ஹிப்போகிரடஸ் உறுதிமொழியா?
சரக மகரிஷி உறுதிமொழியா?
தமிழகத்தில் அதிக கட்டாஃப் எடுத்த மாணவர்கள் விரும்பிச் சேர்கிற டாப் 5 மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்று மதுரை மருத்துவக் கல்லூரி. மருத்துவக் கல்லூரிகளில் முதலாண்டு மாணவர்களும் இறுதியாண்டு மாணவர்களும் ஹிப்போகிரட்டஸ் உறுதிமொழி ஏற்பது வழக்கமானது.
மோடி தலைமையிலான பிஜேபி அரசு கல்வித் துறையை சமஸ்கிருத மயம் ஆக்குவது, இந்திமயம் ஆக்குவது, சனாதனமயம் ஆக்குவது போன்ற ஆர்எஸ்எஸ் அஜென்டாக்களை தொடர்ந்து செய்து வருகிறது.
இத்தகைய சூழலில், தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மகரிஷி சரகர் உறுதிமொழியை மாணவர்கள் எடுக்கும்படி கடந்த ஆண்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால், அது தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை. இந்தியாவெங்கும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்குமுன் மதுரை மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் சரகர் உறுதிமொழியை எடுத்துள்ளனர். NMC இணையதளத்தில் இவ்வுறுதிமொழியை, மாணவர் பிரதிநிதியாக இருப்பவர் , தவறாக பதிவிறக்கம் செய்திருக்கிறார். என மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது. இவ்விளக்கம் ஏற்கத்தக்கதல்ல.
சமஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டக் கூடியது.
ஹிப்போகிரடஸ் கிரேக்க நாட்டவர். சரகர் நம் இந்தியாவைச் சேர்ந்தவர். இவருடைய உறுதி மொழியை ஏற்றால் என்ன? என்கிற சந்தேகம் வரலாம். முதலில் ஹிப்போகிரடஸ் குறித்து பார்ப்போம்.
ஹிப்போகிரேட்டஸ் கிரேக்கத்தைச் சேர்ந்தவர். மேற்குலக மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர். உணவே மருந்து என்கிற தத்துவத்தை கூறியவர். கி.மு 460 இவர் காலம். கி.மு, கி.பி போல மருத்துவத் துறையை ஹிப்போ கிரேட்டசுக்கு முன் ஹி.கி பின் எனப் பிரிக்கலாம்.
ஹிப்போகிரேட்டஸ் காலத்துக்கு முன் நோய் என்பது கடவுள் கொடுக்கும் சாபம் என்று கருதப்பட்டது. ஆகவே மருத்துவமும் மதமும் அக்காலத்தில் கலந்தே இருந்தது. மருத்துவத் துறையை மதப்பூசாரிகளும், மாந்தரீகர்களும் ஆக்ரமித்திருந்தனர். ஆம், அப்போது சமூகம் மருத்துவர்களை, Witch Doctor, Priest – Physician என்றே அழைத்தது. இந்நிலையை மாற்றி மருத்துவத்தை அறிவியலாக மாற்றியவரே ஹிப்போ கிரேட்டஸ்.
மருத்துவம் பயிலும் மாணவர்கள் பட்டம் பெறும் அன்று, ஒரு வெள்ளைப் பேப்பரைச் சுருட்டி கையில் வைத்திருப்பார்கள். அது பட்டச் சான்று அல்ல. ஹிப்போகிரேடஸ் உறுதிமொழி!
‘யாருடைய வீட்டில் நான் நுழைந்தாலும் நோயாளிக்கு உதவவே செல்வேன்.
குறிப்பாக பெண்களின் உடலையோ, ஆண்களின் உடலையோ, நான் மாசுபடுத்தமாட்டேன்.என்னுடைய தொழிலில் அல்லது வெளியில் நான் சந்திக்கும் மனிதர்களைப்பற்றி நான் பார்த்ததையும் கேட்டதையும் வெளியிடக்கூடாது என்ற நிர்ப்பத்தம் உண்டானால் அவற்றை நான் வெளியிடாமல் புனிதமான இரகசியங்களாகக் கருதிக் காப்பேன்! என இவரது உறுதி மொழியை பின்பற்றி வாழ்பவர்களே நம் மருத்துவர்கள்.
சரி, மகரிஷி சரகர் பற்றி இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்.
ஆயுர்வேத மருத்துவத்தை, பிரம்மன் தன்வந்திரிக்கு கற்பித்தாராம். தன்வந்திரி தன் சீடர்களான புனர்வசு ஆத்ரேய மகரிஷி, அக்னிவேஷர், பேலர், ஜாதுகர்ணர், பராசரர், ஹரிதர், க்ஷரபாணி ஆகியோருக்கு கற்பித்தாராம். இப்படிப்பட்ட பிரம்மா, தன்வந்திரி சிந்தனைப் பள்ளியின் ஏழாவது வழித்தோன்றல்தான் சரகர் மகரிஷி.

ஆயூர்வேதம், பாவம் புண்ணியத்தில் நம்பிக்கை கொள்ளும் ஒரு துறை. நோயை அது பாவத்தின் விளைவாகப் பார்க்கிறது. சரகர் சொல்வதை இன்றைய
சனநாயக அமைப்பில் பணிபுரியும் டாக்டர்களால் பின்பற்ற முடியுமா?
தலைமுடியை வளர்த்து சிண்டு போட்டுக் கொள்ளச் சொல்கிறார். சாமியார்கள்போல தாடி வளர்க்கச் சொல்கிறார். உன்னை எனக்கு அர்ப்பணி. என்னை உன் தலைவனாகக் கருது. கீழ்ப்படிதலுடன் நட. எனக்கு அடிமையாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்! என்கிறார்.
படிக்க:
♦ மருத்துவ மாணவரின் உறுதிமொழி மாற்றமானது இந்தியாவினை குப்தர் காலத்துக்குப் பின் தள்ளும் ஒரு முயற்சி
♦ வெளிநாட்டில் மருத்துவப் படிப்பும், நிறைவேறாத மருத்துவர் கனவும்!
மருத்துவராக வெற்றி, செல்வம், புகழ் மற்றும் மரணத்திற்குப் பிறகு சொர்க்கம் ஆகியவற்றை நீங்கள் விரும்பினால், பசுக்கள் மற்றும் பிராமணர்களின் நலனுக்காக சேவை செய்யுங்கள்! என்கிறது சரக சம்ஹிதை .
‘நோயாளிகளிடையே பாகுபாடு காட்டாதே ‘ என்பதுதான் ஹிப்போகிரடஸ் உறுதிமொழியின் சாரம். சரக பிரமாணம் நான்காயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தது.
அதர்வண வேதத்திலிருக்கிறது. என்றாலே நாம் எச்சரிக்கையடைய வேண்டும்.
பூசாரி போட்டுவிடும் விபூதியும், சாமியாடிகளின் வேப்பிலைப் பாடமும், போதாது! என்றுதான்எய்ம்ஸ் உருவாக்குகிறோம். ஆனால், மோடி அரசாங்கமோ ஒரு பக்கம் நீட் எழுதச் சொல்கிறது. இன்னொரு பக்கம் வேதம் படிக்கச் சொல்கிறது.
இந்நிலையில் மாணவர்கள் எடுக்க வேண்டியது, மருத்துவத்தை அறிவியலாக , அறவியலாக அணுகும் ஹிப்போகிரடஸ் உறுதிமொழியையா?
மாட்டுக் கறி சாப்பிடாதே!
குருவுக்கு அடிமையாக இரு!
பசுவுக்கும் பார்ப்பனருக்கும்
விசுவாசமாக இரு!
என மருத்துவத்தை சனாதனமாக மாற்றும் சரகர் உறுதிமொழியையா?
தமிழர் நாம் பொறுப்போடும் சனாதனம் எரிக்கும் நெருப்போடும் இருக்க வேண்டும்!
- கரிகாலன்.