பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் இருந்த போது இந்தியாவிலிருந்து கொள்ளையடித்து கொண்டுச் செல்லப்பட்ட தொகையை காட்டிலும் 90களில் அமுலான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் மூலமாக கார்ப்பரேட்டுகள் கொள்ளையடித்துக் கொண்டு சென்றுள்ள தொகை அதிகம் என்று புள்ளி விவரங்கள், தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகை சூறையாடுவதற்கு துடித்துக் கொண்டுள்ள அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் உள்ள பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்துகின்ற கார்ப்பரேட்டுகள் உலகை ஒரு கிராமமாக மாற்றுவதும், உலகின் எந்த மூலையில் பொருள் தேவை என்றாலும், பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும் தனது கரங்கள் நீள வேண்டும் என்று முதலாளித்துவத்தின் கொடூரமான வடிவமாக உருவெடுத்து சுரண்டி வருகிறது..
இந்தக் கார்ப்பரேட் கொள்ளை இந்தியாவைப் பொறுத்தவரை முதல் சுற்றில் பொதுத்துறை நிறுவனங்களையும் விவசாயத் துறையையும் சூறையாடி தன்னை கொழுக்க வைத்துக் கொண்டது. இரண்டாவது சுற்றில் அரசு வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி ஆதார நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து சூறையாடியது.
மூன்றாவது சுற்றில் கனிம வளங்கள் முதல் காட்டு வளம், கடல் வளம் வரை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சூறையாடிக் கொண்டுள்ளது.
இத்தகைய சுரண்டல் மற்றும் கொள்ளைகளுக்கு எதிராக போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள், தேசிய விடுதலைப் போராளிகள் மற்றும் தனி நபர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள், என்றும் தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்தி அடக்குமுறை செலுத்தி வருகிறது ஆர்எஸ்எஸ் – பாஜக சங்கி கும்பல்.
நாட்டின் செல்வ வளங்களையும், இயற்கை வளங்களையும் ஒரு சில கார்ப்பரேட்டுகளும், தனிப்பட்ட தேசங்கடந்த தரகு முதலாளிகளும் கொள்ளையடித்துச் செல்வதை விமர்சிப்பவர்கள், எதிர்த்துப் போராடுபவர்கள் தான் தேச விரோதிகள் என்றும், கார்ப்பரேட் கொள்ளையை ஆதரித்து நிற்பவர்கள் அனைவரும் தேசபக்தர்கள் என்பதைப் போல சித்தரித்து வருகின்றன ஆளும் வர்க்கமும், அதன் கழிசடை ஊடகங்களும்.
இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விடுதலைக்காக போராடுகின்றவர்கள் முதல் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வரை அனைவரையும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று பட்டியல் வெளியிட்டு கொடூரமாக முடக்குவதும், பிரிவினைவாத, பயங்கரவாத பீதியூட்டி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்வதும் ஒரு வாடிக்கையாக மாறியுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு தீவிரவாதிகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிராக இருப்பவர்கள் என்று ஒரு பட்டியலை ஆர்எஸ்எஸ் பாஜகவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மொத்தம் 67 அமைப்புகள், சட்டவிரோத குழுக்கள் என அனைத்திற்கும் புதிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் யுஏபிஏ பிரிவு 35 இன் கீழ் அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்ட 45 தீவிரவாத அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த சட்டத்தின் முதல் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
படிக்க:
♦ பாசிச பயங்கரவாதிகளின் ஆட்சியில் சிறைவாசிகளின் மீதான புதிய வகை ஒடுக்குமுறை!
♦ எல்லைகடந்த பயங்கரவாதம்: தேள்கொட்டிய திருடனாக விழிக்கும் சங்கிகள்!
மீதமுள்ள 22 தீவிரவாத குழுக்கள் யுஏபிஏ பிரிவு 3(1)ன் கீழ் சட்டவிரோத குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இந்தியா முழுவதும் பிரிவினைவாதம் மற்றும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டவை. இந்தியாவில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்த அந்த அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவது, அதன் உறுப்பினர்களை கைது செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ள பயங்கரவாத அமைப்புகளின் புதிய பட்டியல் இதுதான். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு, இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம், காலிஸ்தான் கமாண்டோ படை, பப்பர் கல்சா இண்டர்நேஷனல், காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஜம்மு-காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, ஹிஸ்புல்-முஜாகிதீன், அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி, மக்கள் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ), அசாம் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி, காங்லீபாக் கம்யூனிஸ்ட், மணிப்பூர் விடுதலை முன்னணி, திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, அல்-காய்தா, தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழ் தேசிய மீட்புப் படை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) மக்கள் யுத்தம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இதேபோன்று, சட்டவிரோத குழுக்களாக, இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி), அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்பா), நாகாலாந்து சோசலிச கவுன்சில், முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் (மஸ்ரத் ஆலம் பிரிவு), பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்டவை தடைப்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட உதவி செய்வது கடும் குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய இயக்கங்களில் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் உளவுத்துறையான ரா மற்றும் ஐபி ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் இயங்குகின்ற மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கின்ற பயங்கரவாத தீவிரவாத அமைப்புகள் இருக்கலாம்.
அல்லது தங்களது கொள்கையை ஜனநாயக வழிமுறையில் கொண்டு செல்ல முடியாது என்று கருதுகின்ற ஒரு சில தீவிரவாத அமைப்புகள் இருக்கலாம். ஆனால் கம்யூனிச கொள்கையையும் தேசிய விடுதலை கொள்கையையும் முன்வைத்து போராடுகிறவர்களை பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது சர்வதேச சட்டங்கள், நீதிமன்றங்கள், மற்றும் விதிமுறைகளுக்கு எதிரானது.
நாட்டில் உள்ள 143 கோடி மக்களுக்கும் நாட்டின் இயற்கை வளங்களுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகள், தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள், மீனவர்கள், சிறு குறு தொழில் முனைவர்கள் ஆகிய அனைவருக்கும் எதிராக கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை கொண்டுள்ள ஆர்எஸ்எஸ், பாஜக பயங்கரவாத கும்பல் அதற்கு எதிராக போராடுகிறவர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி ஒடுக்குவதை இன்னும் எத்தனை காலம்தான் அனுமதிக்கப் போகிறோம்.
- மருது பாண்டியன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி
சிறப்பான அம்பலப்படுத்தல் கட்டுரை. நாட்டை ஆள்வதோ ஆர் எஸ் எஸ் – பாஜக – சங்பரிவார் – இந்துத்துவ – காவிக் கூட்டம்!
நாட்டில் நிகழும் சகல விதமான சீர்கேடுகளுக்கும் துன்ப துயரங்களுக்கும் சாதி மத கலவரங்களுக்கும் கொலைகளுக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கும் நாட்டை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதற்கும் மேற்கண்ட அமைப்புகளே மூல காரணமாக விளங்குகின்றன. அப்படி இருக்கையில் இத்தகைய அமைப்புகளை தான் உள்ளபடியே பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட வேண்டும். அதை விடுத்து உரிமைக்காக போராடுகின்ற ஜனநாயக அமைப்புகளை தடை செய்ய சங்பரிவார் காவி க்கூட்டம் முனைந்து நின்று வேலை செய்வது கேவலத்திலும் கேவலம் ஆகும். எனவே இந்திய நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களும் புரட்சிகர இயக்கங்களும்
மக்களை அணிதிரட்டி அவர்களை இல்லாது ஒழிக்க வேண்டும்! கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை முறியடித்தே ஆக வேண்டும். அந்நோக்கில் எழுதப்பட்ட இக்கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!