தாலிபன்கள் பிறப்பு பற்றி சொல்லவேண்டும் என்றால் 1980 – களில் அமெரிக்க அரசின் ஆதரவுடன் இயங்கிய, சோவியத்துகளுக்கு எதிரான முஜாகிதீன் அமைப்பிலிருந்த, பல கம்யூனிச எதிர்ப்பு பிற்போக்குவாதிகளின் கூடாரம் தான் என்பதை பகிரங்கமாக கூற முடியும். இந்த பிற்போக்கு காட்டுமிராண்டிகள் கூட்டம் தாலிபன் அமைப்பை முகம்மது உமர் தலைமையில் உருவாக்கினர். சோவியத் யூனியன் பிளவுபட்ட பின்பு ஆப்கானை தங்களுக்கானதாக மாற்றும் பல அமைப்புகளில் தாலிபன்களும் இணைந்துக் கொண்டு உள்நாட்டு போரை நடத்தினர். முறையாக 1994 இல் துவக்கப்பட்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளை இரண்டே ஆண்டுகளில் கைப்பற்றியது தாலிபன். 2001 அமெரிக்க படையெடுப்புக்கு முன் ஐந்து ஆண்டுகள் இவர்கள் தான் ஆப்கானை ஆண்டனர்.
1996 – இல் தாலிபன்கள் ஆப்கானை இஸ்ஸாமிய எமிரேட் (IEA) என அறிவித்தது. அதுமுதற் கொண்டு இஸ்ஸாமிய சட்டங்களை கடுமையாக்கினர். அந்நாட்டின் ’ஷரியா’ சட்டமாக இருந்தது. தாலிபன்கள் முன்வைக்கும் ஷரியா சட்டம் என்றால், மத கடுங்கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த இசுலாமிய சட்ட அமைப்பாகும். இது குர்ஆன் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களால் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் ஆணை – பத்வா ஆகிய இரண்டிலிருந்தும் எடுக்கப்பட்டது. ஷரியா என்றால் ’தெளிவான தண்ணீருக்கான நன்கு பயன்படுத்தப்பட்ட பாதை’ என்று பொருளாகும். ஷரியா சட்டம் என்பது அனைத்து இஸ்லாமியர்களுக்கும் நோன்பு மற்றும் தானம் ஆகியவை உட்பட எப்படி வாழவேண்டும் என்பதை குறிக்கும் விதியாகும். கடவுளின் விருப்பத்தின்படி தங்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதை ஒவ்வொரு இஸ்லாமியரும் புரிந்து கொள்ள இது உதவும்.
இந்த சட்டம் குற்றங்களை இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கிறது. முதலாவதாக ’ஹட்’ குற்றங்கள். அதாவது தீவிரமான குற்றங்கள். இதற்கு தண்டனைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டு இருக்கும். இரண்டாவது ’தசிர்’ அதாவது நீதிபதிக்கு விசாரணை செய்து குறிப்பான குற்றத்தின் மீது தண்டனை வழங்குவதற்கான அதிகாரம் கொண்டது. ஹட் குற்றங்களில் திருட்டு, கள்ளத்தொடர்பு ஆகியவை அடங்கும். திருடுபவர்களின் கையை வெட்டுவதும், திருமணத்திற்கு அப்பாலான உறவு வைத்திருப்பவர்களை கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனையும் இதில் அடங்கும். பெண்கள் கல்லால் அடித்து கொலை செய்யப்படுவதை விவரிக்கும் THE STONING OF SORAYA என்ற திரைப்படம் இதன் யோக்கியதையை நமக்கு காட்டுகிறது. ஐநா சபை “பெண்களை கல்லால் அடித்துக் கொள்வது கொடூரமானது இது மனிதத்தன்மையற்ற தண்டனை முறை எனவே இதனை நீக்க வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
ஷரியா சட்டத்திற்கு ஐந்து வகையான போதனைகள் உள்ளன. ஹன்மலி, மாலிகி, ஷஃபி மற்றும் ஹனாஃபி என நான்கு வகையான சன்னி போதனைகளும், ஷியா ஐஃபாரி என ஒரு ஷியா போதனையும் உள்ளது. எந்த ஷரியா சட்டத்தில் இருந்து இந்த போதனைகளை விளக்குகிறார்கள் என்பதில் ஐந்தும் வேறுபடுகின்றன.
இவ்வாறு பிற்போக்கு தனமான, மதத்தை மட்டும் போதிக்க கூடிய ஒரு இயக்கம் தான் தாலிபன். பெண்கள் பணி புரிய அனுமதிக்கப்படவில்லை. பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை எட்டு வயதிலிருந்து பெண்கள் புர்கா அணிய வேண்டும். மேலும் ஏதேனும் ஆண் குடும்ப உறுப்பினரின் துணையுடனேயே பெண்கள் வெளியே வரவேண்டும். இதனை மீறும் பெண்களுக்கு பொது வெளியில் கசையடி கொடுக்கப்படும். இதுதான் தாலிபன்களின் கசையடி-தலைவெட்டி சாம்ராஜ்ஜியம்.
2001 செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டிட (இரட்டை கோபுரம்) கோபுரங்களை விமானம் மூலம் அல்கொய்தா தாக்கி பேரழிவை ஏற்படுத்தியதாக அமெரிக்க உளவுத்துறை CIA முன் வைத்த ’உண்மையை’ உலகம் ஏற்றுக் கொண்டது. இந்த தாக்குதலுக்கு காரணமான ஒசாமா பின்லேடன் இசுலாமிய தீவிரவாத அமைப்பான அல் – கொய்தா அமைப்பை சேர்ந்தவர். இந்த அமைப்பிற்கு ஆப்கானிஸ்தான் புகலிடமாக இருந்தது என்றும் பழி சுமத்தியது.
அதை தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக உலக சமாதானத்தை ஏற்படுத்தப் போவதாக கூறிக் கொண்டு அமெரிக்கா ஆப்கானின் தலைநகரான காபூல் பகுதிக்குள் நுழைந்து தாலிபன் போன்ற அமைப்புகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. இதன் பிறகு நேற்று வரை 20 ஆண்டு காலம் அமெரிக்கா இராணுவம் ஆப்கானில் முகாமிட்டது. இந்த இருபது ஆண்டு காலம் அங்கு மனித உரிமை மீறல்கள் பல்லாயிரக்கணக்கில் நிகழ்ந்தன.
இந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க பிரம்மாண்ட இராணுவ முகாமிற்கு செலவழித்த தொகை மட்டும் 60 லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும். 2001ல் தாலிபான்களிடம் இருந்து பெண்களை விடுதலை செய்யவேண்டும் என்று சொல்லித்தான் அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. ஆனால் இந்த 20 ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கை தரம் அணு அளவு கூட முன்னேறவில்லை. பெண்கள் தங்களை முழுவதுமாக மூட வேண்டும். பூர்க்கா அணிந்து செல்வது கட்டாய நிபந்தனையாகும்.
இசுலாமிய மார்க்கத்தைக் கூட முழுமையாக போதிக்காத, ’தாயத்து வியாபாரிகளான’ பிற்போக்கு முல்லாக்களின் பிடியில் தான் ஆப்கானிய பெண்கள் இருந்தனர். பெண்கள் கல்லூரிக்கு செல்லக் கூடாது. ஆண்களோடு பேசக் கூடாது. எதற்கெடுத்தாலும் முல்லாக்கள் விதிக்கும் ஃபத்வாக்கள் தான் அங்கு அரசியல் சட்டமாகும். தாலிபன்களின் ஷரியாவில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் ஆப்கானிய ஜனாதிபதி ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பது அந்நாட்டின் அரசியமைப்பு சட்டம். அதை அமெரிக்க வல்லரசும் ஏற்றுக்கொண்டு தான் செயல் படுத்தியது.
பெண்களை காப்பதாக கதையளந்த அமெரிக்க இராணுவம் ஆயிரக் கணக்கான கர்ப்பிணி பெண்களையும், குழந்தைகளையும் கொன்றது. அமெரிக்க இராணுவ வீரர்களால் பல்லாயிரக் கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அமெரிக்க ராணுவம் ட்ரோன் மூலமாக ஆயிரக்கணக்கான ஆப்கானிய மக்களை படுகொலை செய்தது. இவை தான் ’உலக சமாதான காவலன்’ அமெரிக்காவின் 20 ஆண்டுகால திருப்பணிகள். தாலிபன்கள் ஆட்சி என்பது பழமைவாத ஆட்சி தான். அதற்கு எதிராக ஆப்கனை ஆக்ரமித்த அமெரிக்கா 20 ஆண்டு கால ஆக்கிரமிப்பின் போது அங்கு பெரிய மாற்றத்தையோ, இல்லை குறைந்தபட்ச ஜனநாயக உரிமையையோ ஒன்றும் அளிக்கவில்லை. அங்கு இருந்த பழமைவாதத்தை தன்னை உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிகொள்ளும் அமெரிக்காவும் பயன்படுத்திக் கொண்டது. அதோடு மட்டுமல்லால் மேலும் பேரழிவை தான் அமெரிக்கா அங்கு ஏற்படுத்தியது.
இந்த சூழலில் தற்போது மீண்டும் தாலிபன்களால் கைப்பற்றப்பட்டுள்ள ஆட்சியை வேறு வழியின்றி ஆப்கன் மக்கள் ஏற்க வேண்டியுள்ளது. பழமைவாதம் நிரம்பிய ஆப்கன் சமூகத்தில் முற்போக்கு ரீதியான, ஜனநாயகம் பேசும் கட்சிகளோ, பெண் உரிமை பேசும் அமைப்புகளோ, இடது சாரி கட்சிகளோ, ஜனநாயக சிந்தனைகளை வெளிப்படுத்தும் கல்வி நிலையங்களோ இல்லாத நிலையில் மக்களுக்கு வேறு வாய்ப்புகளும் இல்லை. அமெரிக்க மேல்நிலை வல்லரசு நடத்தும் சுரண்டலுக்கும், மறுகாலனிய அடக்குமுறைகளுக்கும் மாற்றாக புரட்சிகரமான சிந்தனை இல்லாத சமூகத்தில் பிற்போக்குத்தனமும், பழமைவாதமும் தான் ஆட்சிக்கு வந்து விடும் என்பதற்கு ஆப்கன் சிறந்த உதாரணமாகும்..
இன்று இந்தியாவிலும் பார்ப்பன – இந்து மதத்தின் அடிப்படையில் பிற்போக்கு தனத்தையும், புராண இதிகாச குப்பைகளையும் தான் இன்று அறிவியல் என்று போதித்துக் கொண்டு இருக்கிறது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல். ஒரு எடுத்துக் காட்டாக கொரானா பரவலால் நாட்டு மக்கள் கொத்து கொத்தாக செத்துக்கொண்டு இருக்கும் போது கொரோனாவிற்கு மருந்தாக மாட்டு மூத்திரத்தை கொடுக்காலம் என பி.ஜே.பி பிரச்சாரம் செய்து வருகிறது.. அறிவியல் மாநாடு ஒன்றில் விநாயகருக்கு அந்த காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது என்றும், ராவணன் சீதையை புஷ்ப வாகனத்தில் தூக்கி சென்றதை அந்த காலத்திலேயே விமானம் பயன்படுத்தப்பட்டது என்று புராண இதிகாச கதைகளை அறிவியல் என்று திரித்து பேசுகிறது.
அறிவியலற்ற மூடத்தனத்தை பரப்புவது மட்டுமல்ல. பார்ப்பன மேலாதிக்கத்தையும் பெண்களை இழிவாக கருதுகின்ற மனுதர்மத்தின் யோக்கியதை என்ன? ஆர்எஸ்எஸின் சித்தாந்த குருமார்களில் ஒருவராகிய கோல்வால்கர் “மனித சமூகத்திற்கு அறிவுக் கூர்மையான சட்டத்தை முதன்முதலாக வகுத்துத் தந்தவர் மனு“ என்று பாராட்டுகிறார். மற்றொரு சித்தாந்தவாதியான ’இந்துத்துவா’ என்ற அரசியல் கருத்தை உருவாக்கிய சாவர்க்கர் “வேதத்துக்கு பிறகு மிகவும் வணங்கப்படக் கூடிய நூல் மனுஸ்மிருதி, தேசத்தை ஆன்மீகம் மற்றும் புனித பாதையில் அழைத்துச் செல்வதற்கு அடிப்படையாக இருப்பது மனுஸ்மிருதி” என்று கூறுகிறார்.
ஆர்.எஸ்.எஸ் போற்றும் மனுதர்மம் இந்திய சமூகத்தில் உழைக்கும் மக்களை தீண்டப்படாத மக்கள் என்றும், பெண்களுக்கு எதிராகவும் பல பிற்போக்குத்தனமான கருத்துகளை முன் வைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.
”பெண்கள் இளமைப் பருவத்தில் தந்தையாலும், பின்பு கணவனாலும், முதுமையில் பிள்ளைகளாலும் காக்கபடுபவர்கள். அவர்கள் சுயமாக இயங்கும் தன்மை உடையவர்கள் அல்லர்“ என்று. அத்தியாயம்-9, சுலோகம் -3, கூறுகிறது. “மாதர்கள் கற்புநிலை இன்மையும், நிலையாத மனமும், நட்பின்மையும் இயற்கையாக உடையவர்கள். ஆதலால் கணவனால் காக்கப்பட்டு இருப்பினும் அவர்களை விரோதிகளாக கருத வேண்டும்” என்று அத்தியாயம்-9, சுலோகம் 15 கூறுகிறது. ”படுக்கை, ஆசனம், அலங்காரம் காமம், கோபம், பொய், ரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே வலுவாக மனு கற்பித்தார்“ என அத்தியாயம்-9, சுலோகம் 17 கூறுகிறது. மனுதர்மத்தின் ஒன்பதாவது அத்தியாயம் முழுக்க பெண்களை அடிமைப்படுத்துவது, இழிவுபடுத்துவது என்பதை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது. ’தடை செய்யப்பட்ட புத்தகம்’ என்ற சிறப்பு வெளியீடு பகிரங்கமாக வெளிப்படுத்துகிறது.
நடைமுறையில் நிர்பயா முதல் ஆசிபா வரை பெண்கள் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. கோவில் கருவறையில் குழந்தையை கற்பழிப்பது, பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது என இந்தியாவில் நிகழும் அவலங்கள் பலவும். ஆப்கானிய தாலிபன்கள் போலவே இந்தியாவின் RSS, BJP செயல்படுவதை நிரூபிக்கிறது.
இங்கு நடக்கும் அவலங்களுக்கு எதிராக சமரசமற்ற வகையில் போராடும் புரட்சிகரமான சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் போது மட்டுமே ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிச பிற்போக்குவாதி களுக்கு எதிராகவும், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவும் போராடும் உணர்வை நாம் பெற முடியும். ஏறித் தாக்கி வரும் கார்ப்பரேட்-காவி பாசிச வீழ்த்தும் போர்க்குணத்தையும் நாம் பெற முடியும். இதை நாம் முன்கூட்டியே கற்றுக்கொள்ளும் பாடம் தான் இன்று ஆப்கானிய நாட்டை தாலிபன்கள் கைப்பற்றியதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியதாகும்.
- பூங்குழலி.
ஆதாரம்: BBC நியூஸ்