சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை உணவு திட்டத்தினை 1 ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கலாம் என சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை ஒட்டி வாக்கெடுப்பு நடந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ”ஏற்கனவே சென்னை மாநகராட்சியின் கீழ் காலை உணவுத் திட்டம் சிறப்பாக நடைப்பெற்று வரும் சூழ்நிலையில் எதற்காக ஓராண்டிற்கு தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கேள்வியும் எழுப்பினர்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டபோது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அன்றாடம் உழைக்கும் மக்களின் குழந்தைகளுக்கு காலை நேரத்தில் ஊட்டச்சத்தான உணவை உத்திரவாதம் செய்தது. பார்ப்பன கொழுப்பெடுத்த தினமலர் தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டத்தை இழிவுபடுத்தியபோது தமிழகமே கொதித்தெழுந்தது. இன்று காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு கொடுப்பதை அதே தினமலர் வரவேற்கக் கூடும்.

காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1955 ஆம் ஆண்டு மதிய உணவுத்திட்டம் தொடங்கப்பட்டது. சத்துணவு திட்டமாக விரிவு செய்யப்பட்டு அதன் பிறகு வந்த ஆட்சியாளர்கள் அந்த திட்டத்தினை செழுமைப்படுத்தி முட்டை உள்ளிட்ட சிறுதானிய உணவுகளையும் வழங்கினார்கள். இன்று தமிழ்நாட்டில் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டம் சிறப்பாக செயல்படுவதுடனும் இந்தியாவில் முன்மாதிரியான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.


இதையும் படியுங்கள்: செப்டிக் டேங்க் தினமலர் அலுவலகத்தை மலத்தினால் அலங்கரிக்கச் செய்வோம்!


இத்திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுவதற்கு காரணமே அரசின் கையில் சத்துணவு திட்டம் இருப்பதால் தான்.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் காலை உணவுத்திட்டத்தினை ‘அட்சயபாத்திரா’ எனும் ஆர்.எஸ்.எஸ் தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டது. இதற்கு தமிழக அரசு நிதி அளிக்கவில்லை என்றாலும் ஆர்.எஸ்.எஸ் அடிமை கவர்னர் ஆர்.என்.ரவி மூலம் 5 கோடி ரூபாய் அந்நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் தான் அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின்.

ஆட்சிக்கு வந்த பிறகு காலை உணவுத்திட்டத்தினை அரசே நடத்தும் என்று அறிவித்தார். ஆரம்பத்தில் சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்ட திட்டமானது தமிழ்நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அதாவது 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது.

காலை உணவுத் திட்டங்கள் அம்மா உணவகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படுகிறது. பல இடங்களில் சம்பளத்திற்கு ஆள் வைத்து சமைக்கப்படுகிறது. இதனை தற்போதைக்கு சென்னை மாநகராட்சியில் ஓராண்டிற்கு தனியாருக்கு ஒப்படைப்பது என்பது மொத்தமாக காலை உணவுத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தனியாருக்கு தாரை வார்க்க முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் மட்டும் 358 பள்ளிகள்(தொடக்கப்பள்ளி) உள்ளன. இந்த பள்ளிகளில் 65,030 மாணவர்கள் படித்து வருகிறார்கள். மாநகராட்சி தீர்மானத்தின் படி நாளொன்றுக்கு ஒரு மாணவனுக்கு காலை உணவுத் திட்டத்தில் 12 ரூபாய் 71 காசுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த மாணவர்களுக்கும் கணக்கிட்டு பார்த்தால் 19 கோடியே 1 லட்சத்து 2 ஆயிரத்து 199 ரூபாய் ஒரு வருடத்திற்கு தனியாருக்கு சென்னை மாநகராட்சி கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி தீர்மானம்! என்ன காரணம்? முழுத் தகவல்!

சென்னை மாநகராட்சியில் உள்ள 358 அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை மகளிர் சுய உதவி குழுக்களிடம் இருந்து பறித்து தனியாரிடம் ஓப்படைப்பதற்கான டெண்டர் விடுவதற்கு மாநகாரட்சி முடிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களின் பணியை கண்காணிக்க துணை ஆணையாளர் தலைமையில் கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர், நிதி ஆலோசகர், தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் என 5 பேர் அடங்கிய குழுவை அமைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் தனியாருக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக அரசு, காலை உணவை சமைக்க பெருநகர சென்னை மாநகராட்சியில் 13 சமையல் கூடங்களையும், சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவையும் சென்னை மாநகராட்சி பெற்றுத் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை படிக்கும் போது அரசே நடத்தி விடலாமே என்றே தோன்றும். அந்த அளவுக்கு தனியாருக்கு அனைத்து வசதிகளையும் அரசே செய்துக் கொடுக்கிறது.

சத்துணவு திட்டம் இன்று வரை சிறப்பாக செயல்படுவதற்கு சத்துணவு ஊழியர்களே காரணம். அரசு கொடுக்கும் சமையல் பொருட்களை வைத்து சமைத்து கொடுக்கிறார்கள். இதில் எந்த விதமான லாப நோக்கமும் இல்லை.

ஆனால் இது தனியாரிடம் சென்று விட்டால் அவர்களுக்கு லாபம் ஒன்றே நோக்கமாக இருக்கும். லாபத்தை அதிகரிக்க ஊட்டச்சத்து குறைவான உணவை மாணவர்களுக்கு கொடுப்பார்கள். உணவின் அளவை குறைப்பார்கள். ஒருக்கட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். சம்பிரதாயத்திற்கு திட்டம் செயல்படும் நிலை உண்டாகும். இதனால் தனியாருக்கு எத விதத்திலும் நட்டமில்லை. மாறாக மாணவர்களுக்கு ஊட்டத்து உணவு கிடைப்பதில் சிக்கல் உண்டாகும். காலை உணவுத் திட்டத்தினை அரசு கொண்டு வந்ததின் நோக்கம் சிதையும்.


இதையும் படிக்க: அரசுப் போக்குவரத்து கழகத்தை பாதுகாப்போம்!


சத்துணவு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு பலன் கிடைத்தது போல சத்துணுவு ஊழியர்களுக்கும் அரசு வேலை கிடைத்தது. இன்று வேலையின்மை பெருகியுள்ள சூழலில் காலை உணவுத்திட்டத்தின் மூலம் பலருக்கு அரசு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தலாம். இத்திட்டத்தினை அரசே சிறப்பாக செயல்படுத்தலாம். காலை உணவுத் திட்டத்தினை தனியாரிடம் ஒப்படைக்கும் திமுக அரசின் முயற்சியில் முதலாளிகளின் நலனே அடங்கியுள்ளது.

அரசானது மக்கள் நலத்திட்டங்களில் இருந்து விலகி தனியாருக்கு இடமளிக்கக் கூடாது. முக்கியமாக கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை அடிப்படை தேவை. இது தனியாருக்கு செல்வதனால் சேவை என்பதிலிருந்து லாபம் என்பதை நோக்கி செல்லும். இதனால் உழைக்கும் மக்களே பாதிப்படைவார்கள். ஏற்கனவே மருத்துவமனைகளில் குறிப்பிட்ட பிரிவுகளில் தனியார்மயம் புகுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அரசு போக்குவரத்து கழகத்தை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முயன்றது. தமிழ்நாட்டு மக்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் பின் வாங்கியது. அதேபோல் தான் காலை உணவுத் திட்டத்திலும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் சற்றே பின் வாங்கியுள்ளது. இன்னும் ஒப்பந்த புள்ளிகள் கோரவில்லை. தொடர்ந்து காலை உணவுத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் என்று கூறியுள்ளது. ஆனால் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தினை கைவிடவில்லை. மாணவர்களின் நலனிலிருந்து இந்த தீர்மானத்தை முழுமையாக கைவிட வேண்டும்.

எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு விதமாகவும், ஆளும் கட்சியான பிறகு மக்கள் நலனுக்கு எதிராகவும் செயல்படுவதை திமுக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. அப்படி கொண்டு வரப்படும் திட்டங்கள் மக்களின் எதிர்ப்பாலும், போராட்டத்தாலும் திரும்ப பெறுகிறது அரசு.

ஓட்டளித்து அரசை தேர்ந்தெடுப்பது மட்டும் மக்களின் கடமையல்ல. மாறாக அரசு மக்கள் நலனுக்கு எதிராகவும், முதலாளித்துவத்திற்கு ஆதரவாகவும் செயல்படும் போது ஒன்றுபட்டு அரசுக்கு நமது எதிர்ப்பை தெரியப்படுத்த வேண்டும். மக்கள் தான் அரசை இயக்க வேண்டுமேயொழிய அரசு மக்களை அடிமைபடுத்தி இயக்கக் கூடாது.

  • மாரிமுத்து

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here