ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை அளிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வாரிக்கொடுத்தவர்களின் பெயர்களை பொதுவெளியில் வெளியிடுவது ஒரு கடினமான பணி என்று கூறி கால அவகாசம் கேட்டாலும், பாஜக அரசாங்கம் இத்தகைய விவரங்களைக் கேட்கும்போது பிரமிக்க வைக்கும் சுறுசுறுப்பைக் காட்டியிருக்கிறது SBI வங்கி.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கிய நன்கொடையாளர் விவரங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, ஒருவர் எந்த கட்சிக்காக தேர்தல் பத்திரங்களை வாங்கினார் என்பதை சரிபார்க்க பல மாதங்கள் ஆகும் என்று SBI வங்கி நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், வெளிப்படைத்தன்மை ஆர்வலர் லோகேஷ் பத்ரா, “The Collective” நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்ட ஆவணங்களில் 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்களை பணமாக்குவதற்கான காலக்கெடு முடிந்த உடனே அவை குறித்த தரவுகளை ஒன்றிய நிதி அமைச்சகம் கேட்டபோது மிகக் குறுகிய காலத்தில், அதாவது வெறும் 48 மணி நேரத்தில் அத்தரவுகளை SBI வழங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. தேர்தல் பத்திரங்கள் விற்பனையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் SBI கர்மசிரத்தையாக அது குறித்த விவரங்களை ஒன்றிய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பிவந்திருக்கிறது. 2020-ஆம் ஆண்டு வரை அனுப்பப்பட்ட அத்தகைய தகவல்களின் தொகுப்பு RTI மூலம் வெளிவந்துள்ளது.

விற்பனையாகும் மற்றும் பணமாக்கப்படும் தேர்தல் பத்திரங்களுக்கு வரிசை எண் அடிப்படையில் முறையான தணிக்கையை SBI பராமரித்து வருகிறது. ஆனால் அவற்றைத் தற்போது வெளியிட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு தோல்வி உறுதியாகிவிடும். அதனால் தேர்தல் முடிவடையும்வரை காலம் தாழ்த்துவதற்காக தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்களும், அவற்றைப் பணமாக மாற்றிய கட்சிகளின் விவரங்களும் தனித்தனி கிடங்குகளில் இருப்பதாகவும், அவற்றை எடுத்து பிரித்து, ஒவ்வொன்றையும் பொருத்தி சரிபார்க்க மாதக்கணக்கில் பிடிக்கும் எனவும் உச்சநீதிமன்றத்தில் கம்பிகட்டியுள்ளது.

இதையும் படியுங்கள்: RSS-க்கு நிதி திரட்டும் அமெரிக்க RSS ஆன HSS சும், IDRFம்!

பத்திரங்கள் விற்பனை குறித்த தரவுகள் கிளைகளில் இருந்து சீலிடப்பட்ட உரைகளில் SBI-ன் மும்பை தலைமையகத்திற்கு அனுப்பப்படும் என்றும், பத்திரங்களை பணமாக்கிக் கொண்ட அரசியல் கட்சிகள் பற்றிய தரவுகள் சீலிடப்பட்ட உரைகளில் அக்கிளைகளுக்கு அனுப்பப்படும் என்றும், ரகசியத்தைக் காப்பதற்காகவே விற்பனை மற்றும் பணமதிப்பு பற்றிய தரவுகள் பிரிக்கப்பட்டதாக SBI கூறியது. அதன்படி 2019 முதல் வழங்கப்பட்ட மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்களின் தரவுகளை பொருத்தி சரிபார்க்க 3 மாதங்கள் ஆகும். ஆனால், தேர்தல் பத்திரங்கள் பணமாக மாறும்போது பணத்தைப் பெறும் அரசியல் கட்சியுடன் அதன் நன்கொடையாளரை நிகழ்நேரத்தில் SBI இணைக்க முடியும் என்று 2017-ஆம் ஆண்டில் ஒன்றிய நிதி அமைச்சகம் ஒப்புக்கொண்டதாக ஆவணங்கள் காட்டுகின்றன. ஏனெனில் தேர்தல் பத்திரங்கள் வாடிக்கையாளரின் விபரங்களை (KYC) பெற்றபிறகே SBI-யால் விற்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, ஒன்றிய நிதி அமைச்சகம் தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத்தன்மை தொடர்பான ஒரு வழக்கில் வாங்குபவர்களின் விவரங்கள் பெற்றபிறகுதான் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதன் விவரங்களை வங்கியிலிருந்து எப்போதுவேண்டுமானாலும் உடனுக்குடன் விசாரணை அமைப்புகளால் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது.

சாதாரண வாடிக்கையாளர்களை அலைக்கழிப்பதைப்போலவே தற்போது உச்சநீதிமன்றத்தையும் SBI அலைக்கழிப்பதாக பல்வேறு மீம்ஸ்கள் உருவாகி உலவிவருகின்றன. ஆனால் அது சாதாரண மக்களுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும்தான், பாஜக தொடர்பான பிரச்சினையில் வெறும் ஒரு தொலைபேசிக்கான நேரத்தில் சேவைகளை ஆற்றியுள்ளது SBI வங்கி. எடுத்துக்காட்டாக, 2018-இல், ஒரு அரசியல் கட்சி SBI-இன் புதுதில்லி கிளையை அணுகி தன்னிடமுள்ள காலாவதியான பத்திரங்களை பணமாக்க விரும்புகிறது. உடனே மும்பையில் உள்ள தனது கார்ப்பரேட் அலுவலகத்துக்கு டெல்லி கிளை சில மணிநேரங்களில் தகவல் அளித்தது. தேர்தல் பத்திரத்தின் காலஅளவு 15 நாட்கள் மட்டுமே என்று சட்டம் கூறியதால், SBI கார்ப்பரேட் அலுவலகம் ஆலோசனைக்காக நிதி அமைச்சகத்தை அணுகியது. பத்திரங்கள் காலாவதியாகிவிட்டாலும் கட்சிகளை பணமாக்க வங்கி அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சகம் உடனடியாக பதிலளித்தது. இத்தகவலை மின்னல் வேகத்தில் புதுதில்லி கிளைக்கு கார்ப்பரேட் அலுவலகம் தெரிவித்து அப்பத்திரங்களை பணமாக்க அனுமதித்தது. இவை அனைத்தும் 24 மணி நேர இடைவெளியில் நடந்தது.

இதையும் படியுங்கள்: தேர்தல் பத்திரங்கள்: நிதி குறித்து கேட்க மக்களுக்கு உரிமை இல்லை. பாஜக!

ஒரு சுதந்திரமான நிறுவனமாக வெளியில் சொல்லிக்கொண்டாலும், SBI பல சந்தர்ப்பங்களில் பாஜக-வின் ஒரு கிளை அமைப்பாகவே செயல்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள நிதி அமைச்சகத்திடம் அனுமதி பெற்றது. ஆனால் தற்போது உச்ச நீதிமன்றத்தால் கோரப்பட்ட விவரங்களை வழங்குவதற்குக் காலஅவகாசம் கேட்பதன் பின்னணியை SBI-ன் இந்த வரலாறு கேள்விக்குள்ளாக்குகிறது.

இவ்விவகாரம் குறித்து மார்ச் 6 அன்று, “மோஜோ ஸ்டோரி” என்ற பத்திரிக்கைக்கு பேட்டியளித்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான சுபாஷ் சந்திர கர்க் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் செயலாளராக, 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதலை மேற்பார்வையிட்டவர்),“என்னைப் பொறுத்தவரையில் உச்சநீதிமன்றத்தில் SBI முன்வைத்த மிக மோசமான சாக்கு இது. இதற்கு கிடங்குகளை திறக்கவோ அல்லது தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களையும், அவற்றைப் பணமாக்கிய கட்சிகளையும் பொருத்தி சரிபார்க்கவோ தேவையில்லை. நான் முன்பே கூறியது போல், ஒவ்வொரு பத்திரத்திற்கும் ஒரு எண் இருக்கும், எனவே இந்த எண்ணில் உள்ள தகவல்களை நீங்கள் வரிசைப்படுத்தினால் மிக எளிதாக தகவலைப் பெறலாம்… வெறுமனே தேர்தல் பத்திரங்களின் வரிசை எண்களைக்கொண்டே இவற்றை உடனே தெரிந்துகொள்ளமுடியும். இந்தத் தகவலை வழங்குவதற்கு SBI-க்கு நேரம் தேவையில்லை. ஒருவேளை இப்பொடியோரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய SBI தூண்டப்பட்டிருக்கலாம்.”

SBI கோரியபடி தேர்தல் பத்திரங்களில் வரிசை எண்களை உட்பொதிப்பதை மேற்பார்வையிட்டவரின் கூற்றில் உண்மையில்லாமல் இருக்குமா?.

மொழியாக்கம்: செந்தழல்

மூலம்: reporters-collective.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here