்மையின் காரணமாகவும் தங்களது கணவனுக்கு துரோகமிழைப்பார்கள்.

08. பெண்களுக்கு புனித நூல்களுடன் எவ்வித தொடர்புமில்லை. வேத நூல்களின் அறிவைப்பெறும் அளவு வலிமையற்ற அவர்கள், தங்களைப் போலவே அசுத்தமானவர்களாகவும், பொய்யர்களாகவும் இருப்பார்கள்.

படிக்க:

ஆப்கானுக்கு தாலிபன்! இந்தியாவிற்கு ஆர்.எஸ்.எஸ்!! 

மனுசாஸ்திரத்தின் மேற்கூறிய சட்ட விதிகளுக்கு கூடுதல் விளக்கம் தேவையில்லை. அவை தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக எத்தகைய வன்மத்தை, பாசிச, சீரழிவு கருத்துகளை கொண்டுள்ளன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். இந்த கேடுகெட்ட மனுவின் சட்டங்களை அமலாக்க வேண்டும் என்பதே காவி பாசிஸ்டுகளின் கனவாக உள்ளது.

இத்தகைய மனுஸ்மிருதியை வழிபடும் RSS – BJP ஆட்சியாளர்கள் தற்போதைய அரசியல் சாசன தினத்தைக் கொண்டாடுவது கேலிக்கூத்தானது. இது இந்திய ஜனநாயக – மதச்சார்பற்ற குடியரசுக்கு மிகவும் சோகமான தருணம் ஆகும். இந்த அரசியலமைப்பை ஆடுகளைப் போன்ற வேடமணிந்த ஓநாய்களிடம் இருந்து காப்பது இந்த தேசத்தின் கடமையாகும்.

பேராசிரியர். சம்சுல் இசுலாம்.

செய்தி ஆதாரம்:

 gaurilankeshnews.com

தமிழில் ஆக்கம் : குரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here