சொந்த அணிகளையே ஏய்க்கும் வினவு குழுவினர். பாகம்-3

உண்மையிலேயே அப்படி சலுகை பெற்ற சிலர் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டும், இன்னமும் வினவு தலைமையுடன் ஒட்டிக் கொண்டுள்ளனர்

சொந்த அணிகளையே ஏய்க்கும்
வினவு குழுவினர்.
பாகம்-3


“பாட்டாளி வர்க்கத்தினுடைய புரட்சிகரப் போராட்டத்தின் தலைமை முறை பற்றிய விஞ்ஞானமாக அமைவது லெனினிசத்தின் போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரங்கள் ஆகும்.” என்று எமது செயல்பாட்டுக்கு வழிகாட்டுகிறது, எமது ஆவணம். ஆனால் போர்த் தந்திரம், செயல்தந்திரம் வகுப்பதில் தன்னிடம் இருந்த சித்தாந்த குறைபாட்டை மறைக்கவும், தனது தலைமையை அணிகளிடம் தக்க வைக்கவும் கவனம் செலுத்தியது முன்னாள் தலைமை. அதே பாணியில் அணிகளிடம் அறிவியலற்ற பார்வையையும், நடந்த உண்மைகளை மறைத்து நம்பூதிரி பாணியில் வியாக்கியானம் செய்து திரித்து புரட்டுவதற்கும் பொருத்தமாக தலையை சுற்றி மூக்கை தொடும் பகீரத முயற்சியில் ஈடுபடுகிறது வினவு தலைமை.

“கட்சியில் நிலவும் அகநிலை தவறுகளில் பொதுத் தன்மையை தொகுத்துப் பார்த்து அமைப்பு வலது திசை விலகல் அடைந்து இருப்பது தான் இதற்கு காரணம் என்பதை இப்படி நம் உணர்ந்தது. அந்த வகையில் வலது திசை விலகலை கீழ்க்கண்ட வகையில் வரையறுத்துள்ளது.

1992-க்கு பிறகு எமது அமைப்பினுடைய திசைவழியில் முக்கிய அம்சமான போர்க்குணம், வர்க்க அடித்தளம் என்ற மூல முழக்கங்களை கைவிட்டு செயல் தந்திர அரசியலை மாநிலம் தழுவிய அளவில் பிரச்சாரமாக எடுத்துச் செல்லும் ஒரு தன்னெழுச்சியான அரசியல் வழியை அரசியல் தலைமை நடைமுறைப்படுத்தியது. தொடக்கத்தில் சில கிளர்ச்சி நடவடிக்கைகளுடன் தொடங்கிய இந்தப் பாதை 1997 பிறகு மேலும் திசை திரும்பி வெறும் பிரச்சாரங்களை மையப்படுத்தியதாக மாறியது”, என்று 13.01.2021-ல் வெளியிட்ட தனது அறிக்கையில் முன் வைக்கிறது வினவு தலைமை.

இந்த கூற்று உண்மையா என்பதை வரலாற்று பார்வையுடனும், ஆசான்களின் மேற்கோள்களுடனும் பகுத்துப் பார்ப்போம்.

“புரட்சியின் இடைக்கட்டங்களுக்கும் செயல்தந்திர கால கட்டங்களுக்கும் ஏற்றவாறு பாட்டாளி வர்க்கக் கட்சியின் போர்த்தந்திர மற்றும் செயல்தந்திரக் கொள்கைகளிலும், நெறிமுறைகளிலும் ஏற்படும் மாறுதல்களைச் சரியாக வரையறுத்துணர வேண்டும்; போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் ஏற்படும் போது, புரட்சி மற்றும் எதிர்ப்புரட்சி சக்திகளின் சேர்க்கைகளில் மாறுதல் ஏற்படும் போது, அதாவது, தேசிய முதலாளி வர்க்கத்துடன் மட்டுமோ அல்லது அதோடு ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவோடும் சேர்ந்தோ பாட்டாளி வர்க்கமும், அதன் கட்சியும் ஐக்கிய முன்னணியில் சேரும் போது அல்லது அதை உடைத்துக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படும் போது, பிரதான முரண்பாடு ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறும் போது இதுவும் கூட புரட்சி மற்றும் எதிர்ப்புரட்சி சக்திகளின் சேர்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதுதான் – இடைக்கட்டம் மாறுகிறது.

தோழர் லெனின்

இம்மாதிரியான, புறவயமான நிலைமைகளிலான மாறுதல்களின் போது போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த சில மாறுதல்களோடு (போர்த்தந்திரமே மாறி விடுவதில்லை, ஆனால் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த சில மாறுதல்களை பாட்டாளி வர்க்கம் மற்றும் அதன் கட்சியின் போர்த்தந்திரக் கொள்கைகளிலும் நெறிமுறைகளிலும் கொண்டு வருகின்றன) செயல்தந்திரங்களும் மாறுகின்றன. ஆனால் புரட்சியின் குறிப்பிட்ட இடைக்கட்டத்திலேயே கூட புரட்சி மற்றும் எதிர்ப்புரட்சி சக்திகளின் சேர்க்கைகளில் மாறுதல் ஏற்படாத பொழுதே கூட ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்தின் பருண்மையான அரசியல் நிலைமைக்கேற்ப, புரட்சி இயக்கத்தின் வெள்ளம் பெருகுவது அல்லது வடிவது, புரட்சி அலை ஓங்குவது அல்லது ஓய்வதற்கேற்ப செயல்தந்திரங்கள் மாறும்.

இவ்வாறு அணுகுவது தான் உணர்வு பூர்வமாக பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கத்தின் தலைமை முறை பற்றிய விஞ்ஞானம் என்கிற முறையில், குறிப்பிட்ட தருணத்திற்கான பருண்மையான நிலைமைகளுக்கேற்ப திட்ட வகைப்பட்டதாக செயல்தந்திரங்களை மார்க்சிய- லெனினிய விதிகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் வகுப்பதாகும்.

…வடதிசைப் படையெடுப்பு, விவசாயப் புரட்சி யுத்தம், ஜப்பானிய எதிர்ப்பு யுத்தம் ஆகிய காலங்களில் அனைத்திலும் புதிய ஜனநாயகம் என்ற நமது பொதுத்திட்டம் மாறாமலிருந்து வந்துள்ளது; நமது குறித்த திட்டத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன; ஏனெனில், இந்த மூன்று காலங்களிலும் நமது நண்பர்களும் எதிரிகளும் அப்படியே மாறாமல் இருக்கவில்லை.” என்று போர்த் தந்திரம், செயல்தந்திரம் பற்றிய புரிதல்களையும், உறவுகளையும் தொகுத்து வைக்கிறார் தோழர் மாவோ. (மாவோ, தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்,)

தோழர் மாவோ 

ஆனால் இது பற்றி எந்த புரிதலும் இல்லாமல், அதிலும் ஒற்றுமையின்றி இருதரப்பாக பிரிந்து கொண்டு போர்த் தந்திரம் குறித்த ஆய்வில் இருக்கிறோம், அதனால் செயல்தந்திரம் வகுத்துக் கொண்டு செல்லமுடியாது என்று ஒரு தரப்பும், புதிய ஜனநாயக புரட்சிக்கு இடைக்கட்டம் என்று ஒன்று கிடையாது என்பதைப் போல, அதுவும் குறிப்பாக போர் அபாயம், பாசிச காலக்கட்டம், அன்னிய ஆக்கிரமிப்பு போன்ற சூழல்களில் கூட எப்போதும் புதிய ஜனநாயக புரட்சிதான் என்று ‘பஜனை கோஷ்டியினர் போல’ மற்றொரு தரப்பும் அணிகளை ஏய்க்கின்றனர்.

“அரைக்காலனிய – அரைநிலப்பிரபுத்துவ அமைப்புக்கு எதிரான ஏகாதிபத்திய எதிர்ப்பு – நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியின் தன்மையுடைய போக்கின் சாராம்சத்தில், அடிப்படையில் மாறுதல் ஏற்படாத அதேசமயம் சீனப்புரட்சியின் ஒரே கட்டத்தில் அதன் வளர்ச்சிப் போக்கில் பலதடவை இடைக்கட்டங்கள் மாறின. புரட்சியின் தோல்வி, வடக்கில் யுத்த பிரபுக்களின் ஆட்சி நிலைநாட்டப்படுதல், முதல் தேசிய ஐக்கிய முன்னணி உருவாதல் மற்றும் 1921-27 புரட்சி; ஐக்கிய முன்னணி உடைவதும், எதிர்ப் புரட்சியின் பக்கம் முதலாளித்துவ வர்க்கம் புரட்சியை கைவிட்டு ஓடி விடுவதும், விவசாயப் புரட்சி யுத்தமும்; இரண்டாவது தேசிய ஐக்கிய முன்னணி நிறுவப்படுவதும், ஜப்பானுக்கெதிரான எதிர்ப்பு யுத்தமும்; மீண்டும் உள்நாட்டுப்போரும், புதியஜனநாயகப் புரட்சியின் வெற்றியும் – ஆகிய முக்கியமான போக்குகள் அடங்கிய நான்கு பெரும் இடைக்கட்டங்களைக் கொண்டிருந்தது.

சியாங் கே ஷேக்குடன் மாவோ

அவற்றில் 1924-27 முதல் மாபெரும் புரட்சி, 1927-37 மாபெரும் விவசாயப் புரட்சி யுத்தம், 1937-45 ஜப்பானிய எதிர்ப்பு யுத்தம் மற்றும் இறுதியான 1945-49 உள் நாட்டுப்போர் ஆகிய நான்கு இடைக்கட்டங்களில் சீனப் பொதுவுடைமைக்கட்சி முக்கிய பாத்திரமாற்றியது. ஒவ்வொரு இடைக்கட்டத்திலும் போர்த்தந்திர ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த செயல்தந்திரங்களை வகுத்துச் செயல்படுத்தியதோடு, ஒவ்வொரு இடைக்கட்டத்திலேயும் கூட புரட்சி இயக்கத்தின் வெள்ளம் பெருகுவது அல்லது வடிவதைப் பொருத்து – புரட்சி அலை ஓங்குவது அல்லது ஓய்வதைப் பொருத்து குறிப்பிட்ட பருண்மையான நிலைமைகளுக்கு ஏற்றவாறு புதிய செயல்தந்திரங்கள் வகுக்கப்பட்டன.

போர்த்தந்திர கட்டம் முழுவதற்கும் சக்திகளின் இந்த பொது ஒதுக்கீடு பொருந்தும் எனினும், புரட்சியின் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சக்திகளைப் பருண்மையாக ஒதுக்குவது போர்த்தந்திரம், செயல்தந்திரம் – இரண்டாலும் தீர்மானிக்கப்படுகிறது. ஜனநாயகப் புரட்சிக் கட்டத்திலேயே பாசிச ஆட்சி வந்தால், பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி என்ற அமைப்பைக் கட்டி செயல்தந்திர ரீதியில் போரிடுவோம். அப்போது பாசிச எதிர்ப்பில் நிற்கும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரோடும் கூட சேர்ந்து போராடுவோம். அதாவது, சக்திகளை பொதுவாக ஒதுக்கீடு செய்யும் திட்டம் போர்த்தந்திர ரீதியிலான ஐக்கிய முன்னணிக்கான சக்திகளின் சேர்க்கையைக் குறிக்கிறது. குறிப்பிட்ட சமயத்தில் அமைக்கப்படும் ஐக்கிய முன்னணியின் சேர்க்கை, போர்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் இரண்டாலும் தீர்மானிக்கப்படுகிறது.” என்று விளக்குகிறது எமது ஆவணம்.

அதன் ஒளியில் தான் 1981 முதல் 2014 வரை செயல்தந்திர அரசியலைக் கொண்டுசென்றோம். 2014 தேர்தலுக்கு முன்னரே, பாசிச ஆர்.எஸ்.எஸ் – மோடி ஆட்சிக்கு வரும் முன்னரே, இது பற்றி அவதானித்து மோடி முகமூடி என்று மோடி கும்பலின் கார்ப்பரேட் கைக்கூலித்தனங்களை அம்பலப்படுத்தி பிரச்சார இயக்கம் மேற்கொண்டோம். திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டங்கள் புதியநம்பிக்கையை கொடுப்பதாக பார்ப்பன எதிர்ப்பு சக்திகளும், மதச் சிறுபான்மையினரான இசுலாமியர்களும் கூறினர்.

இது ஒன்றையும் அங்கீகரிக்க மனம் இல்லாத வினவு தலைமை கடந்த 28 ஆண்டுகளாக பார்ப்பன பாசிசத்திற்கும், மறுகாலனியாதிக்கதிற்கும் எதிராக நடந்த திட்டவகைப்பட்ட போராட்டங்களையும், செயல்தந்திர அரசியல் வழியில் நின்று நடத்தப்பட்ட போராட்டங்களையும் கூட தன்னெழுச்சி என்று முத்திரை குத்தியுள்ளனர். தன்னிடம் உள்ள சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தை மறைக்கவும், அணிகள் மத்தியில் தலைமைக்கு எதிராக எழுந்த விமர்சனங்களையும் மறைக்க ஒட்டு மொத்த திசைவழியையே, அதுவும் 28 ஆண்டுகால அமைப்பு நடவடிக்கைகளையே விமர்சித்து புறக்கணிக்கிறது.

இந்த அணுகுமுறைகள், முடிவுகள் அனைத்தும் தவறானது என்பது மட்டுமின்றி புரட்சிகர அரசியலை கொண்டு செல்வதில் பல்வேறு அடக்குமுறைகள், தியாகங்களை செய்து செயல்பட்ட தோழர்களின் உழைப்பை மலினமாகவும், கொச்சையாகவும் திரித்து கூறுவது தான்.

புரட்சிக்கு தலைமை தாங்கும் விஞ்ஞான பூர்வமான கலையான போர்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் பற்றிய பருண்மையான பார்வையோ, அது மக்களை திரட்டுவதில் அளிக்கும் பங்களிப்பையோ உணராத வினவு தலைமை, ’போர்க்குணம்’, ’அடித்தளம்’ என்ற சொல்லடுக்குகளால் அரசியல் போராட்டத்தின், அதுவும் செயல்தந்திர அரசியல் போராட்டத்தின் உண்மையான எழுச்சியை காணத்தவறி தடுமாறி, தடம் மாறி செல்கின்றனர். 1980 களில் விரல் விட்டு எண்ணத்தகுந்த பகுதிகளையும், சில பத்து தோழர்களையும் கொண்ட எமது அமைப்பு இன்று தமிழகத்திலும், ஏன் இந்திய அளவில் பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே குறிப்பிடத்தக்க சக்தியாக விளங்கவும், அடையாளம் காணப்படவும் காரணம் தொடர்சியான செயல்தந்திர அரசியல் போராட்டங்களே என்றால் அதனை யாரும் மறுக்க முடியாது.

1992-க்குப் பின்னர் நடந்த மக்களை அணிதிரட்டிய போர்க்குணமிக்க போராட்டங்கள் எத்தனை? இந்திய வரலாற்றில் 12 நூற்றாண்டுகளுக்கு பிறகு தில்லைக் கோயிலில் பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்கி அவர்களின் சாம்ராஜ்ஜியத்திற்குள் புகுந்து நூற்றாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழியை சிற்றம்பல மேடையில் ஒலிக்க செய்து அடக்கு முறைகளையும் வழக்குகளையும் தாங்கி அமைப்புக்கு பெருமை சேர்த்தது எது? மணல் கொள்ளையில் எதிரிகளின் தலை கொய்யும் மிரட்டலுக்கு அஞ்சாமல் பகுதி மக்களை திரட்டி வெள்ளாற்று மணல் கொள்ளையை தடுத்தது எது?, பன்னாட்டு கொள்ளை கூட்டமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் சுற்றுசூழல்மாசு, மக்களின் உயிர் கொலைகளை எதிர்த்து போராடி குண்டிப்பட்டு சக தோழர்கள் இறந்தபோதும் களத்தில் நின்று போராடி கம்பெனியை இழுத்து மூடியது எது?

தாதுமணல் கொள்ளையில் தென்னகத்தின் மாஃபியா கும்பலின் தலைவனும் பாசிச ஜெயா கும்பலின் சகபாடியான வைகுண்டராஜனை எதிர்த்து போராடி சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தியது எந்த அரசியல்?, டாஸ்மாக் பிரச்சினையில் விற்பனைக் கடைகளை நொறுக்கி கடையை இழுத்து மூடி சிறை சென்றது எது? செயல்தந்திர அரசியல் வழியில் நின்று போராடிய அமைப்பும், இவ்வாறு எண்ணிலடங்கா பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் களத்தில் நின்று போராடி, எதிரிகளின் நேரடி தாக்குதலுக்கும், அரச பயங்கரவாதத்தின் பல்வேறு வழக்குகளுக்கு சிறை சென்ற முன்னணியாளர்களின் உழைப்பும் தான்.

இவை அனைத்தையும் ஒரு அடியில் புறந்தள்ளும் வினவு தலைமை, வெகுசன அமைப்புகளையும் அது ஆற்றிய பணிகளையும், மக்கள் திரள் முன்னணியாளர்களையும் இழிவுபடுத்தி ஒதுக்கி விட்டு யாரைக் கொண்டு புரட்சி நடத்துவார்கள்! 20, 30 ஆண்டுகள் தலைமையில் இருந்து போராடிய தோழர்களை இழிவுபடுத்தி புறந்தள்ளிவிட்டு, செயல்தந்திர அரசியல் வழி பிரச்சாரம்தான் ‘வலது திசை விலகல்’ தோன்ற அடிப்படைக் காரணம் என்று ஆய்வு செய்து அறிக்கை விட்டு விட்டு, இப்போது மீண்டும் பாணியில் அதே பிரச்சார இயக்கம், புதிய தோழர்கள் தலைமை என்று கிளம்பியுள்ளனர். இதையும் கேள்வி கேட்க முடியாத ‘ஜனநாயகம்!’

அது மட்டுமில்லை ”கடந்த 25 ஆண்டு காலமாகப் பின்பற்றப்பட்ட இந்த தன்னெழுச்சி வகைப்பட்ட பிரச்சார வேலைபாணியாலும், செயல்தந்திரத்தை முன்னெடுத்து சென்றதில் நடந்த மேற்கண்ட தவறுகள் காரணமாகவும், எமது மக்கள்திரள் அரங்கின் பிரபலத் தலைவர்களும், குட்டி முதலாளித்துவ படிப்பாளி பிரிவினரும் கட்சி அமைப்புமுறைகளை மீறிய, கண்காணிப்புக்கு அப்பாற்பட்ட தனிச்சிறப்பான சலுகைகள் பெறும் நிலை உருவானது.” (அழுத்தம் அவர்களுடையது) என்று முழு உண்மையை அணிகளுக்கு மறைத்து கண்கட்டு வித்தை காட்டுகிறது 09-01-2021 தேதியிட்ட வினவு அறிக்கை.

கவனியுங்கள்! தனிச்சிறப்பான சலுகைகளை வழங்கிய தோழர்கள் யார்? அவர்களின் மார்க்சிய விரோத அமைப்பு முறை என்ன? அதன் வர்க்க குணாம்சம் என்ன? போன்ற விவரங்களுக்குள் சென்று பரிசீலிப்பது தலைவேதனை தரும் என்பதால் மட்டையடியாக ’வலது’ என்ற கோணிக்குள் போட்டு அமுக்க பார்கின்றனர். உண்மையில் தவறுகளுக்கு எதிராக போராடிய தோழர்களின் மீது அவதூறுகளும் வசவுகளையும் வாரியிறைத்தனர். உண்மையிலேயே அப்படி சலுகை பெற்ற சிலர் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டும், இன்னமும் வினவு தலைமையுடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். ஊழல் பேர்வழிகளுக்கு வால்பிடிக்கும் சிலர் தொழிற்சங்க அரங்கு என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக்குழுவிலும் அங்கம் வகிக்கின்றனர்.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க தனது அரசியல் ஓட்டாண்டித்தனத்தினை மறைக்க அடுக்கடுக்கான பொய்களை அள்ளி விடுகிறது.

“மேலும் ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்டு வரும் மறுகாலனியாதிக்க கொள்கைகளின் விளைவாக இந்தியாவின் அரசியல், பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்வதாக ஏற்றுக்கொண்டிருந்த முன்னாள் தலைமை கடந்த 8 ஆண்டுகளாக, மூன்று முறை அவகாசம் கேட்டும் ஆய்வே முடிக்காததால் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப புதிய செயல்தந்திர அரசியலை வகுத்து முன்வைப்பதாக சொல்லி அதுவும் நிறைவேறாமல் இருந்ததாலும் முன்னணியாளர்கள் மத்தியில் அதிருப்தியும் சோர்வும் நிலவியது” என்று 13.01.2021 -ல் அறிக்கை வெளியிட்டு விட்டு 8 மாதத்திற்குள் புதுக்காரணம் ஒன்றை முன் வைத்து அணிகளை ஏய்க்கிறது.

“இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நிலவிய கொரானா பொது முடக்கம் காரணமாகவும் கலைப்புவாத, பிளவுவாத, சீர்குலைவு சக்திகளின் சதி வேலைகளால் எமது அமைப்பு பாதிப்புக்கு உள்ளாகிய சூழலில் அச்சீர்குலைவு சக்திகளை முறியடித்து அமைப்பை மீண்டும் நிலைநாட்டும் பணிகளின் காரணமாகவும் இந்த செயல் தந்திர வரைவு அறிக்கையை நிறைவேற்றுவதில் தவிர்க்க இயலாமல் கால தாமதம் ஏற்பட்டுள்ளது” என்று 23-09-2021 தேதியிட்ட அறிக்கையில் திரித்துப் புரட்டியது..

அந்த அறிக்கையில் “மேலும் இந்துமதவெறி பார்ப்பன பாசிசமும், கார்ப்பரேட் முதலாளிகளின் பாசிசமும் கலந்த வீரிய ஒட்டுரக பாசிசம் முன்னேறி தாக்கி வரும் தற்போதைய சூழலில் அதனை வீழ்த்துவதற்கான நோக்கத்துடன் பல போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய செயல் தந்திர திட்டத்தை எமது அமைப்பு முன்வைத்தது.

பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை அமைப்பதற்கான அடிகற்களாக கீழிருந்து கட்டி அமைக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கிய முன்னணியும், பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியும் எவ்வாறு அமைய வேண்டும் எனும் வழிமுறைகளை கொண்ட திட்டமிட்ட பாசிச எதிர்ப்பு வேலைத் திட்டத்தினை இக்கூட்டம் முன்வைக்கிறது. இவற்றின் வளர்ச்சிப் போக்கிலேயே ஆளும் வர்க்கத்தின் பாசிச எதிர்ப்பு பிரிவினரான ஐக்கிய முன்னணியாக அவை உருவெடுக்கும் எனும் தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டம் அவற்றின் உள்ளடக்கம், உருவங்கள் குறித்த கண்ணோட்டத்தில் வழங்குகிறது” என்று முன் வைத்துள்ளனர். ஆனால் முரண்பாடு குறித்து தோழர் மாவோ முன் வைப்பது என்ன? அதனை எவ்வாறு சமூக-பொருளாதாரத்தில் பொருத்தி பார்ப்பது என்பதை பார்ப்போம்.

“முரண்பாட்டில் உள்ள இருபக்கங்களுடைய இந்த வேறுபட்ட இயல்பானது அல்லது குறித்த பண்பானது சக்திகளின் சமமற்ற  தன்மையை புலப்படுத்துகின்றது. இந்த உலகில் உள்ள எப்பொருளும் முற்றானதாகவும், சீராகவும் வளர்வதில்லை. ‘சமமான வளர்ச்சிக் கோட்பாட்டை’ அல்லது ‘சமநிலைக் கோட்பாட்டை’ நாம் எதிர்க்க வேண்டும்.

முரண்பாட்டின் குறித்த தன்மையைப் பற்றி ஆராயும் போது நாம் இந்த இரு பக்கங்களையும் ஆராய வேண்டும். அதாவது ஒரு வளர்ச்சிப் போக்கில் உள்ள முதன்மை முரண்பாட்டையும், முதன்மையற்ற முரண்பாடுகளையும் மற்றும் ஒரு முரண்பாட்டின் முதன்மைக் கூறையும், முதன்மையற்ற கூறையும் ஆராய வேண்டும். இது போன்று, முரண்பாட்டின் இவ்விரு பக்கங்களுடைய வேறுபட்ட இயல்புகளையும் ஆராயாவிட்டால் நாம் சாரமற்ற ஆய்வில் முழ்கி, முரண்பாட்டைத் திட்டவட்டமாக புரிந்து கொள்ள இயலாதவர்களாவோம்.

இதனால் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சரியான வழி முறைகளைக் கண்டுபிடிக்க முடியாதவர்களாகவும் இருப்போம்.” என்கிறார் தோழர் மாவோ.

ஆர்.எஸ்.எஸ்- மோடி கும்பலின் கார்ப்பரேட்-காவி பாசிசத்தின் உள்ளடக்கம் என்ன, அதனை எதிர்க்கும் சக்திகளின் பலம், பலவீனம் என்ன என்பது பற்றி பருண்மையான ஆய்வு இல்லாமல் மக்கள் முன்னணி, அய்க்கிய முன்னணி என்று வார்த்தைகளை பிடித்துக் கொண்டு அணிகளை ஏய்கின்றனர்.

அய்க்கிய முன்னணி பற்றி புரிந்துக் கொள்ளவும், பாட்டாளி வர்க்கத்தின் நட்பு சக்திகளைப் பற்றிய வரையறையைப் பற்றி தோழர் மாவோவின் கூட்டரசாங்கம் என்ற நூலில் உள்ள சில மேற்கோள்களைப் பார்ப்போம்.

“நாம் ஏன் நமது புரட்சி தற்போதைய காலகட்டத்தில் முதலாளித்துவ ஜனநாயகத் தன்மையுடையது எனக் கூறுகின்றோம்? பொதுவாக இந்தப் புரட்சியின் இலக்கு முதலாளித்துவ வர்க்கமல்ல; தேசிய மற்றும் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையே இதன் இலக்கு, இந்தப் புரட்சியின் எடுக்கப்படும். -நடவடிக்கைகள் பொதுவில் தனியுடைமையை ஒழிப்பவை அல்ல அதைப் பாதுகாப்பவையே; இத்தப்புரட்சியின் பயனாக முதலாளித்துவம் இன்னும் கணிசமான அளவு நீண்ட காலகட்டத்திற்கு உகந்த அளவிற்கு வளர வகை செய்யப்படும் என்றாலும் கூட, தொழிலாளி வர்க்கம் தன் பலத்தைக் கட்டி அமைத்து சீனாவை சோசலிசத்தின்’ திசையில் வழிநடத்திச் செல்ல இயலும் என்றே நாம் கருதுகிறோம்.

“உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்பதன் பொருள் நிலத்தை நிலப்பிரபுத்துவ சுரண்டல்காரர்களிடமிருந்து விவசாயிகளுக்குக் கைமாற்றுவது, நிலப்பிரபுக்களின் தனியுடைமையை விவசாயிகளின் தனியுடைமையாக, ஆக்குவது, விவசாயிகளை நிலப்பிரபுத்துவ உறவுகளிலிருந்து விடுவிப்பது, இவ்வாறாக விவசாய நாட்டை தொழில் வளமிக்க நாடாக மாற்றுவது என்பதேயாகும். இவ்வாறாக, “நிலம் உழுபவனுக்கே சொந்தம்” என்பது ஒரு முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கையின் தன்மையுடையதே, தொழிலாளி வர்க்க- சோஷலிசக் கோரிக்கையின் தன்மையுடையதல்ல; அது கம்யூனிஸ்டுகளாகிய தம்முடைய கோரிக்கை மட்டுமல்ல; எல்லா புரட்சிகர ஜனநாயகவாதிகளின் கோரிக்கையாகும். வேறுபாடு என்னவெனில் கம்யூனிஸ்டுகளாகிய நாம்தான் இக்கோரிக்கைக்கு விசேட முக்கியத்துவம் தந்த வாய்ப்பேச்சோடு நில்லாமல் அதை நடைமுறைப்படுத்தவும் செய்கிறோம்.

யார் புரட்சிகர ஜனநாயகவாதிகள்? மிகப் பூரணமான புரட்சிகர ஜனநாயகத் தன்மையுடைய தொழிலாளி வர்க்கத்தை அடுத்து விவசாயிகளே மிகப்பெரும் பகுதியாக அமைகின்றனர். விவசாயிகளில் மிகப்பெரும்பான்மையோர், அதாவது, நிலப்பிரபுத்துவ தன்மையுடைய பணக்கார விவசாயிகளைத் தவிர்த்து மற்றெல்லோரும் தீவிரத்துடன் ”உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என கோருகின்றனர். நகர்ப்புற சிறுமுதலாளிகள்கூட புரட்சிகர ஜனநாயகவாதிகளே. “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்பது விவசாயத்தில் உற்பத்தி சக்திகளை அபிவிருத்தி செய்ய உதவுமாகையால் அது அவர்களுக்கும் சாதகமானதாகவே இருக்கும். தேசிய முதலாளிசள் ஓர் ஊசலாடும் வர்க்கமாக உள்ளனர். அவர்களுக்கும் சந்தைகள் தேவையாகையால் ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்பதை ஏற்கின்றனர்;

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் நில உடமையுடன் தொடர்புகள் உடையவர்களாகையால், அவர்களில் பலர் அதற்கு அஞ்சுகின்றனர். டாக்டர் சன்-யாட்-சென் சீனாவின் ஆரம்பகால ஜனநாயகவாதியாவார். தேசிய முதலாளி வர்க்கத்தின் புரட்சிகர பிரிவினதும், நகர்ப்புற சிறுமுதலாளித்து வர்க்கத்தினதும், விவசாயிகளினதும் பிரதிநிதியாக அவர் ஆயுதமேந்திய புரட்சி ஒன்றை நடத்தி “நிலஉடைமையைச் சமப்படுத்துதல்” ”உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற தத்துவத்தையும் முன்வைத்தார். ஆனால் அவர் ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது துரதிருஷ்ட்டவசமாக முன்முயற்சி எடுத்து நில முறையைச் சீர்திருத்தம் செய்யவில்லை. கோமிங்டாங்கின் மக்கள் – விரோதக் கும்பல் அதிகாரத்தைக்கைப் பற்றிய போது அவர் எதற்காக நின்றாரோ அதற்கு முற்றாகத் துரோகமிழைத்தது.

இந்தக் கும்பல்தான் இப்போது உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பதை கடுமையாக எதிர்க்கிறது; ஏனென்றால், அது பெரும் நிலப்பிரபுக்கள், பெரும் வங்கிக்காரர்கள் மற்றும் பெரும் தரகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சீனாவில் பிரத்தியேகமாக விவசாயிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் கட்சி எதுவும் இல்லாததாலும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகள் எதனிடமும் பூரணமான நிலத்திட்டம் எதுவும் இல்லாததாலும், சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுதான் பூரணமான நிலத்திட்டம் ஒன்றை உருவாக்கி நிறைவேற்றியுள்ளது என்பதாலும், உள்ளார்வத்துடன் விவசாயிகளின் நலன்களுக்காக போராடியுள்ளது என்பதாலும், அதன் மூலம் விவசாயிகளில் மிகப் பெரும்பான்மையினரை தனது பெரிய கூட்டாளியாக வென்றெடுத்துள்ளது என்பதாலும் அது விவசாயிகள் மற்றும் இதர எல்லா புரட்சிகர ஜனநாயகவாதிகளின் தலைவனாகியுள்ளது.

1927-லிலிருந்து 1936 வரை சீன கம்யூனிஸ்ட் கட்சி நில முறையின் முழுமையான சீர்திருந்தத்திற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, டாக்டர் சன்னின் “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற கோட்பாட்டையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. பற்களைக் காட்டி நகங்களை நீட்டி, மக்களுக்கு எதிரான பத்து ஆண்டு கால யுத்தத்தில் “உழுபவனுக்கு நிலம் சொந்தம்” என்பதற்கெதிராக முனைப்பாகப் போரிட்டவர்கள் கோமிங்டாங்கின் பிற்போக்குக் கும்பலே, டாக்டர் சன்-யாட்-சென்னின் மோசமான சீடர்கள் கூட்டமே.

கம்யூனிஸ்ட் கட்சி ஜப்பானிய- எதிர்ப்பு யுத்த கால கட்டத்தின்போது “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற கொள்கையை குத்தகையையும் வட்டியையும் குறைக்கும் கொள்கையாக மாற்றியதன் மூலம் ஒரு பெரிய சலுகை செய்துள்ளது. இந்தச் சலுகை சரியான ஒன்று; ஏனெனில் இது கோமிங்டாங்கை ஜப்பானுக்கு எதிரான யுத்தத்திற்குள் கொண்டுவர உதவி செய்து, யுத்தத்திற்கு விவசாயிகளை நாம் அணிதிரட்டுவதற்கு விடுதலையாக்கப்பட்ட பகுதிகளிலுள்ள நிலப்பிரபுக்களின் எதிர்ப்பையும் குறைத்தது. விசேஷமான தடங்கல் ஏதும் எழாவிட்டால் போருக்குப் பின்பும் இந்தக் கொள்கையை நீடிக்க நாம் தயாராயுள்ளோம்: அதாவது முதலாவதாக குத்தகை மற்றும் வட்டி குறைப்பை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தவும், பின்னர் “உழுபவனுக்கு நிலம் சொந்தம்!” என்பதை சிறிது சிறிதாக அடையத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் தயாராக உள்ளோம்

டாக்டர் சன்-யாட்-சென்னிற்கு துரோகம் இழைத்து விட்டவர்கள், “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற அவரது கொள்கையை அமல் செய்வது ஒரு புறமிருக்கட்டும், குத்தகை மற்றும் வட்டியின் குறைப்பையே எதிர்க்கின்றனர். கோமிங்டாங் அரசாங்கமே பிறப்பித்துள்ள குத்தகையின் 25 சதவீத குறைப்பிற்கான சட்டத்தையும், பிற சட்டங்களையும் அமுல்படுத்தவில்லை; நாம் மட்டுமே விடுதலையாக்கப்பட்ட பகுதிகளில் அவற்றை அமுல்படுத்தியுள்ளோம்; இக்குற்றத்திற்காக விடுதலையாக்கப்பட்ட பகுதிகள் “தேசத்துரோகப் பகுதிகள்,” என்று முத்திரை குத்தவும்பட்டுள்ளன” மேற்கண்ட இந்த நீண்ட மேற்கோளின் சாரம் என்ன?

ஒரு அரைக்காலனிய நாட்டில் புதிய ஜனநாயகப்புரட்சிக்கு பணியாற்றும் போதும், அதற்கு இடையில் பாசிச அபாயம் தோன்றும் போதும் சக்திகளை பிரித்தொதுக்கும் திட்டம் என்ன என்பது பற்றிய புரிதல்களையும், அந்த நாட்டில் புரட்சிகர அரசாங்கம் அமைப்பதற்கு முன்னால் ஆட்சி செய்த சீர்திருத்த வாதிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பது பற்றிய புரிதல்களையும் ஏற்படுத்துகிறது.

இந்த புரிதல் அடிப்படையில் தான் இன்று நாடு எதிர் கொள்ளும் மிகப்பெரும் அபாயம் என்று கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வரையறை செய்து வேலைகளை முன்னெடுத்து செல்கிறோம். புதிய ஜனநாயகப் புரட்சிக்கு இடைக்கட்டமாக ஜனநாயக கூட்டரசு என்ற தீர்வை முன் வைக்கிறோம். இதில் எமக்கு குழப்பம் ஏதும் இல்லை. முடிவு செய்வதிலும் ஈரெட்டாக இல்லை.

“மேலிருந்து செயல் புரிவது என்னும் போராட்ட வடிவம் மற்றும் தற்காலிகப் புரட்சிகர அரசாங்கம் என்னும் அமைப்பு வடிவம் ஆகியவற்றைக் கொண்ட செயல்தந்திரங்கள் ரஷ்யப்புரட்சியில் (1905-06) மட்டுமல்ல, சீனப் புரட்சியிலும் 1924-27 மற்றும் 1945-47 காலகட்டங்களிலும் முன்வைக்கப்பட்டன. கோட்பாடு ரீதியில் எல்லா செயல்தந்திர காலகட்டங்களிலும் பாட்டாளி வர்க்கத் தலைமையை நிறுவிட முடியாமல் போகலாம்.

குறிப்பாக ஆரம்ப காலங்களில் – பலவீனமான அகநிலை வளர்ச்சியுடைய காலகட்டங்களில் இம்மாதிரியான காலகட்டங்களில் இதைக்காரணங்காட்டி, ஐக்கியமுன்னணி பற்றிய விசயத்தில் கதவடைப்பு வாதத்தை மேற்கொள்வது தவறு. மாறாக, பாட்டாளி வர்க்கக் கட்சி ஐக்கிய முன்னணியில் முற்று முழுதாக புரட்சியை சமரசமின்றி முன்னெடுத்துச் செல்லத் தேவையான முன்னிபந்தனைகளைப் பெற்றிருக்க வேண்டும். அதன் மூலம் தலைமையை உறுதி செய்ய வேண்டும். என்ன முன்னிபந்தனைகள் என்பது – ஆயுதப்படைபலம், விவசாயிகளது அமைப்புபலம் போன்றவை – பருண்மையான நிலைமைகளுக்கேற்பத் தீர்க்கப்படும்.” என்கிறது எமது ஆவணம்.

அதன் ஒளியில் இன்றைய பாசிச அபாயத்திலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் கார்ப்பரேட் சுரண்டல் கொள்ளையிலிருந்து விடுவிக்கவும் பொருத்தமான, மேலிருந்து செயல்புரியும் ஜனநாயக் கூட்டரசு என்ற முழக்கத்தையும், செயல்திட்டத்தையும் முன் வைக்கிறோம். அதனை அடைய பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை கட்டுவதை நோக்கி முன்னேறி வருகிறோம். ஆனால் இது போன்ற எந்த ஒரு அரசியல் முடிவையும் எடுக்க முடியாத வினவு தலைமை அரசியல் விமர்சனங்கள் எதுவும் வைப்பது இல்லை. தனிநபர்கள், அவர்களின் சாதி பின்னணி, ஒரு சிலரது வாழ்வாதாரத்துக்கான தொழில் போன்றவை பற்றி வாய்வழி அவதூறுகளை செய்து வருகிறது.

அரசியல் செயல் தந்திரம் குறித்து மார்க்சிய-லெனினிய அரசியலுக்கு புறம்பான திரிப்புகளை செய்யும் போதே அதைவிடவும் கேடான பொருளாதார வாதத்தினை முன் வைக்கிறது. “அடிப்படை உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் முக்கியமானவை அல்ல, அரசியலைப் பிரச்சாரமாக எடுத்துச் செல்வது தான் முக்கியமானவை என்று முன்னெடுத்துச் செல்லப்பட்ட செயல்தந்திர அரங்கின் செயல்பாடுகள் காரணமாக, அடித்தள உழைக்கும் வர்க்கத்துடன் ஐக்கியமும் நெருக்கமும் குறைந்துவரத் தொடங்கியது.” என்கிறது 09-01-2021 தேதியிட்ட வினவு தலைமையின் அறிக்கை. இதன் மூலம் இந்தியாவிலேயே முன்னோடியாக 1980 களில் எமது அமைப்பு முன் வைத்த அரசியல் கோட்பாட்டு ஆவணங்களையும், இடது சந்தர்ப்பவாதிகளைப் போல இழிவுபடுத்தியுள்ளது.

1925 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதன்பிறகு தோன்றிய மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய பொதுவுடமை கட்சி (மா.லெ) அமைப்பின் பல குழுக்கள் அனைத்தும் முன் வைக்கும் பொருளாதாரவாதம் என்ற புளித்துப் போன மக்களை திரட்டும் நடைமுறையை பற்றி கீழ்கண்டவாறு விமர்சிக்கிறது எமது ஆவணம்.

”இவ்வாறான புரட்சி பற்றிய பொதுப்புரிதலும், பொதுத்திசைவழியும் இல்லாமல் மக்களின் போர்க்குணமிக்க பொருளாதார, அன்றாட, பகுதிக் கோரிக்கைகளுக்கான மற்றும் தனித்தனி அரசியல் பிரச்சினைகள் மீதான போராட்டங்களைப் போர்க்குணத்துடன் தொடர்ந்து நடத்திக் கொண்டே போனால், மக்கள் ஆதரவு பெருகி, அரசு அடக்குமுறை எல்லை மீறும்போது ஆயுதப் போராட்டம் வெடிக்கும் என்று பல குழுக்களும் நம்புகின்றன. ஆனால், நிகழ்ச்சிப்போக்கின் அடிப்படையில் செயல்படுவது என்ற இந்த வழியானது, இயக்கத்தைப் பொருளாதாரவாதப் புதைகுழிக்குள்தான் தள்ளும்.

எனவேதான் எமது அமைப்பு, போர்த்தந்திர வழிகாட்டுதலின் கீழ், நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களையும் பாதிக்கும் சமூக, அரசியல் பொருளாதார, பண்பாட்டு போக்குகளையும் கணக்கிட்டு வகுக்கப்படும் திட்ட வகைப்பட்ட அரசியல் செயல்தந்திரங்களின் அடிப்படையிலான அரசியல் போராட்டங்கள், அவற்றின் தொடர்ச்சியாக அரசியல் வேலைநிறுத்தங்கள் உள்ளூர் ஆயுதந்தாங்கிய எழுச்சிகள் ஆகியவற்றினூடாகத்தான் புரட்சியைக் கட்டமைக்க முடியும்: பிறகு மக்கள் யுத்தப் பாதையில் முன்னேற்ற முடியும்” என்று வழிகாட்டியது.

அதுமட்டுமல்ல தன்னெழுச்சியான பொருளாதார போராட்டங்களைப் பற்றி தோழர் லெனின் வரையறுப்பது இதுதான். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளில் தலையிடுவதை, அரசியலுக்கு மேலாக வைத்து பார்க்கும் வினவு தலைமையின் பொருளாதாரவாதக் கண்ணோட்டத்தைப் பற்றி லெனின் கூறுவது:

”புரட்சிகரமான அமைப்பைக் கெட்டிப்படுத்துவதில் முன்னேறுங்கள், அரசியல் நடவடிக்கையை விரிவுபடுத்துவதில் முன்னேறுங்கள் என்று அறைகூவியழைப்பதற்குப் பதிலாக வெறுமனே தொழிற்சங்கப் போராட்டத்தை நோக்கிப் பின்வாங்குங்கள் என்று அறைகூவல் விடப்பட்டது. “அரசியல் இலட்சியத்தை என்றைக்கும் மறக்கக்கூடாது எனும் முயற்சி இயக்கத்தின் பொருளாதார அடிப்படையை மறைத்து விட்டது” என்றும்,”பொருளாதார நிலைமைகளுக்காக போராட்டம்” என்பதே அதைவிட மேலாக “தொழிலாளர் தொழிலாளருக்கே” என்பதே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தாரகமந்திரம் என்றும் அறிவிக்கப்பட்டது.

வேலைநிறுத்த நிதிகள் “இதர நூறு அமைப்புகளைவிட, இயக்கத்துக்கு மதிப்புள்ளவை” என்றவாறெல்லாம் கூறப்பட்டது (1897 அக்டோபரில் வெளியிடப்பட்ட கூற்றை 1897-ன் துவக்கத்திலே “டிசம்பர்வாதிகளுக்கும்” “இளம்” உறுப்பினர்களுக்கும் இடையே நடந்த சர்ச்சையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.)

தொழிலாளர்களில் “சிறந்த பகுதியினர்” மீது நாம் முனைப்பான கவனம் செலுத்தக்கூடாது, திரளான “சராசரி” தொழிலாளி மீதுதான் செலுத்த வேண்டும், மற்றும் “அரசியல் எப்போதும் பணிவோடு பொருளாதாரத்தைப் பின்தொடர்கிறது, முதலான கவர்ச்சிச் சொற்கள் ஃபேஷனாகிவிட்டன. அவை திரளான இளைஞர் மீது எதிர்க்கவொண்ணாத செல்வாக்குச் செலுத்தின- இவர்கள் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் எனினும், பெரும்பான்மையில் சட்டசம்மதமான வெளியீடுகளில் விளக்கப்பட்ட மார்க்சியத் துணுக்குகளை மட்டும் தெரிந்து வைத்திருந்தவர்களே”.- (என்ன செய்ய வேண்டும் – தோழர். லெனின்)

இந்த அளவிற்கு புரட்சிகர அரசியல் பாதையில் இருந்து, வலது திசைவிலகல் போக்கின் (அவர்கள் கண்டுபிடிப்பின்படியே) எதிர்மறையான இடது திசைவிலகல் போக்கிற்கு தாவியுள்ள வினவு தலைமைக் குழுவினர் அவ்வப்போது எமது அமைப்புகளை பற்றியும், அவை செயலூக்கத்துடன் முன் வைத்து கொண்டு செல்லும் “கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்.” என்ற  செயல்தந்திர அரசியலை தானும் புரிந்துக் கொள்ள திராணியின்றி தனது அணிகளிடம் இது திமுகவின் வால், திராவிட மாடல் கொள்கை, ஓட்டுப் பொறுக்க கிளம்பிவிட்டனர் என்றெல்லாம் தமது விருப்பத்தினையே நம்பூதிரி பாணியில் வியாக்கியானம் எழுதி, எமது நடைமுறைபோல திரித்துப் புரட்டுகின்றனர்.

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணற்ற தோழர்களின் தியாகத்தினாலும், அர்ப்பணிப்பினாலும் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிரமான செயல்பாட்டிலும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் அறிமுகமும் ஆகியுள்ள எமது அமைப்பு இந்த அளவுக்கு வளர்ந்து வந்துள்ளதற்கு வலது, இடது சந்தர்ப்பவாதங்களுக்கு பலியாகாமல் சமர் புரிவதும், கீழிருந்து எந்த மட்டத்தையும், கேள்விக்கும்- விமர்சனத்திற்கும் உள்ளாக்கும் எமது அமைப்பு முறைகளே காரணம்.

அதற்கு வழிகாட்டும் சித்தாந்தமான மா.லெ அரசியலை அதன் அறிவியல் தன்மையுடன் எண்ணற்ற தோழர்கள் புரிந்துக் கொண்டு செயல்படுவதும்தான் காரணம். திட்ட வகைப்பட்ட அரசியல் போர்தந்திரமும், அதற்கு சேவை புரியும் செயல்தந்திரமும் வகுத்து அரசியல் நடத்தை வழியை சரியாக பின்பற்றும் அணிகளும்தான் காரணம். இந்த பாதையில் நாங்கள் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம் என்றாலும் ஒரு புரட்சிகர அமைப்புக்கு உரிய பண்புகளை பெறுவதில், தொடர்ந்து தவறுகளை திருத்திக் கொள்வதில் சமரசமின்றி, முன்னோடியாக செயல்படுகிறோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்! தொடர்ந்து புரட்சிகர பயணத்தில் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.  

முந்தைய பதிவுகள்

சொந்த அணிகளையே ஏய்க்கும் வினவு குழுவினர்! பாகம்-1
சொந்த அணிகளையே ஏய்க்கும் வினவு குழுவினர்! பாகம்-2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here