கெடல் எங்கே தமிழர் நலன் ஆங்கே தலையிட்டு கிளர்ச்சி செய்வோம்! – பாரதிதாசன்.

பல தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில் ’இந்தி’ மட்டுமே தேசிய மொழி என்று வலிந்து பரப்பப்படுகிறது. வட இந்திய மக்கள் மத்தியில் இந்திதான் இந்தியாவின் ஒரே மொழி என்ற கருத்துவாக்கம் கடந்த சில தசாப்தங்களாக நடந்து வந்தாலும் பார்ப்பன பாசிச, ஆர்.எஸ்.எஸ் – மோடி ஆட்சியில் அது வேகமெடுத்துள்ளது.

சம்பவம்-1

ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் தமிழகத்தின் எம்பியான கனிமொழி சென்னை விமான நிலையத்திற்கு சென்றபோது, விமான நிலைய அதிகாரி அவரிடம் இந்தியில் பேசியுள்ளார். விமான நிலையத்தின் பணியாற்றும் CISF அதிகாரி “இந்தி மொழி தங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒரு இந்தியரா” என்று எகத்தாளமாக கேட்டுள்ளார்!. நீ ஒரு மத்திய தொழிலக துணை இராணுவப் படையில் பணிபுரியும் அதிகாரியா, உனக்கு இந்தியை தவிர வேறு மொழிகள் தெரியாதா என்று கனிமொழி திருப்பி அடிக்கவில்லை. மாறாக “எனக்கு இந்தி தெரியாது! தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பேசுங்கள் என்று கூறியிருக்கிறார். இது பற்றி விசாரணை செய்வதாக இந்திய ஒன்றிய அரசு சப்பை கட்டியது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்கே இதுதான் நிலைமை.

சம்பவம் 2

இந்திய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஆயுஷ் அமைச்சகம் சிறப்பு பயிற்சி முகாம் ஒன்றை ஏற்பாடு செய்தது. 350 பேர் கலந்துகொண்ட பயிற்சி அமர்வில், இந்தி பேசாத மாநிலங்களின் பிரதிநிதிகள் குறிப்பாக தமிழகத்தில் இருந்து முப்பத்தி ஏழு யோகா மற்றும் இயற்கை மருத்துவ பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இந்தி மொழி தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் பயிற்சி நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆயுஷ் செயலாளர் வைத்தியா ராஜேஷ் கோட்சா என்பவர் “இந்தி தெரியவில்லை என்றால் கூட்டத்திலிருந்து விலகுங்கள்!” என்று திமிர்த்தனமாக பேசியுள்ளார். இந்திய இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டதாரி மருத்துவ சங்கத்தின் பிரதிநிதிகள் இதுபற்றி விமர்சித்து புகார் அளித்தனர். பயிற்சி அமர்வை நடத்தும் மற்ற அதிகாரிகள் ஆங்கிலம் தெரிந்திருந்தும் இந்தி மொழியில் பேசுவதற்கு தேர்வு செய்தனர் என்று கூறினார்கள்.

சம்பவம் 3

தமிழகத்தில் இயங்கும் 14,000 அஞ்சலகங்களிலும் அடுத்த இரு வார காலத்திற்குள் பணவிடை மற்றும் சேமிப்புக் கணக்கு சார்ந்த படிவங்களில் தமிழ் இருக்கும். அதுமட்டுமன்றி 40 வகையான படிவங்களும் அச்சடிக்கப்பட்டு, அடுத்து ஒரு மாதத்திற்குள் அஞ்சலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அஞ்சலக துறை திடீரென உறுதியளித்தது. அதன் பின்னணியை பார்த்தால் அதற்கும் ஒரு போராட்டம் நடந்துள்ளதை அறிய முடிகிறது. கிராமப்புறங்களில் பெரும்பான்மை மக்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். ஆங்கில மொழியில் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் வழக்கம் இல்லாதவர்கள். இன்றளவும் கடிதம் எழுதுவதற்கும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கும் பிறரின் உதவியை நாடுகின்றனர். இந்த சூழலில் அஞ்சலகங்களில் விண்ணப்ப வடிவங்களில், கட்டாய இந்தி திணிப்பை செய்தனர். இதனை எதிர்த்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் போராடிய பிறகுதான் தமிழில் விண்ணப்ப படிவம் அனுப்பப்படும் என்று இந்திய ஒன்றிய அரசு வாக்களித்துள்ளது

சம்பவம் 4

பன்னாட்டு உணவகம் மற்றும் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ நிறுவனம் இந்தியாவின் தலைநகர் டெல்லியை சார்ந்த தீபிந்தர் கோயல் மற்றும் பங்கஜ் சத்தா ஆகிய இருவரால் துவங்கப்பட்ட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு இந்தியில் மட்டுமே பேசத் தெரியும் என்று திமிர்த்தனமாக அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது ஆர்டரில் சொல்லப்பட்ட பொருள்கள் வந்து சேராததைப் பற்றி வாடிக்கையாளர் சேவைக்கு புகார் செய்தபோது எங்களுக்கு தமிழ் தெரியாது, இந்தியில் பேசுங்கள் என்று கூறியுள்ளனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியதால் அந்த பணியாளர் தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டார்.

பல தேசிய இனங்களின் ஒன்றியமான இந்தியாவில் பிற மொழிகளை சேர்ந்த மக்கள் விரும்பாத வரை இந்தி திணிக்கப்படாது என்ற நேரு கொடுத்த வாக்குறுதி பாஜகவின் இந்திய ஒன்றிய அரசினால் குப்பைத் தொட்டிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தூர்தர்ஷனில் தமிழ் சேவை பிரிவு நிறுத்தப்பட உள்ளதாகவும், வானொலியின் தமிழ் பிரிவு நிறுத்தப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

இப்போதே ஆதார் சேவை மையத்தில் இந்தியில் உரையாடத் தெரிந்தவர்களே வாடிக்கையாளர் சேவையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூறுகின்ற ஒரே செய்தி இதுதான். இந்தியாவை பொருத்தவரை இந்திதான் தேசிய மொழி என்பதுதான். இந்து, இந்தி, இந்தியா என்ற பார்ப்பனக் கும்பலில் இந்திய தேசியத்தை விரைவில் கட்டியமைக்க வெறியுடன் அலைகிறது ஆர்.எஸ்.எஸ். அதன் தொடர்ச்சியான முயற்சிகளில் சிலவைதான் வெளியில் தெரிகிறது.

ஆனால் ஆரிய- பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை அமைக்க துடிக்கும் கனவுகளை நாம் அனுமதிக்க முடியாது. கார்ப்பரேட் சேவையில் வீரியத்துடன் முன்னணியில் நிற்கும் காவிப் படையை விழ்த்துகின்ற வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களையும் ஒன்றிணைப்போம். பல்வேறு தேசிய இனங்களையும், அவற்றின் மொழிகளையும் சமத்துவமாக நடத்துகின்ற ஆட்சி ஒன்றை, உண்மையான ஜனநாயக கூட்டரசை அமைப்பது நோக்கி முன்னேறுவோம். அதாவது ஜனநாயக ரீதியாக அனைவரையும் மதிக்கின்ற ஆட்சிமுறை ஒன்றுதான் இந்தியாவிற்கு உடனடியாக தேவை. அதனை உருவாக்குகின்ற போராட்டத்தின் மூலமே தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக தீர்வு காண முடியும்.

பா. மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here