கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடுகள் மற்றும் மோதல்கள் நிகழா வண்ணம் இருக்க ஆலோசணை அறிக்கைத் தயார் செய்ய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் சந்துரு அவர்களின் தலைமையிலான ஆணையத்திற்கு மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் பரிந்துரைகள்!

1. அனைத்து வகை கல்விப் பாடத் திட்டங்களில் சாதி ஒழிப்பு குறித்த பாடங்களும், அதற்கேற்றப் பயிற்சி திட்டங்களும் இடம் பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

2. சாதி உருவாக்கம் அதனால் மனித குலம் அடையும் சீரழிவு பற்றி விளக்கக்கூடிய சமூக அறிவியல் பாடத் திட்டங்கள் கல்வித் திட்டங்களில் பல நிலைகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

3. ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைக் கல்வி வரை பட்டியலின மாணவர்களுக்கானப் பிரச்சினைகளைக் கேட்பதற்கும், சாதிய நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் மாவட்டஆட்சியர் தலைமையிலான ஒரு பறக்கும் படையை அமைக்கவேண்டும்.

4. பல்கலைக் கழக மானியக்குழு அறிவுறுத்தலின்படி உயர் கல்வித் துறையில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும்/பணிபுரியும் பட்டியலினத்தவர் குறைகளைத் தீர்ப்பதற்கான பொறுப்பு அதிகாரியை (Nodal Officer) அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் நியமிக்கவேண்டும்.

5. அந்த நோடல் ஆபீசர் தலைமையில் குறை தீர்ப்புக் கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடைபெற வேண்டும், குறிப்பாக மாணவர் சேர்க்கையின் போது கூட்டம் நடை பெறவேண்டும், அதுபோல் தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்பாகவும் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறவேண்டும். பொறுப்பு அதிகாரியாக (Nodal Officer)
கல்லூரியில் பணிபுரிந்து வரும் மூத்த எஸ்சி/எஸ்டி பேராசிரியர்களையே நியமிக்கவேண்டும்.

6. பட்டியலின மாணவர்களின் எஸ்சி/எஸ்டி குறை தீர்ப்பு அலுவலகம் மாணவர்கள் அறியும் வகையில் எளிதில்ந அணுகும் வகையில் கல்லூரி அலுவலகத்திற்கு அருகிலேயே அமைக்கப்படவேண்டும்.

7. தமிழ்நாடு முழுவதும் பட்டியலின மாணவர்களின் மீது நடைபெறும் வன்கொடுமைகளைப் போக்குவதற்கு தனியாக சிறப்புக் கைப்பேசி உதவிஎண் உருவாக்கப்படவேண்டும். அதேபோல் சிறப்பு மின்னஞ்சல் உருவாக்கப்படவேண்டும். இதனைக் கண்காணிப்பதற்கு மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் சிறப்பு அலுவலகம் நியமிக்கப் படவேண்டும். இது பள்ளிக் கல்வித்துறை அல்லது உயர் கல்வித்துறை அல்லது ஆதிதிராவிட நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடாது.

8. சாதி மனோபாவம் தவிர்க்கக் கோரும் வாக்கியங்கள் வளாகத்தில் முக்கிய இடங்களில் இடம் பெறவேண்டும்

9. மாணவர்களின் சாதிச் சான்றிதழ் பற்றிய விவரங்களைத் தலைமையாசிரியர், முதல்வர் மற்றும் எஸ்சி/எஸ்டி நோடல் ஆபிஸர் தவிர வேறுயாரும் அறிய இயலாத வண்ணம் பாதுகாப்பான நிர்வாகக் கட்டமைப்புவேண்டும்.

10. மாணவர்களின் சாதி விவரங்கள் ஒவ்வொரு ஆசிரியருக்கும் /துறைக்கும் அளிப்பதைத் தவிர்க்கவேண்டும். பள்ளியின் மாணவர் வருகைப் பதிவேட்டில் மாணவரின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருக்கவேண்டும். மாணவர்களின் சாதிசார் வகைப்பாடு களை( SC,ST,BC,MBC) பள்ளி அலுவலகங்கள் கையாள வேண்டும்.

11. பட்டியலின மாணவர்களிடையே கல்லூரி முதல்வர் மற்றும் நோடல் ஆபீஸ் தலைமையில் பல துறைகளைச் சார்ந்த மாணவர்கள் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட வேண்டும். முதல்வர் மற்றும் பொறுப்பு ஆசிரியர் தலைமையில் இக்கண்காணிப்புக் குழு இயங்க வேண்டும். மாணவர்களின் சாதியப் போக்கினை இக்குழு கண்டறிந்து கல்லூரியிலேயே அதைத் நீக்குவதற்கான செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். இக்குழுக்கள் செயல் படுவதற்கான பொதுவான பயிற்சிக் கையேடும் அரசால் உருவாக்கப்படவேண்டும்.

12. பள்ளி, கல்லூரிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாகவும், இன்னும் பிற அமைப்புகள் மூலமாகவும் ஆசிரியர்கள் பணியில் அமர்த்துவது தடை செய்யப்பட
வேண்டும். அரசு முழுமையாக காலிப் பணியிடங்களை இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி நிரப்ப வேண்டும். இது கல்வி நிறுவனங்களில் சாதிய ரீதியான பிற வகை பணியமர்த்தல்களை தவிர்க்கும்.

13. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடையே வன்கொடுமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் பாடதிட்டங்கள், மற்றும் உரையாடல, கலை நிகழ்வுகள் இடம்பெற வேண்டும்.

14. மாணவர்களிடத்தில் சாதிய மனப்பான்மையை ஊட்டுகின்ற, ஊக்குவிக்கின்ற தனிமனிதர்/அமைப்புகளைக் கண்காணிக்கவேண்டும். அப்படிச் செயல்படும் அமைப்புகளை வாளாகதில் நுழையா வண்ணம் தடை செய்யவேண்டும். குறிப்பாக கல்வி வளாகங்களை தங்கள் பரப்புரைகளுக்காக மதம் மற்றும் சாதீய அமைப்புகள் பயன் படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.

15. சாதியப் பதற்றம் மிகுந்த பகுதிகளில் பட்டியலின மாணவர்களுக்கு உளவியல் நம்பிக்கையையும், பட்டியல் அல்லாத மாணவர்களுக்குச் சமூக ஒற்றுமையின்/சகோதரத்துவத்தின் அவசியம் குறித்தும் பயிற்சி யளிக்க வேண்டும். கூடுதலாக சாதி வேறுபாடு மற்றும் சாதியத் தாக்குதல்கள் சமுதாயத்தில் எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றிய சமூக அறிவியலும் கற்பிக்கப்படவேண்டும். மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அங்கு உள்ள சமூக பிரமுகர்கள் எல்லோரும் சேர்ந்து உணவு உண்பது, கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது என்பன பற்றி அரசு சார்ந்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

16. கல்லூரிகளில் அக மதிப்பீட்டு மதிப்பெண்கள் மற்றும் பிற வகை மதிப்பீடுகள் புறவய முறை (Objective Method) மூலமாக மதிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும். இது சாதிய ரீதியாகவும், ஆசிரியர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அடிப்படையிலும் மதிப்பீடு செய்யப்படுவதைத் தவிர்க்க உதவும்.

17. சாதீயக் குற்றங்களில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தடுக்க தீவிரமான செயல் திட்டங்கள் தேவை. அதையும் மீறி சாதீயக் குற்றங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு
வழங்கப்படும் தண்டனைகளில் அவர்கள் சமூக நல்லிணக்கம் பற்றிய தெளிவு பெறும் வகை பயிற்சிகளும் சேர்க்கப்பட வேண்டும்.

18. ஆசிரியர்கள் பயிற்சிப் பாடத்திட்டத்தில், மனிதஉரிமைச் சட்டங்கள், மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களைப் பாடத் திட்டங்களாகச் சேர்த்து ஆசிரியர்கள் மனித உரிமைக் காவலர்களாகவும் செயல்படும் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

19. மாணவர்களோ ஆசிரியர்களோ சாதி/மத அடையாளங்களை அணிந்து வருவதைத் தடை செய்யவேண்டும். குறிப்பாக சாதியக் கயிறுகட்டுதல், சாதியின்/கட்சியின் வண்ணங்களைப் பூசுதல், அடையாளக் குறியிடுதல் ஆகியவற்றைத் தடைசெய்யவேண்டும்.

20. மதம் மற்றும் சாதி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் சாதி மற்றும் மத ரீதியான புற நிகழ்வுகளும் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும்.

21. கல்வி நிறுவனங்கள் அரசு விதிகளை மதிக்காமல் பட்டியலின மாணவர்களிடம் நிதி வசூல் செய்வதும், அவர்கள் முறையிடும் குறைகளை உதாசீனப்படுத்தியும் இருக்குமானல் அவைகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள தனி நிர்வாக அமைப்பு உருவாக்கப் படவேண்டும்.

22. அரசு சார்பாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கொண்ட உயர் மட்டக் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவை தொடர்ந்து கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து முன் வைக்கும் செயல் திட்ட ஆலோசனைகளை கல்வி நிறுவனங்கள் செயல் படுத்த வகை செய்ய வேண்டும்.

நன்றி.
இவண்,
பேரா. இரா. முரளி
பேரா. வீ. அரசு. / பேரா. ப.சிவகுமார் / கல்வியாளர் கண குறிஞ்சி / ஆசிரியை. சு.உமா மகேஸ்வரி
(ஓருங்கிணைப்பாளர்கள்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here