
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! புரட்சிகர, ஜனநாயக சக்திகளே!
இந்தியாவை மிகப் பெரும் அபாயம் சூழ்ந்து நிற்கிறது. 1947-இல் சுதந்திரம் பெற்றதாக கூறியதற்கு பிறகு இந்திய ஒன்றிய அரசாங்கத்தை நடத்துவதற்கு பொறுப்பேற்றுக் கொண்ட கட்சிகளைப் போன்ற கட்சி அல்ல பாசிச பாஜக. கீழிருந்து கட்டியமைக்கப்பட்ட பாசிச பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்- பாஜக இந்தியாவின் சொல்லிக் கொள்ளப்படும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதலையும் கோடிக்கணக்கான மக்கள் போராடி பெற்ற உரிமைகளையும் நசுக்கி வருகிறது. சுருக்கமாகச் சொன்னால் வீரிய ஓட்டுரக உருவாக்கமான (hybrid) கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதம் நாட்டு மக்களின் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்துவதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய மக்களின் பொது எதிரியாக மாறியுள்ளது.
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவர்கள், அறிவுத்துறையினர் ஆகிய அனைவரின் மீதும் ஒன்றன்பின் ஒன்றாக தாக்குதல்களை நடத்தி வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக தனது அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளை கார்ப்பரேட் காவி பாசிச தாக்குதல்களின் மூலம் அமுல்படுத்தி வருகிறது.
ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு தேவைப்படுகின்ற பிளவுபடாத அகண்ட, ஏகபோக சந்தை, இந்துராஷ்டிரம் என்ற பெயரில் பார்ப்பன பாசிச சக்திகளால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
2008 ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு பிறகு இந்திய தரகு முதலாளிகளில் மேல்மட்ட பிரிவினரான அம்பானி அதானி போன்றவர்கள் தேசங் கடந்த தரகு முதலாளிகளாக உருவெடுத்து டாட்டா, பிர்லாக்களை பின்னுக்குத் தள்ளி விவசாயம், தொழில் துறை முதல் தொலைத்தொடர்பு, வங்கிகள், ராணுவ தளவாட தயாரிப்புகள் வரை அனைத்தையும் ஏகபோகமாக கைப்பற்றியுள்ளனர். இவர்களே இந்திய வகைப்பட்ட பாசிசத்தை ஆர்எஸ்எஸ் பாஜக மூலம் அமுலாக்குகின்றனர்.
1990-களில் அமுல்படுத்தப்பட்ட தனியார்மயம் -தாராளமயம்- உலக மயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் அதன் தீவிர தன்மையை எட்டியுள்ளது.
அமெரிக்க மேல்நிலை வல்லரசு நடத்தி வருகின்ற வர்த்தகப் போருக்கும் அதை எதிர்த்து முறியடிப்பதாக கூறிக் கொள்கின்ற நவீன சமூக ஏகாதிபத்தியமான சீனாவின் வரிக் கொள்கைகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு சுயசார்பு பொருளாதாரத்தையும், அரசியல் நிலைத் தன்மையையும், சொல்லிக் கொள்ளப்படும் இறையாண்மையையும் இந்தியா இழந்து நிற்கிறது.
இந்த நெருக்கடிகளை மக்களின் மீது சுமத்துவதற்கு சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறைகள், அரசியலமைப்புச் சட்டம் முன்வைக்கின்ற வழிகாட்டு நெறிமுறைகள் ஒருபோதும் உதவாது என்ற கண்ணோட்டத்தில் அதனை நிராகரித்து பாசிச பயங்கரவாதத்தை ஆட்சி வடிவமாக ஆர்எஸ்எஸ் பாஜக முன் வைத்து வெறியாட்டம் நடத்தி வருகிறது.
பல்வேறு இனங்கள், மொழிகள் கலாச்சாரங்கள், மதங்கள் கொண்ட நாட்டை, ‘ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு’ என்ற இந்து, இந்தி, இந்தியா ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு ஆர்எஸ்எஸ் பாஜக கடந்த ஒரு நூற்றாண்டாக வேலை செய்து வருகிறது.
படிக்க:
♦ மக்கள் அதிகாரம் மாநில அமைப்பு மாநாடு | தீர்மானங்கள்
2014 ஆம் ஆண்டு முதல் நேரடியாக ஒன்றிய அரசின் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு அந்த நோக்கத்தில் வெறித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமின்றி 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டை ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யமாக மாற்றும் எண்ணத்தில் மூர்க்கமாக செயல்படுகிறது.
இத்தகைய பாசிச பயங்கரவாத ஒடுக்கு முறைகளை எதிர்த்து முறியடிப்பதற்கு பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்று போராடுகின்ற அனைத்துப் பிரிவு மக்கள் மத்தியில் ஐக்கியமும், ஒரு குறிப்பிட்ட செயல் திட்டத்தின் கீழ் ஒற்றுமையும் பொது எதிரியான ஆர்எஸ்எஸ் பாஜகவை எதிர்த்து களமாடுகின்ற போர்க்குணமும் கொண்ட அமைப்பு தேவைப்படுகிறது என்பதை 2021 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.
“பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உழைக்கும் மக்களை ஒன்று திரட்டுவதில் பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கிய முன்னணியின் அடிப்படையில் ஒரு விரிவான சகல பகுதி மக்களுடைய பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி அமைப்பது குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமான கடமையாகும் என்பதை வலியுறுத்தி, “கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்!” என்ற செயல் தந்திரத்தின் வழியே பிரகடனம் செய்திருந்தோம்.
அத்தகைய கடமையை நிறைவேற்றுவதற்கு பொருத்தமாக விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், மாணவர்கள், மீனவர்கள், பெண்கள், சிறு குறு தொழில் முனைவர்கள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், நாட்டுப்பற்றுள்ள விஞ்ஞானிகள் உள்ளிட்ட
அனைத்து தரப்பு மக்களிடமும் செயல்படுவதற்கும், பாசிச பயங்கரவாதத்தின் பல்வேறு விதமான கொத்துக் குண்டு தாக்குதல்களை புரிய வைத்து ஓர் அணியின் கீழ் திரட்டுவதற்கு பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி நிறுவுவது அவசியம் என்றே கருதுகிறோம்.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகின்ற விவசாய சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள், மாணவர்கள் மற்றும் இதர பிரிவு மக்களின் சங்கங்கள், பாசிசத்தை முறியடிக்க வேண்டும் என்று போராடுகின்ற அனைத்து வகையான சங்கங்கள், தனிநபர்கள் உள்ளிட்டு அனைவரையும் இந்த பொது நோக்கத்தின் கீழ் சமூக அடித்தளத்திலிருந்து ஒன்று திரட்டுவதற்கு பொருத்தமான தருணம் இதுதான் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
இந்த வகையில் நாட்டின் பொது எதிரியாக மாறி ஒட்டுமொத்த மக்களுக்கும் பல்வேறு அடக்குமுறைகளையும், கொடூரமான துன்பத்தையும் ஏவி வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலையும், கார்ப்பரேட் காவி பாசிசத்தையும் எதிர்த்து முறியடிப்பதற்கு பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியை உருவாக்க ஒன்றுபடுவோம் என்று அறைகூவல் விடுக்கின்றோம்.
ரஷ்யப் புரட்சிக்கு தலைமை தாங்கி உலகிலேயே முதல் பாட்டாளி வர்க்க அரசாங்கத்தை அமைத்த பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் மாமேதை லெனின் பிறந்த நாளில் (ஏப்ரல் 22) இந்த அறைகூவலை புரட்சிகர, ஜனநாயக சக்திகளுக்கும், போராடுகின்ற சங்கங்களுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும் முன்வைக்கின்றோம்.
தோழமையுடன்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு-புதுச்சேரி.
தொடர்புக்கு:
தோழர் சதீஷ்
97915 86964