கார்ப்பரேட்டுகளின் விருப்பத்திற்கு ஏற்ப அனைத்து துறைகளிலும் அநியாயத்திற்கு விலையை ஏற்றி கொள்ளையடிக்க முழு ஒத்துழைப்பை தருகிறது மோடி தலைமையிலான காவி கும்பல். தற்போது மக்களின் அத்தியாவசிய தேவையான மின்சாரத்திலும் கை வைத்துள்ளனர் காவிகள்.
மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர் கே சிங் தந்துள்ள அறிவிப்பில், மின்சார கட்டணத்தை நேரத்திற்கு ஏற்ப நிர்ணயித்து நம்மை சுரண்ட உள்ளது தெரிய வருகிறது.
ஒரே பொருளுக்கு நேரத்திற்கு ஏற்ற விலை!
காலை 6 மணியிலிருந்து பத்து மணி வரையும், மாலை 6 மணியிலிருந்து இரவு பத்து மணி வரைக்கும் “பீக் அவர்“ கட்டணமாக 20% வரை உயர்த்தி வசூலிக்க உள்ளார்கள். மிகவும் நைச்சியமாக, இதர நேரங்களில் கட்டணத்தை குறைக்க போவதாகவும் அறிவித்துள்ளார்கள்.
இந்த கேடுகெட்ட அறிவிப்பின் பின்னால் உள்ள நோக்கம், “ஒரு பொருளை மலிவாக கிடைக்கும் பொழுது வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே! பீக் அவரில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்திவிட்டு போக வேண்டியது தானே !” – என உழைக்கும் மக்களை மடைமாற்றும் கீழ்த்தர சதித்திட்டமே தவிர வேறில்லை. இதற்காகத்தான் கடந்த சில ஆண்டுகளாகவே நாடுதழுவிய அளவில் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டரை கட்டாயமாக்கி இணைத்து வருகின்றனர் என்பதை அப்பொழுதே பலரும் அம்பலப்படுத்தி கண்டித்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்: மக்களை கொள்ளை அடிக்க வரும் “ஸ்மார்ட் மீட்டர்” திட்டம் !
திருவிழா, பண்டிகை காலங்களில் தொழில் நகரங்களில் குவிந்துள்ள மக்கள் தமது சொந்த ஊருக்கு செல்ல முக்கியமாக ரயில்களை விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஒப்பீட்டு அளவில் பேருந்துகளை விட கட்டணம் குறைவு என்பதுதான். அதில் மோடி அரசு நேரத்திற்கு ஏற்ப, நாட்களுக்கு ஏற்ப டிக்கெட் விலை என நிர்ணயித்து சிறப்பு ரயில்களில் கொள்ளையை அரங்கேற்றியது. அதே பாணியில் தான் தற்போதும் மின்சாரத்தில் கை வைத்துள்ளது.
கோடிக் கணக்கான ஏழை எளிய மக்களை ஒரே அடியாக நசுக்க முடியாது அல்லவா? அதற்காகத்தான் தவணை முறையில் அடி விழப் போகிறது. முதலில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோர்களுக்கு இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருமாம் . 2025 ஏப்ரல் 1 முதல் அனைத்து மக்களுக்கும் இந்த கட்டணம் அமலாகுமாம்.
அன்றாடம் காய்ச்சிகள் என்ன செய்வது ?
மின்கட்டணத்தை குறைக்க விரும்புபவர்கள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து ஆறு மணிக்குள் அனைத்து வேலைகளையும் முடித்து விட வேண்டும். அதேபோல் இரவு 10 மணி வரை காத்திருந்து இரவு 10 மணிக்கு மேல் நடு இரவில் தான் மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின், அயன் பாக்ஸ் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை விடிய விடிய பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது இனி தூங்கவே கூடாது! இது நடைமுறைக்கு சாத்தியமாகுமா? சாமானிய மக்கள் வாங்கும் கூலியில் வகைதொகை இல்லாமல் அதிகரிக்கும் மின்சார கட்டணம், சிலிண்டர் கட்டணம், பெட்ரோல் விலை ஏற்றம் என அனைத்துக்கும் ஈடு கொடுக்கத் தான் முடியுமா?
நேரத்திற்கு ஏற்ப உற்பத்தி செலவு மாறுமா?
மின்உற்பத்தியில் அப்படியெல்லாம் கிடையாது. நீர்மின் நிலையமும், அனல் மின் நிலையமும், அணு மின் நிலையமும், காற்றாலைகளும் நேரத்திற்கு ஏற்ப ”பீக் அவர்” சாதாரண நேரம் என்றெல்லாம் மின்உற்பத்தி செலவை மாற்றிக் கொள்வதில்லை. ஆனால் அங்கிருந்து நிலையான கட்டணத்திற்கு பெறப்பட்டு, பகிர்ந்து அளிக்கப்படும் மின்சாரத்தின் சில்லறை விற்பனை விலையை மட்டும் நேரத்திற்கு ஏற்ப கூட்டிக் குறைப்பது எப்படி நேர்மையானதாகும்?
எதிர்காலத்தில் காற்று, நீர், அனல், அணு மின்சாரங்கள் உற்பத்தி செய்யப்படாமல், சூரிய ஒளியிலிருந்து மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நிலைமை வரக்கூடும். அப்போது பகலில் ஒரு விலையையும், சூரிய ஒளியே இல்லாத இரவுகளில் ஒரு விலையையும் நிர்ணயித்தால், அப்போது அதை நியாயம் என ஏற்கலாம்.
மத்திய அரசின் நேரத்திற்கு ஏற்ப மாறுபடும் மின் கட்டண உயர்வு அறிவிப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என பசப்புகிறது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO). இங்குள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விலையை உயர்த்தும் உத்தரவை போடவில்லையாம்.
இப்பொழுது மின்சார வாரியம் விளக்கியுள்ளபடியே தமிழகத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்கலாம். நாளை நிச்சயமாக அதானியின் விருப்பத்திற்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தியே தீரும். முடிவாக, அரசும் ஆணையமும் மின்சார வாரியத்தையே அதானின் காலடியில் வைத்து பணியவும் கூடும்.
நேரத்திற்கு ஒரு விலை வைக்க மின்சார சட்டத்தில், குறிப்பாக மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் – 2020 இல் திருத்தம் செய்துள்ள மோடி தலைமையிலான கேடு கெட்ட ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கத்தினரின் நயவஞ்சக அறிவிப்புகளை கண்டு மதி மயங்க போகிறோமா? அல்லது இந்த “பீக் அவர் “ மின் கட்டண உயர்வை எதிர்த்து களம் காண போகிறோமா? ஆட்சியாளர்கள் ஹை வோல்டேஜ் மின்சாரத்தை தொட்டுப் பார்க்கிறார்கள். அதன் விளைவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
இளமாறன்