ஆகஸ்ட் 15-ல் மோடிசினை(மருந்தின் பெயர்) விழுங்குவோம், அறிவியலின் பிடியிலிருந்து விடுதலையாவோம்!

சென்ற மாதத்தில் ஒன்றிய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது மோடி, ஹர்ஷவர்தனை ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் , ஜிதேந்திரா சிங்கை இணையமைச்சராகவும் நியமித்தார். மோடிதான் மேலிருந்து எல்லோரையும் ஆட்டுவிப்பார் என்ற நிலையில், பொம்மையாக யார் இருந்தால்தான் என்ன. ஆனாலும் அறிவியல் துறைக்கு இவர்களை அமைச்சர்களாக நியமித்ததன் மூலம் அறிவியல் மற்றும் தொழிநுட்பத்தையே அவமானப்படுத்திவிட்டார் மோடி.

ஜிதேந்திரா சிங்

இந்தியாவின் பிரதமராக மோடி பதவி ஏற்றதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகிவிட்டது. அரசின் நிகழ்ச்சி நிரலை தீர்மானிப்பது முழுக்க முழுக்க அரசர் தாம், மற்றபடி அந்தந்த அமைச்சரவையெல்லாம் இல்லை.  ஆகையால் அறிவியல் துறையை யார் நடத்திச்செல்வர் என்பதெல்லாம் தேவையற்றது. மோடி என்ன சொல்கிறாரோ, செய்கிறாரோ அவைதாம் எல்லாம். ஏற்கனவே அமைச்சரவையில் ஹர்ஷவர்தன் இருந்து சாதிக்காத நிலையில் புதிதாக இவர்களிடமிருந்து வேறு எதுவும் எதிர்பார்ப்பது என்பது வெட்டிவேலை. (அது போலவே தற்போது சமூகநலத்துறை அமைச்சர் ஆகியிருக்கும் மான்சுக் மாண்டவியாவும். 2019-ல் தான் ஒரு தலைசிறந்த தலையாட்டிபொம்மை என்பதை அடிப்படை மருந்துகள் (generic medicine) இனி “மோடிசின்” என்று அழைக்கப்படும் என்று tweet செய்ததன்மூலம் நிரூபித்தார்).

ஒன்றிய அறிவியல் துறை அமைச்சர் ஆவதற்கான ஜிதேந்திராசிங்கின் தகுதிக்கான சான்று எதிர்பார்த்ததைவிட முன்னமேயே வந்துவிட்டது. ஆகஸ்ட் 2-ம் தேதி RSS-ன் அறிவியல்(?) பிரிவான “விக்யான்பாரதி” நடத்திய நிகழ்ச்சியில் பேசும்போது “மோடி ஜம்மு-காஷ்மீரின் கட்ரா வைஷ்ணவி தேவி ரயில் நிலையத்தை திறந்துவைக்க சென்றபோது அவரின் மூளையில் (?) திடீரென்று ஓர் விளக்கு எரிந்து வெயில் அதிகமாக இருந்த அந்த இடத்தில் சூரியஒளித் தகடுகளை நிறுவலாமே” என்று சொன்னாராம். “சமகாலத்தில் தான் பார்த்து வியந்துபோன அறிவியல் உணர்வாளர்களிலேயே மோடியைப்போல் யாரும் இல்லை” என்று ஜிதேந்திரா சிங் உரையாற்றினார். அதாவது அவரைப் பொறுத்தவரையில் நமது அறை இருட்டாக உள்ளபோது மின்சார விளக்கிற்கான ஸ்விட்சை போட்டால் நாம் ஒரு அறிவியலை உருவாக்குகிறோம் என்று அர்த்தம்.

இந்திய அரசிலமைப்பு சட்டத்தில் உள்ள “அறிவியல் உணர்வு” என்ற பதத்தை மோடியும், ஜிதேந்திராவும் தமக்கானது என்று வருடம்தோறும் தொடர்புபடுத்திப் பேசினாலும், அப்பதம் நேருவுக்கு வேண்டுமானால் பொருந்தும். “நேருவோடு ஒப்பிட்டால் நமது பிரதமர் உட்பட எந்தவொரு இந்துத்துவவாதிக்கும் ஒரு மருந்திற்குக்கூட எந்தவிதமான முன்னோக்கிய பார்வையே இருந்ததில்லை, அது நல்லதாகவோ, கெட்டதாகவோ, அல்லது வித்தியாசமாகக் கூட ஒருபோதும் இருந்ததில்லை” என்று கூறுகிறார் ஆகார் படேல். அறிவியலைப் பொறுத்தவரையில் பெரிய பிரச்சினை என்னவென்றால், மோடி அரசானது தன்னை அதிகாரத்தில் வைத்திருக்கும் விடயங்களைத் தாண்டி வேறு எதையும் பார்ப்பதில்லை. அப்படியே அறிவியலைப் பார்த்தாலும், அதன் ஒரு பகுதியை மட்டுமே, அதாவது தவிர்க்க இயலாத வகையில் தேவைப்படும்போது மட்டுமே வணிகம், வெளியுறவு, தொழில்மயமாக்கம், மற்றும் தரகு முதலாளித்துவம் போன்றவற்றில் அறிவியலின் பங்கை அங்கீகரிக்கும்.

2019 மக்களவை தேர்தலுக்கு முன்னால் தேர்தல் ஆணையம் தொலைக்காட்சிகளில் பிரச்சாரத்தை தடைசெய்த பிறகும் மோடி அரசு செயற்கைக்கோள்களைத் தாக்கும் ஏவுகணை சோதனையின் வெற்றியைத் தனதாக்கி தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் விளம்பரம் தேடிக்கொண்டது நினைவில் இருக்கிறதல்லவா?

இந்த வகையில் மோடியின் யோசனையாக “காற்றிலிருந்து நீரைப் பிரித்தெடுக்கும் டர்பைன்” பற்றியும், மழை மேகங்கள் இருக்கும் போது “பாகிஸ்தானின் ராடார்களில் இருந்து தப்பிக்கும் விதமாக மோடி பாலகோட் தாக்குதலை” நடத்தச் சொன்னதையும், மோடியின் தலைமையிலான அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒற்றைச்சாளர முறையைப் பின்பற்றி இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதிக்கும் பல திட்டங்களுக்கு அனுமதி அளித்ததைப் பற்றியும், போலி அறிவியல் நிறைந்த ஆயுஷ் (AYUSH) என்ற துறையை ஒரு அமைச்சகமாக மோடி ஆட்சிக்கு வந்தவுடனே மாற்றியமைத்ததைப் பற்றியும் ஏன் ஜிதேந்திரா சிங் பேசவில்லை என்பது கவனிக்கவேண்டிய விடயமாக உள்ளது.

இந்தியாவின் தலைவர்கள் போலிஅறிவியலையே அறிவியலாக எடுத்துக் கொண்டு தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்கவும், மக்கள் மத்தியில் பேசப்படவும், தன்னாலும் இதைப்போன்று முட்டாள்தனமாக பேசமுடியும் என்று காட்டவும் வாய்க்குவந்தபடி பேசிவருகிறார்கள். மோடியைச் சுற்றிவருவதை அறிவியல் மறுக்கிறது என்பதால் அவர்களுக்கு அறிவியல் பற்றியோ, அறிவியல் உணர்வைப்பற்றியோ, அல்லது அறிவியலின் அடிப்படையைப்பற்றியோ சிறிதும் உண்மையான அக்கறையோ கவலையோ என்றுமே இருந்ததில்லை.

COVID-19 தடுப்பூசிக்கான முன்னெடுப்பை எடுத்திருக்கவில்லையென்றால் மோடி பதவியிலிருந்து விலகவேண்டியதிருக்கும்,  ஆகையால் கோவாக்சின் (Covaxin) தடுப்பூசியை வளர்த்தெடுக்கவும், கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியை உற்பத்தி செய்யவும் அவருடைய அரசின் வேறுபட்ட வழிமுறைகளின் மூலமாக மோடி நிதி ஒதுக்கினார். இதற்கு முன்னாள், பல்வேறுபட்ட மருந்துகளை, அதனை எந்தவித சோதனைக்கும் உட்படுத்தப்படாமலேயே, மோடியும் அவரின் சகாக்களும் பரிந்துரை செய்துகொண்டிருந்தனர்.  அதுபோலவே ககன்யான் திட்டத்துக்கும், “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” (அதான் உலகத்திலேயே பெரிய சிலை)-க்கும் தாங்கள் தான் நிதி ஒதுக்கியதாகவும், மக்கள் இதுநாள்வரை ஒரு அடையாளத்திற்காக கொண்டாடிவந்த கும்பமேளாவே தன்னுடைய தலையீட்டால் தான் நடந்தது எனவும் பீற்றிக்கொண்டனர்.

மோடியும் அவரது கும்பலும் அறிவியலின் அடிப்படையை என்றுமே அறிந்துகொண்டதும் கிடையாது, அறிவியல் எங்கு முடிவடைகிறது என்பதும் புரியாது. உதாரணமாக, ஆகஸ்ட் 2 நிகழ்ச்சியில் ஜிதேந்திரா சிங் பேசும்போது “காந்தி அஹிம்சை எனும் அறிவியல் கருவியை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்தினார்” என்று கூறினார்.

இவர்களை பொறுத்தவரையில் காந்தி நாட்டு விடுதலைக்காக உயிரி ஆயுதத்தை பயன்படுத்தியது சரி, ஆனால் அறிவியலாளர்களின் பணிகள் இவர்களை அம்பலப்படுத்துகிறது என்பதால் நிபா (Nipha) வைரஸை அவர்கள் ஆராய்ந்தால் அது தேசத்துரோக உயிரி ஆயுதமாகிவிடுகிறது.

வருகிற 75-வது சுதந்திர தினத்தன்று மோடி இந்தியாவின் முதலாவது மனிதர்களை கொண்டுசெல்லும் ராக்கெட்டின் (அது சோதனைக்கட்டத்தில் இருக்கும்போதே) வெற்றியை செங்கோட்டையில் அறிவிப்பார் என்று வதந்திகள் நிலவுகின்றன. ஆனால் அதற்கு பெருந்தொற்று விலையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  சென்ற ஆண்டு சுதந்திரதினத்துக்கு சில மாதங்களுக்கு முன்னால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) முதல்வர் பலராம் பார்கவா கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனைகளை இரண்டு மாதத்திற்குள்ளாகவே முடித்துவைத்து மோடி அந்தத் தடுப்பூசியை தனது சாதனையாக சொல்லிக்கொள்ள வழிவகை செய்து தன்னுடைய முட்டாள்தனத்தைக் காட்டிக்கொண்டார்.

(ICMR) முதல்வர் பலராம் பார்கவா

சமீபத்தில் தகுதி குறைக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறையும் தன் பங்கிற்கு இந்த வாரத்திலிருந்து ஆகஸ்ட் 15, 2022 வரை 75-வார சுதந்திரதின விழாவாகக் கொண்டாட விழைந்துள்ளது. வழக்கம்போலவே 75 என்ற எண்னை மையப்படுத்தி, 75 என்று அர்த்தமற்ற வகையில் கொண்டாட்டங்களை அறிவித்து, முகவரியே இல்லாத கல்வி நிறுவனங்களிலிருந்து ஆட்களை கொண்டுவந்து பேசவைக்கும். ஆனால் அதன் விளைவுகள் என்ன என்பதை மட்டும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடும்.

இவ்விளம்பரங்களில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளான “யோசனைகள், சாதனைகள் மற்றும் உறுதி (Idea, Acheivements, and Resolve) ” என என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொண்டாலும், கொடுக்கப்பட்ட கருப்பொருட்கள் எதுவுமே உண்மை இல்லை. அதில் முதல் தலைப்பாக இந்தியா உலகின் ஆசான் (vishva guru) என்பது பொய். மறக்கப்பட்ட நாயகர்களை போற்றுவோம் என்பதும் சந்தேகத்துக்குரியது. ஏனென்றால் இந்த அரசு ஏதோ ஒரு புராணத்தில் சொல்லப்பட்ட கற்பனைப் பாத்திரத்தை தோண்டி எடுத்து இவர்தான் சிறந்த தத்துவஞானி என்று நிறுத்தும்.

ஆக சுதந்திரம் 1.0 என்பது அந்நியர்களின் பிடியில் இருந்து நாடு விடுதலையானதைக் குறிக்கிறது. இந்த சங்கிகள் சொல்லும் சுதந்திரம் 2.0 என்பதோ பகுத்தறிவு சிந்தனையிலிருந்து நாம் விடுதலையாவதை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வது.

நாமும் வாயை மூடிக்கொண்டு மோடிசினை விழுங்குவோம்.

 

நன்றி: countercurrent.org

தமிழில்: செந்தழல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here