
வடமாநில மக்களால் மிகப் பெரும் அளவில் கொண்டாடப்படும் பண்டிகை ஹோலி. அந்தப் பண்டிகையில் மக்கள் வீதிகளின் திரண்டு ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்வர்.
இந்த ஹோலி பண்டிகை இந்த ஆண்டு முஸ்லிம்களின் பண்டிகையான ரமலான் மாத நோன்பு காலத்தில் வருகிறது. அதாவது ரமலான் மாதத்து வெள்ளிக்கிழமை தொழுகை என்பது இஸ்லாமியர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. அந்த வெள்ளிக்கிழமை நாளில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையும் வருகிறது.
ஆர்எஸ்எஸ், பாஜகவினர் மக்களிடையே மதவெறியை பரப்புவதற்காக தீயாய் வேலை செய்பவர்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். உத்திரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த வேலையில் மிகப்பெரும் விருப்பம் கொண்டவர் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். மதவெறியரான யோகி ஆதித்யநாத் மக்கள் மனங்களில் காவி வெறியை வளர்ப்பதற்கான வாய்ப்பாக இந்தப் பண்டிகையை பயன்படுத்தி கொண்டிருக்கிறார்.
“ஹோலி வருடத்திற்கு ஒரு முறை வருகிறது, ஆனால் ஜும்ஆ தொழுகை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்யப்படுகிறது. எனவே, ஜும்ஆ தொழுகையை ஒத்திவைக்கலாம். யாராவது ஜும்ஆ தொழுகையை செய்ய விரும்பினால், அவர்கள் அதை வீட்டிலேயே செய்யலாம். அவர்கள் மசூதிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அல்லது அவர்கள் மசூதிக்குச் செல்ல விரும்பினால், அவர்களுக்கு வண்ணங்களில் எந்தப் பிரச்சினையும் இருக்கக்கூடாது” என்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிலும் கூட மாரியம்மன் கோவில் திருவிழாக்களில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி விளையாடுகின்றனர். ஆனால் அறிமுகம் இல்லாத யார் மீதும் மஞ்சள் நீரை ஊற்றுவது என்பது இல்லை. அப்படி தெரியாமல் ஊற்றி விட்டாலும் ஊற்றிய நபர் வருத்தம் தெரிவிப்பது என்பது மிகவும் சாதாரணமாக நடக்கும் விசயம்.
அதேபோல, மஞ்சள் நீரை தன் மீது ஊற்றுவதை விரும்பாத அல்லது கடுமையாக ஆட்சேபிக்கிற நபர் மீது யாராவது நீரை ஊற்றினால் அவரை பிறர் கண்டிப்பது என்பதும் தமிழ்நாட்டில் மிகவும் சாதாரணமாக நடக்கும் விசயம். இப்படித்தான் தமிழக மக்கள் பழக்கப்படுத்தப்பட்டு, பண்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
இஸ்லாமியர்களின் விழாக்களின் போது இந்துக்கள் அவர்களுக்கு உதவிகள் செய்வதையும் இந்துக்களின் விழாக்களின் போது இஸ்லாமியர்கள் அவர்களுக்கு உதவிகள் செய்வதையும் தமிழகம் முழுக்க பரவலாக காண முடியும். இதற்கு உதாரணமாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் உணவு நீர்மோர் கொடுப்பதை கூறலாம். இது தமிழர்களின் பண்பாடு. தமிழர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் நாகரீகம்.
ஆனால் உத்திர பிரதேசத்தில் என்ன நடக்கிறது?
இஸ்லாமியர்கள் ஹோலி பண்டிகையின் போது வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று பகிரங்கமாக மிரட்டப்படுகிறார்கள். இந்த வேலையை, மதவெறியை மக்கள் மனங்களில் வளர்ப்பதற்கான வேலைகளை மாநில முதல்வரே முன்நின்று பகிரங்கமாக செய்து கொண்டிருக்கிறார்.
இஸ்லாமியர்களை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மட்டும் இந்த ஆர்எஸ்எஸ் பாஜகவினர் சொல்லவில்லை. ஹோலி பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் நகரில் உள்ள மசூதிகளை தார்ப்பாய் போட்டு மறைத்து வைத்திருக்கிறார்கள்.
படிக்க:
🔰 பாபர் மசூதி இடிப்பு கடப்பாரையுடன் தொடங்கவில்லை!
🔰 பாப்ரி மசூதியிலிருந்து கியான்வாபி வரை: இந்திய நீதிமன்றங்கள்!
இதன் மூலம், இஸ்லாமியர்களையோ இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களையோ கண்ணால் கண்டால் கூட காவி வெறியர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் வன்முறையில் ஈடுபடுவார்கள்; இதை தவிர்க்க முடியாது என்று பகிரங்கமாக கூறுகிறது பாஜக அரசு.
இதைப் பார்த்து யாரும் ஆச்சரியப்படவோ அதிர்ச்சி அடையவோ தேவையில்லை. பார்ப்பன இந்து மதத்தின் வரலாறே அப்படித்தான் இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் தெருவில் நடக்கக்கூடாது என்று சட்டம் வகுத்தவர்களும் இவர்கள்தான். தாழ்த்தப்பட்ட மக்கள் வீதிகளில் எச்சில் துப்பினால் வீதி அசுத்தப்பட்டுவிடும் என்று அம்மக்களின் கழுத்தில் எச்சில் கலயங்களை கட்டி, அதில் எச்சில் துப்பிக்கொண்டு நடக்க சொன்னவர்களும் இவர்கள் தான்.
அன்று நாடார் சாதி மக்களை கண்ணால் கண்டாலே தீட்டு என்று கூறி ஆதிக்க சாதியினர் முன்பு வரக்கூடாது என்றார்கள். இன்று இஸ்லாமியர்களை வீட்டிற்கு வெளியே வரக்கூடாது; இந்துக்களின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்கிறார்.
அன்று நாடார், ஈழவர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் மார்பை மறைத்துக் கொள்ளக் கூடாது என்று சட்டம் வகுத்து நடைமுறைப்படுத்தினார்கள். இன்று மசூதிகளை திரையிட்டு மறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அன்று தீண்டாமை – சாதி வெறியை பரப்பி நாட்டை நாசமாக்கிய பார்ப்பன மத வெறியர்கள் இன்று மத வெறியை பரப்பி நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை கருத்திலும் களத்திலும் மோதி வீழ்த்தாவிட்டால் நாடும் நாட்டு மக்களின் வாழ்க்கையும் சின்னாபின்னமாக்கப்பட்டு விடும் என்பதும் உறுதி. இதை தடுக்க இந்த ஆர் எஸ் எஸ், பிஜேபி மத வெறியர்களை வீழ்த்தி நாட்டைக் காக்க அனைத்து தரப்பு மக்களையும் ஒரு அணியில் திரட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
– குமரன்